கொக்குகள் பூக்கும் மரம் - எம்.ரிஷான் ஷெரீப்

.


தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
காலையில் பறக்கும் கிளைகளை
தலையில் கொண்ட பெரு விருட்சம்

ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்

வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்

இரை தேடி விடிகாலையில்
தமதிரு நெடிய கிளைகளையும்
வயிற்றில் பதித்துப் பறப்பவை
விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்

அவற்றைச் சேமிக்கும் மரம்
காற்றைத் தொட்டு
இறகுத் தூரிகையால்
ஓடும் ஆற்றில் கவியெழுதும்

- எம்.ரிஷான் ஷெரீப்

கொடிதினம் 2013 - கு கருணாசலதேவா

படப்பிடிப்பு  ஞானம் ஆர்ட்ஸ்


யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிதினம் 2013 சென்ற சனிக்கிழமை யூன் மாதம் 1ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6.30 மணிக்கு தொடங்கி  இரவு 10 மணிக்கு முடிவடைந்தது.

இவ்விழாவை திரு திருமதி பாலா பாலேந்திரா அவர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்தி வைத்தார்கள்.  ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களால் தமிழ் மொழி வாழ்த்தும் தேசிய கீதமும் பாடப்பட்டன.  ஒரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு ஸ்ரீகணேஸ்வரன் வரவேற்புரையை நடாத்தினார்.

திரு சிதம்பரம் துரை சிறீனவாசனின் வயலின்  இசை எல்லோரையும் மகிழ்வித்தது. இசையமுதத்தை தொடர்ந்து, தமிழர் உலகிற்கு வழங்கிய கொடைகள் என்ற தலைப்பில் திரு ம தனபாலசிங்கம் சிறப்புரை நடாத்தினார்

கொடிவிற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது சிற்றுண்டி, கோப்பி, தேநீர் முதலியன இலவசமாக எல்லோருக்கும் வழங்கப்பட்டது
மாவை நித்தியானந்தனின் சிறுவர் நாடக நூல்கள் வெளியீடு திரு திருநந்தகுமார், (அதிபர், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாதுமை கோணேஸ்வரன், சரண்யா தியாகராஜா, கவிஜா விக்னேஸ்வரன் ஆகியோர் நூல்களை மிகச்சிறப்பாக அறிமுகம் செய்து உரையாற்றினார்கள்.

சிட்னி இசை விழா 8,9,10 June 2013

.

பாரிஸ் மாநகரில் கோவை நந்தனின் 'கழுகு நிழல்" நூல் வெளியிடப்பட்டது..!

.

'இன்றைய உலகில், தனியார் மயம், தாராள மயம், உலகமயமாதல் என்கிற ஏகாதிபத்தியச் சுரண்டல்காரர்களுக்கெதிரான சரியான பார்வை கோவை நந்தனிடம்
இருக்கிறது. சர்வதேச விவகாரங்களை மட்டுமல்லாது ஈழத்துப் பிரச்சினைகளிலும் உலகளாவிய ஆய்வு நோக்கும், யதார்த்தப் பார்வையும் அவரது எழுத்துகளில் தெரிகிறது. தேடலில் ஈடுபட்டுத் திரட்டி, அதனைத் தொகுத்துச் சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ளும் விதத்தில் எழுதும் ஆற்றலுள்ளவராக அவர் சிறந்து விளங்குகிறார். இத்தகைய பார்வையில், தேடலில் அவர் மேலும் ஈடுபட்டுப் பல படைப்புகளை மக்களுக்குத் தொடர்ந்து தரவேண்டும். அவரது நட்புலகம் பெரியது என்பதை இக்கூட்டம் எடுத்துக்காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது."
இவ்வாறு பாரிஸ் மாநகரில் கடந்த 26 -ம் திகதி (26 - 05 - 2013) ஞாயிறு மாலை நடைபெற்ற கோவை நந்தனின் 'கழுகு நிழல்" நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் என். கே. துரைசிங்கம் உரையாற்றுகையில், 'சாதியத்தையும், முதலாளித்துவத்தையும் முற்றாகவே வெறுக்கும் இலட்சியப்பற்றோடு,  அண்மைக்கால உலக மாற்றங்களை உற்றுநோக்கிச் சரியான கண்ணோட்டத்தில் தனது படைப்புகளைத் தந்திருக்கும் நந்தன் பாராட்டுக்குரியவர்" என்றார்.
ஊடகவியலாளர் எஸ். உதயகுமார் பேசுகையில், 'மக்களுக்குப் பிரயோசனமான, சிந்தனையைத் தூண்டுகின்ற, மாற்றத்துக்கான வழிவகைகளைச் சுட்டி நிற்கின்ற மாதிரி, இலங்கை முதல் சர்வதேச விவகாரங்கள் பலவற்றையும் அலசி ஆராய்ந்து அழகுற எழுதப்பட்ட படைப்புகளைக்கொண்ட சிறந்த நூல் 'கழுகு நிழல்" எனக் குறிப்பிட்டார்.
நூல் பதிப்பாளர் சுகன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். சி. மனோகரன், அருந்ததி,  ஆகியோரும் உரையாற்றினர். நூலாசிரியர் கோவை நந்தன் ஏற்புரை வழங்கினார்.

