பொங்கலது வாழ்வில் புதுப்பாதை காட்டிடட்டும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

பட்டாசு சத்தமும் பளிச்சிடும் மத்தாப்பும்

புத்தரிசி புதுப்பானை பொங்கிவரும் வெண்பாலும் 

புத்துணர்வு சுமந்துவர பூரிப்பாய் பொங்கல்வர

அத்தனைபேர் அகங்களுமே ஆனந்தம் பெருகிடுமே  ! 

 

பட்டதுன்பம் அத்தனையும் பஞ்சாகப் பறந்துவிட

பார்பிடித்த பெருநோயும் படுகுழியில் வீழ்ந்துவிட 

மட்டற்ற மகிழ்சியது மனமெல்லாம் நிறைந்துவிட

மங்கலமாய் பொங்கலது வந்துமே அமையட்டும்     !

 

வீண்வாதம் விலகட்டும் வெறுப்புமே மடியட்டும்

மாண்பற்ற செயலெல்லாம் மங்கியே மழுங்கட்டும்

காண்கின்ற அத்தனையும் கண்ணியமாய் ஆகட்டும்

கனிவுதனை பொங்கலது காட்டிடவே வந்திடட்டும்   ! 

 

தை மலர்ந்து வருகவே 14-1-21



.........    பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்




தை பிறக்க வழிபிறக்கும் என்று பொங்கும் தமிழரின் 

கை நிறைத்து வளங் கொழிக்கத் தை மலர்ந்து வருகவே! 

                                    (தைபிறக்க)

                                                     

ஈழம் என்றும் கண்டிராத இறைமை பூண்ட தலைவனின் 

நாழும் கண்ட கனவும் ஒருநாள் நலங் கொழிக்க வருகவே! 

அல்லல் உற்று அலைந் துலைந்து நலிந்த ஈழத் தமிழரின் 

தொல்லை தீர்ந்து சுபிட்ச வாழ்வு தொடரத் தையும் வருகவே! 

                                   (தைபிறக்க)

                                                                                   

வையம் எங்கும் வளர்ந்து மலியும் வன் முறைகள் ஒழிந்து நல் 

ஐயம் அற்ற புனிதமான மனிதநேயம் ஓங்கவே! 

ஓன்றே தெய்வம் இரண்டே சாதி என்றுயர்ந்த இனமதாய் 

மூன்றே பாலில் ஆன மறையை நான்கு திசையும் பரப்பவே

                                   (தைபிறக்க)

“தாயான இறைவன்” – “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி 🙏

கானா பிரபா


இன்று ஜனவரி 7, “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 96 ஆவது பிறந்த தினமாகும். ஈழத்தில் ஆன்மிகப் பணியையும், அறப்பணியையும் கொண்டு நடத்திய பெருந்தகை அம்மாவின் வாழ்வியல் பணிகளைக் கண்டும், ஊர்கள் தோறும் சென்று அவர் நிகழ்த்திய ஆன்மிக உரைகளைக் கேட்ட வகையிலும். புண்ணியம் பெற்றவர்கள் நாங்கள்,

இங்கே பகிரும் ஒளிப்படம் எமது மடத்துவாசல் பிள்ளையார் (பரராஜசேகரப் பிள்ளையார்) ஆலயத்தில் இணுவையூர்ப் பெருமக்கள் சூழ அம்மா அவர்கள் நிகழ்த்திய ஆன்மிக உரை ஒன்றின் நினைவு கூறும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக என் சேமிப்பில் இருக்கும் அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.


மங்களம்தரும் பொங்கலோ பொங்கல் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
  
முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்  மெல்பேண் ... அவுஸ்திரேலியா 



தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளை களுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியே எண்ணியே பார்ப்பதும் இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலை பொங்கி வருகின்றோம்.நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம்தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கிய மானது என்பதை நாங்கள் அனைவரும் மனதில் இருத்துவது மிகவும்  அவசிய மானதே. 

   புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாற லாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடுகலா சாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடுகலாசாரம்இவற்றினை உணர்த்துவதுதான் எங்களின் விழாக்களும்கொண்டாட்டங்களுமாகும். பண்பாட்டினை நிலை நிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் " தைப்பொங்கல் " எனலாம். எங்கள் பிள்ளைகளை உணரச் செய்தாலே பொங்கல் விழாவானது பூரிப்பான தாகிவிடும். 

