" சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது"
கவியரசு கண்ணதாசன்
திரைப்படங்களின் பெயர்களை விடுதலை இயக்கங்களுக்கு
சூட்டிய இளைஞர்கள் புகலிடத்தில் யாருக்கு பெயர் சூட்டுகிறார்கள்?
முருகபூபதி
அலைகள் ஓய்வதில்லை, விடியும் வரை காத்திரு, பயணங்கள்
முடிவதில்லை, தூரத்து இடிமுழக்கம், எங்கேயோ கேட்ட குரல் --- இந்தப்பெயர்கள் யாவும் முன்னர்
வெளிவந்த திரைப்படங்கள்தான்.
ஆனால், இந்தப்படங்களின்
பெயர்களை 1980 களில் ஆயுதம் ஏந்திய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் வடபகுதி தமிழ்
இளைஞர்கள் சூட்டியிருந்தார்கள் என்பது உங்களுக்கு
நினைவிலிருக்கிறதா?
எனக்கு இந்த
சுவாரசியங்களை சொல்லித்தந்த ஒரு இளைஞர் கூட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்தது.
எனது வாழ்வில்
யாழ்ப்பாணம் அரியாலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. 1963 இல் தொடங்கிய இந்த உறவு
பல தொடர்கதைகளை உள்ளடக்கியது.
நானும் எனது
மாமா மகன் முருகானந்தனும் எங்கள் ஊரில் அன்றைய ஆறாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்திபெற்று யாழ்ப்பாணத்திலிருக்கும் கச்சேரிக்கு அருகாமையில் செல்லும் நாவலர் வீதியில்
அரியாலையில் அமைந்திருந்த ஸ்ரான்லிக்கல்லூரியில் அனுமதிபெற்றோம்.
அதற்கு முன்னர்
நீர்கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் பாதையில் வரும் சிலாபம், உடப்பு, முன்னேஸ்வரம்
ஆகிய இடங்களுக்கு அப்பால் சென்றதேயில்லை. யாழ்ப்பாணத்தையோ பனைமரத்தையோ தரிசித்திருக்கவில்லை.
அரியாலை புங்கன்
குளத்திற்கு அதிகாலைவேளையில் வந்து தரித்துச்செல்லும் கொழும்பிலிருந்து வரும் இரவு தபால்
ரயில் வண்டி எழுப்பும் ஓசையின்போது, ஸ்ரான்லிக்கல்லூரி
ஆண்கள் விடுதியில் துயில் எழும்பும் எனக்கு வீட்டின் ஏக்கம் வரும். அடுத்த தவணை விடுமுறை
வரும் நாட்களை மனம் எண்ணத்தொடங்கும். நாம் அங்கு படிக்கத்தொடங்கிய காலத்தில்தான் அதன்
பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரியாக மாற்றப்பட்டது.