அழிந்த வாழ்க்கையும் அழியாத நினைவுகளும் -IPT (வரதன்)

IPT (வரதன்)

அழிந்த வாழ்க்கையும் அழியாத நினைவுகளும்

கருணாகரன்

IPT PhotoIPT வரதனை நான் சந்தித்தது, 1984லேயே. முட்டைரவி தான் IPTஐ அறிமுகப்படுத்தினார். தலைமறைவும் அந்தரங்கமுமாக நாங்களும் எங்கள் காரியங்களும் நடந்து கொண்டிருந்த காலம் அது. தெல்லிப்பழை, காங்கேசன்துறை, ஏழாலை, ஊரெழு, மயிலணி, நாவாந்துறை, இயக்கச்சி, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி என மறைவிடங்களில் திரிந்து கொண்டிருந்தோம். இங்கெல்லாமே புதிய புதிய தோழர்கள் அறிமுகமாகினார்கள். பிறகு பயிற்சி முகாம்களில். IPTயை யாழ்ப்பாணத்தில் வைத்தே சந்தித்தேன்.

ரவியின் அறிமுகத்தத்தைத் தொடர்ந்து என்னைப் பார்த்துக் கையை நீட்டினார் IPT. பற்றிக் குலுக்கினேன். சிரித்தபடி மறுகையால் என்னுடைய தோளைப் பற்றி அணைத்து, “நல்லது. தொடர்ந்து சந்திப்பம். உங்கட பக்கத்தால நல்லா வேலை செய்யுங்கோ. பிறகு அங்காற் பக்கம் வரேக்க சந்திப்பம்“ என்று கூறி விடைபெற்றார். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம். ஒரு மின்னலைப்போல பிரகாசமான, ஆனால், சட்டென மறைந்து போனதக்கணம்.

IPT வரதன் என்ற பெயரைக் கேட்டபோது எனக்குள் ஆச்சரியம் பொங்கியது. அதற்குக் காரணம் அந்த நாட்களில் கொழும்பில் ஈரோஸினால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியாக IPT, IPT வரதன் என்ற பெயர்களில் அவர் அறியப்பட்டிருந்தார். முக்கியமாக “ஒபரோய் ஹொட்டேல்“, தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம் (இந்தத் தாக்குதலுக்கும் IPT க்கும் சம்மந்தமில்லை. என்றாலும் அதையும் IPT யுடன் சேர்த்தே பார்த்தார்கள்) ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள். வரதனின் தலையை அன்றைய ஜே.ஆர் ஜெயவர்த்தனா அரசாங்கம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விலைபேசியது. IPT யைப் பற்றிய சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தன. பத்திரிகைகளிலும் வானொலியிலும் வரதன் தலைப்புச் செய்தியானார். ஒரு நாயகனைப் போன்ற பிம்பம் அவருக்கு உருவாகியிருந்தது.

சிட்னியில் மாபெரும் இசை நிகழ்ச்சி



முருகா நீ ஏன் இப்படிக்... -சக்திவேல் சிட்னி

.



இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்"இ என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டிஇ கொப்பிஇ இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலைஇ கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு வந்தது. கதவைப் பூட்டிப்போட்டு அறைக்குள் ஒளிச்சு நின்று போட்டுப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. வலது பக்கக் காலில் இடுப்புக்குக் கிட்ட இரண்டு இடங்களில் முடிச்சுப் போட்டுக் கட்டவேண்டும். பழனி முருகன்தான் அப்ப ஞாபத்திற்கு வந்தார். இதோட ஊருக்கு வடக்குப் புறம் இருந்த அகலக் கிணறுகளுக்கு நீந்தப் பழகப் போகவேண்டும். நீந்தப் போறதென்றால் "பென்ரர்"இ "மினிப் பென்ரர்" என்ற பெயர்களில் அச்சுவேலிற் ரவுணிலே வாங்கின ஒன்றைப் போட்டால்தான் ஒரு 'ஸ்டாண்டட்". இதிலேயும் இந்த "மினிப்பென்ரர்" கொஞ்சம் எழுப்பம். பெயரரில்தான் "மினி" இருக்கே தவிர அது ஆக மினி அல்ல. இரண்டு 'கால்'வைத்திருக்கும். காசுஃபணம் பத்திரமாக வைக்க ஒரு சின்ன ணip வைத்து ஒரு பொக்கற்றும் இருக்கும்.

