.
மாணவர்களை....., மக்களை,,,,,
முழுமையாக வெறுத்து, நிராகரிக்கும் போக்கை தவிர்ப்போம்.
தற்போது உலகெங்கும் பேசு பொருளாக மாறியிருப்பது கொறனா வைரஸ் என்ற ஆரம்பிக்கப்பட்டு இன்று கோவிட் 19 (COVID-19) என உலக சுகாதார நிறுவனத்தால் புதிய பெயரிடப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.
இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயாக உலாவரும் இது சீனாவில் மையம் கொண்டிருப்பது பலரும் அறிந்த செய்தி. மனித உடம்பில் போதியளவு நோய் எதிர்ப்பு சக்தி தான் இன்று வரை இந்த நோயில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொது விதியாக இருக்கின்றது.
நோய் தொற்றாளர்களின் அளவும், இறப்பு வீதமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனாலும் இதனைக் கட்டிற்குள் கொண்டு வர திருப்திகரமான முன்னெச்சரிகை நடவடிக்கைகளை சீனாவும், உலகும் எடுத்திருப்பது மகிழ்ச்சியான நம்பிகை தரும் விடயங்கள்.
ஆனால் சீனாவிலேயே கிட்டத்தட்ட 100 வீத அளவில் இதன் தாக்கம் இருப்பதுவும் இது ஒரு சீன நோய் என்பது போலவும் இதன் அடிப்படையில் சீன மக்களை வெறுத்து விலகி நடப்பதும், அவர்களின் தொழில்சார் இடங்களைத் தவிர்ப்பதுவும் வருத்தத்திற்குரியது, சரியானதும் அல்ல.
இது எச்சரிகையான செயற்பாடுகளுக்கு அப்பால் வெறுப்பிற்குள்ளாக்கும் செயற்பாடாக இன்று பல இடங்களில் வளர்ச்சி அடைந்திருக்கின்றது
இதற்கு ஒருபடி மேலே போய் மரணங்களின் எண்ணிக்கையை கண்டு '......உவர்களுக்கு உது வேண்டும். இலங்கையிற்கு குண்டு கொடுத்தவர்கள்... கம்யூனிஸ்ட்டுகள் என்ற வெறுப்புப் பேச்சுகள் சரியானதும் அல்ல நாகரீகமற்றவை, மனிதாபிமானம் அற்றவை ஏன் கண்டனத்திற்குரியவை.
என் படலையைத் தட்டாதவரை இந்த நோய்த் துன்பங்களை, மரணங்களை கொண்டாடும் மனநிலை ஒருவகை மனித நேயத்திற்கு எதிராக மனநோயின் வெளிப்பாட்டாக தவிர வேறு எப்படி பார்க்க முடியும். இங்கு சீனப் பொருளாதாரத்தின் சரிவு நிலையைக் கண்டு தனது மனதிற்குள் சிரித்துக் கொள்ளும் மனநிலையில் சீனாவை விரும்பாத நாடுகள் இருக்குமாயின் இதனைவிட கேவலமான ஒரு நிலைப்பாடு இருக்க முடியாது.
இன்று காலை எனது யோகா வகுப்பில் என்னைத் தவிர மற்றயவர்கள் யாவரும்(சிலர் மௌனம் மூலம் ஆமோதித்தனர்) இதே மனநிலையைக் கொண்டிருந்தது எனக்கு ரொம்பவும் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், கவலையும் ஏற்படுத்தியிருந்து. அதுவும் இதில் அனேகர் தமது 50 களை கடந்தவர்கள். பிள்ளை குட்டிகளைக் கண்டு தற்போது வசதி வாய்புகளுடன் வாழும் மத்தியதர மேற்தட்டு வர்க்கத்தினர். ஓரளவிற்கு அறிவியல்? சமூகத்தினர். தமது கருத்திற்கு வலு சேர்க்க 'ராஜபக்ஷ" கதைகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.
சீன மக்களோ, சீன தேசமோ, ஏன் சீன அரசோ இந்த நோய் துன்பங்களை, மரணங்களை தாமாக தமக்குள் வரிந்து கட்டிக் கொண்டு மகிழ்ந்திருப்பவர்கள் அல்ல. அல்லது இதன் ஊற்றுவாயை வேணும் என்றே தமக்குள் உருவாக்கியவர்கள் அல்ல.
மாறாக இன்று உலகெங்கும் தமது விடாப்பிடியான உழைப்பால் பல பொருட்களையும் உற்பத்தி செய்து விநியோகம் செய்பவர்கள். அது உணவுப் பண்டங்களில் இருந்து உயர் தொழில் நுட்பக் கருவிகள் வரை. மாறாக பொருளாதார அழிவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும் மேற்குலகு போல் பிளாஸ்ரிக் அரிசியை ஏற்றுமதி செய்பவர்கள் அல்ல.