.
(நான் எழுதி 2012ஆம் ஆண்டு சமரசம் இதழில் வெளியான கட்டுரை. ஜன கண மன, சாரே ஜஹான்சே அச்சா, வந்தே மாதரம் ஆகிய மூன்று பாடல்களின் பின்னணி, வரலாற்று நிகழ்வுகள், சர்ச்சைகள் ஆகியவற்றை அலசி எழுதப்பட்ட கட்டுரை. வந்தே மாதரம் பாடல் குறித்த சர்ச்சைகள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் இக்கட்டுரையை மீள்வாசிப்பு செய்வது அவசியம் என்று கருதுகிறேன்.)
1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது. சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுவாசக் குழலையும் ஈரப்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் கூடியிருந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுக்கு மத்தியில் திருமதி. சுஸேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர்,
'சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா..'
என்று பாடிய பாடல் இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.
ஆம், சுதந்திர இந்தியாவில் தேசிய கீதமாய் முதன் முதலில் ஒலித்தது அல்லாமா முஹம்மது இக்பாலால் எழுதப்பட்ட, புகழ்பெற்ற இப்பாடலே...
தற்போது இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும் 'ஜன கண மன' என்னும் பாடலுக்கு சென்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவின் தேசிய கீதம் உருவான வரலாற்றை அலசுவதற்காகவே இக்கட்டுரை.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் தேசிய கீதத்தை தேர்ந்தெடுக்கும் பொருட்டு மூன்று பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அவை,
இரவீந்திரநாத் தாகூர் எழுதிய, 'ஜன கண மன...'
பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, 'வந்தே மாதரம்'
அல்லாமா முஹம்மது இக்பால் எழுதிய, 'சாரே ஜஹான்சே அச்சா' என்னும் பாடல்கள்.
இம்மூன்று பாடல்களின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.
காங்கிரஸின் எதிர்ப்பால் வங்கப் பிரிவினையை திரும்பப் பெற்று, உத்தரவு பிறப்பித்த மன்னர் ஐந்தாம் ஜார்ஜை வரவேற்கும் பொருட்டு 1911 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் எற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸின் மாநாட்டின் இரண்டாவது நாளான டிசம்பர் 27 அன்று 'ஜன கண மன' பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.