சொல்லி நிற்போம் சுவையாக ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 பேசுகின்ற வரம் மெமக்கு

     பெருவர மாய் அமைந்திருக்கு 

கூசு கின்ற வார்த்தைகளை

     மாசெனவே ஒதுக்கி டுவோம் 

ஆசை கொள்ளும் பாங்கினிலே

     அழகு தமிழ் வார்த்தைகளை

பேசி நிற்போம் வாருங்கள் 

      காசினியே சுவை பயக்கும்  !


சொல்லு கின்ற சொல்லெல்லாம் 

     சுவையாக இருக்க வேண்டும்

முள்ளாக வந்து நின்றால்

      முழு மகிழ்வும் மறைந்துவிடும் 

கள்ள முடன் மனமிருந்தால்

      நல்ல சொற்கள் குறைந்துவிடும்

வெள்ளை மனம் உள்ளார்க்கு

      நல்ல சொற்கள் நிறைந்துவிடும்  !

 

மவுண்ட்றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் – பேச்சுப்போட்டி 2020 பரமபுத்திரன் அவுத்திரேலியாவில் வாழும் மவுண்ட்றூயிட் பிரதேச தமிழ்  பிள்ளைகளுக்கு தமிழ்  கற்க வழிகாட்டும் கல்வி நிலையம் தனது முப்பதாவது பேச்சுப்போட்டியை 15/08/2020 அன்று மவுண்ட்றுயிட்  சமூகப் பொது  மண்டபத்தில் நடாத்தி முடித்துள்ளது. மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகிய போட்டிகள் மாலை ஆறு மணிவரை   நீடித்தது. இன்றைய :கொறோனா’ தடுப்பு நடைமுறைகளையும்  நடைமுறைப்படுத்தி, போட்டிகளை நேரடியாகவும், இணைய வழியாகவும் பார்க்கக்கூடிய வகையில் திட்டமிட்டு  நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இனிப்  போட்டிகள் தொடர்பாக அவதானிப்போம்.


நிர்வாகத் தலைவர் திரு. தேவராசா கில்பேட் அவர்களின் தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இன்றைய சூழலில் எங்கள் பிள்ளைகளின் பேச்சுப்போட்டியை நிகழ்த்தி, அவர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்வதே எமது நோக்கம் என்று மிகவும் சுருக்கமாக கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அடுத்து அதிபர் திரு. பாலசுப்பிரமணியம் முரளீதரன் அவர்கள் மண்டபத்தில்  கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கூறி எமது கல்வி நிலையத்தின்  முப்பதாவது பேச்சுப்போட்டி என்பதை தெரிவித்து  நடுவர்களை அறிமுகம் செய்து விட்டு மேடையிலிருந்து அகன்றார்.

பிரதமர் மஹிந்தவுக்கு ஆஸி. பிரதமர் வாழ்த்து

Friday, August 21, 2020 - 4:18pm

- நாட்டுக்கு வருமாறு மொரிசனுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர்

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (21) பிற்பகல் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, இரு நாட்டு பிரதமர்களும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அந்நியோன்யமாக ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுகதை - நினைவுப் பதிவு - எண்பத்து மூன்று ஜூலை ! - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில்நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும்.


குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக்கொண்டிருந்தது. பதினொரு மணியளவில் பரீட்சை மண்டபத்தில் இருக்கவேண்டிய  அமைதிக்கு மாறாக, ஒருவித இனம்புரியாத சலசலப்பை உணரக்கூடியதாகவிருந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். பரீட்சை மேற்பார்வையாளர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களது முகங்கள் இறுகியிருந்தன.

மண்டபத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களும் நிமிர்ந்து இடப்பக்கமும், வலப்பக்கமும் வெளியே பார்வையை எறியத் தொடங்கிவிட்டார்கள். இச்சையின்றி இயங்கிய என்கண்களும் வெளியே நோக்க... ! எங்கும் புகைமண்டலமாகத் தெரிந்தது.

