அரோகரா கோஷம் ஒலிக்க நல்லூரானுக்கு இன்று தேர்



.


வரலாற்று சிறப்புடன்  விளங்கும் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இலட்சக் கணக்காண பக்தர்கள் புடைசூழ இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 6மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.நாடெங்கிலும் இருந்து இலட்சக் கணக்கான பக்தர்களின்  அரோகரா கோசத்துடன் வருடாந்த தேர் உலா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தனின் தேர் திருவிழா

.



வரைவிலக்கணம் --கலைமகள்ஹிதாயா ரிஸ்வி

.
உள்ளத்து வட்டையின் 
இதயத்து வரம்பில் 
குருதி நீராய் நிரம்பியோடும்  வாய்காலில் 
அழகான்  நட்பு (பூ)க்கள் 
விரிந்து மனம் வீசிக் கொண்டிருக்கின்றன....!

யாரும் காண்காணிப்பு 
இல்லாமலே -
என் -
உள்ளத்து உணர்வுகள்
பாதுகாவலனாய் இருக்கின்றன ..!

'நல்ல நண்பன் உயிர் தோழன்' 

வீட்டில் என்னம்மா 
நட்புக்கு வரைவிலக்கணம் சொல்வது 
என்காதில் தடவியது ..!

கலைமகள்ஹிதாயா ரிஸ்வி 

படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்கவேண்டும்.

. 
மெல்பனில்  நடந்த   முருகபூபதியின்  சொல்ல மறந்த கதைகள்   நூல்  வெளியீட்டு   அரங்கு

 படைப்பிலக்கியவாதியும்  பத்திரிகையாளருமான  திரு. லெட்சுமணன் முருகபூபதியின்   20  ஆவது   நூல்   சொல்ல  மறந்த  கதைகளின் வெளியீட்டு   அரங்கு   கடந்த  சனிக்கிழமை 23  ஆம்  திகதி மெல்பனில்  Dandenong Central Senior Citizens Centre மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை  கம்பன்  கழகத்தின்  ஸ்தாபக   உறுப்பினரும்   இலக்கிய ஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்  இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கினார்.
 அண்ணாவியர்  இளையபத்மநாதன்  -   எழுத்தாளர்கள்  திருமதி புவனா இராஜரட்ணம் -   டொக்டர்   நடேசன்  -   திரு. ஜெயராம சர்மா -சமூகப்பணியாளர்கள்   திருவாளர்கள்    இராஜரட்ணம்  சிவநாதன் - நவரத்தினம்    இளங்கோ  -  டொக்டர்    சந்திரானந்த்  -   ஜனாப்   ரஃபீக்  முருகபூபதியுடன்    வீரகேசரி   நிறுவனத்தில்    முன்னர்    பணியாற்றிய திரு. சுப்பிரமணியம்    தில்லைநாதன்   ஆகியோர்     மங்கல விளக்கேற்றினர்.     திருமதி    மாலதி   முருகபூபதியின் வரவேற்புரையுடன்    நிகழ்ச்சி   ஆரம்பமானது.
எழுத்தாளர்கள்   பத்திரிகையாளர்கள்    எப்பொழுதும்    மக்களின் வாழ்வுப்பிரச்சினைகள்    குறித்தே    தமது   எழுத்துக்களில்   பதிவுசெய்து    வருபவர்கள்.     தேசங்களின்   தகவல்கள்   -  இனங்களின் அடையாளம்    என்பன   பற்றிய    பதிவுகளே    முதலில் செய்திகளாகவும்    பின்னர்    வரலாறுகளாகவும்    உருவாகின்றன. இவற்றை    எழுதுபவர்கள்   சமூகப்பொறுப்புணர்ச்சியுடன்   தமது படைப்புகளை    -  செய்திகளை    எழுதினால்தான்   அவை    காலம் கடந்தும்    பேசப்படும்.

ஜானக பெரேரா கொலை; புலி உறுப்பினருக்கு எதிராக செப். 5இல் தீர்ப்பு

.
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29பேரை குண்டுத் தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர், இன்று தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இவருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வழங்கப்படும் என்று வடமேல் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி நுனந்த குமார ரத்நாயக்க கூறினார். புலிகள் இயக்கத்தில் கேணல் பதவிநிலை வகித்தவரும் செங்கலடியைச் சேர்ந்தவருமான சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, குண்டுத் தாக்குதலை நடத்தி ஜானக பெரேரா உட்பட 29பேரை கொலை செய்தார் என்று இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, இன்று இடம்பெற்ற நிலையிலேயே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த கணங்களுடன் – 5 -திருநந்தகுமார்

.

