திரையிசை தந்த பாரதி

 

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள்
இந்திய சுதந்திரத்துக்கு முன்பிலிருந்து இன்று வரை
திரையிசையில் பயன்பட்ட முழு வரலாற்றுப் பகிர்வு
தயாரிப்பு : சரவணன் நடராஜன்
நெறியாள்கை : கானா பிரபா


இதை YouTube வழி கேட்டு ரசிக்க



நல்லதோர் வீணை செய்தே - கவிதை -.செ .பாஸ்கரன்

.

https://www.youtube.com/watch?v=OCniD9ZqKuA&t=26s



மகாகவி பாரதி மறைந்த நூற்றாண்டு - செப்டெம்பர் 11 பாரதி மறைந்து நூறு வருடங்கள் - முருகபூபதி


மகாகவி பாரதி…அவர்களே…. வணக்கம்.


நீங்கள் எமக்கெல்லாம் ஆதர்சமான சிந்தனையாளன்,
 கவிஞன், படைப்பாளி. பத்திரிகையாளன். நான் உங்களை எனது பால்யகாலம் முதல் படிக்கின்றேன். இன்னும் முற்றுப்பெறவில்லை. உங்களைப்பற்றி பேசுகிறேன். எழுதுகிறேன். எனது தாய்நாட்டில் உங்களுக்காக எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்றேன். தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் விழாவும் ஆய்வரங்கும் நடத்தினோம். உங்களை உங்கள் எழுத்துக்கள் ஊடாக மாத்திரம் தெரிந்துகொண்டதுடன் ஏனைய பாரதி இயல் ஆய்வாளர்களின் பதிவுகளின் மூலமாகவும் அறிந்துகொண்டேன்.

இலங்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஒரு விரிவான  தொடரை  எழுதினேன்.

உங்களது சுயசரிதையில்,   உங்களது ஞானகுருவாக நீங்கள் வர்ணித்து போற்றியிருக்கும் யாழ்பாணத்து ஈசன் என்று வர்ணித்திருக்கும்  ஞானகுரு  யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம்  அவர்களின் சமாதிக்கோயிலையும் வடமராட்சியில் தரிசித்திருக்கின்றேன்.


அதே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்  காலைக்கதிர் நாளேட்டின் வாரப்பதிப்பில்தான் அந்தத் தொடரை நாற்பது வாரங்கள் எழுதினேன்.  பின்னர் அது நூலாக வெளிவந்தபோது, தலைநகரில் அதனை வெளியிட்டு வைத்தேன்.

நீங்கள் பிறந்த  நூற்றாண்டுகாலம்  1982 இல் வந்தபோது,  நான் கண்ட பாரதி என்ற தொடரை  இலங்கை பத்திரிகை சிந்தாமணியில் எழுதிய அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அய்யாவின் ஊடகப்பாசறையில் வளர்ந்த வித்தியாதரன்  பிரதம ஆசிரியராக பணியாற்றும் யாழ். காலைக்கதிரில்தான்  எனது அந்தத் தொடர் வெளிவந்தது.

பின்னர் அது தனி நூலாக வெளிவந்தபோதும் வித்தியாதரன் வருகைதந்து வெளியிட்டு வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி இந்நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. 

செப்டெம்பர் 11 ஆம் திகதி. மகாகவி பாரதி மறைந்து நூறு ஆண்டுகள்.

 அமரகவியின் வரிகளை என்றென்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம். பாருங்கள், பகிருங்கள். திரையுலகில் பாரதி செலுத்திய செல்வாக்கினை இக்கலைஞர்கள்  பதிவுசெய்துள்ளனர்.   ஆனால்,  இவற்றைக்கேட்க பாரதிதான் இல்லை !