 

மக்களின் மனதில் உறைந்துகிடந்த நெருப்பின் வெளிப்பாடு! பூபாலரட்ணம் சீவகன் ( லண்டன் பிபிசி தமிழோசை முன்னாள் ஊடகவியலாளர் )


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றி மிகப்பெரியது. ‘அந்த வெற்றி அப்படியானது, இப்படியானது’... என்றெல்லாம் மட்டக்களப்பில் வாழும் பலர் பேசித்தள்ளி விட்டார்கள். ஆகவே நான் இங்கு அதனைப்பற்றி பேசப்போவதில்லை.

ஆனால், இந்த வெற்றி எதனைக் காண்பிக்கின்றது என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது.

நான் முன்னர் சொன்னதுபோல மட்டக்களப்பில் அக்கறை உள்ள உள்ளூரவர்கள் பலர் இதனைப்பற்றி சிலாகித்து எழுதியுள்ளனர். அந்தக்கட்சியை எதிர்த்த சில உள்ளூரவர்களும் ஓரளவுக்கு அதனை ஏற்றுக்கொண்டு எழுதியுள்ளனர். ஆனால், இலங்கை தேசிய மட்டத்திலான அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் பலரும் அல்லது தற்காலத்தில் சர்வதேச தமிழ் ஆய்வாளர்களாக தம்மைக்கூறிக்கொள்ளும் பலரும் இதனை பேச விரும்பவில்லை அல்லது தவிர்த்தே வருகின்றனர். அவ்வளவு ஏன், அண்மைக்காலம் வரை மட்டக்களப்பில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை பல தேசிய ஊடகங்கள் கூட ஆழமாகப் பேசவில்லை. எமது “அரங்கம்” பத்திரிகை தவிர.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 28 – மொடாமத்தளம்/மண்மேளம் – சரவண பிரபு ராமமூர்த்தி


மொடாமத்தளம்/மண்மேளம் – தோற்கருவி

 

ஆதிமனிதன் மண்பானையை இசைக்கருவியாகப் பயன்படுத்தியிருக்கின்றான்.                   சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பல பாத்திரங்கள் காலப்போக்கில்                இசைக்கருவிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றன. தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கும், அளப்பதற்கும், சமையல் செய்வதற்கும் பயன்படும் பானைகள்  பாண்டங்கள் முதலியவை தோலினால் மூடப்பட்ட பொழுது தோற்கருவிகளாக  மாறின. தபலா, டக்கா முதலிய கருவிகள் இவ்விதம் உண்டாயின என்று கூறுவர் (பி. சைதன்ய தேவ்).       இசைக் கச்சேரிகளில் பயன்படத்தப்படும் கடம் மண் குடம் என்பது நாம் அறிந்த ஒன்று. பண்டைத் தமிழர்கள் மண் குடத்தின் வாய்ப்பகுதியைத் தோலால் மூடி குடமுழா செய்துள்ளார்கள். இவ்வாறான ஒரு மண் இசைக்கருவி தான் மொடாமத்தளம். 

 அமைப்பு

குயவர்கள் களிமண்ணையும், செம்மண்ணையும் தூளாக்கி சலித்து, தண்ணீர் விட்டு  மிதித்து சில நாட்கள் புளிக்க வைத்து மாரியம்மனை வணங்கி மண்ணெடுத்து பானை உருவம் செய்கிறார்கள். பானையின் இருபுறமும் வாய் பகுதிகள் திறந்து இருக்கும். 10-30கிலோ கணம் உள்ளது பழைய மத்தளம். இப்பொழுது 7 கிலோ. மத்தளத்தின் இடது பக்கவாய் சுமார் 1 ஜான், வலது பக்கம் இதைவிட 1-2 இன்ச் அதிகமாக இருக்கும். வலது பக்கம் வலந்தரம், மத்திய சுதி, ஒலி அதிகமாக வரும். இடது பக்கம் உச்ச சுதி சத்தம் குறைவாக இருக்கும். மத்தளத்தை மாட்டுத்தோல் அல்லது எருமைத்தோல் கொண்டு இருக்கி கட்ட வேண்டும். 