இரண்டாவது தடவையாக நான் பொலிஸ் கடேற் முகாமுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்ற போது யாழ். இந்து அணிக்கு பொறுப்பான சார்ஜண்டாக இருந்தேன். நீல நிற அரைக்கைச் சட்டையின் இரு கைகளிலும் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று V அடுக்கிவைத்த பட்டியும், வெள்ளி நிறத்திலான பொலிஸ் விசிலும் தரப்பட்டிருந்தது.
பொலிஸ் பயிற்சி முகாமில் இம்முறை மேலும் இரு பாடசாலைகள் கலந்துகொண்டன. முன்னைய ஆண்டைப் போல அன்றி இம்முறை பாடசாலை அணிகள் என்பதை மாற்றி, இல்லங்களாக அமைத்திருந்தனர். ஒவ்வொரு இல்லத்திலும் எல்லாப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். ஒவ்வொரு அணியிலும் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு சார்ஜண்ட், இரு கோப்ரல் என்ற பதவிநிலைகளில் வேறு வேறு பாடசாலைகளைச் சேர்ந்த கடேற் படையினர் இருந்தனர்.  
யாழ் இந்து கடேற் படையினருக்கு இந்த அமைப்பு சரியாக இருந்தது.  ஏனெனில் முடல் வருடம் எந்த விருதும் பெறமுடியாது போனதால், இந்த இல்ல அமைப்பு முறை அவர்களுக்குப் பிடித்துக்கொண்டது. எனக்கு அது சரிவரவில்லை. எனது ஆசிரியர்கள் வெவ்வேறு இல்லங்களில் இருந்தனர்.
நான் இருந்த இல்லத்தில் ஐந்து பேர் தமிழர்கள், ஐந்து பேர் முஸ்லீம்கள். ஏனையவர்கள் சிங்கள கடேற்படையினர். முதல் நாள் எல்லோரும் ஒன்று சேர்ந்த பின்னர் ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்து பதவி நிலையில் மூத்தவர்களை அழைத்திருந்தனர். அங்கு அறுவர் ஒன்று சேர்ந்தோம். அப்போது தான் தெரிந்தது எனது இல்லத்தில் நான் ஒருவன் மட்டுமே சார்ஜண்ட் தரத்தில் இருந்தேன். அதுவே கடேற் படையினரின் அதி கூடிய பதவி நிலையாகும். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பொறுப்பாசிரியர் எமது இல்லத்தின் இன்ஸ்பெக்டராக இருந்தார். நீ தான் இந்த அணிக்கு சார்ஜண்ட் என்று சிங்களத்தில் சொன்னார். எனக்கு அந்த சிங்களம் ஓரளவுக்குப் புரிந்தது. எனினும் பேசாது நின்றேன்.  ஆனந்தாக் கல்லூரி அணியின் சீனியர் கோப்ரல் தரத்தில் இருந்த நண்பர் தனது ஆசிரியருடன் ஏதோ சிங்களத்தில் பேசினார். எமது இல்லப் பொறுப்பாளர் பற்றிய பேச்சே அது எனப் புரிந்துகொண்டேன்.


சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 30.08.14

.

எமது சந்ததிக்கு அரியதொரு பொக்கிஷம் - பராசக்தி சுந்தரலிங்கம்

.

எமது சந்ததிக்கு அரியதொரு பொக்கிஷம் -நமது தாய் நாட்டிலே இருந்த இருக்கும் நூறு ஆலயங்கள் பற்றிய வரலாற்று நூல்

Hundred Hindu Temples Of Sri Lanka -Ancient Medieval And Modern By Sanmugam Arumugam