ஒரு மாதிரி அழுது அடம் பிடிச்சு 20 ரூபா வீட்டில் வாங்கியாயிற்று. இப்ப அடுத்த கட்டம். ஒரு சனிக்கிழமை காலை சைக்கிளில் விக்கியுடன் டபுள்ஸ்ஸில் அச்சுவேலிற் ரவுண் வந்தாயிற்று. "இண்டைக்கு எப்படியும் வாங்கிப் போடோணும்" என்று திட்டம். 'பெரிய' பஸ் ஸ்ராண்ட் இற்கு எதிரில் இருந்தது அந்தக் கடை. அலுமினியச் சட்டிஇ பிளாஸ்டிக் வாளிகள்இ ரெடிமேட் சேட்டுக்கள்இ ஸ்கேர்ட்டுக்கள்இ பிளவுஸ்கள்இ தேங்காய்த் திருவலைஇ பனடோல் எல்லாம் கிடைக்கும். அதோடு அங்கே பென்ரரும் மினிப்பென்ரரும் வாங்கலாம்.


நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 2 - கீதா மதிவாணன்

.

மழைக்காலத்தில் ஊரின் அழகையும் செழிப்பையும்  எடுத்தோம்பும் எழில்வரிகளை ரசிப்போமா?
 புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன்போல் பீரமொடு புதல்புதல் மலரப்,


பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி,
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல்அறல் எதிரக் கடும்புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப;
 வெண்ணிற முசுட்டைப்பூவும்
பொன்னிற பீர்க்கம்பூவும்
பூவாடை போர்த்தினாற்போல்
புதர்தோறும் மலர்ந்து நிற்க....


பெயல் அடங்கியப் பொழுதிலே

புயல் எனப் பறந்துவந்தன

பசுங்காற் கொக்குகளும்
செங்கோட்டு நாரைகளும்


இலங்கைச் செய்திகள்


பிக்கு தீக்குளித்தமைக்கு ஐ.தே.க. கவலை

கண்டியில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

இலங்கை தூதுக்குழு சீன விகாரையில் வழிபாடு

எனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : எஜமான் மீதும் மகன் மீதுமே சந்தேகம்- ஜேர்தானில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தாயார்

புத்தர் சிலைகளை அமைத்து புத்தபெருமானை அவமதிக்காதீர்கள்: பொன். செல்வராசா

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது: இராணுவம்

யாழ். கோட்டை புனரமைப்பு

தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என்று சொல்லப்பட்ட நண்பர் ஜயலத் மறைந்துவிட்டார்: மனோ கணேசன் 
  
திங்களன்று மறைந்த டாக்டர் ஜயலத்தின் இறுதிக் கிரியைகள்
  
வடக்குத் தேர்தலை நடத்தி இன்னொரு தடவை நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்கக்கூடாது : பியசிறி

 லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது'

19 விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளை

=======================================================================

பிக்கு தீக்குளித்தமைக்கு ஐ.தே.க. கவலை

28/05/2013 தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்தமைக்கு பிரதான எதிர்க் கட்சி என்றவகையில் ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கவலை தெரிவிக்கின்றது. இது குறித்து அரசு பாராமுகமாகவுள்ளதுடன் ஊடகவியலாளர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்தை திசை திருப்ப எத்தனிக்கின்றது.
இந்த நாட்டில் இடம்பெற்ற வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் கூட இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை. தற்போதைய ஆட்சியில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றதென்றால் மிகவும் சந்தேகத்திற்கு இடமானது. இதற்கான விசாரணைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி   

ஈழத்தமிழரான பேராசிரியர் 'சிவலிங்கம் சிவானந்தன்'க்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது

.


ஈழத்தமிழரான பேராசிரியர் 'சிவலிங்கம் சிவானந்தன்' அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார். தனது முயற்சியினால் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூரியக் கதிர் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

Nantri: seithy.com



"எதிர்கொள்ளுதல்" - சிறுகதை - கே.எஸ்.சுதாகர் –

.


கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது.

"அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது."

இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவென்றாலும் அக்காதான் போடுவா. அத்தான் எழுதின கடிதத்தின்ர சுருக்கத்தில இருந்து நிலமையைப் புரிஞ்சு கொண்டன். அக்காவின் கடைசிப் பக்கங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடிதம் கிடைச்ச மூண்டு நாளைக்குள்ள அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிக்கிட்டு சிறீலங்கா வந்திட்டன். வடபகுதி நிலமையள் மிக மோசமா இருந்தன. நாலு கிழமையா பலாலிக்கான விமானப் போக்குவரத்து நடக்கேல்லை. வடபகுதி முற்றாக ஏனைய பகுதிகளிலையிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

அக்கா!
அம்மாவிற்கு வருத்தம் வந்ததிலையிருந்து குடும்பத்தின்ர பொறுப்பு முழுதும் அக்காவின்ர தலையில விழுந்தது. சமைக்கிறதில இருந்து வீட்டைக் கட்டுக்கோப்பாக வைக்கிறது வரைக்கும் எல்லாம் அக்காதான். வறுமை நிலையிலையிருந்து இந்த நெருக்கடிகளையெல்லாம் அக்கா எதிர்கொள்ளப் பழகிக் கொண்டா. அக்காவுக்குக் கீழை என்னோடை சேத்து ஆறு பேர் இருந்தோம். அப்ப நாங்களெல்லாம் ஒரு நீளமான மேசையில இருந்து பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பம். ஆராவது நித்திரை தூங்கி விழுந்தால், கண் மூடி முழிக்கிறதுக்கிடையில பிடரி மண்டையில ஒரு குட்டு விழும். திரும்பிப் பாத்தா அக்காவைக் காணக் கிடைக்காது. அவ்வளவு வேகமாப் போய் மறைஞ்சு விடுவா.

Man behind the golden voice - V. BALASUBRAMANIAN

.

இளம் தலை முறை இசையமைப்பாளருடன் பாடல் அரசன் TMS




உலகச் செய்திகள்

.
ஸ்வீடனில் கலவரம்!

சதீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: 25 பேர் பலி

பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம்!

மியன்மாரில் மீண்டும் கலவரம்!

ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்வீடனில் கலவரம்!

23/05/2013 ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.

தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர்.
செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ...

.

28/05/2013 ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் பற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது.

இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது செய்யுமாறு மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். குற்றவாளியைக் கூண்டில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்குமாறு வீதியில் இறங்கிப் போராடினார்கள். போராட்டம் வலுப்பெற்று அவ் ஊரின் இயல்பு நிலையை ஸ்தம்பித்தது.

வானமுதமே வாழ்க வளர்க!! -மெல்பேர்ண் மணி

.
வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் அளப்பரியää அற்புதமான ஏழு ஆண்டு காலப் பணியைப் பாராட்டி வாழ்த்தி வரையப்பட்ட
வாழ்த்துப் பா.
வானமுதமே வாழ்க வளர்க!!

வானுயர ஓங்கு புகழ் படைத்த
தேன் கலந்த தமி;ழ்அமுதமதை வளர்த்திட
வான அமுதம் மெல்பேர்ன் நகர்தனில்
தோன்றிற்றே உதய சு10ரியன் போல்

குழந்தைகள் தத்தம் திறமைகளை வெளிப்படுத்தும்
அழகுறு அரங்கமாம் வானமுதமெனும் வானொலி
உருண்டு புரண்டு தவழ்ந்து எழுந்து
குறுநடை கொண்டு நடந்தது பாரீர்!!

ஏழு வயதான குழந்தை வானமுதம்
கேளுங்கள் நான் ஆற்றிய சேவைகளை எனவே
நெஞ்சு நிமிர்த்தி இறுமாப்புக் கொண்டு
கொஞ்சிக் குலவுகிறது குழவிகள் தம்முடன்

நாம் பெற்ற பிள்ளைகளைக் காப்போம்

.