 


எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 58 நஞ்சை உட்கொண்ட அச்சுக்கோப்பாளர்கள் ! எனது “ கதாநாயகிகளின் கதை “ நாய்வேடம் தரித்து, நாய் விற்ற காசு குரைக்குமா..? முருகபூபதி


பத்திரிகைகள்,  வெள்ளீய அச்சுக்களினால் வெளிவந்த காலம் மலையேறிவிட்டது.  தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கணினி வழங்கிய வரப்பிரசாதத்தினால்,  எமது இலங்கையில் ஏராளமான பத்திரிகைகள் வெளியாகின்றன.

அவற்றில் பல எனக்கும் மின்னஞ்சல் ஊடாகவும், வாட்ஸ்அப்பிலும் தினமும் வந்துகொண்டிருக்கின்றன என்று கடந்த அங்கத்தில் சொல்லியிருந்தேன்.

ஏற்கனவே கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகியனவற்றைத் தொடர்ந்து தமிழ் Mirror , தமிழன் என்பனவற்றுடன், தேசம்  ( இவை தலைநகர் பத்திரிகைகள் )  யாழ்ப்பாணத்திலிருந்து காலைக்கதிர், ஈழநாடு, உதயன், வலம்புரி, யாழ். தினக்குரல் என்பனவும்  உரிமை, சுபீட்சம், ஆகியனவும், வவுனியாவிலிருந்து தினப்புயலும், தென்மராட்சியிலிருந்து தென்மர் என்ற பத்திரிகையும் வந்துகொண்டிருக்கின்றன.

மேலும் இருக்கின்றன. நான் தவறவிட்டிருந்தால், எதனைப்படிப்பது எதனை தவிர்ப்பது என்பதில் ஏற்பட்ட மயக்கம்தான் அதற்குக் காரணம்.

பாரதி தரிசனம் – அங்கம் 01 1991 இல் மெல்பனில் மகாகவி பாரதி நாடகம் முருகபூபதி


மகாகவி பாரதியின் பூதவுடல்  மறைந்து நூறு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், புகழுடல்  என்றும் மங்காமல் போற்றப்படுகிறது.

ஆரம்பப் பாடசாலைப் பருவத்திலிருந்தே பாரதியிடத்தில் எனக்கு ஈர்ப்பு அதிகம். அந்த ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை.  தினம் தினம் பாரதியின் பாடல்களை கேட்டுக்கொண்டே வளர்ந்தமையால் அதில் வரும் வரிகள் தரும் வசீகரமும் சுகானுபவமும்,  சிந்தனையும்  புல்லரிக்கச்செய்பவை.

அதனால், பாரதி சம்பந்தப்பட்ட நூல்களையெல்லாம் வாங்கிச்சேகரிப்பதும்,  படிப்பதும் எனது வாழ்வில் முக்கிய கடமையாகிவிட்டது.

இலங்கையில் வாழ்ந்த காலத்தில் 1982 இல்  பாரதி பிறந்த


நூற்றாண்டு முதல் ,  ஒரு பணியை எவரது ஆலோசனையும் இன்றி,  நானாகவே முன்னெடுத்தேன். பாரதி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆராய்ந்து குறிப்புகளை சேகரிப்பதே அந்தப்பணி !

எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு விழாக்குழுவிலும் இணைந்து வீரகேசரி – தமிழ்நாடு தாமரை இதழ்களிலும் கட்டுரைகள் எழுதினேன்.

1983 கலவரம் வந்தமையால்,  இடப்பெயர்வுக்குள்ளாகியதில் சில குறிப்புகளை தவறவிட்டேன்.  1984 இல் தமிழகம் சென்றபோது எட்டயபுரமும் சென்று பாரதி பற்றிய தரிசனம் பெற்றுவந்து வீரகேசரியில் எழுதினேன்.

இலங்கையில் பாரதி என்ற நூலை எழுதிக்கொண்டிருப்பதாக எனது தந்தை வழி உறவினரும் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளருமான  தொ.மு.சி. ரகுநாதனிடம் தெரிவித்து,  நூலின் மூலப்பிரதியின் முதல் பத்து அங்கங்களை அவரிடம் காண்பித்தேன்.

நூலை நிறைவுசெய்யுமாறும், தானே அதற்கு அணிந்துரை எழுதித்தருவதாகவும் அவர் சொன்னார்.