சிறந்த கல்விமான் எழுத்தாளர் பொறியியலாளர்  திரு திருமுகம் ஆறுமுகம் அவர்கள் தமது தந்தையார் திரு சண்முகம் ஆறுமுகம் அவர்கள்  ஆங்கிலத்திலே எழுதிய 'இலங்கையில் நூறு ஆலயங்கள்' என்னும் நூலை ஆகஸ்ட் ஏழாம் நாள் 2014--Bates-St-Strathfield  -Sydney'ல் உள்ள சன  சமூக நிலைய   மண்டபத்திலே மூத்தோர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது வெளியிட்டார்
சாதாரண நூல் வெளியீடு போலல்லாமல் இதனை அவர் அரங்கேற்றிய முறை புதுமையாக இருந்தது .நூலைப்பற்றிய ஒரு சிறிய முன்னுரையுடன் ,,நூலிலே கூறப்பட்டிருக்கும் கோவிலோடு தொடர்புடையதாக, இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் பொலநறுவையிலிருந்து இலங்கையை ஆண்ட போது கட்டிய சிவன்கோவில் மற்றும் அங்கே கண்டெடுத்த அரிய வெண்கலத் திருஉருவச் சிலைகள் ஆகியவற்றைத்       திரையிலே காண்பித்து அரியதொரு விளக்கத்தை அளித்தார் (Power Point Presentation )
இராஜேந்திரச்சோழமன்னன் ஆட்சி புரிந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடும் இவ்வேளையிலே அவனின் பெருமையை நினைவுகூருவதுபோல அவன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஆலயத்தோடு அவன் பொலநருவையிலே கட்டிய சிவன் கோவில் (2ம் கோவில்) கட்டிட அமைப்பை ஒப்பிட்டு  திரையிலே விளக்கிய முறை சிறப்பாக இருந்தது

சுதாராஜ் சிறுகதைகள் - எம். ஏ. நுஃமான்

.

1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.
தனது “சிறுகதைகளின் அடிநாதமாக அமைவது நேசிப்பு” என சுதாராஜ் ‘காற்றோடு போதல்’ என்ற தன் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். “நேயம் என்பது மனிதர்கள்பால் மட்டுமன்றி சகல உயிரினங்கள் மீதும் இரங்குதல் ஆகும். எங்களைச் சூழ உள்ள இயற்கை ஓர் அற்புதமான விஷயம். மரம், செடி, பூக்கள் ஆகியவற்றின் வனப்புகள் பிரமிப்பையும் இதமான சுகானுபவங்களையும் தருகின்றன. வானத்தில் பறவைகள் பறக்காத ஒரு நாளைக் கற்பனைசெய்து பாருங்கள். எவ்வளவு சோகமாயிருக்கிறது. அந்தப் பறவைகளும் அவற்றின் வனப்பும் எங்கள் மனங்களை இதமாக வருடிக்கொண்டிருப்பதற்காகவே படைப்பெடுத்துள்ளனபோல் எண்ணத் தோன்றுகின்றது. இவற்றையெல்லாம் என் கதைகளில் பதியவைத்திருக்கிறேன்.” என்று எழுதுகிறார் அவர். மனிதர்கள் மீதும் இயற்கையின் மீதும் கொண்ட இந்த நேயம் ஒரு நல்ல கலைஞனுக்குரிய முக்கியமான குணாம்சம் என்று சொல்லவேண்டும்.

வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் விநாயகருக்கு விழா 31.08.2014

.

என் பார்வையில் கண்ணதாசன் -- எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .

.


     காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவ
னது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது.இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு " சந்தத்தை " தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.

மெல்பேர்னில் நகைச் சுவை நாடக காணொளி வெளியீட்டு விழா!! 31 08 14

.
மெல்பேர்னில் நகைச் சுவை நாடக காணொளி வெளியீட்டு விழா!!
அன்பார்ந்த தமிழ் மக்களே !!!
மெல்பேர்னில் உங்கள் அபிமானத்துகுரிய பிரபல நகைச்சுவைக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு, புதுப் பரிமானத்தில் உருவாக்கம் பெற்ற நகைச்சுவை நாடகக் கோர்வை. உங்களை வயிறு குலுங்கச் சிரிக்கவும் அதேவேளை மனதில் சிந்திக்கவும் வைக்கக் கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மெல்பேர்ன் மண்ணில் முற்று முழுக்க ஒளிப்பதிவு செய்யபட்டு
ozy Creation ஆதரவுடன் வழங்கும்

 “  படிக்கத் துடிக்கும் BABA க்கள் ’’

நடை பெறும் இடம் :- Barry Road Community Centre, 36 Barry road. Lalor. Victoria. ( Melway 8 E 4  )
காலம் :-  31.08.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி
தொடர்புகள் :- எட்வேட் அருள்நேசதாசன் - 0413 585 506
நவா மாஸ்ரர் - 0425 808 199


அனைவரும் வருக ! ஆதரவு தருக !!

சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 சிறப்பு முன்னோட்டம் - கானா பிரபா

.

சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 என்னும் பெரும் எடுப்பிலான நிகழ்வை சிட்னி முருகன் ஆலயமும் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.
சைவ நெறி தழைத்தோங்கும் தாய்த் தமிழகத்தில் இருந்தும், ஈழத்தமிழகத்தில் இருந்தும், மலேசிய மண்ணில் இருந்தும் சைவநெறிக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சிவ சிந்தையோடு நாளும், பொழுதும் இயங்கி வருகின்ற ஆன்மிக வழிகாட்டிகள், ஓதுவார் மூர்த்திகள், கல்விமான்கள் என்று பெரும் புலமையாளர்களை ஒன்று திரட்டி நிகழ்த்தப்படும் ஒரு பெரிய முன்னெடுப்பாக இந்த மாநாடு திகழவிருக்கின்றது,

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கமைய இந்துக்கள் தாம் செல்லும் இடங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்துப் பணி செய்து வருகின்றார்கள். இன்று புலம்பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் வாழும் நமது மக்கள் முன்னெடுத்து வரும் இந்த ஆன்மிகப் பணியில் சிட்னியில் வைகாசிக் குன்றில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சிட்னி முருகன் ஆலயத்தின் பணி வெறும் சமயப் பணியோடு நின்றுவிடாது, சமூகப்பணியிலும் தன்னை முன்னெடுத்து வருகின்றது. சைவப்பாடசாலை மற்றும் பண்ணிசை வகுப்புகளின் வாயிலாகவும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சிட்னி மண்ணுக்கு வரும் ஆன்றோர் பெருமக்கள் பெரும்பாலும் சிட்னி முருகன் ஆலயத்தின் பின் வளவில் இருக்கும் கலாசார மண்டபத்தில் தம் சைவப் பிரசங்கங்களை நிகழ்த்திச் செல்வதும் வழமையான பணியாக அமைகின்ற சூழலில், இந்த சைவ நெறி மாநாடு என்பது இவற்றுக்கெல்லாம்  தலையாயதான ஒரு பெரும் பணியாக அமைந்து நிற்கின்றது.

விநாயகர் சதுர்த்தி

.

உலகச் செய்திகள்


எபோலோ வைரஸால் பலியானவர்கள் தொகை 1,229 ஆக உயர்வு: ஏனைய நாடுகளுக்கும் வேகமாக பரவும் அபாயம்!

காணாமல்போன அமெரிக்க ஊடகவியலாளர் போராளிகளால் தலையை வெட்டி படுகொலை - அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி வெளியீடு

ஜப்பானில் பாரிய மண் சரிவு : 32 பேர் பலி, 9 பேரைக் காணவில்ல

எபோலோ வைரஸால் பலியானவர்கள் தொகை 1,229 ஆக உயர்வு: ஏனைய நாடுகளுக்கும் வேகமாக பரவும் அபாயம்!

19/08/2014
எபோலோ வைரஸால் கடந்த 3 நாட்களில் 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்த வைரஸால் உலகளாவிய ரீதியில் மரணமடைந்தவர்கள் தொகை 1229 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
அத்துடன் கடந்த 3 நாட்களில் இந்நோயால் புதிதாக 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மேற்படி  வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  தொகை 2240 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் கினியாவில் பரவ ஆரம்பித்த நோய் லைபீரியா சியாரா லியோன் நைஜீரியா ஆகிய ஆபிரிக்க நாடுகளுக்கு பரவியுள்ளது.
மேற்படி நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லைபீரியாவில் 466 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த எபோலோ வைரஸால் சியாரா லியோனில் 365 பேரும் இனியாவில் 394 பேரும் நைஜீரியாவில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 



திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி


மல்லிகை ஜீவா  வருணித்த  அச்செழு  பண்ணையார்
தம்பையா   அண்ணன்.
   உரும்பராய் மண்ணில்   உழைப்பின்  உபாசகர்
                                         