தமிழ் இருக்கையின் தேவை முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி


தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். "ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை" என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் அ. முத்துலிங்கம் அவர்கள் விபரிக்கிறார். பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது. (விக்கிப்பீடியா).

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டவர் பால சுவாமிநாதன்.அமெரிக்கவாழ் தமிழரான பால சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கடும் முயற்சி எடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதேநேரம், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு உலகம் முழுவதும் குவியும் ஆதரவைக் கண்ட ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கை அமைய அனுமதி அளித்துள்ளது. இதனால் தனது முழு முயற்சியால் தன் சொந்த செலவிலேயே ஸ்டோனி ப்ரூக்கில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் முனைவர் பாலா சுவாமிநாதன் வெற்றி கண்டுள்ளார்.
கனடாவில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர் வாழும் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் வாய்ப்பைத் தேடி வந்து வழங்கியிருக்கிறார்கள் பல்கலைகழகத்தார்.
இந்த மாதிரியானதொரு வாய்ப்புக் கிடைக்க பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இப்போது ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்ட சூழலில் அந்த வெற்றிகரமான முயற்சியைக் கண்டு Toronto பல்கலைக்கழக இயக்குநர்கள் தமிழ் மக்களிடம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான சம்மதத்தை வழங்கி வரவேற்றிருக்கிறார்கள்.

இலங்கைச் செய்திகள்

தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து 

ரிஷாட்டுக்கு எதிரான விசாரணை நிறைவு

அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்

எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்

9 ஆவது பாராளுமன்ற கன்னி அமர்வின் பின்னர்... 

சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தேசியப் பட்டியல் ரணில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசியல் பழிவாங்கல்; ரணில் விக்ரமசிங்கவுக்கு செப். 04, 07 இல் அழைப்பு

மலிக், சுமந்திரன், மங்கள, ராஜித பழிவாங்கல் ஆணைக்குழுவில்

அரசாங்கத்திற்கு நட்டம்; ராஜித உள்ளிட்ட மூவருக்கு குற்றப்பத்திரிகை

ஷானி அபேசேகர, SI ரோஹணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அங்கஜன் இராமநாதனின் நியமனம் SLFPக்கு கிடைத்த பெரும் கௌரவம்


தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து 

- வீட்டுக்கு பலத்த சேதம்  உடைமைகள் எரிந்து நாசம்
- நாசகார வேலையா? விசாரணை தொடர்கிறது 

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை - வேவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30அளவில் ஏற்பட்ட இத் தீ அனர்த்தத்தில் வீட்டின் கூரை உட்பட வீட்டின் பெறுமதிவாய்ந்த உடைமைகள் பல முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.  

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 27

 வெட்ட வெட்ட தழைத்த வாழையாக வாழ்வோம் !  வலிசுமந்த எங்கள் எஸ்தி, கனடாவில்  வழங்கிய விருதும் வீரவியட்நாம் பெண்ணின் சந்திப்பும் !!

நான் குழந்தைகளுக்காக கவிதைகளும் பாடல்களும் எழுதியிருப்பதை அறிவீர்கள்.  அவை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.

குழந்தைகளுக்காக எழுதும்போது, நாம் எமது வயது முதிர்ச்சியை ஒரு புறம் வைத்துவிட்டு, குழந்தைகளின் பருவத்திற்கே சென்று சிந்தித்து எழுதல் வேண்டும்.

அதற்கு குழந்தை உளவியலும் தெரிந்திருத்தல்வேண்டும்.  மகாகவி பாரதி ஓடிவிளையாடு பாப்பாவும் எழுதினார்.  மனதிலுறுதி வேண்டும் என்று அனைவருக்கும் பொதுவாகவும் பாடியவர்.