தமிழர்களையும் முஸ்லிம்களையும் வஞ்சம் தீர்ப்பதே இந்த அரசாங்கம்! நினைவுதூபி தகர்த்தமை படுபாதகச் செயலாகும் - ரிஷாட் கண்டனம்

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத்தூபியை இப்போது அவசர அவசரமாகத் தகர்த்து, அதனை முழுமையாக அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம் ஏன் ஏற்பட்டது? இனவாதிகளையும், கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவேயொழிய, வேறு எந்தக் காரணமும் இதில் இருக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது அநியாயமான செயல்! தேரரின் உருக்கமான பதிவு


முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேருன்றியதன் பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பரிதாபமான செயல் என்று இந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இந்த நினைவுசின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேருன்றியது பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பரிதாபம்.

நம் நாட்டைக் கைப்பற்றிய வெளிநாட்டவர்களின் பெயரிடப்பட்ட பல கட்டிடங்களும் வீதிகளும் நகரங்களும் சிலைகளாக நம் நாட்டில் உள்ளன.

நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள்? கமல்ஹாசன் கேள்வி


நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள் என நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த தனது சமூக வலைத் தளங்களான ருவிட்டர் மற்றும் முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்கமுடியாது என தெரிவித்துள்ள அவர் சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறுமனே கட்டுமானம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ள கமலஹாசன் வரலாறு மாறாது நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவுகளை என்ன செய்வீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  நன்றி IBC Tamil

நேதாஜி. சுபாஷ் சந்திரபோஸ் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்



இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் எமக்கு உடனே நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியே. அவரையே தேசபிதா எனவும் கூறுவார்கள். உண்மையிலே வேறு சில தலைவர்களும் சுதந்திரத்திற்காகத் தலைமை தாங்கினார்கள். அவர்களில் முதன்மை பெறுபவர் நேதாஜி. சுபாஷ் சந்திரபோஸ். அவர் வங்க நாட்டின் வங்கச் சிங்கம் என்பார்கள்.


இவர் ஆயுதப் போராட்டமே வேண்டியது என்றார். இந்திய தேசிய இராணுவம் INA ஐக் கட்டி எழுப்பி அதற்குத் தலைமை தாங்கினார். இந்த இராணுவ அமைப்பு அப்போதிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு தலைமறைவாகி அப்போது ஜப்பானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பர்மாவில் இருந்து தம் போராட்ட நடவெடிக்கைகளை மேற்கொண்டது. அன்றய ஜப்பானிய அரசு நேதாஜிக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தது.

நான் சென்னையில் படித்த காலத்தில் எனது Guardian ஆக இருந்த கண. முத்தையா அவர்கள் நேதாஜி. சுபாஷ் சந்திரபோஸ் பற்றி அடிக்கடி பேசக் கேட்டுள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரு. கண. முத்தையா அவர்கள் பிற்காலத்தில் தமிழ் புத்தகாலயமென்ற நூல் வெளியீட்டு நிலையத்தை ஸ்தாபித்து நல்ல பல நூல்களை வெளியிட்டவர். இலங்கை எழுத்தாளர்கள் தில்லைநாதன், வேலுப்பிள்ளை போன்ற பலரது நூல்களும் இங்கு வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் Oxford Publication போல தமிழ் நாட்டில் சிறந்த நூல்களை வெளியிடும் புத்தகாலயம் என்ற பெயரை இந்த வெளியீட்டு நிறுவனம் பின்பு பெற்றது.

திரு. கண. முத்தையா அவர்கள் 40 களிலே பர்மாவில் தேக்கு மர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாராம். யுத்தம் தொடங்கிய காலத்தில் நேதாஜியின் I.N.A Army யில் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய இணைந்த இளைஞர்களோடு இவரும் இணைந்து கொண்டார். செட்டிமார்கள் கணக்கு வழக்குகளில் மிக்க பரீட்சயம் உள்ளவர்கள் என்பதால் திரு. கண. முத்தையா Account Section ல் பணி புரிந்தார். ஆனாலும் இவருக்கு இராணுவப்பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தது.

யாழ். பல்கலை நினைவுத் தூபி உடைப்பின் பின்னணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்?


தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி உடைப்புத் தொடர்பில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைவாக இராணுவத்தின் உதவியுடன் பல்கலைக்கழக துனைவேந்தரின் ஆலோசனைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்களமாக இருக்கலாம்,அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஒரு ஏஜேன்டுகலாக இருக்கின்றனர்.

