தீபாவளி நல்வாழ்த்துகள்








நான் ரசித்த மானி இன்னிசை மாலை2019 - செ .பாஸ்கரன்

.



மானிப்பாய் மகளிர் மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளையினரின் வருடாந்த நிகழ்வான மானி இன்னிசை மாலை 2019  சனிக்கிழமை 26.10.2019 இரவு Bowman மண்டபத்தில் சரியான நேரத்திற்கு ஆரம்பமானது. நிகழ்ச்சியை   இளம் அறிவிப்பாளர் சிவாஞ்சலி ரட்ணசீலன் மிக அழகாக ஆரம்பித்துவைத்தார் .

இந்து கிறிஸ்துவ மத பாடல்களும் தேசிய கீதம் கல்லூரிக் கீதங்கள் பாடப்பட்டு மங்கல  விளக்கேற்றப்  பட்டது. தொடர்ந்து திரு  கிருஸ்னானந்தன் தலைமை உரையை சுருக்கமாகவும் அழகாகவும் ஆற்றினார். சிறப்புரையை பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த Janaki    perairavar  அழகாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்தார்.

அதனைத்தொடர்ந்து Dr. ராஜலிங்கம் ராஜயோகன் நெறிப்படுத்திய பாடல் போட்டி நிகழ்வு மிககவும் நேர்த்தியாக இடம் பெற்றது. நான்கு பிரிவுகளாக இந்தப் பாடல் போட்டிகள் இடம்பெற்றது. அத்தனை போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பாடி சபையினரின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். இந்த பாடல் போட்டி  நிகழ்வுகளை சிட்னியின் சிறந்த அறிவிப்பாளரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஒலிபரப்பாளருமான திரு A J ஜெயச்சந்திரா மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கியது சபையினரை கவர்ந்திருந்தது.



ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டிநிற்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா


 தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !

புத்தாடை  உடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
பெற்றவரைப் பெரியவரை பெரும்பேறாய் போற்றிடுவோம்
கற்றுணர்ந்து நாமிருக்க காரணமாய் ஆகிநிற்கும்
நற்றவத்து ஆசான்கள் பொற்பதத்தைப் பணிந்திடுவோம்
குற்றங்குறை சொலுமியல்பை கொடுந்தீயால் எரித்திடுவோம்
குதர்க்கமிடும் குணமதனை குழிதோண்டிப் புதைத்திடுவோம்
சொற்களிலே சுவையிருத்தி சுகம்பெறவே வாழ்த்திடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடுமே அனைவருக்கும் !

செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்

26/10/2019 ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வதும் வேட்­பா­ளர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்­றி­பெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். இத்­தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உள்­ளிட்ட ஏனைய சில வேட்­பா­ளர்­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­விற்கும் பூரண ஆத­ர­வினை தெரி­வித்­துள்­ளன என்­பதும் தெரிந்த விட­ய­மாகும். இக்­கட்­சிகள் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி வேட்­பாளர் களிடம் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றன. இது ஒரு­பு­ற­மி­ருக்க பிர­தான கட்­சிகள் மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கருதி தன்­ன­கத்தே எத்­த­கைய கொள்­கை­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது குறித்தும் நாம் ஆழ­மாகக் கவனம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. மேலும் கட்­சி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்றித் தரு­வ­தாகக் கூறும் வேட்­பா­ளர்கள் தேர்தல் வெற்­றியின் பின்னர் எவ்­வாறு நடந்­து­கொள்­ளப்­போ­கின்­றார்கள்? வாக்­கு­று­திகள் செயல்­வ­டிவம் பெறுமா? அல்­லது காற்றில் பறக்­க­வி­டப்­ப­டுமா? என்ற நியா­ய­மான சந்­தே­கத்­தி­னையும் பலர் எழுப்பி இருக்­கின்­றனர். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்!

.


ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 67வது வயதில் இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கேஸ்வரி அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர் 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளீர்க்கப்படாமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வெற்றிக்கு வித்திடும் பௌத்த மேலாதிக்கம்

இலங்­கையின் எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் மூன்று முக்­கிய விட­யங்­களில் சுற்றிச் சுழல்­கின்­றது.  இரா­ணுவ நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­திய தேசிய பாது­காப்பு, பொரு­ளா­தார மேம்­பாடு, சிறு­பான்மை இன மக்­களின் தேவைகள், கோரிக்­கைகள் புறக்­க­ணிப்பு என்ற மூன்று  விட­யங்­க­ளுக்­கான பரப்­பு­ரைகள் தீவி­ர­மாக முடுக்­கி­வி­டப் ­பட்­டி­ருக்­கின்­றன.
ஜனா­தி­பதி தேர்தல் என்­பது மிக முக்­கி­ய­மா­னது. நாட்டின் அதி­உயர் அரச தலை­வ­ர் ஜனா­தி­ப­தியை நாட்டின் அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைந்து நேரடி வாக்­க­ளிப்பு மூலம் தெரிவு செய்­வது. இவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் கட்சி அர­சியல் நலன்­க­ளுக்கு அப்பால் தேசிய அளவில் பொது­வா­ன­வ­ராக அனைத்து மக்­க­ளி­னதும் நலன்­களைப் பேணி பாது­காப்­ப­வ­ராகச் செயற்­பட வேண்டும்.

மழைக்காற்று - தொடர்கதை ( அங்கம் – 07 ) - முருகபூபதி



அந்த வீட்டுக்கு வந்து ஒருவாரத்தில், அங்கிருப்பவர்களின் இயல்புகளை அபிதா ஓரளவு புரிந்துகொண்டாள். அவர்களின் உணவு மீதான ருசிபேதம்தான் முதலில் அவளால் புரிந்துகொள்ளப்பட்டது.
இவர்கள் பசிக்கு சாப்பிடுகிறார்களா..? அல்லது ருசிக்கு சாப்பிடுகிறார்களா…? என்பதைத்தான் அவளால் புரிந்துகொள்ளமுடியாமலிருந்தது.  ஒருவருடன் ஒருவர் பேசுவதும் குறைவு. எதற்கும்  “ அபிதா… அபிதா…. “ என்ற குரல்தான் அவர்கள் நால்வரிடமிருந்தும் வெளிப்படுகிறது. அவர்கள் சம்பந்தமான தேவைகளுக்கு தன்னை கருவியாகவும் பாலமாகவும் பாவிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருந்தாள்.
அனைவரும் வீட்டிலிருக்கும் நாட்கள் வார இறுதியில்தான் வரும். அந்நாட்களில் அவர்கள் துயில் எழுவதற்கும் தாமதமாகும். கற்பகம் ரீச்சர் மாத்திரம் சனிக்கிழமைகளில் அபிதா எழுந்துவிடும் நேரத்தில் துயிலை  களைத்துவிடுவாள்.
வார நாட்களில்,  அருகிலிருக்கும் பாடசாலைக்கு பிந்திச்சென்று  முந்தியே வீட்டுக்கு திரும்பிவிடும் கற்பகம் ரீச்சர், ஒருநாள் தனது கதையை  அபிதாவிடம் சொன்னாள். அந்தக்கதையை கேட்டபின்னர் அபிதாவுக்கு கற்பகம் ரீச்சரின் மீது அனுதாபம் தோன்றியது.
குடும்பத்தில் ஒரே மகள். சொந்த மச்சானையே திருமணம் செய்யவேண்டும் என்ற வற்புறுத்தலினால், ஜெர்மனியிலிருந்த ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு சென்றவள். அங்கு சென்றபின்னர்தான் அவளுக்கு அவன் பற்றி பல தகவல்கள் கிடைத்தன.
ஏற்கனவே ஒரு ஜெர்மன்காரியுடன் Living together ஆக வாழ்ந்துகொண்டிருப்பவன்.  அது தெரியாமல் கழுத்தை நீட்டியிருக்கும் கற்பகம் ரீச்சர், ஜெர்மன் டோட்மன்டிற்குச் சென்று ஒரு மாதத்திற்குள்  அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு, நாடு திரும்பியவள்.
அவளுக்கு தரப்பட்ட சீதன வீட்டில் இப்போது இருப்பது அவனது தங்கைக்காரி. மூன்று மாத சம்பளமற்ற லீவில் சென்று  மீண்டமையால்   வாழ்வாதாரத்திற்கு ஆசிரியப்பணியாவது எஞ்சியிருக்கிறது.
 “ ஏன் வந்துவிட்டீர்கள்…?  “ என்று கேட்டவர்களுக்கு ஜெர்மனியின் குளிரையும் அங்கு கொட்டும் பனியையும் காரணமாகச்சொன்னவள் கற்பகம் ரீச்சர்.