குழந்தை பிறந்து தவழ்ந்து, நடைபழகும்போது இடறிவிழுவது இயல்பு. நடைப்பயிற்சியில் குழந்தை விழுந்துவிடும் என்பதற்காக எந்தவொரு தாயும் தகப்பனும் அதனை நடக்கவிடாமல் தடுப்பதில்லை. 

தவழும் பருவத்திலிருந்து குழந்தை எழுந்து நிற்க முயற்சிக்கும்போது, எவருமே அருகில் ஓடிச்சென்று,  “ ஐயோ குழந்தை விழப்போகிறதே…”  என்று தூக்கி அணைக்கமுன்வருவதுமில்லை.


உலகச் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தயார்

அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிராகரிப்பு

ஆப்கானின் ஒரே பெண் அமைதி பேச்சுவார்த்தையாளர் மீது சூடு

லிபியாவில் அகதிப் படகு மூழ்கி 45 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: போர் எச்சரிக்கை

இராணுவ கலகம்: மாலி ஜனாதிபதி இராஜினாமா


காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல் மற்றும் தீயை பரவச் செய்யும் பலூன்களை அனுப்பியதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் நேற்றும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் கடந்த சனிக்கிழமை மாலை மோதல்கள் வெடித்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 14 - எங்கள் தங்கம் - சுந்தரதாஸ்தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக பணியாற்றியவர்கள் கலைஞர் கருணாநிதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் மூவரும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள். அந்த படம் தான் எங்கள் தங்கம் , இந்தப் படத்தை கருணாநிதியின் குடும்ப நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்தது.

லாரி ஓட்டுநரான தங்கம் தன் பார்வையற்ற தங்கை சுமதிக்காகவே வாழ்கிறார். ஓர் இரவு தன் பழைய நண்பன் மூர்த்தியை சந்திக்கும் தங்கம் அவனை தன் இல்லத்தில் தங்கும்படி கூறுகிறார். தங்கம் பணிக்கு சென்று விடவே, மது வெறிக்கு ஆளான மூர்த்தி சுமதியை வல்லுறவிற்கு உட்படுத்தி விடுகிறார். விஷயமறிந்த தங்கம் மூர்த்தியை தேடுகிறார். அப்போதுதான் அவன் ஒரு கொள்ளைக் கூட்டத்துடன் தொடர்புடையவன் என்றும் தெரியவருகிறது. மூர்த்தி சுமதியை இணைக்க தங்கம் பல இன்னல்களை அனுபவிக்கிறான்.

இதுதான் எங்கள் தங்கம் படத்தின் கதை. படத்தின் கதையை கலைஞர் கருணாநிதி எழுதி இருந்தார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராகவும் தமிழக அரசின் சேமிப்பு திட்ட தலைவராகவும் விளங்கிய எம்ஜிஆரை இந்தப்படத்தில் நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள். படத்தின் ஆரம்பத்தில் உண்மையான எம்ஜிஆர் ஒரு காட்சியில் தோன்றுகிறார் அவருடன் தங்கம் கதாபாத்திரத்தில் வரும் எம்ஜிஆர் உரையாடுகிறார் இந்தக் காட்சி ரசிகர்களை பரவசப்படுத்தியது.

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 49 முருகபூபதி


தயசங்கரை, அபிதா வாரி அணைத்து உச்சிமோந்தாள். அவன், அவளது அணைப்பில் வெட்கப்பட்டு நெகிழ்ந்தான்.

 “ அன்ரி,  உன்னைப்பார்க்கவேண்டும் என்றாங்க… அபிதா, இவன் பெடியங்களோடு கிறவுண்டுக்கு கிரிக்கட் விளையாடப் போகவிருந்தவன்.  இழுத்துக்கொண்டு வந்திட்டன்.  படிக்கவைக்கிறதுக்கு ஆளை உட்கார வைக்கிறதுதான் கஷ்டம்.  “ எனச்சொல்லிக்கொண்டு வீட்டை ஒரு கணம் நோட்டம் விட்டாள் தமயந்தி.