அவர் தந்த ஊக்கத்தினால் தொடர்ந்து எழுதினேன். வீரகேசரி ஓவியர் – நண்பர் மொராயஸ் அந்த நூலுக்கான முகப்பு ஓவியமும் வரைந்து தந்தார்.

எதிர்பாராமல் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரநேரிட்டது. 1990 இல் தமிழகம் சென்றபோது, ரகுநாதன்,  “ என்ன… இலங்கையில் பாரதி ஆய்வை முடிக்கவில்லையா..?     என்று கண்டிப்போடு கேட்டார்.

நூறாண்டு நினைவில் நனைகிறோம் ! மகாகவி பாரதியின் நூறாவது நினைவு நாள் – 11/09/2021 சைவப்புலவர் முரு.சேமகரன், மெல்பன்

எட்டய புரத்திலோர் உதய சூரியன்

           எழுந்தான் ஒளிதரும் இதய நாயகன்


பட்டிகள் தொட்டிகள் பரவிப் பாயவே

            பாக்களைப் பொழியும் கவிதை வானவன்

கட்டிலாத் தமிழைக் கருத்தினி லேற்றியே

            காலம் கடந்தொரு காவிய மானவன்

மட்டிலாப் புகழும் மாண்புறும் பெருமையும்

            மேதினிக் களித்த பாரதி தானவன்  !

 

இந்தியக் கண்டத்தை இறுக்கிப் பிணைத்து

            இருந்தது வெள்ளையர் ஆதிக்க விலங்கு

சந்ததி பலநூற்றைத் தொடர்ந்தவர் மண்ணைச்


 

சிதைத்தது ஆட்சியர் அதிகாரப் பரம்பு

இந்நிலை கண்டதால் இன்றமிழ்ப் பாவலன்

            இதயம் கொதிக்க எழுத்தாணி யெடுத்தான்

வந்தவர் ஓடவும் மண்ணினை நீங்கவும்

            வண்டமிழ்க் கவியாற் போரொன்று தொடுத்தான் !

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டில் அவரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி அவர்களுடன் சிறப்பு நேரலை

 



https://www.youtube.com/watch?v=5NwE0MXSZg8



அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                  

மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 


வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே 
தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே 

விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே 
வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு 
 
முண்டாசுக் கவிஞனே நீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட 
பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே 
பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே  

 

பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே
பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை 

வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை 

 

வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே
பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே

 

மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்
முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்

 

பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்
பசிகண்டு வெகுண்டதனால் பாரழிப்பேன் என்றாயே
பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை ஏற்றாயே

 

வாசிப்பு அனுபவம்: முருகபூபதியின் புதிய நூல் நடந்தாய் வாழி களனி கங்கை...... ஒரு பார்வை கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்


புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார்.

ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும் மாற்றங்களை சிறு சம்பவக்குறியீடுகள் மூலம் கோர்த்து கதை புனைந்திருப்பார்.

இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வழிபாட்டு  முறை மாற்றங்களை நாசுக்காக சொல்வதே அவர் நோக்கம். புதுமைப்பித்தனின் இக் கதையை  படிக்கும் போது ஆவணப்படங்களில் இன்று கொட்டிக்கிடக்கும் ' நேரம் தப்பிய படப்பிடிப்பு'  (Time-lapse photography)  பார்த்த அனுபவம் கிட்டும்.

ஒரு காட்சி, கால நீரோட்டத்தில், எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை இந்த தொடர்காட்சிகள் சித்திரிக்கும். புதுமைப்பித்தனின் இந்த யுக்தி அவரின் எழுத்துப்புரட்சியின் ஒரு பரிமாணம்.