சுரேன் ராகவனுக்கு கனேடிய தமிழ் மக்களின் பகிரங்கக் கடிதம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிவகிக்கும் நீங்கள், 2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த விடயத்தில்முதுகலைமானிப் பட்டம் பெற்றுப் பின்னர் கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பணியாற்றி, 2012 ஆம்ஆண்டு கெனட் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே உங்களுக்குக் கடனா நாட்டின்நாடாளுமன்றம் எது கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றின் சட்டசபை எதுவெனத் தெரியாதா?

கனடா ஒன்ரோறியா மாகாண சட்டசபையில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் (Tamil Genocide Education Week) மே மாதம் 18 ஆம் திகதியில் இருந்து 25 ஆம் திகதி வரை அனுஷ்டிக்க வேண்டுமெனக் கோரித் தனிநபா் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கனடா நாடாளுமன்றத்தில் (Parliament) அந்தப் பிரேரணைசமா்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 4 ஆம் திகதி உரையாற்றும்போதுகூறியிருந்தீா்கள்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 48 – புர்கி மற்றும் மாயக்குழல் – சரவண பிரபு ராமமூர்த்தி



புர்கி/புகிரி அல்லது புகிர்:
குழல் வகை கருவிகளின் மிகவும் திருந்தாத ஆதி வடிவம் எனலாம் இதை. மலை மூங்கிலில் வெட்டி எடுத்து துளைகளிட்டு செய்யப்படுவது. இதில் 6 துளைகள் உள்ளன. நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள். குரும்பர்கள் தான் இதை முதலில் பயன்படுதினார்களாம். கோத்தர் (புகிர்), இருளர் (புகாரி), ஆலு குரும்பர் (புகுரி) மற்றும் பாலு குரும்பர் (புகிரி) ஆகியோரால் வாசிக்கப்படும் ஒரு தொன்மை இசைக்கருவி. பொது சடங்குகள் மற்றும் திருவிழாக்களுடன் தொடர்பு இல்லாது ஏகாந்தமாக வாசிக்கப்படும் கருவி இது. முன்பு ஆண்களும் பெண்களும் இசைத்தனர். தற்பொழுது பெண்கள் இசைப்பதில்லை. ஒருவர் பயன்படுத்திய இந்த கருவி அவர் இறந்தவுடன் அவருடன் சேர்த்து புதைக்கப்படும் வழக்கம் மேற்கண்ட பழங்குடி மக்களிடம் உள்ளது. குழலின் ஒரு முனையில் வாய் வைத்து துளைகள் வழியே கட்டுப்படுத்தி இசைக்க வேண்டும்.

https://player.vimeo.com/video/99626374

மாயக்குழல்: மூங்கிலில் செய்யப்படுவது. ஒரு மீட்டர் அளவுகூட இருக்கும். குறுக்காக வைத்து இசைக்கப்படாமல்.


நிமிர்வாக்கில் வைத்து குழலின் நடுவில் இருக்கும் துளைவழியே பொருத்தப்பட்ட சிறிய மூங்கில் குழல் மூலம் மூச்சை உள்ளே செலுத்தி இசைக்கப்படுவது. இந்த நடுவில் உள்ள ஒட்டையின் இருபுறமும் துளைகள் இருக்கின்றன. தருமபூரி மாவட்ட (மாதேசுவரன் மலைப்பகுதி, அஞ்செட்டி) பழங்குடிகள் மத்தியில் காணப்படுகிறது. கால்நடை மேய்ச்சல் முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை இதை பயன்படுத்துகிறார்கள். முதன் முதலில் மகுடம் வல்லிசை நிகழ்ச்சி மூலம் இக்கருவி வெளியுலகிற்கு வந்தது. இம்மக்கள் இதை மகுடி என்று அழைக்கின்றார்கள். லம்பாணி மலை மக்களின் சொத்தாக நீண்ட நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது இக்கருவி. இம்மக்களின் வழிபாட்டில் இடம்பெற்றது. திரு.இராஜு என்பவர் இதை தற்காலத்தில் இசைக்கிறார்.

https://youtu.be/N3uGuhPYGZI

மலையாளி பழங்குடியினர் குழல்: தமிழக மலையாளி பழங்குடியினர்(இவர்கள் கேரள மலையாளி அல்ல, மலை ஆள்பவர் என்ற பொருளில் தமிழ்நாட்டு மலைகளில் வசிப்பவர்) மத்தியில் குழல்கள் புழக்கத்தில் உள்ளது. இக்குழுவினர் ஆடும் சேவையாட்டத்தில் குழல் முக்கிய இசைக்கருவியாக இசைக்கப்படுகிறது. மலையாளி பழங்குடிகளின் குழல் சுமார் 15 செமீ அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இனிய இசை தரவல்லது.

