உலக சினிமாவின் தரத்திற்குள் கால் பதித்துள்ள முதலாவது தமிழ் தயாரிப்பு.. தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் வெளியான மறு நாளே எழுதும் விமர்சனம் தமது தொழிலை பாதிக்கிறது என்ற கோரிக்கையால் விஸ்வரூபத்திற்கான உண்மை விமர்சனத்தை எழுத பத்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு அதுபற்றி உடனடியாக எழுதாவிட்டால் அதுவும் தொழிலைப் பாதிக்கும் செயலே என்ற உண்மையை அப்படம் ஏற்படுத்திவிட்டது.
இதுவரை டண்டுணக்கா.. டணக்கு ணக்கா என்றிருந்தலே போறும் என்றிருந்த இந்திய தமிழ் சினிமாவை ஒரே இழுவையாக இழுத்து, மலையின் உச்சிக்கு ஏற்றியிருக்கிறார் கமல்.
காதல் பாட்டுக்கள் இல்லை, வில்லனுக்கு மரணமில்லை, கிளைமாக்ஸ் இல்லை, கதாநாயகனுக்கு ஆர்பாட்டமான ஒரு தொடக்கமில்லை, ஆனால் கதிரையைவிட்டு எழும்ப முடியாமல் ரசிகரை ஆசனத்தின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகிறார்.
பிளாஸ்டிக் பையை விரித்துவிட்டு அதிலேயே நிற்க வைத்து தலையில் ஒரு வெடி, தரையில் சிந்தும் இரத்தத்தை துடைக்கும் அவசியம் இல்லாத கொலை..
சூடு வேண்டி இரத்தம் சரமாரியாக ஓட கிடக்கிறது ஓர் உடலம், அந்த நேரம் அதன் மார்பிற்குள் கிடக்கும் தொலைபேசி அடிக்கிறது, அந்த வைப்பரில் இரத்தம் சரக் கரக்கென அசையும் அசைவு, நுட்பமான வெளிப்பாடு.
ஒவ்வொரு நடிகருடைய முகபாவத்திற்கும் கொடுத்துள்ள கால அவகாசம், கைதேர்ந்த நடிப்புக் கலையை கமேராவிற்குள் கொண்டு வரும் கலை நேர்த்தி.. பொறுமையான படப்பிடிப்பு..
ஆப்கானின் சூழலில் ஒரு திரைப்படத்தை அமெரிக்க உலங்குவானூர்திகளின் தாக்குதல்களோடு படமாக்கிய சிறப்பு இந்திய சினிமாவிற்கே சவால் விட்டிருக்கிறது..
படம் பார்க்கத் தொடங்கிய 15 வது நிமிடமே நம்மை அறியாமலே கமல் பற்றிய பயம் மனதை வாட்டத் தொடங்கிவிட்டது காரணம் ஒரு திரைப்பட இயக்கனருக்கு உயிராபத்தைத் தரும் ஆபத்தான கதைக்கரு.
கமல் கால் வைக்கக்கூடாத இடத்தில் கால் வைத்துவிட்டார் என்ற அச்சத்தை ஏற்படுத்திய கதை, அந்த அச்சத்திலேயே நம்மை வாழ வைத்து, வேறு வழியில்லை இந்தக் குகைக்குள் நுழைந்துவிட்டோம் இதனால் வெளியேறியே ஆக வேண்டும் என்ற நிலைக்குள் நீச்சலடிக்க வைக்கிறது..
கமலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பிரபல சினிமா கலைஞன் பாலு மகேந்திரா சொல்லியிருப்பது முற்றிலும் பொருத்தமானது.
பணம், பெயர், புகழ், அரசியல் செல்வாக்கு, சினிமாவால் முதல்வராகும் மோசமான கனவு எதுவும் இல்லாமல் சினிமாவிற்காக ஒரு வெறியோடு கமல் உழைத்துள்ளார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக நடிக்க ஆரம்பித்த கமல் ஆப்கான் காபுலில் தனது களத்தூரை வைத்து இந்தச் சாதனையை படைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
வெறுப்போடு பார்த்தால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக கருத முடியும், அதுபோல கமலின் கோணத்தில் பார்த்தால் அவருடைய நியாயங்களும் சரியானதாகவே இருக்கிறது.
மேலும் விஸ்வரூபத்தில் காட்டப்படும் காட்சிகள் யாவும் ஏற்கெனவே இணையத்தில் வெளிவந்த காட்சிகளே என்பதையும் மறுக்க முடியாது.