இலங்கை சுதந்திரமடைந்த
பின்னர் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் தரப்பில்
எத்தனை அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தோன்றின…? எத்தனை கட்சிகள் காணாமல் போயின…? எத்தனை
கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பின்னர் முரண்பட்டன..? முதலான கேள்விகளுக்கு
விடை காணவேண்டுமானால், இலங்கை அரசியல் கட்சிகளின்
தோற்றமும் - வளர்ச்சியும்
- அழிவும் என்ற நீண்ட பதிவையே எழுதமுடியும்.
சிலவேளை அத்தகைய பதிவுகள்,
இலங்கை அரசியலை
கற்கவிரும்பும் வரலாற்று மாணவர்களுக்கு
ஆய்வுகள் எழுதுவதற்கு உதவக்கூடும்.
ஆனால், அக்கட்சிகள் தேர்தலில்
நிற்கும்போது வழங்கும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏதும் நன்மை கிடைக்குமா..?
என்றால், இல்லை என்ற பதில்தான் நிச்சயம் !
அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்
கட்சி 1944 ஆம் ஆண்டு தோன்றியது. இலங்கை தமிழரசுக்கட்சி 1949 ஆம் ஆண்டில் உருவானது. அதாவது முன்னையதிலிருந்து
பிரிந்து வந்த அணி உருவாக்கிய கட்சி.
ஐக்கிய தேசியக்கட்சி 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1951 ஆம் ஆண்டு உருவானது. அதாவது முன்னையதிலிருந்து பிரிந்து வந்த அணி உருவாக்கிய
கட்சி.
இவற்றை தோற்றுவித்த தலைவர்கள்
தற்போது இல்லை. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள் பலவும் இலங்கையில் தோன்றின.
பிளவுபட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
தேய்ந்தும் போனது. அதற்கு சீன – ருஷ்ய சித்தாந்த முரண்பாடுகள் பிரதான காரணமாகத் திகழ்ந்தன.
ஆனால், முன்னைய வலதுசாரி சிங்கள கட்சிகளும் தமிழ்க்கட்சிகளும்
பிளவுபடுவதற்கும் , பிரிந்து தனித்தனி வழிசெல்வதற்கும் எந்தவொரு சித்தாந்தமும் காரணமாக
இருக்கவில்லை.
முழுக்க முழுக்க ஆணவமும்
தன்முனைப்பு அகங்காரமும்தான் காரணம்.
ஜனநாயக வழிமுறைகளில் பிரிந்து
நின்று, கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த தமிழ்க்கட்சிகளை
ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2001 ஆம் ஆண்டு ஒன்றிணைத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.
எனினும், ஆனந்தசங்கரியின் தலைமையில் இயங்கிய தமிழர் விடுதலைக்
கூட்டணி அந்த கூட்டமைப்பில் உள்வாங்கப்படவில்லை.
அவர் தனிவழி சென்றார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் இயக்கம் மௌனிக்கப்பட்டபோது, லண்டன் பி. பி. சி. வானொலிக்கு பேட்டி வழங்கிய தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அய்யா, “ விவேகமற்றவர்களின் முடிவு “ என்று வாக்குமூலம் அளித்தார்.
அதன்பின்னர் இந்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் விவேகமான ( ?
) செயற்பாடுகளையும் உள்குத்து போராட்டங்களையும்
பார்த்து வருகின்றோம்.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஈழத்தமிழர்
பிரச்சினைக்குத் தீர்வாகத் தரக்கூடிய திட்டம் தொடர்பாக ரெலோ கட்சி வழங்கிய கடிதம்
இதர கூட்டமைப்புக் கட்சிகளிடையே வாதப்பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது. தற்போது குறிப்பிட்ட மோடிக்கு அனுப்பிய கடிதம் பற்றி பேசுவார்
எவருமிலர்.