 தி.ஜானகிராமன்  எழுதிய  கதையொன்றிலே  ஒரு  வசனம்  இப்படி வந்ததாக   ஞாபகம்.
தரையில்  வரைந்த   கோலம்   எழுந்து  நின்றதுபோல்--- சௌந்தர்ய உபாசகரான  அவர்  -  ஒரு  பெண்ணை   அவ்வாறு   வர்ணிப்பார்.
 எங்கள்  அச்செழு  பண்ணையார்  -   என   நண்பர்  மல்லிகை  ஜீவா வர்ணிக்கும்  தம்பையா   அண்ணர்   தமது   நினைவின்  அலைகள் சுயசரிதை   நூலை  இவ்வாறு   ஆரம்பிக்கின்றார்.
  உரும்பராய்ச்சந்தி  –  சிலுவையை   நிலத்தில் கிடத்திவைத்தாற்போன்றதொரு  சந்தி.
 ஜானகிராமன்   கோலத்தை  நிமிர்த்துகிறார்.   தம்பையா   சந்தியை கிடத்துகிறார்.   படைப்பாளிகளுக்கு   இப்படி    அபூர்வமாகவே   கற்பனை தோன்றும். 
 லா.ச.ரா.  எழுதுவார் -   அவள்    இடுப்பின்   வளைவில்    குடத்தின் வளைவு    ஏறியது  -  என்று.
 அபூர்வமாக   வந்து விழும்  சித்திரங்களை  எம்மால்   எப்படி மறக்கமுடியாதோ   அப்படித்தான்  தம்பையா  அண்ணர்  என்ற   அபூர்வ மனிதரையும்   மறக்கமுடியாது.
 மேலும்   ஐந்துவருடங்கள்   வாழ்ந்திருப்பாராகில்   நாம்   அவருக்கு பவளவிழா    கொண்டாடியிருப்போம்.
  நான்  போகிறேன்  நண்பர்களே  –  நீங்கள்   கொண்டாடுங்கள் -  என்று அவர்  தனக்குள்   நினைத்துக்கொண்டு ஆழந்ததுயில்  கொண்டிருக்கவேண்டும்.   அது    மீளாத்துயில்.
 ஒருவரது  மரணத்தை  கொண்டாட முடியுமா?   முடியும்.    நிச்சயமாக முடியும்.
 எப்படி?
 மறைந்தவரை   நினைத்து   எமது  எண்ண  அலைகளை  எழுப்பி  அந்த அலைகளுக்குள்   எம்மை   நாமே   சுயவிமர்சனமும்    செய்துகொண்டு கொண்டாடலாம்.   அவ்வாறு   என்றென்றும்    எம்மால் கொண்டாடப்படக்கூடியவர்   மந்திரப்புன்னகைக்குச் சொந்தக்காரரான தம்பையா   அண்ணர்.

இலங்கைச் செய்திகள்


பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பை மையப்­ப­டுத்தி ஆயு­தக்­க­ளை­வுக்­கு சுற்­றி­வ­ளைப்­புக்­களை மேற்­கொள்ள தீர்­மா­னம்

நான்காவது சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்

கண்டி பெண் மரணம்: சந்தேகிக்கும் எபோலா மாதிரிகளை சிங்கப்பூருக்கு அனுப்ப நடவடிக்கை

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன யாழ். கட்டளைத் தளபதி உதய பெரேரா

மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு

சற்றுமுன்னர் புதுடில்லிக்கு பயணமானது த.தே.கூ.

திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்
=================================================================

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

19/12/2014  இன்று  பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த 44 மாணவர்களது வகுப்புத் தடைக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக வளவில் எதி;ர்ப்பு ஆர்ப்பாட்த்தை மேற்கொண்டனர்.
மேற்படி வகுப்புத்தடை உடன் நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள்கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதே வேளை இது தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில்,
இதில் எந்த வித அரசியல் நோக்கமும் இல்லை. பகிடி வதை  காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் காரணமாகவே இரண்டு வார வகுப்புத் தடை விதிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 



சரித்திரத்தைப் பேசும் சமூக அக்கறையுள்ள குறும்படம் ரேகை

.
பயாஸ்கோப் முனுசாமி



மருதிருவர் குறும்படத்தை இயக்கிய தினகரன் ஜெய், ஜெகமதி கலைக்கூடத்துக்காக இயக்கியிருக்கும் இன்னொரு சரித்திர ஆவணம் - ரேகை குறும்படம். அவருடைய முதல் முயற்சியான மருதிருவர் படத்தில் மருது சகோதரர்களின் விடுதலைப்போர் வரலாற்றையும் ஆலயங்களுக்கு அவர்கள் ஆற்றிய திருப்பணிகளையும், நல்ல ஓவியங்கள் மற்றும் ஆவணங்களின் வழியாகக் காட்சிப்படுத்தியிருந்தார் தினகரன் ஜெய்.
ரேகை படமும் தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு உடையது.

பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராகக் கலகத்தில் இறங்கிய இனக் குழுக்களையும் சமூகங்களையும் அடக்கி ஆளுவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசு கடைப் பிடித்தது. அதில் ஒன்று ""குற்றப் பழங்குடிகள் சட்டம்''. 1911ல் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நான்கு முறை திருத்தி அமைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என்று நாடு முழுதும் கணக்கெடுக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய இனக்குழுக்களைத் தேர்ந்தெடுத்தனர். தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட சாதியரை இந்தக் கொடுஞ் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தினர். இதில் குறிப்பாக பிற மலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் மிகவும் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டனர். சுமார் 15000 பேர் கண்காணிக்கப்பட்டு பலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றனர் என இந்த சட்டத்தின் கொடுமையை சொல்லி விரிகிறது திரைப்படம். 

காட்சியும்,மீட்சியும்...

.
சிறையிருந்தாள் ஏற்றம்- இது சுந்தர காண்டத்தின் மற்றொரு பெயர்.
சீதையின் துயரத்தின் இடையில் ஊடாடும் அவள் கற்பின் அழகே சுந்தர காண்டத்துக்கு அழகூட்டுவது.
சுந்தரன் எனப்படும் அனுமனின் செயல்திறனாலும் அழகு பெறுவது இக் காண்டம்.
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற’ உருவினளாய் அசோகவனத்தில் சிறையிருந்த சீதையின் நிலையை அனுமனின் காட்சிக்கும் நம் பார்வைக்கும் வைக்கும் படலத்துக்குக்காட்சிப்படலம் என்றே பெயர் தருகிறான் கம்பன்.

பெண்களின் கண்கள் மழை(மேகம்)போன்ற கருநிறம் கொண்டிருப்பதால் அவற்றை மழைக்கண்கள் எனக் குறிப்பிடுவது உலகப் பொது வழக்கு.
இங்கு சீதையின் கண்கள் இடையறா மழையாகக் கண்ணீரைச் சொரிந்ததால் மழைக்கண் என்பது,இங்கே காரணப்பெயராகவே ஆகி விடுகிறது என்பதை 
‘’மழைக்கண் என்பது காரணக் குறியென வகுத்தாள்’’
என்கிறது கம்பநாடன் கவிதை.

சீதை அணிந்திருந்த மென்துகில்,அவள் விட்ட கண்ணீரால் (அப்பு) நனைந்து,அவள் விட்ட வெம்மையான பெருமூச்சால்
(வெப்பு )உலர்கிறது.
அது ஈர ஆடையா,புலர்ந்த ஆடையா என்றே கண்டறிய முடியாதபடி அப்பினால் நனைந்து வெப்பினால் புலர்ந்து ஒரு நிலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருந்த தன்மையைக் கீழ்க்காண்ட முறையில் விவரிக்கிறது காப்பியம்.
(அப்பு,தேயு,வாயு என்ற வழக்கத்தின்படி அப்பு என்ற சொல்லை நீர் என்ற பொருளில் ஆள்கிறான் கம்பன்)
’’துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
  ஒப்பினான்தனை நினைதொறும், நெடுங்கண்கள் உகுத்த
 அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்புடை யாக்கை 
 வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள்’’

சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 11-12, 10.2014

.