இலங்கையின் மூத்த நதி எனும் பெருமையை சூடிக்கொண்ட களனி

கங்கையைச்
 சுற்றி பல ஆண்டுகளாக ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களை ஒரு தொடர் காட்சி ஆவணப்படம் போல் படைத்து எம் கைகளில் " நடந்தாய் வாழி களனிகங்கை" எனும் நூலாக தவழவிட்டிருக்கிறார் எழுத்தாளர்  முருகபூபதி.  புதுமைப்பித்தன் கண்ட ஆற்றங்கரை பிள்ளையாரை களனி கங்கையில் காண்கிறார் ஈழத்தின் இந்த மூத்த எழுத்தாளர்.  


களனி கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்க,  அதன் இரு மருங்கிலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஒரு உலகம் எப்படி மாற்றங்களுக்கு தன்னை அர்ப்பணித்து  புதிய மனிதர்களையும்  அவர்கள் படைப்புகளையும் காலச்சக்கரத்துடன்  இணைத்தது என்பதே இந்நூலின்  கரு.

பதினேழு அத்தியாயங்களிலும் எழுபத்தியெட்டு பக்கங்களிலும் பொதிந்துள்ள தகவல்கள்தான் எத்தனை!?
ஒரு கலைக்களஞ்சியத்தை படித்த களைப்பு. எம் மனக்கல்லறையில் ஆழத்தோண்டி நீளப்புதைத்துவிட்ட நினைவுக்கோர்வைகளை மீளத்தோண்டியெடுத்து  எம் கண்முன்னே படைக்கிறார் முருகபூபதி.

தொப்பிக்குள் இருந்து முயலெடுக்கும் மந்திரவாதியைப் போல் காலம் மறந்த எத்தனையோ மானுடர்களை எமக்கு மீள அறிமுகப்படுத்தி வியக்கவைக்கிறார். இவை சாதாரண காட்டு முயல்கள் அல்ல. அவை இலங்கை சரித்திரத்தையே மாற்றிப் போட்ட மகுடமணிந்த முயல்கள். அதே தொப்பிக்குள் இருந்து சில அரசியல் குள்ள நரிகளையும் எடுத்துப்போடும்போதுதான் நாம் வாயைப்பிளக்கிறோம்!

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை ஏழு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

 பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்

     பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும் "

         " வருடம் முழுதும் வற்றாத வளம்

            வாங்கி வந்த வரமே பனை "

 

வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம்.இருந்தாலும் பயன் கொடுக்கும். இருப்பைவிட்டு மறை ந்தாலும் பயன் கொடுக்கும். பனை என்பது  மரம் அல்ல . அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும்.பனையின் நிலையினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும்.இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்லதொரு பாடமாய் இருக்கிறதல்லவா ! மற்ற மரங்களைப் போல பனையினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்துதளர்வின்றி.  கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனால் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை ஏட்டுச்சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம்.அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

  இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்று கிறது,எமது முன்னோர்களின் சிந்தனைச் செல்வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்கு தக்கதுணையாக அமைந்தது பனைதானே ! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு மொழியில்லை. வரலாறு இல்லை . ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க் கிறதல்லவா !  " பயன்மரம் " என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல் லவா.

 

   " ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்

     போதமிகுந்த புராணநூல் - ஓதுகின்ற

     மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு

     செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் - சுந்தரஞ்சேர்

     மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை

     துங்கமிகு நண்பருக்குத் தூதோலை - தங்குபல

     பற்று வரவு பதியுங் கணக்கோலை

     மற்று முறுதி வரையோலை - கற்றவர்கள்

     எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற

     மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் "

 

எனக்கான வெளி - சம்பவம் (7) கே.எஸ்.சுதாகர்


ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு.

“உதிலை போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம் கேட்டாள் தேவி.

“கொரோனா வந்து, மாஸ்க் போட வைத்து, மனிசரை மனிசரே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் கிடக்கு” சலிப்படைந்தார் சண்முகம்.

அந்தப் பெண்ணும் இவர்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றாள். தேவியும் தன்னைப் பார்ப்பதைக் கண்டவுடன், நடையை நிறுத்தினாள். அந்தப் பையனிடம் ஏதோ சொல்லிவிட்டு, இவர்களை நோக்கி விரைவு நடையில் வந்தாள்.

