என்னமோ தெரியவில்லை. இலங்கையில் குரங்குகளின் வகிபாகம் ஐதீகத்திலிருந்தே
தொடங்கியிருக்கிறது.
இந்திய வனத்தில் மேய்ந்துகொண்டிருந்த
மானைப் பிடித்துத் தாருங்கள் என்று சீதாப் பிராட்டியார், கேட்டதனால் வந்த வினையால்
அத்தருணத்தில் இரவணனால் அவள் சிறைப்படுத்தப்பட்டு
இலங்காபுரியின் அசோக வனத்தில் வைக்கப்பட்டாள்.
அவளை மீட்டுவருவதற்கு இராமர்
அனுப்பிய தூதுவர் குரங்கு இனத்திலிருந்து வந்த அனுமார். அவரோ இராவணனின் சேவகர்களினால் வாலில் நெருப்பு வைக்கப்பட்டு
அவமானப்படுத்தப்பட்டார். பழி தீர்க்க அவர்
லங்காவை தகனமாக்கினார். இராமாயணத்தில் லங்கா
தகனம் பகுதியும்
முக்கியமானது.
இந்த ஐதீகக் கதைகள் இலங்கை
சுதந்திரம் பெற்ற பின்னரும் தொடர்ந்திருப்பதை
அறிவீர்கள். கலவர காலத்தில் தீய சக்திகள் சிறுபான்மை இனத்தவரின் சொத்துக்களுக்கு
நெருப்பு வைத்தன. அந்தத் தீய சக்திகள் யாழ். பொது நூலகத்தையும் விட்டு வைக்கவில்லை.
அவ்வேளையில் அது கண்டும் மௌனமாக அமைதி காத்திருந்தவரான ரணில் விக்கிரமசிங்காவின் வீட்டு நூலகத்தையும் கடந்த
ஆண்டு கோத்தா கோ போராட்டத்தில் தீய சக்திகள்
எரித்தன.
இலங்கைக்கு தூதுவனாக வந்த அனுமார், இறம்பொடையில் சிலையாக கோயில்
கொண்டுள்ளார். இராவணனால் சிறை வைக்கப்பட்ட சீதாப்பிராட்டிக்கும் கோயிலிருக்கிறது. இராமருக்கும்
கோயில் இருக்கிறது.
இவர்கள் சிலையாக குடியிருக்கும்
பிரதேசங்களில் மாத்திரமின்றி, பொலன்னறுவை,
கேகாலை, தம்புள்ளை, முல்லைத்தீவு முதலான வனம்
சார்ந்த பகுதிகளில் குரங்குகளின் பிறப்பு வீதம்
அதிகம். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் சிறிய
உடைமைகளையும் அவை பறித்துக்கொண்டு மரத்தில் தாவி ஏறிவிடும்.
சிறுவயதில் நாம் படித்த
தொப்பி வியாபாரி கதையைப்போன்று எதனையாவது குரங்கை நோக்கி விட்டெறிந்தால், தான் பறித்து
வந்ததை அதுவும் விட்டெறியும்.
நாட்டில் பெருகியிருக்கும்
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறார்கள் என்ற செய்தி பரவலாக வெளியானதும் சமூக வலைத்தளங்களில் “ மீம்ஸ் “ பதிவேற்றும் நவீன கலைஞர்கள் தங்கள் குசும்புத்தனத்தை
தொடங்கிவிட்டனர்.
குதிரைப் பந்தயத்திடலில்
என்ன நடக்கிறது..? என்பதே தெரியாமல், ஓடும் குதிரைகள் போன்று, இலங்கையில் சுதந்திரமாக தாவித்தாவி ஓடித் திரிந்து உயிர்வாழ்வதற்காகவும் தம் பசி போக்குவதற்காகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் குரங்குகளும் தற்போது இலங்கை அரசின் ஏற்றுமதி பொருளாதாரத்தில்
முக்கிய பங்காற்றவிருப்பதை அறியாமலிருக்கின்றன.
இந்த ஜீவராசிகள் தொடர்பாக
இவற்றை வாங்கவிருக்கும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை
ஆரம்பித்திருக்கிறது இலங்கை அரசு. எப்பொழுதும் சீனாவுக்குப் போட்டியாக களம் இறங்கும்
அமெரிக்காவும் குரங்குகளை கேட்டு இலங்கையுடன் பேசுவதற்கு தயாராகியிருக்கிறது.
இவ்வாறு குரங்குகளை ஏற்றுமதி
செய்வது தொடர்பான விவாத அரங்கும் ஊடகங்களில் ஆரம்பமாகிவிட்டன.
இவை செறிந்து வாழும் பிரதேசங்களில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டவர்கள், குரங்குகளையும் வேட்டையாடி “ தொங்கு மான் இறைச்சி “ என்ற பெயரில் விற்றனர் என்ற கதையும் முன்னர் உலாவியது.
குரங்குகளினால் தென்னைப்
பயிர் உட்பட பல பயிர்கள் சேதமடைவதாக பொதுமக்களின் புகாரும் நீண்டகாலமாக தொடருகிறது.
சீனாவுக்கு ஒரு இலட்சம்
குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழிமுறைகளை ஆராய்வதற்காக குழுவென்றை அமைப்பதற்கான
அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்படவிருக்கிறது.