இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் நம்மத்தியிலிருந்து யாராவது ஒரு ஆளுமை
நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரியில் மல்லிகை ஜீவா விடைபெற்றார். டிசம்பரில்
கனகசபாபதி நாகேஸ்வரனும் விடைபெற்றுவிட்டார். இதற்கிடையில் எழுத்தாளர் கே. எஸ் ஆனந்தனும்
சென்றுவிட்டார்.
மரணம் இயற்கையானது. அதனால்தான்
இயற்கை எய்தினார் என்கின்றோம். எமது தாயகத்தில் எவரேனும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள்
மறைந்தவுடன், தொலைவிலிருந்து அந்த மரணச்செய்தியை கேட்கும்போது, ஏனோ சற்று கலங்கிவிடுகின்றேன்.
இந்த ஆண்டும் அந்தக்கலக்கம்
அடிக்கடி வந்தமைக்கு முக்கிய காரணம் அவர்களின்
வயதுதான். என்னை விட வயதில் குறைந்த ஒருவர் விடைபெறும்போது, மரணபயமும் வந்து சூழ்ந்துவிடுகிறது.
சில நாட்களுக்கு முன்னர்
நான் வதியும் மெல்பனில் ஒரு தமிழ் அன்பர்,
என்னிலும் வயதில் குறைந்தவர் வாகனவிபத்தில் மறைந்தார். அந்தத் துயரத்தை கடப்பதற்கிடையில் நண்பர் க. நாகேஸ்வரனின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது.
தாமதிக்காமல், அவரது பூர்வீக
ஊரைச்சேர்ந்த நண்பர் பூபாலசிங்கம்
புத்தக நிலைய அதிபர் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு
விசாரித்தேன். சிறிது காலம் நாகேஸ்வரன் சுகவீனமுற்றிருந்தார்
என்ற மேலதிக செய்தியும் கிடைத்தது.
இந்த அஞ்சலிக்குறிப்புகளுக்கு “ ஆசானின் ஆளுமைப்பண்புகளை ஆவணமாக்கிய ஆசான்
கனகசபாபதி நாகேஸ்வரன் “ என்று தலைப்பிட்டமைக்கு, அவரது சிறந்த நூல் ஒன்று எனது
மேசையிலிருப்பதுதான் காரணம். சில வருடங்களுக்கு முன்னர், நாகேஸ்வரன் எழுதிய அறிவொளி
மாவை த. சண்முகசுந்தரம் ( தசம் ) – சிந்தனைகளும் எழுத்துப்பணிகளும் – என்ற நூலை ( 395 பக்கங்கள் கொண்டது ) தசம் அவர்களின் புதல்வி என்னிடம் சேர்ப்பித்திருந்தார்.
தசம் என்று பலராலும் அழைக்கப்பட்ட எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் அவர்கள், யாழ். மகாஜனா கல்லூரியில் அதிபராக பணியாற்றிய காலப்பகுதியில்,
பின்னாளில் கலை, இலக்கிய , ஊடகத்துறையில் பிரகாசித்த பலருக்கு ஆசானாக விளங்கியவர்.
நான் அறிந்தமட்டில், எழுத்தாளர்கள்
சோமகாந்தன், ஆ. சிவநேசச் செல்வன், கோகிலா மகேந்திரன், நாகேஸ்வரன்
ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.
க. நாகேஸ்வரன், தனது ஆசான்
பற்றி எழுதிய நூலின் அணிந்துரையில் இவ்வாறு ஒரு
பந்தியை பதிவுசெய்துள்ளார்.
“ மலையைக் காண்பதற்குத் தூரம் வேண்டும். சம்பவங்களை
மதிப்பிடுவதற்குக் காலம் வேண்டும் “ என்று
எமக்கு உபதேசம் செய்யும் ‘அறிவொளி ‘தசம் ‘அவர்களை நாம் நினைக்கும்போதெல்லாம், ஒரு விரிவான
– விசாலமான – உண்மையான – நன்மையான – திடமான – நம்பிக்கை தரும் கோட்பாட்டை இரை மீட்கின்றோம்
என்ற திருப்தி எமக்கு ஏற்பட்டதை இன்றும் மீள நினைக்கின்றோம். “