“அன்ரி...! என்ன ஷொப்பிங்குக்கு வெளிக்கிட்டியள் போல...” முகமனுடன் விசாரித்தாள் வைஷ்ணவி. முகத்தை மூடிய மறைப்பையும் தாண்டி இருவரையும் அடையாளம் காண வைத்த உறவு எது? சிறிது நேரம் உரையாடிவிட்டு, மான்குட்டி போல துள்ளிச்சென்று, அந்தப் பையனுடன் இணைந்து கொண்டாள் வைஷ்ணவி. அவனும் காத்திருந்தது போல,  வைஷ்ணவியின் கையை இணைத்துக் கொண்டான். இருவரும் கைகளை ஊஞ்சல் போல ஆட்டி, வானவில் போல வில்லாக வளைத்தார்கள். தேவிக்கு அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் காலிலே தேள் கொட்டியது போன்றிருந்தது.

”இவளும் ஒரு பெண்ணா? நிரஞ்சனையல்லவா திருமணம் செய்வாள் என நினைத்தேன்!” தேவி கவலை கொண்டாள்.

நிரஞ்சன், சண்முகம் தேவியின் அருமந்த புத்திரன். புலம்பெயர்ந்த காலம் தொட்டு அருகருகாகக் குடியிருக்கின்றார்கள். வைஷ்ணவியும் நிரஞ்சனும் சிறுவயது முதல், நகமும் சதையும் போல ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள்.

தாமரைச்செல்வியின் “ உயிர்வாசம் “ நாவலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருது ! படகு மனிதர்களின் ஆத்மாவை புதிய நாவலில் சித்திரித்த படைப்பாளி !! முருகபூபதி


டந்த அரை நூற்றாண்டு காலமாக இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் தாமரைச்செல்வியின் புதிய நாவலான உயிர்வாசம் நூலுக்கு ( 550 பக்கங்கள் )  இம்முறை இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆறு நாவல்களும் நான்கு கதைத் தொகுதிகளும் எழுதியிருக்கும் தாமரைச்செல்வி, அவற்றுள் சிலவற்றுக்கும் முன்னர் விருதுகள் பெற்றவர்.

மீண்டும் சாகித்திய விருது பெற்றுள்ள எமது இலக்கியக்


குடும்பத்தின் சகோதரியை வாழ்த்தியவாறே இந்தப்பதிவினை எழுதுகின்றேன்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவல்  சுமைகள்   வீரகேசரி  பிரசுரமாக வெளியாகும்போது  அவருக்கு 24  வயதுதான்.    

1970 களில்   சில  பெண்   படைப்பாளிகள்  இலங்கை  வானொலியில்  இசையும்  கதையும் எழுதிக்கொண்டிருந்தார்கள்.    மாலை வேளைகளில்  ஒலிபரப்பாகும் இந்த  நிகழ்ச்சியில்,  சில  கதைகளை  தாமரைச்செல்வியும்  எழுதியிருந்தார்.    கதைக்குப்பொருத்தமான  சில  சினிமா   பாடல்களும் ஒலிக்கும்.    இந்த  நிகழ்ச்சிக்கு  அக்கால  கட்டத்தில்  சிறந்த வரவேற்பிருந்தது.      ஒரு வருடகாலத்திலேயே   அதிலிருந்து  இவர் மீண்டுவிட்டார்.

இவருடைய  முதல்  சிறுகதை  ஒரு  கோபுரம்  சரிகிறது  வீரகேசரியில்    வெளியானபொழுது,  1974  ஆம்  ஆண்டு பிறந்துவிட்டது.    அதனைத்தொடர்ந்து  இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்   வெளியான  இதழ்களில்  தாமரைச்செல்வியின் சிறுகதைகள்   வெளிவரத்தொடங்கின.