 “ எல்லோரும் வெளியே போய்விட்டாங்க தமயந்தி.  போரிங்காக இருந்தது.  அதுதான் கூப்பிட்டேன்.  இருந்து சாப்பிட்டுத்தான் போகவேண்டும்.  உதயசங்கருக்கு என்ன வேணும்… ?   “  குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஐஸ்கிறீம் எடுத்துக்கொடுத்த அபிதா,   “ நீங்கள்…. உங்களுக்கும் தரட்டுமா..? “  என்று தமயந்தியைப்பார்த்துக்கேட்டாள்.எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -05 காற்று வாங்கப்போனேன், ஒரு வேலை வாங்கி வந்தேன் ! எழுத்துக்கு கிடைத்த முதல் சன்மானம் இருபது ரூபா ! முருகபூபதி

பாடசாலைப்படிப்பு முடிந்துவிட்டால், அதன்பிறகு வேலை தேடும் படலம்தானே…? தேடினேன்…. தேடினேன்…! சிபாரிசுக் கடிதங்களுக்காக எனது அப்பா, சில அரசியல்வாதிகளிடமும் அழைத்துச்சென்றார்.

அப்பா, தனியார் துறையில் ஒரு கம்பனியில் விநியோக விற்பனைப் பிரதிநிதியாகவிருந்தவர். மலையக பிரதேசங்களுக்கு அடிக்கடி செல்பவர்.

தெரணியகலையின் நாடாளுமன்ற உறுப்பிராக இருந்த தனபாலவீரசேகரவிடமும் ஒரு தடவை அழைத்துச்சென்று கடிதம் வாங்கித்தந்தார்.


அந்த எம்.பி.  முதலில் சமசமாஜக்கட்சியின் தெகியோவிற்ற நாடாளுமன்ற உறுப்பினராகி, பின்னர் கட்சி தாவி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்  இணைந்து,  தெரணியகலை தொகுதியின்  நாடாளுமன்ற  பிரதிநிதியானவர்.

அவரையும் அவரை எமக்கு அறிமுகப்படுத்தியவருமான தெரணியகலை  பிரதேச வீரகேசரிThe Times of Ceylon – Daily Mirror ஆகிய பத்திரிகைகளின் நிருபருமான செல்லையா என்ற உறவினரையும் சந்திப்பதற்கு சென்றிருந்தபோதுதான் 1971 ஏப்ரில் கிளர்ச்சி சந்தேகத்தின்பேரில் தெரணியகலை பஸ் நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கினேன்.

பிள்ளை வளர்ப்பும் விளையாட்டுப் பொருட்களும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

.

இன்று இரு பெற்றோரும் தொழில் பார்க்கும் மத்தியதர குடும்பங்களே பெருகி வருகிறது. கணவன் என்பவன் வருவாய் தேடி உழைப்பவன். இல்லாள் அல்லது இல்லத்தரசி அவன் உழைத்துக் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் வீட்டை நிர்வகிப்பவள்; குடும்பத்தைப் பராமரிப்பவள் என்பதெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டது. இன்று இல்லாள் ( இல்லத்தை ஆள்பவள் ) என்ற பதம் அர்த்தமற்றதாகி விட்டது.


பெற்றோர் இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் பிள்ளைகளும் அதற்கேற்ப ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள். ஒருவர் உழைக்கும் குடும்பத்தில் ஓரளவு பணப்பற்றாக்குறை இருப்பதற்கு இடமுண்டு. இன்னும் சரியாகச் சொல்வதானால் அதிகப்படியான ஆடம்பரங்களுக்குப் பற்றாமை என்பதே சரியானது. இதனால் ஒருவர் சம்பாதிக்கும் குடும்பங்கள் ஆடம்பரமற்ற வாழ்வை வாழ்ந்து வந்தனர். பிள்ளைகளின் எண்ணிக்கையும் ஒன்றோ இரண்டாகவோ தான் இருந்தது. இதனால் பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய இவர்களிடம் பணம் போதுமாக இருந்தது.