தமிழர்களாகிய நாம் நம் கலாச்சாரத்தைப் பின் பற்றி, அதை நமக்கு பின் வரும் நம் சந்ததியருக்கு விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிமக்களாகிய நாம், நம் பாரம்பரியத்தையும், தெய்வ வழிபாட்டையும் தொடர்ந்து செய்வது நம் வருங்காலச் சந்ததியினரையும் அதன் வழி கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும். நம்மில் பலர் நம் பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்த படி நம்முடைய தெய்வ வழிபாட்டை, வீட்டில் பூசைகள் செய்வதன் மூலமும், கோயிலுக்குச் சென்று வணங்குவதன் மூலமும், பல விழாக்கள் கொண்டாடுவதன் மூலமாகவும் பின்பற்றி வருகிறோம்.  நம்மில் சிலருக்கு இந்த வழிபாடெல்லாம் எதற்கு என்று ஒரு தேக்கம் வரும் நிலையில் அதை சரியாக கடைபிடிக்காமல் விட்டுவிடுகிறோம். இது நம்முடைய இயலாமையைக் காட்டுவது மட்டுமல்லாமல், நம் பிள்ளைகள் பின்பற்றுவதற்கும் ஒரு முட்டுக்கட்டையாக உள்ளது.
சரி, இப்படி தெய்வ வழிபாடு இல்லாமல் விட்டுவிட்டால் என்ன பெரிய தீங்கு விளையுமா என்ற கேள்வி எழலாம். நாம் ஏன் தெய்வ வழிபாடு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாதன் விளைவுதான் இப்படி நம்மில் ஒரு தோய்வு நிலை ஏற்படக் காரணமாகும்.

ஜப்பானிய தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது

.
ஜப்பானிய தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார் மன்மோகன்சிங்! 

News Service
ஜப்பானைச் சேர்ந்த நொபுரூ கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர். இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தார். இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரூ கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கெளரவித்தார். 1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கெ�ரவ பேராசிரியராக உள்ளார்.
நன்றி:seithy.com

தமிழ் சினிமா



எதிர்நீச்சல்

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நகைச்சுயைாக நடித்து வெளிவந்திருக்கும் 'எதிர்நீச்சல்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் படத்திற்கு விமர்சகர்களும் நல்ல கருத்துக்களைக் கூறி இருப்பதால் நாளுக்கு நாள் திரையரங்குகளின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிசில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் "உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.
வேண்டுதலின் படி தனது குலசாமியின் பெயரான ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவனாகி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய பெயரை அனைவரும் சுருக்கி அழைப்பது மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது.
இதனால் வேலையை விட்டுவிடுகிறார். இவர் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் பெயர் சரியில்லை என்று சொல்லி இவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
விரக்தியடைந்த சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரிஷ் என்று மாற்றி அதை பதிவும் செய்கிறார். தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொள்கிறார். இதையடுத்து பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ப்ரியா ஆனந்தை சிவகார்த்திகேயன் சந்திக்கிறார். பார்த்தவுடனேயே அவர் மீது காதல் வயப்படும் சிவகார்த்திகேயன், அவருடன் நட்பாக பழகி இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் பழைய பெயர் ப்ரியா ஆனந்த்-க்கு தெரிய வருகிறது. இந்த சிறு விஷயத்தை தன்னிடம் மறைத்ததற்காக சிவகார்த்திகேயன் மீது கோபப்படுகிறார் பிரியா ஆனந்த். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், பெரிதளவில் ஏதாவது சாதித்தால் தனது பழைய பெயர் மறைந்துவிடும் என்ற நண்பனின் யோசனைப்படி, சென்னையில் நடக்கும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற முடிவெடுக்கிறார்.
அவருக்கு பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகனான சிவகார்த்திகேயன் குஞ்சிபாதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவஸ்தைபடுவதாகட்டும், ப்ரியா ஆனந்தை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், முதல் பாதியில் கொமடியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் பிற்பாதியில் ஓட்ட வீரனாக ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார். முற்பாதியில் ஆசிரியராக வரும் ப்ரியா ஆனந்த்-க்கு தனது முந்தைய படங்களை விட இப்படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். பிற்பாதியில் இவர் அவ்வளவாக தலைகாட்டாதது ஏமாற்றத்தை தருகிறது.
பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாக, சிவகார்த்திகேயனுக்கு பயிற்சியாளராக வருகிறார் ‘அட்டக்கத்தி’ நந்திதா. அருமையான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் சதீஷ் தன்னுடைய பங்குக்கு பின்னியெடுத்திருக்கிறார். சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களில் ஒரு புது கொமடி கூட்டணியை உருவாக்கலாம். மனோபாலா, மதன்பாப் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் நல்ல வெற்றியடைந்துள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின் நாடித் துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார்.
‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பாடல் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும், தனுஷ், சிவா, நயன்தாரா ஆகியோரின் குத்தாட்டம் ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது. ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘வெளிச்ச பூவே’ பாடல் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதற்பாதியை கொமடிகளை கட்டினாலும், பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. அடுத்து என்ன காட்சி என்பதை முன்பே ஊகிக்கும் விதமான காட்சிகளே நிறைய அமைந்திருக்கிறது. சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். மற்றபடி ‘எதிர்நீச்சல்’ ஜாலியாக பயணம் செய்யலாம்.
நன்றி விடுப்பு