இலங்கைச் செய்திகள்

 இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்

ETI நிதி நிறுவன பணிப்பாளர்கள் நால்வருக்கும் பிணை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம்

அரசுடன் முட்டிமோதுவதால் சிறுபான்மைக்கு நன்மை கிடைக்காது

மருதமுனை சுனாமி வீட்டுத் திட்டம்; நிர்மாணித்து முடிக்கப்பட்ட போதிலும் கையளிக்கப்படாமல் கிடக்கும் வீடுகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கையில் நின்றவேளை பிரதமர் மகிந்த வெளியிட்ட அதிரடி கருத்து

யாழ்.உடுவில் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது வெளியிட்டுள்ள தகவல்கள்


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்-Indian External Affairs Minister Dr S Jaishankar Arrived in Sri Lanka

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார்.

விசேட விமானம் மூலம் வந்தடைந்த அவரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிராந்திய உறவு நடவடிக்கைகள்‌ இராஜாங்க அமைச்சர்‌ தார பாலசூரிய மற்றும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரினால் வரவேற்கப்பட்டார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு இரு நாள் உத்தியோகபூர்வ  விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நாளை மறுதினம் (07) வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எழுத்தும் வாழ்க்கையும் --- அங்கம் 23 முருகபூபதி முதல் மாதச்சம்பளம் 230/= ரூபா ! கற்றதும் பெற்றதும்தான் புத்திக்கொள்முதல் ! !



ஜே.ஆர். ஜெயவர்தனா 1977 இல் பிரதமராக பதவியேற்றதும்  அவரது அரசியல் வாழ்வில் ஒளிவீசத்தொடங்கியது. அதுவரையில்  நாடாளுமன்ற உறுப்பினராகவும், இறுதியாக டட்லிசேனாநாயக்கா 1965 முதல் 1970 வரையில் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இராஜாங்க அமைச்சராகவும், பின்னர் அந்த அரசு தேர்தலில் தோல்விகண்டதும் எதிர்க்கட்சித்தலைவராகவும்  பதவியிலிருந்த  ஜே.ஆரின் அரசியல் வாழ்வு திசைதிரும்பியதைப்போன்று, எனது வாழ்வும் திசைதிரும்பியது.

அவர் பிறந்து தவழ்ந்த கொழும்பு – 14  கிராண்ட் பாஸ் வீதியில் அமைந்த இல்லத்திலேயே எனக்கும் ஒரு வேலை நிரந்தரமாக கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்திருக்கமாட்டேன்.  எனது இந்த வாழ்க்கைத் தொடரில்  ஜே.ஆர். அடிக்கடி வருவார்.  அது தவிர்க்கமுடியாது.

அவரது சோதிடக்குறிப்பை நான் பார்த்ததும் தற்செயல்


நிகழ்வுதான்! எங்கள் ஊருக்கு அவர் அரசியல் கூட்டங்களுக்கு பேச வந்தசந்தர்ப்பங்களில், மேடையருகில் நின்று கேட்டிருக்கின்றேன்.  நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி நிருபராக அவரது உரையை எழுதியுமிருக்கின்றேன்.

பின்னர் காலிமுகத்திடலில் பணியாற்றியபோது, அவர் தினமும் பவனிவரும் காரை மாத்திரமல்ல, ஶ்ரீமாபண்டாரநாயக்கா, மற்றும் பல அரசியல் தலைவர்கள் பயணிப்பதையும் மேலும் ஒரு சிலர் காலிமுகத்திடலுக்கு நடைப்பயிற்சிக்கு வருவதையும் பார்த்து ரசித்திருக்கின்றேன்.

வீரகேசரி பத்திரிகை தற்போது 90 வயதையும் கடந்து வெளியாகிறது.  அங்கே ஆசிரியபீடத்திலும் ஒப்புநோக்காளர் பிரிவிலும் பல ஆளுமைகள் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை அங்கு சிரேஷ்ட துணை ஆசிரியர்களாகவிருந்த எழுத்தாளர்கள் ( அமரர் ) கார்மேகம், மற்றும் இலக்கிய சகோதரி அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரின் வாயிலாக முன்னரே அறிந்திருக்கின்றேன்.