இன்றய தலைமுறைச் சிறார்கள் புதிய வசதிகளை அனுபவிக்கும் ஒரு புதிய தலைமுறையாக உருவாகி வருகிறார்கள். இந்தப் புதியத் தலைமுறைப் பெற்றோரிடமும் பணம் இருப்பதால் வேலை விட்டு வந்து பிள்ளைகளின் நன்மை கருதி அவர்களை வெவ்வேறு பட்ட வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது வழமையாகி விட்டது. சில 8இ 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சங்கீதம்இ உதைப்பந்தாட்டம்இ கூடைப்பந்துஇ நீச்சல்இ பரதநாட்டியம் என 4 அல்லது 5 வேறுபட்ட கலைகளைக் கற்று வருகிறார்கள். எனினும் இவைகள் அனைத்திலும் அவர்கள் தேர்ச்சிபெற்றவர்களாக வருவார்களா என்பது சந்தேகமே.

படச் சுருளும் நானும் (அனுபவக்கதை) உஷா ஜவகர் (அவுஸ்திரேலியா)

 அது 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில் ஓர் நாள். அன்று ஒரு செவ்வாய்க்கிழமை!

 அப்போது நான் சாம்பியாவில் உள்ள சிங்கோலா (Chingola) என்ற சிறிய நகரில் என் அக்காவுடன் தங்கியிருந்தேன்.அங்குள்ள அக்கௌன்டன்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.அந்த நிறுவனத்தின் பெயர் மசூத் ரவூப் அண்ட் கம்பெனி (Masood Rauf and Co). ஒரு பாகிஸ்தானியர் தான் அந்த நிறுவன உரிமையாளர். சிங்கோலா ஒரு சிறிய நகர் ஆதலால் ஒரே ஒரு போட்டோ ஸ்டூடியோ தான் அங்கு இருந்தது.

 என் அக்கா சில புகைப்படங்களை எடுத்துவிட்டு அந்த பட சுருளை என்னிடம் தந்திருந்தார்.

 நான் என் அலுவலகத்தின் மதிய போசன இடைவேளையின் போது அந்த ஸ்டூடியோவுக்கு சென்றேன்.

 மிகவும் பருமனான ஒரு குஜராத்திப் பெண்மணி ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்து,"வாட் யு வாண்ட்?"(What you want?) என அசட்டையாக வினவினார்.

 நான் பட சுருளை அவரிடம் கொடுத்து,"இதைப் பிரிண்ட் பண்ணித் தர முடியுமா?"எனப் பணிவுடன் ஆங்கிலத்தில் வினவினேன்.

 அவரோ உடனே என்னிடம்,"Yesterday giving today giving,Today giving no tomorrow giving”

 என்றார்.எனக்குத் தலையும் புரியவில்லை.வாலும் புரியவில்லை.

நியூசிலாந்திலிருந்து ஒலிக்கும் நம்தமிழ் வானொலியில் எழுத்தாளர் முருகபூபதியுடன் கதைப்பமா நிகழ்ச்சி.

இம்மாதம் 20 ஆம் திகதி பதிவானது. 

முகநூலை சகிக்காத முகவரியின் குரல் ! கொரோனா வழங்கிய புதிய நட்பு வட்டம் !! கலை இலக்கியவாதி கோபாலன் பத்மநாபன் முருகபூபதி

 

ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலமாக எழுத்துலகில் பயணித்துவருகின்றேன். 1970 முதல்   இதழ்களில் இலக்கியப்பிரதிகளும் பத்திரிகைகளில் செய்திகளும் எழுதத் தொடங்கியிருக்கும் எனக்கு, எனது எழுத்துக்களினால் கிடைத்த நண்பர்கள் வட்டம் மிகப்பெரியது.