தமிழ் சினிமா -- அஞ்சான்



Tamil shooting spotஅஞ்சான்
இயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் 'சிங்கம்' சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ''அஞ்சான்''. இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...!
Tamil shooting spotஅஞ்சான்
கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு அண்ணன் சூர்யாவைத் தேடி டாக்ஸி பிடிக்கும் தம்பி சூர்யாவை, வாங்க அந்தேரி என வரவேற்கும் டாக்ஸி டிரைவர் காமெடி சூரியை கூடவே கூட்டிக் கொண்டு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அண்ணனைத் தேடாமல், தனி ஆளாக அண்ணன் சூர்யாவை தேடுகிறார் தம்பி சூர்யா.
Tamil shooting spotஅஞ்சான்
ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பி இருவர் அல்ல... இருவரும் ஒருவர்தான், ஒரே சூர்யா தான் எனும் உண்மை உலகுக்கும் (மும்பை நிழல் உலகுக்கும்...) உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்...) தெரிய வரும்போது 'அஞ்சான்' பதினாறடி பாஞ்சானாக விறுவிறுப்பு பிடிக்கிறது. அப்புறம், தம்பி சூர்யா, அண்ணன் சூர்யாவை தேடி வரவில்லை, தம்பி சூர்யா என்று ஒருவரே இல்லை... தன் நண்பன் சந்துரு-வித்யூத் ஜம்வாலை நயவஞ்சமாக சுட்டுக் கொன்றவர்களையும், தன்னை சுட்டு ஆற்றுக்குள் தள்ளிய விரோதிகளையும், அவர்களுக்கு உதவிய துரோகிகளையும் தேடித்தான் அண்ணன் ராஜூ பாய் சூர்யாவே, தம்பி கிருஷ்ணன் சூர்யாவாக அவதாரமெடுத்திருக்கிறார்... எனும் கதையையும், அது பயணிக்கும் தடத்தையும் முன்கூட்டியே யூகிக்க முடியாதவர்களுக்கு, படம் பயங்கர பரபரப்பாக, பரபரப்பு பயங்கரமாக, விறுவிறுப்பாக இருக்கிறது. அதை யூகிக்க முடிந்த இந்த காலத்து கில்லாடி ரசிகர்களுக்கு சற்றே 'சப்'பென்று இருக்கிறது.
Tamil shooting spotஅஞ்சான்
அதிலும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் 'பாட்ஷா', 'தளபதி' படங்களை பலமுறை பார்த்தவர்களுக்கு இயக்குநர் லிங்குசாமி 'அஞ்சான்' கதை பண்ணிய கதையும், 'சிங்கம் ஸ்டார்' சூர்யாவை,,'சூப்பர் ஸ்டாராக காட்ட முயலும் கலையும் சற்று கூடுதலாகவும் யூகிக்க முடிகிறது, தெரிகிறது. ஆனால் அதை போரடிக்காமல் சின்ன, சின்ன நகாசு வேலைகளை செய்து நகர்த்தியிருப்பதால் 'அஞ்சான்', நோஞ்சானாக தெரியாமல் பாஞ்சானாக பளிச்சிடுகி்றான்.
Tamil shooting spotஅஞ்சான்
சூர்யா வழக்கம் போலவே அண்ணன் ராஜூபாயாகவும், தம்பி கிருஷ்ணாவாகவும் இருவேறு 'கெட்-அப்'புகளில்(கவனிக்கவும், அண்ணன் டபுள்-ஆக்டில் டூயட் ரோலில் அல்ல...) பிச்சி பெடலெடுத்திருக்கிறார். ''நான் சாகணும்னாலும் நான் தான் முடிவு பண்ணனும்... நீ சாகணும்னாலும் அதையும் நான்தாண்டா முடிவு பண்ணனும்'' என சூர்யா துரோகிகளையும், விரோதிகளையும் சுட்டு தள்ளும் இடங்களாகட்டும், ''சுடணும்னா சுடணும் அதை விட்டு விட்டு சும்மா பேசிட்டு இருக்கக்கூடாது...' என எதிராளிகளை போட்டு தள்ளும் இடங்களிலாகட்டும், இன்னும் க்ளைமாக்ஸில் மெயின் வில்லன் இம்ரானை தீர்த்துகட்ட தனக்கு உதவிடும் வில்லனின் கூட்டாளிகள் மூவரை சுட்டுத்தள்ளிவிட்டு ''எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக்கூடாது...' என 'பன்ச்' டயலாக் அடிப்பதிலாகட்டும் சூர்யா, சூரியனாக ஜொலிக்கிறார்!

