மெல்பன் 3 C R வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
நண்பர் சண்முகம் சபேசன் ஒருநாள் தங்கள் வானொலிக்கு கலை , இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு தொடர் உரை நிகழ்த்த
முடியுமா..? எனக்கேட்டார்.
அவரது நிகழ்ச்சி பிரதி
செவ்வாய்க்கிழமைகளில் மெல்பனில் Fitzroy என்ற இடத்தில் இயங்கிய வானொலி கலையகத்திலிருந்து ஒலிபரப்பாகியது.
அவர் தமது கடமை முடிந்து
அங்குசென்று, நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பார்.
மிகுந்த அர்ப்பணிப்புணர்வோடு அதனை சுமார் இருபத்தியைந்து வருட காலமாக செய்துவந்தவர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்தில் அபரிமிதமான நம்பிக்கையும், நேசமும் கொண்டிருந்தவர். வன்னிக்குச்செல்லும்போதெல்லாம் அவரைச் சந்தித்து மீண்டிருக்கும் சபேசன், 3 C R வானொலி தமிழ்க்குரல் நிகழ்ச்சியை புலிகளின் குரலாகவே
நடத்தியிருந்தாலும், இடைக்கிடை கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம்
தந்தவர்.
அத்துடன் நாம் நடத்திவரும்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் செய்திகளையும் சமூகஅறிவித்தலாக வெளியிட்டவர். இந்தத்
தன்னார்வத்தொண்டு நிறுவனம் 1988
இல் தொடங்கப்பட்ட காலத்தில் பாரதியின் கருத்தையே
அதன் அறைகூவலாக விடுத்திருந்தோம்.
“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “