மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலைய நிர்வாகத்தினர் கடந்த 04/05/2024 சனிக்கிழமை சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வாக கவி அரங்கமும், கதை கூறலும் எனும் நிகழ்வினை ஒழுங்கு செய்து நடாத்தி இருந்தனர். அன்றைய நாள் மாலை நான்கு மணிக்கு மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் இயங்கும் கொலிற்றன் அரசுப்பள்ளி மண்டபத்தில் இந்நிகழ்வு தொடங்கியது. பள்ளியின் நிர்வாக இணை உறுப்பினர் சிங்கநாயகம் சிவசங்கர், மற்றும் ஆசிரியர் செல்வராஜி இரங்கநாதன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கவிபாடல், கதை கூறல் என்பவற்றுடன் தலைவர் உரை, அதிபர் உரை, கருத்துரை, நன்றியுரை என்பனவும் இடம்பெற்றன. நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
மாணவர்களின் கற்றல் மட்டுமன்றி, கற்றவற்றைப் பயிற்சியும் செய்ய வேண்டும். தமிழர் பழக்கவழக்கங்கள், கொண்டாட்ட நிகழ்வுகள் என்பவற்றை அறியவேண்டும் என்பதற்காக பொங்கல், குடும்ப குதுகல நாள், பேச்சுப்போட்டி, வாணிவிழா, புத்தாண்டு சிறப்பு நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளை செய்வது மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் வழமை. அந்தவகையில் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வும் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக உபதலைவர் கௌரீஸ்வரன் கந்தசாமி தொடக்க நிகழ்வுகளை நடத்திச் சென்றார். மங்கள விளக்கேற்றல், அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களின் மண்ணுக்காக உயிர் ஈந்த மக்களுக்கான அகவணக்கம் செலுத்தி உரைகள் தொடங்கின.