Tamil shooting spotஅஞ்சான்
ஆனால் அப்புறம் விஜய்யை 'இமிடேட்' செய்ய வேண்டும் எனும் எண்ணமும், ''சின்னதா வேட்டு சத்தம் கேட்டதும் பயந்து பறக்குறதுக்கு நான் என்ன புறாவா.? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா...'' என பேசும் வசனத்தில் புறாவா? சுறாவா? என புரியாமல் சூர்யா ரசிகர்கள், தியேட்டரில் விஜய்க்கு 'பன்ச்' வைத்ததாக நினைத்து விசில் பறக்க விடுவதும், வில்லன் இம்ரானை மற்றொரு நடிகர் விக்ரம் சாயலில் பிடித்து போட்டு படங்கள் மூலம் ஏதேதோ மெஸேஜ் சொல்ல களம் இறங்கிவிட்டது புரிகிறது. போகட்டும்! படம் பேசட்டும்!
Tamil shooting spotஅஞ்சான்
நாயகி சமந்தா போலீஸ் கமிஷனர் மகளாக 'கிக்' என்ட்ரி கொடுத்து, ரசிகர்களின் இதயங்களை 'பக் பக்' என அடிக்க விடுகிறார். வழக்கம் போலவே ஆக்ஷ்ன் படங்களில் கதாநாயகிக்கான உரிய முக்கியத்துவம் அம்மணிக்கும் தரப்பட்டிருந்தாலும், அம்மணி சமந்தாவை காட்டிலும் சக்கை போடு போட்டிருக்கின்றனர் பார்ட்டிகளில் ஆடும் பஞ்சுமிட்டாய் பெண்கள். பலே, பலே!
Tamil shooting spotஅஞ்சான்
காமெடி சூரி, தெலுங்கு பிரம்மானந்தம், சூர்யாவுக்கு உதவும் டிராவல்ஸ் இஸ்லாமியர் ஜோமல்லூரி மற்றும் சூர்யாவின் நண்பர், தாதாவாக வரும் சந்துரு-வித்யூத் ஜம்வால், வில்லன்கள், விரோதிகள், துரோகிகள் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
Tamil shooting spotஅஞ்சான்
யுவனின் இசையில், 'ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி...' எனத் தொடங்கித் தொடரும் பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ர(ரா)கம்! சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அஞ்சானின் கூடுதல் பலம்! பிருந்தாசாரதியின் வசன வரிகள் பெரும்பலம்!
Tamil shooting spotஅஞ்சான்
ராஜூபாய் சூர்யாதான் என்னை பார்க்க கூடாது, நான் அவரை பார்ப்பதில் என்ன தவறு என சூர்யாவுக்கு உதவும் ஜோமல்லூரி பாய் வீட்டில், சமந்தா பர்தாக்குள் பவனி வருவது டைரக்டர் லிங்குசாமியின் புத்திசாலித்தனத்திற்கு உதாரணம். அதேநேரம், சமந்தா, தாதா சூர்யாவை காதலிப்பதை கமிஷனர் அப்பா கண்டு கொள்ளாததும்., சமந்தா, காதலர் சூர்யாவின் பெயரை ராஜூ என கையில் பச்சைக் குத்திக்கொள்ளாமல் எல்லோரும் சூர்யாவை பயபக்தியுடனும், பாசத்துடனும் அழைப்பது போல் ராஜூ பாய் என்றே பச்சை குத்தியிருப்பதும் அபத்தம்! அதிலும் அந்த பச்சை ஸ்கெட்ச் பேனாவால் குத்தப்பட்ட பச்சை என்பது அப்பட்டமாக தெரிவது கூடுதல் அபத்தம்!
Tamil shooting spotஅஞ்சான்
இதுமாதிரி ஒரு சில அபத்தங்களை ஒதுக்கிவிட்டால் இரண்டு மணிநேரம் 51 நிமிட படமும் சற்றே சுருங்கும். ஒருசில இடங்களில் போரடித்து கொஞ்சமே கொஞ்சம் நோஞ்சானாக தெரியும் அஞ்சானும் முழுக்க முழுக்க 64 அடி பாஞ்சானாக பளிச்சிடுவான்.
Tamil shooting spotஅஞ்சான்
மொத்தத்தில், ''அஞ்சான்'' - 'சற்றே சாஞ்சான்' - 'ஆனாலும் பாய்ந்தான் - பாய்ந்துள்ளான்!!'

நன்றி தினமலர் சினிமா