ஆனந்தவிகடன்,   குங்குமம்,   மங்கை   முதலான  இதழ்களிலும் அவருடைய  படைப்புகளை   காண  முடிந்தது.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - தங்கைக்காக - ச. சுந்தரதாஸ் - பகுதி 12

 .

இலங்கை திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் சினிமாஸ் கே குணரத்தினம். இவரது சினிமாஸ் நிறுவனம் ஏராளமான படங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தருவித்து திரையிட்டது. இந்திய பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையே இவருக்கு தனி செல்வாக்கு இருந்து வந்தது. இலங்கையில் இவரிடம் பணிபுரிந்து பின்னர் இந்தியா சென்ற பெர்னாண்டஸ் என்பவரை முன்னிலைப்படுத்தி 1971 ஆம் ஆண்டு குணரத்தினம் ஒரு படம் உருவாக்கினார். அந்தப் படம்தான் தங்கைக்காக.


இலங்கை குணரெத்தினத்தின் அனுசரணையுடன் இலங்கையைச் சேர்ந்த பெர்னாண்டஸ் தயாரித்த இந்தப் படத்தின் வசனங்களை இலங்கையைச் சேர்ந்த குகநாதன் எழுதினார். சிங்களப் படங்கள் சிலவற்றை டைரக்ட் செய்திருந்தார் டி யோகானந்த் படத்தை டைரக்ட் செய்தார். இவ்வாறு இலங்கையுடன் சம்பந்தப்பட்டவர்களால் உருவான தங்கைக்காக படத்தில் சிவாஜி லட்சுமி இருவரும் பாசமிக்க சகோதரர்களாக நடித்தினர்.


சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ஏராளமான படங்களில் நடித்திருந்த சிவாஜிக்கு இது மற்றுமொரு படமாக அமைந்தது. ஆனாலும் உணர்ச்சியை காட்ட வேண்டிய இடத்தில் காட்டி பாசத்தை கொட்டி இதிலும் நடித்திருந்தார். தங்கையாக வரும் லட்சுமிக்கு தன் திறனை வெளிக்காட்டும் விதமாக காட்சிகள் அமைந்தன. வில்லன் நம்பியார் இதில் இளமையாக காட்சி அளித்தார் அவர் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் காரணமாக இருந்திருக்கக்கூடும். முத்துராமனும் படத்தில் இருக்கிறார்.


உலகையே அதிர வைத்த பயங்கரவாதத் தாக்குதல்!

 Saturday, September 11, 2021 - 6:00am

செப்ரம்பர்-11, அமெரிக்க இரட்டைக் கோபுர விமான தாக்குதலின் 20 ஆம் வருட பூர்த்தி இன்று

நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 19 பேர் கடத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் கட்டுப்பாடு இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

அச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

திருப்பூர்இலக்கியவிருது 2021

.


 அன்புதமிழ்சொந்தங்கள்அனைவருக்கும்வணக்கம்.

 வருடம்தோறும்வழங்கப்படும்திருப்பூர்இலக்கியவிருதுவழங்கும்விழாஇவ்வாண்டுசென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும்.

 இவ்வாண்டுமுதல்கொங்குமுன்னோடிஎழுத்தாளர்ஆர்.சண்முகசுந்தரம்நினைவுவிருதுவழங்கப்படும்.இவ்விருதுஇவ்வாண்டு‘தாளடி’நாவல்,எழுத்தாளர்சீனிவாசன்நடராஜன்அவர்களுக்குவழங்கப்படுகிறது.

விருதுவழங்கும்விழாநடைபெறும்தேதி, இடம்பின்னர்அறிவிக்கப்படும்.

சென்னைவிழாவில்விருதுபெறுவோர் :

 அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி.

பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் :

 லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன்.

ஹைதராபாத்எழுத்தாளர்கள் :

 விஜிவெங்கட், ஜவ்வாதுமுஸ்தபா, பி.எஸ்.எம்.அரிஸ்டாடில்.