பிரதேச நிருபராகவிருந்தபோது, மலையகத்தில் அட்டனில் நடந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின்  மாநாட்டிலும் பார்வையாளராக கலந்துகொண்டமையால், அங்கே முழு வீரகேசரி குடும்பத்தினரையும்  சந்தித்திருக்கின்றேன்.

உலகச் செய்திகள்

 பாகிஸ்தான் கோயில் இடிப்பு: 100 பேர் கைது

அதிகாரியை மிரட்டிய டிரம்பின் ‘ஒலிப்பதிவு’ அம்பலம்

சீன செல்வந்தர் மாயம்

2041 இல் இஸ்ரேலை அழிப்பதற்கு ஈரான் பாராளுமன்றில் பிரேரணை

சீனாவில் இதுவரை காணாமல் போன முக்கியஸ்தர்கள் பலர்

ஹொங்கொங்கில் ஐம்பது ஜனநாயகவாதிகள் கைது

டொனால்ட் ட்ரம்பின் சமூகவலைத்தள கணக்குகள் அனைத்தும் முடக்கம்

ஜுலியன் அசாஞ்ச்சுக்கு பிணை வழங்க மறுப்பு

ட்ரம்பை பதவியிலிருந்து நீக்க ஜனநாயகக் கட்சி கோரிக்கை

தேர்தல் தோல்வியால் வன்முறையை தூண்டிய ட்ரம்ப்


பாகிஸ்தான் கோயில் இடிப்பு: 100 பேர் கைது

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஹிந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

திரைக் கலைஞர் பாலு மகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர் நூலகமும் பயிற்சிக் கூடமும் - பேராசிரியர் சி. மௌனகுரு

 .



ரம்மியா  ஹம்சிகா   எனும் இரு  இளம்   ஊடகவியாலாளினிகள்   கிளிநொச்சியிலிருந்து     என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில்  தொடர்பு கொண்டனர்.    ஓர்  அழைப்பும்  விடுத்தனர்

 நாங்கள்  சிலர் இணைந்து  பாலுமகேந்திரா  பெயரில்  ஓர்  நூல் நிலையமும்     பயிற்சிக்  கூடமும்  ஆரம்பிக்கிறோம்.  27.12.2020 இல் அதன் ஆரம்ப  விழா  நடைபெறவுள்ளது  அதில் ஓர் சிறப்பு விருந்தினராக   நீங்கள்  கலந்து கொள்ளவேண்டும்.  அதில்   பாலுமகேந்திராவுடனான  உங்கள்  அனுபவங்களை பகிர்ந்து  கொள்ளவேண்டும்

சரி  என ஒப்புக்கொண்டேன்

பாலு மகேந்திரா  என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும்  300  அல்லது 400  யார் தூரம்தான் இடைவெளி,  அவர் என்னை விட 4 வயது  மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் அண்ணன்  எனவே  அழைப்போம்.

 எனது  10  வயதிலிருந்து   15  வருடங்கள்  தொடர்ச்சியாக  அவருடனான  நெருக்க  உறவு  இருந்தது

அவர் தந்தையார்  பாலநாதன்  புகழ் பெற்ற  கணித  ஆசிரியர்  தந்தையின்  பெயரைத் தன்னுடன் இணைத்து  பாலு  மகேந்திரா  என்பெயர்  வைத்துகொண்டார்  மகேந்திரன்.பின்னாளில் இந்த  பாலுமகேந்திரா  எனும் பெயரே  நிலைத்து விட்டது அவரது  உறவினர்கள்  இன்றும் என் அருகில் வசிக்கிறார்கள்

மகேந்திரன்  அண்ணா  என்றே  சிறு  வயதில்  அவரை  நான்  அழைப்பேன்

அடிக்கடி  மகேந்திர  அண்ணர் வீடு செல்வேன்n அனைத்தையும்  அறிந்துகொள்ள வேண்டும் என்ற  ஆர்வம் மிக்க  வயது அது  அவர்   தனது தோற்றத்தாலும்,  பேச்சாலும்,  செயற்பாடுகளாலும்  எம்மை மிகவும் கவர்ந்தார்.


மாறா - திரைவிமர்சனம்


முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி வருவதை தொடர்ந்து, தற்போது திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு மார்ட்டின் ப்ரக்காட்டின் இயக்கத்தின் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 'சார்லி' படத்தின் ரீமேக் தான் மாறா.