 

இலங்கையில் நான் வாழ்ந்த காலத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்திலும்  படிப்படியாக அந்த நண்பர்கள் வட்டத்தின் சுற்றளவு பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.

 

அதனால், உலகில் எந்த மூலையிலிருந்தும் என்னை  நன்கு தெரிந்த, எனது எழுத்துக்களின் மூலம் தெரிந்துகொண்டவர்கள், ஒரு காலகட்டத்தில் கடிதம்மூலமும் தொலைபேசி ஊடாகவும் தொடர்புகொண்டு உரையாடி உறவை பேணுவார்கள். 

லாக் அப் திரை விமர்சனம்

 


தமிழ் சினிமா தற்போது மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு மாறி வருகிறது, வரும் காலத்தில் இனி தியேட்டர்களுக்கு உச்ச நடிகர்கள் படத்திற்கு மட்டும் போனால் போதும் என்ற நிலை உருவாகிவிடும் போல, அந்த அளவிற்கு OTT ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அந்த வகையில் தற்போது ஓ டி டியில் வெளிவந்துள்ள லாக் அப் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்தில் ஒரு காவல் துறை அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதை தொடர்ந்து அந்த கொலை நடந்த சில தூரம் கடந்து ஒரு பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து கைது வரைக்கும் சென்ற நிலையில், மற்றொரு போலிஸ் இல்லை இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்புண்டு.

கண்டிப்பாக இதை கனேக்ட் செய்து பார்க்க வேண்டும் என்று இரண்டு கேஸையும் கையில் எடுக்க அதன் பின் யார் யார் இதற்குள் உள்ளார்கள் என்பதன் விவரம் ஒவ்வொன்றாக வெளிவருவதே இந்த லாக் அப்.

படத்தை பற்றிய அலசல்

வைபவ் சமீபத்திய இளம் நடிகர்களில் நல்ல பொழுதுபோக்கு படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் இதிலும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், படம் முழுவதும் ஒரு இருக்கத்ததோடையே இருந்து அதற்கான காரணமும் தெரிய வருவது நன்றாக இருந்தது.

படத்தின் ஒன் மேன் ஷோ என்று வெங்கட் பிரபுவை சொல்லலாம், ஒரு கே.எஸ்.ரவிகுமார், மன்சூர் அலிகான் எல்லாம் போலிஸாக நடித்தால் எப்படியிருக்கும், செம்ம சர்காஸிட்டிக் ஆக இவர் அடிக்கும் அலும்பு அண்ட் கண்டுப்பிடிக்கும் விஷயம் என சபாஷ்.

ஆனால், இப்படி ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம் என்றாலே அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆர்வம் வரும், அப்படியான ஆர்வம் இந்த படத்தில் பல இடங்களில் வந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் தொய்வாக தான் உள்ளது.

வாணி போஜனக்கு பெரிய கதாபாத்திரம் ஏதும் இல்லை, வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் தான்.

படத்தின் நீளம் மிக குறைவு என்றாலும் கொஞ்சம் படம் கொஞ்ச அதிக நேரம் ஓடுவது போன்ற உணர்வையும் தவிர்க்க முடியவில்லை.

அரோல் குரோலி பின்னணி இசை சூப்பர். நல்ல ஹெட்செட்டில் கேட்டால் இன்னும் ரசிக்கலாம்.

க்ளாப்ஸ்

வெங்கட் பிரபு ஆக்டிங்.

படத்தின் டுவிஸ்ட். வசனங்கள், அதுவும் நிகழ்காலத்தை ஒப்பிட்டு எழுதியது.

பல்ப்ஸ்

இன்னும் கூட கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் இதுவரை டிஜிட்டலில் வந்த தமிழ் படங்களில் லாக் அப் ஒரு படி மேலே நிற்கிறது.

நன்றி CineUlagam