திருப்பூர்விழாவில்விருதுபெறுவோர் :

 முனைவர்.சோ.ந.கந்தசாமி,பேரா.கா.முருகேசன்,பேரா.வின்சென்ட்,பாலபாரதி,இரா.பூபாலன், உத்தமசோழன், ஜீனத், கண்மணிராஜா, அபிமானி, பர்வதவர்த்தினி, பாட்டாளி, மேட்டுப்பாளையம்அருணாசலம், அந்தியூர்கோவிந்தன், அகிலா, கோவைகே.வி.விஜயகுமார், அ.இராஜலட்சுமி, ஜெ.நிஷாந்தினி, ஆ.ஆனந்தன், வல்லம்தாஜ்பால், ஹரிணி, பூ.அ.இரவீந்திரன், செளவி, கே.ஸ்டாலின், பா.சேதுமாதவன், ஜவாஹர்பிரேமலதா, த.விஜயராஜ், துடுப்பதிரகுநாதன், ந.ராஜேந்திரன், மு.சிவகுருநாதன், பூவிதழ்உமேஷ், ஜனநேசன், பெ.சுபாசு, சந்திரபோசு, முத்தழகுகவியரசன், ஶ்ரீதர்பாரதி, இரா.மோகன்ராஜன், இரா.இளங்கோவன், அல்லிபாத்திமா, ஆழ்வைக்கண்ணன், நாமக்கல்நாதன், கி.சிவா, முத்தமிழ்விரும்பி, செ.இராஜேஸ்வரி, சு.இராமர், கே.பழனிவேலு, சுப்ரமணியபாண்டியன், அன்றிலன், பூமிபாலகன், உமர்பாரூக், கடவூர்மணிமாறன், நா.நாகராஜன், துஷ்யந்த்சரவணராஜ், அ.கார்த்திகேயன், நா.விச்வநாதன், கவியோவியத்தமிழன், ஹரிவர்ஷினிராஜேஷ், ஜனனிஆறுமுகம், உடுமலைஅருட்செல்வன்,செ.நடேசன், திலகவதிசண்முகசுந்தரம், கள்.நல்லுசாமி,அமரன், மருத்துவர். சபரிகார்த்திக், தூரிகைசின்ராஜ், பொன்மணிதாசன்,சதீஷ்விவேகா, சோ.மா.ஜெயராசன், எம்.எம்.பைசல், மு.க.இப்ராஹிம், எம்.ஆர்.சி.திருமுருகன்.

கிண்டில்படைப்பு :

அப்புசிவா, ராம்கணேஷ்.

அயலகம் :

நோயல்நடேசன்( ஆஸ்திரேலியா )

மில்லத்அஹ்மத்( சிங்கப்பூர் )

மைக்கொலின்( இலங்கை )

தொடர்புக்கு :வழக்கறிஞர்சி.ரவிஅலைபேசி : 99940 79600

( ஒருங்கிணைப்பாளர் )திருப்பூர்முத்தமிழ்ச்சங்கம்,

உலகச் செய்திகள்

தலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்கவென பாகிஸ்தான் எல்லைக்கு ஆப்கானியர்கள் நகர்வு

செய்தியாளர்களை சவுக்கால் அடித்து தாக்கிய தலிபான்கள்

ஆப்கானில் இருந்து முதல்முறை வெளிநாட்டினர் வெளியேற்றம்

காபூல் அரசுக்கு பீஜிங் முழுமையான ஆதரவு

மன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்

சிறையிலிருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளின் குடும்பத்தினர் கைது

தலிபான்களின் தடையால் பல்கலைகளில் ஆண் - பெண் மாணவர்கள் நடுவில் திரைச்சீலை



தலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்கவென பாகிஸ்தான் எல்லைக்கு ஆப்கானியர்கள் நகர்வு

தலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்கவென பாகிஸ்தான் எல்லைக்கு ஆப்கானியர்கள் நகர்வு-Afghani Travel Pakistan

தலிபான்களின் ஆட்சியிலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள், ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் இருக்கும் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைக்கு சுமார் இரு வாரங்களாக நகர்ந்துள்ளனர். அவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லா வயது மட்டத்தினரும் உள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.