கதைக்களம்

கதாநாயகி பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தனது பாட்டியிடம் கதை சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறாள். ஒரு ஊர்ல ஒரு ராஜா, நரிக் கதை என்றே பாட்டி கதை சொல்கிறார். அது பாருவுக்குப் பிடிக்கவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர், சிப்பாயி கதையைச் சொல்கிறார். அது பாருவின் மனதில் ஆழமாக பதிவாகிறது.

பார்வதி வளர்ந்த பிறகும், அந்த கதையை மட்டும் மறக்கவில்லை. பழமையான கட்டிடங்களை அதன் தன்மை மாறாமல் மறு சீரமைத்துப் பாதுகாக்கும் கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரிந்து வரும் கதாநாயகி பார்வதிக்கு, வீட்டில் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்த வரன் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு விலகி வேறு ஊருக்கு செல்கிறார் பார்வதி. தோழியின் உதவியுடன் விடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்.

சிறுவயதில் தான் கேட்ட கதையின் காட்சிகள் அங்கே ஓவியமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். அதற்கு காரணமானவர், கதாநாயகன் மாறா (மாதவன்) இருந்த வீட்டில் தங்குகிறார். அந்த வீட்டில் இருக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் உண்மை கதையின் சித்திரம் இருப்பதைப் பார்க்கிறார். ஆனால், அந்த கதை பாதியிலேயே நிற்கிறது.

கதையின் முடிவை அறிந்துகொள் வேண்டும் என்று ஆவலுடனும், மாறாவை சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அவரைப் பற்றிய தேடி வரும் பார்வதி, அவருக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு, தன் தேடல் பயணத்தைத் தொடர்கிறார்.

அந்த சித்திரக் கதை முழுமை அடைந்ததா, மாறாவைப் பார்வதி சந்தித்தாரா, சிறுவயதில் கேட்ட கதையை மாறா எப்படி ஓவியமாக வரைய முடிந்தது, அதற்கான இணைப்பு என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்பதை மாதவன் நடிப்பு காட்டிக்கொடுத்துவிடுகிறது. கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், துள்ளல், உற்சாகம் என கதாபாத்திரத்தின் அசல் தன்மை இதில் இல்லை. மாறாக, பக்குவமும், முதிர்ச்சியும் மாதவனிடம் அதிகம் தென்படுகின்றன. நாடோடிக்கான இலக்கணத்தில் அது சுத்தமாக பொருந்தவில்லை.

அசல் சார்லி படத்தை விட இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றம், நாயகியை மையமாகக் கொண்டே கதை செல்கிறது. தான் கேட்ட கதை ஓவியமாக ஒரு ஊரில் கண்முன் விரிவதைக் கண்டு ஆச்சரியப்படும் ஷ்ரதா அடுத்தடுத்து மாறாவின் மீதான ஆர்வத்தை நடிப்பால் நிறுவும் விதம் பாராட்டுக்குரியது.

இசையைக் குழைத்து ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் இணையத்தைக் கலக்கி வரும் அலெக்ஸாண்டர் பாபு இதில் திருடனாகத் திறமை காட்டியுள்ளார். மௌலி, அபிராமி, கிஷோர், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர் என்று அனுபவமிக்க நடிகர்கள் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

ஷிவதா மட்டும் தன் குற்ற உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். நாயகன் தவிர்த்த கதாபாத்திரத் தேர்வில் மெனக்கெட்ட இயக்குநர், பாத்திரப் படைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

தினேஷ் கிருஷ்ணன், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் அஜயனின் உழைப்பும் படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ஜிப்ரான் இசையும், பின்னணியும் படத்தின் கதையோட்டத்துக்குப் பொருந்துகின்றன. அசல் படத்தை விட சுமார் 15 நிமிடங்கள் கூடுதலான படம் என்றாலும், அலுப்பு தட்டாத வகையில் நேர்த்தியான எடிட்டிங்கில் புவன் சீனிவாசன் கவனிக்க வைக்கிறார்.

க்ளாப்ஸ்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு

ஜிப்ரானின் இசை

சிறந்த ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

படத்தோடு ஒன்றினையதா சில கதாபாத்திரங்கள்

இயக்குனர் திலீப் குமார் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

மாதவனுக்கு கதாபாத்திரம் பொருந்தவில்லை

திரைக்கதை பொறுமையாக உள்ளது

மொத்தத்தில் கதை சொல்லும் மாறா, சில இடங்களில் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், முழு படமாக நம்மை அதில் மூழ்க செய்துள்ளார்.

நன்றி  CineUlagam