.
1. வேலூர் மாவட்டம்
நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை.
வழக்கமாய் 'காக்க காக்க' முதல் சமீபத்தில் பார்த்த எல்லா பொலிஸ் கதைகளைப் போல இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.
ஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின்(ஜி.எம்.குமார்) மகன் ஐ.ஏ.எஸ்
படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட பொலிஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை, அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை.
'காக்க காக்க', 'சிறுத்தை' ஆகிய படங்களில் பார்த்ததைப் போல, அதே காக்கி கலர் கதைதான். எப்போதே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இதனால் பார்த்து பழகிவிட்ட கதைதானே என்று சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கஞ்சி போட்ட காக்கிசட்டை போல் விறைப்பாகவும், சிடுசிடுவெனவும் வருகிறார் நந்தா. காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு. கதாநாயகியாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார், ரெண்டு டூயட் பாடுகிறார்.
அமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம்
பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் நடிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே. நந்தாவின் தந்தையாக ஜி.எம்.குமார். எல்லா பாத்திரங்களும் இருந்தாலும் திரைக்கதையிலும், டுவிஸ்டிலும் புதுமை எல்லை. எல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்ட சமாச்சாரங்கள்.
சுந்தர் சி.பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார்.
படத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் சுமார் ரகம் தான். பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம்தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர்ப்பது எல்லாம் ரொம்ப பழய விடயம் தான். மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது.
நன்றி விடுப்பு
2. ரா ரா
ராயபுரத்திலும் ராயப்பேட்டையிலும் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.
திருவள்ளுவர்தான் கடவுள், திருக்குறள்தான் தெய்வ வாக்கு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் பிராமண சமுகத்தைச் சேர்ந்த பொன்வண்ணனின் மகன் உதயாவுக்கும், ராயபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஆதித்யாவின் தங்கையான ஸ்வேதா பாசுவுக்கும் இடையே காதல் மலர்கிறது.
ஸ்வேதா பாசுவை பிராமணப் பெண் என்று நினைத்து காதலிக்கும் உதயா,
அவரை தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு ஒகே வாங்கிவிடுகிறார். இதற்கிடையில் ஸ்வேதா பாசுவின் உண்மை நிலை தெரியவர என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் உதயா, தனது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்களும், செய்யும் தில்லுமுல்லும்தான் படம். ஈரடிக்குறளைத்தான் தன் ஒரு வரிக்கதையாக்கி திரைக்கதை அமைத்து ரா ரா படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சாண்டில்யன். அறிமுகக்காட்சியில் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்கிற குறளினை பொன்வண்ணன் ஆரம்பிக்க அதன் பிற்பாதியினை அவரது இல்லாளாக வரும் மீரா கிருஷ்ணன் பாடுவதாகக் காட்சி அமைத்ததில் இயக்குநரின் அனுபவம் மற்றும் முதிர்ச்சி வெளிப்பட்டு படம் பார்ப்பவர்களை தன் வசப்படுத்திவிடுகிறார் பாராட்டுகள்.
நீண்ட நாட்களாக நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த உதயா, இந்த படத்தின் மூலம் அந்த வாய்ப்பை தானாகவே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். ஹீரோக்களுக்கு கடினமான விஷயமாக இருக்கும் கொமெடியை ரொம்பவும் கூலாக செய்துவிட்டு போகும் உதயாவின் பர்பாமன்ஸ் பா
ராட்டக்குரியது. உதயாவுக்கு நிச்சயம் 'ரா ரா' ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். நாயகி ஸ்வேதா பாசுவுக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், கொழுக் மொழுக்கென்று வந்து ரசிகர்களின் கண்களை ஆக்ரமித்துவிடுகிறார். உதயாவிடம் பேச்சு கொடுத்து அவர் காசை காலிசெய்ய நினைத்து, அதில் தானே சிக்கிகொண்டு முழிக்கும் ஸ்வேதா பாசுவின் குழந்தைத்தனமான சிரிப்பில் ரசிகர்கள் மட்டுமல்ல கோடம்பாக ஹீரோக்களும் சிக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது.
திருக்குறளை பிரதானமாக எடுத்துக் கொண்டு கதை பண்ணினாலும் உதயாவுக்கும் - ஸ்வேதா பாசுவுக்குமான காதல்தான் 'ரா ரா'வின் முதுகெலும்பு. அப்படியிருக்கும் போது என்னடா ஒரு ரொமான்ஸ் சீனக்கூடக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது உதயாவிற்கும், ஸ்வேதாபாசுவிற்கும் இடையில் சில நொடிகளுக்கே வரும் ரொமான்ஸ் மொத்தப் படத்திற்கும் போதுமானதாக இருக்கிறது. கார் ஓட்ட டிரைவர் வேலைக்கு வருபவர்களிடம்கூட, உங்களுக்கு திருக்குறள் தெரியுமா? என்று கேட்கும் பொன்வண்ணனின் கதாபாத்திரம் கச்சிதம். ஸ்வேதா பாசுவின் தாத்தா கதாபாத்திரத்துடன் சேர்ந்து நகைச்சுவை எபிசோடுக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார் சத்யன்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் யுகபாரதி எழுதி நரேஷ் ஐயர், சின்மயி
பாடியிருக்கும் 'மயக்கிப்புட்டாளே என்னை..' என்ற பாடலின் முடிவில் வரும் பின்னணி இசையில் வரும் அந்த ரொமான்ஸினைத் தவறவிடாதீர்கள் அருமை சாண்டில்யன். அனுபவிச்சு எடுத்துருக்கீங்க தன் கணவர் உதயாவிற்காக 'ரா ரா' படத்தினைத் தயாரித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'ரா ரா சென்னைக்கு ரா ரா' என்கிற பாடலையும் பாடியிருக்கிறார் கீர்த்திகா உதயா. அந்த திருக்குறள் பாடலை பள்ளிகளில்கூட ஒலிபரப்பலாம் போலிருக்கிறதே.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்று அய்யன் வள்ளுவர் சொன்னதை மனதில் நிறுத்தி நல்லவற்றையே பேச, சிந்திக்க, செயல்படுத்த நம்மளை அறியாமல் நமக்குள் ஒரு வேட்கையைத் தூண்டும் படமாக 'ரா ரா' அமைந்திருக்கிறது.
நன்றி விடுப்பு