இம்மாதம் 26 ஆம் திகதி அவுஸ்திரேலியா தினமாகும்.
அதற்காக
அரசு பொதுவிடுமுறை வழங்கியது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரும் இந்நாளில் ஒருதடவை நான் எதிர்பார்க்காத
நிகழ்வு ஒன்று நடந்தது.
2002 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி. அதாவது அவுஸ்திரேலியா தினத்துக்கு
முதல்நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்பி, களைப்போடு உறங்கிக்கொண்டிருந்தேன். மறுநாள்
விடுமுறை என்பதால், “ அப்பாடா
“ என்றிருந்தது.
உறக்கம் கண்களை தழுவிக்கொண்டிருந்தபோது,
கட்டிலுக்கு அருகிலிருந்த தொலைபேசி சிணுங்கியது.
மறுமுனையில் நண்பர் நல்லையா சூரியகுமாரன்.
இவர் கிழக்கிலங்கையில்
கல்குடா தொகுதியின் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான ( அமரர் ) நல்லையாவின் புதல்வர். இடதுசாரி சிந்தனை கொண்டவர். இங்கே தொழில் கட்சியிலும்
அங்கம் வகிப்பவர். அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் மனித உரிமை செயற்பாடுகளிலும்
ஈடுபாடுள்ளவர்.
என்னை “ மச்சான் “ என்றும் அழைப்பார். நாம் மெல்பனில் 1988 இல்
உருவாக்கிய தமிழ் அகதிகள் கழகத்தின் ஸ்தாப உறுப்பினர். தமிழ் அகதிகளின் நலன்களுக்காக குரல்கொடுத்து வந்திருப்பவர்.
அவர் ஏன் அந்த மாலை வேளையில்
எனக்கு கோல் எடுக்கிறார் என யோசித்தவாறே,
“ எப்படி சூரி…? என்ன விசயம்..? “ எனக்கேட்டேன்.
“ மச்சான் நாளைக்கு என்ன செய்கிறீர்…? “ எனக்கேட்டார்.
“ நாளை பொதுவிடுமுறை தினம். வீட்டில்தான் இருப்பேன். “ என்றேன்.
“ மச்சான், நாளை காலை ஒன்பது மணிக்கு பண்டுரா பார்க்கிற்கு வரமுடியுமா..?
நாளை இங்கே ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. “
என்றார்.
“ அப்படி என்ன கொண்டாட்டம்.? என்ன விசயம் ?
“ என்று மீண்டும் கேட்டேன்.
“ மச்சான்,
நாளைக்கு Australia
Day . கட்டாயம் வாரும். உம்மை எதிர்பார்க்கின்றேன். “ என்று வலியுறுத்தி சொல்லிவிட்டு , இணைப்பினை துண்டித்துக்கொண்டார்.
பிள்ளைகள், எனது குடும்ப நண்பர் வீட்டு பிள்ளைகளுடன் மறுநாள்
நேரத்தை செலவிடவிருந்தனர். அவர்களை தொலைதூரத்திலிருந்த
அந்த வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு, நான் மாத்திரம் பண்டுரா பூங்காவிற்கு
சென்றேன்.
பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் பின்னர் டெரபின்
மாநகர மேயர் உரையாற்றினார். அதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி என அறிவித்தார்கள்.
பெயர் சொல்லச்சொல்ல யார்
யாரோ மேடைக்குச்சென்று விருதும் அழகான பெரிய பூச்செண்டும் பெற்றுக்கொண்டார்கள்.
திடீரென எனது பெயர் அறிவிக்கப்பட்டு,
நான் யார், மெல்பனில் என்ன செய்கின்றேன். எனது வாழ்வும் பணிகளும் எத்தகையது என்று அந்த
மேயர், எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்துவிட்டு,
எனக்கும் விருது என அழைத்தார்.
எனது நீண்ட பெயரை ( Letchumanan Murugapoopathy ) சற்று
சிரமப்பட்டு உச்சரித்தார் அந்த மேயர்.