கடந்த 26 ஆவது அங்கத்தில் எதிர்வினைகளுக்குள்ளான
எனது இரண்டு படைப்புகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
லண்டன் ஈழகேசரியில் வெளியான
ஆலயம் சிறுகதையும், கனடா நான்காவது
பரிமாணம் இதழில் வெளியான இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும் என்ற கட்டுரையும்தான்
அவ்வாறு எதிர்வினைகளுக்குள்ளானவை.
கடந்த அங்கத்தை படித்திருந்த
சில வாசகர்கள், தாம் குறிப்பிட்ட ஆக்கங்களை
ஏற்கனவே படிக்கவில்லை எனவும், அவற்றின் இணைப்புகள் இருப்பின் அனுப்பிவைக்குமாறும் கேட்டிருந்தனர்.
முதலில் ஆலயம் சிறுகதையை
இந்த அங்கத்தில் மீள்
பதிவிடுகின்றேன்.
தேசங்களை பொருளாதார நோக்கத்துடன்
மக்களும் அரசுகளும் கவனித்தால், அந்தத் தேசங்கள் முன்னேறிவிடும். வளர்ச்சியிலும் தன்னிறைவு
கண்டுவிடும்.
மதம், மொழி, இனம் சார்ந்து
அல்லது அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகள், என்னதான் மதச்சார்பின்மையை கொள்கையளவில்
வெளிப்படுத்தினாலும் உருப்படப்போவதில்லை.
கல்வியை உரியமுறையில் பெறமுடியாத
கோடிக்கணக்கான குழந்தைகள் இந்தப் பூமிப்பந்தில் வாழ்கிறார்கள். பாடசாலைகளின் கூரைகளின் ஊடாக சூரிய பகவானையும் வர்ண
பகவானையும் பார்த்துக்கொண்டிருக்கும் இலட்சோப இலட்சம் மாணவர்கள் குறித்து, இரண்டு பகவான்களுக்காகவும்
பூசைகள் செய்துகொண்டு யாகம் வளர்ப்பவர்கள் சிந்திப்பதில்லை.
சமீபத்தில் இலங்கையில்
ஒரு பாடசாலையில் அரச பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாடசாலையின் கூரையிலிருந்து கொட்டும்
மழைநீருடன் போராடியவாறு எழுதினார்கள். அவர்களின்
பாதங்களை மழைவெள்ளம் நனைத்தது. சில மாணவர்கள்
குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் வினாக்களுக்கு விடை எழுதினார்கள்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில்
ஒரு பெண்பிள்ளை ருதுவானதும் குதிரை – யானை , ஆடல், பாடல் ஊர்வலத்துடன் கோலாகலமாக நடந்த சடங்கு வைபவத்தை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இத்தனையையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிடும் ஏழைக்
குழந்தைகள் குறித்து எத்தனைபேர் கவலைப்படுகிறார்கள்.