வாழ்வை எழுதுதல் 01 பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும் வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை! - முருகபூபதி



அவரை  முதல் முதலில் நான் சந்தித்த இடம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி.  அங்கு நான் கற்றவேளையில்  அதன்  பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரி என மாற்றம் கண்டது.

நீர்கொழும்பிலிருந்து ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று அக்கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து  படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் விடுதியின் சார்பில் அவரை அழைத்து,   கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேடையேற்றி பேசவைத்தார்கள்.
ஒரு துவிச்சக்கர வண்டியில் வந்து பேசினார்.  வெள்ளை நிறத்தில் வேட்டியும் நேஷனலும் அணிந்திருந்தார். எனக்கு யாழ்ப்பாணம் அப்போது புதியது. அங்குதான் முதல் முதலில் அவரையும் பனைமரத்தையும் பார்த்தேன்.
எனக்குத் தெரியாத சங்கானை சாதிக்கலவரம் பற்றியும் ஆப்ரகாம் லிங்கன் பற்றியும் அவர் அன்று பேசியது மாத்திரமே இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது.
அந்த வருடம் 1963.
அவர் அன்றுசொன்ன சாதிவேற்றுமை சமூக ஏற்றத்தாழ்வு என்பன பற்றிய புரிதல் அக்காலத்திலேயே அந்தக்கல்லூரி அமைந்திருந்த அரியாலைப்பிரதேசத்தில் நேரடியாக எனக்கு  கிட்டியது.  எந்தவொரு  சொந்த பந்தங்களும் இல்லாதிருந்த அந்தப்பிரதேச வாழ்க்கை எனக்கு,   எனது பூர்வீக ஊர்மீதும் வீட்டின் மீதும் ஏக்கத்தையே வளர்த்தது. என்னுடன் படித்த எனது மாமா மகன் முருகானந்தனுக்கும் தனது குடும்பத்தை விட்டு வந்த ஏக்கமிருந்தது. 1965 இல் அங்கிருந்து விடைபெற்று ஒரு நாள் இரவு புறப்படும் தபால் ரயிலில் கொழும்பு வந்து எங்கள் ஊர் திரும்பிவிட்டோம்.
அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டுவரையில் யாழ்ப்பாணத்தையே நான் திரும்பிப்பார்க்கவில்லை. சுமார் பத்தாண்டுகளின் பின்னர் என்னை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் அவர்.
ஒரு மாணவனாக  அங்கு சென்று திரும்பிய என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாக மாற்றி  மீண்டும்  அங்கு அழைத்து எனது முதல் கதைத்தொகுதிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அறிமுகநிகழ்வு நடத்தி பாராட்டியவர்தான் அவர்.
எனது வாழ்வின் திருப்பங்களுக்கு பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்தான் அவர். 1971 ஆம் ஆண்டு வேலை தேடும் படலத்திலிருந்தவேளையில் அவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் வீட்டில் அவரை மீண்டும் சந்தித்தேன். அப்பொழுதும் அவர் தூய வெள்ளைவேட்டி, வெள்ளை நெஷனல்தான் அணிந்திருந்தார். அவர் பெரும்பாலும் விரும்பி அணிந்த ஆடைகள்தான் அவை. எவருக்கும் அவர் அந்த ஆடையுடன் தோன்றியதுதான் நினைவிலிருக்கும்.
1971 ஆம் ஆண்டு மீண்டும் அவரை நான் சந்தித்தபோது அவர் மல்லிகை மாத இதழின் ஆசிரியராகியிருந்தார்.  அதனை அவர் 1966  இல் ஆரம்பித்தவர்.  நான் மல்லிகையின்  வாசகனாக மாறியிருந்தேன். நீர்கொழும்பு கடற்கரையில் அவருடன் நீண்டநேரம் இலக்கியம் பேசியிருக்கின்றோம். அவ்வாறு பேசியபொழுதொன்றில்தான் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச மலர் பற்றிய யோசனை வந்தது.  1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அந்த மலர் வெளிவந்தது.

முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஈழத்து இலக்கியச்சிற்றிதழ்களில் பாரதியின் தாக்கம் எத்தகையது…?


 ( கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் சமர்ப்பித்த மதிப்பீட்டுரை)
(  கடந்த வாரத் தொடர்ச்சி )

இலங்கை வடபுலத்திலிருந்து  2007 ஓகஸ்ட் மாதம் முதல் ஜீவநதி கலை இலக்கிய இதழ்,  அல்வாயில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியர் கலாமணி  பரணிதரன்.    ஜீவநதியும் பாரதி தொடர்பான ஆய்வு களுக்குக் களம் வழங்கியிருக்கிறது.    கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்     பாரதியை   இதில்  விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.   1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை|   என்னும் ஆய்வு   குறிப்பிடத்தக்கது. பாரதி தன்னால்      இயற்றப்பட்ட     கவிதைகளால்     தமிழுக்கு    புதிய வளம்  சேர்ந்ததென   அவர்  கூறியுள்ளர்.   இவ்வாறு பாரதியைப் போன்று    ஈழத்திலும்     கவிஞர்கள்    தன்னம்பிக்கையுடன் எழுதவேண்டும்      என்பதே     அம்மன்கிளி முருகதாஸின்     எண்ணம்     என்பதையும்     ஜீவநதியில்    வெளியான    ஆக்கம்  கூறி நிற்கின்றது.
பாரதியின்    கவிதை    வரிகளை    தாரக மந்திரமாகக் கொண்டும் சில    இதழ்கள்    இலங்கையில்     வெளிவந்துள்ளன.
  ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய   கலைகளில்   உள்ளம்
ஈடுபட்டென்றும்   நடப்பவர் பிறர்
ஈன   நிலைகண்டு   துள்ளுவார். 
என்ற வரிகளைத் தாங்கிவந்த மல்லிகை இதழின் ஆசிரியர்  டொமினிக் ஜீவா,   1966 ஆண்டிலிருந்து  நீண்டகாலம்   அதனை வெளியிட்டு,  சாதனை படைத்தவர்.   1966  முதல் மல்லிகையில் பாரதியியல்    ஆக்கங்கள்    ஏராளமாக    வெளிவந்துள்ளன. இலங்கைப்  படைப்பாளிகள் மட்டுமல்ல,    தமிழகத்தவர்களும் அடிக்கடி பாரதிபற்றி  மல்லிகையில்  எழுதியுள்ளார்கள்.  சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வு|   என்ற கட்டுரையை மல்லிகையில் பேராசிரியர் கைலாசபதி, பாரதி நூற்றாண்டு காலத்தில் எழுதியிருந்தார்.     பேராசிரியர் கைலாசபதி,   மல்லிகையில் எழுதிய இலங்கை கண்ட பாரதி    என்ற கட்டுரையை தமிழ் நாட்டின் தாமரை    இதழ்    மறுபிரசுரம்   செய்தது.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,    ப. ஜீவானந்தத்தின் கொள்கைகளால்    ஆகர்ஷிக்கப்பட்டு     டொமினிக்  என்ற    தனது பெயருடன்   ஜீவா என்ற பெயரையும்    இணைத்துக் கொண்டவர் இந்த ப.ஜீவானந்தம்   பாரதியில்    தோய்ந்தவர்.    பாரதியைப் பரப்பியவர்.     அவரது உரை மற்றும் கட்டுரைகள்     ‘பாரதி வழி’ என்ற    நூலாக    வெளிவந்தது. 1958    ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டி   ‘ஜனசக்தி’ யில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
 ‘பாரதியின் தத்துவ ஞானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.    1950 களில்    இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது,    ப. ஜீவானந்தம்     இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்தார்.     இலங்கையில்   கண்டியில் கே. கணேஷ்   அவர்களது     இல்லத்தில்    தங்கியிருந்தவர் . அக்காலகட்டத்தில்     மலையகத்திலும்     பலகூட்டங்களில்    கலந்து கொண்டவர்.      அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்திலும்    பல கூட்டங்களில்   கலந்து    கொண்டவர்.    பாரதியின் கருத்துக்களைப்   பரப்பியவர். 
   வெள்ளத்தின்   பெருக்கைப்போல்
கலைப் பெருக்கும்   கவிப்பெருக்கும்   மேவுமாயின்
பள்ளத்தில்    வீழ்ந்திருக்கும்    குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்  "

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) அவுஸ்திரேலியா

இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
இலங்கையில்  நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட  தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு,   1988  ஆம் ஆண்டு முதல்  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  முப்பத்தியோராவது ஆண்டு  நிறைவு நிகழ்வும்,  வருடாந்த பொதுக்கூட்டமும்  கடந்த  19 ஆம் திகதி ( 19-10-2019)  சனிக்கிழமை மாலை  மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில்  நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின்  தலைமையில் நடைபெற்றது.

இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின் ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின்  செயற்பாடுகள் தொடர்பான காணோளிக்காட்சியும்  மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும் இடம்பெற்ற  இந்நிகழ்வில் 2019 – 2020 ஆண்டறிக்கை மற்றும் நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கை மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டிலும் குடும்பத்தின்  மூல உழைப்பாளியை இழந்தும் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவ முன்வந்திருப்பது குறித்தும் இக்கூட்டத்தில்   கலந்துரையாடப்பட்டது.

இலங்கைச் செய்திகள்


ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை

இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை

எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி உருக்க உரை- வீடியோ இணைப்பு

முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு




உலகச் செய்திகள்


முகநூலில் முஸ்லீம்களை அவமதிக்கும் பதிவு – பங்களாதேசில் வன்முறை

19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்

பிறிக்ஸிட் உடன்­ப­டிக்கை குறித்து மீண்டும் வாக்­கெ­டுப்பை நடத்த வலி­யு­றுத்தல்

மீண்டும் கனடாவின் பிரதமராகின்றார் ஜஸ்டின் ட்ரூடோ

39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி

பெல்ஜியத்திலிருந்து வந்த குளிரூட்டப்பட்ட கொள்கலன்- பிரிட்டனில் அதனை பொறுப்பேற்ற லொறி சாரதி- உள்ளே உடல்கள் தொடர்கின்றது மர்மம்

பிரிட்டனில் கொள்கலனிற்குள் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சீன பிரஜைகள்?

எங்கள் மகள் பிரித்தானியா செல்வார் எங்கள் வறுமை மாறும் என நினைத்தோம்- கொள்கலனிற்குள் சிக்கினார் என கருதப்படும் யுவதியின்தந்தை

என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம்

முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து


பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 17


சிவந்தமண்

1969ம் ஆண்டு பொருட்செலவுடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று சித்ராலயாவின் சிவந்தமண்.  பிரபல கதாசிரியரும் டைரக்டருமான ஸ்ரீதர் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 69ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளிவந்தது.

இந்தப்படம் உருவாவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இதே கதையை எம்.ஜி.ஆரின் நடிப்பில் அன்று சிந்தியரத்தம் என்ற பெயரில் கறுப்பு வெள்ளைப் படமாக ஸ்ரீதர் தயாரிக்கத் தொடங்கினார். இதே காலகட்டத்தில் புதுமுக நடிகர்களை போட்டு கலரில் காதலிக்க நேரமில்லை படத்தையும் ஸ்ரீதர் உருவாக்கினார். 

தன் படத்தை கறுப்பு வெள்ளையாகவும் புதுமுக நடிகர்களின் படத்தை கலரிலும் ஸ்ரீதர் உருவாக்குவது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை.  இதன் விளைவு அன்று சிந்தியரத்தம் படத்தில் நடிப்பதில் இருந்து எம்.ஜி.ஆர் ஒதுங்கிக் கொண்டார்.  அத்துடன் அப்படத்தின் தயாரிப்பும் நின்று போய்விட்டது.

இது நடந்து நான்காண்டுகள் கழித்து இதே கதையை மீண்டும் வண்ணப்படமாக ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்யத் தொடங்கினார்.  கதாநாயகனாக சிவாஜி ஒப்பந்தமானார். கதாநாயகியாக காதலிக்க நேரமில்லை புகழ் காஞ்சனா தெரிவானார். இவர்களுடன் நம்பியார், நாகேஷ் சாந்தகுமாரி, ரங்கராவ், ஜாவர் சீதா ராமன், சச்சு, முத்துராமன், என்று பலர் நடித்தார்கள்.
படத்திற்கு சிவந்தமண் என்று பெயரிடப்பட்டது.  நிறைய பொருட்செலவில் எடுப்பதினால் படத்தை வெளிநாடுகளிலும் படமாக்குவதற்கு ஸ்ரீதர் தீர்மானித்தார்.
அந்த வகையில் பாரிஸ், ரோம், லண்டன், ஆரிச் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நகரங்களில் படமெடுப்பது என தீர்மானமானது.  அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக குறைந்த கலைஞர்களுடனேயே இந்த நாடுகளுக்கு ஸ்ரீதர் பயணமானார்.  

சிவாஜி மிகக்குறைந்த மேக்அப்புடனேயே வெளிநாட்டில் படமான காட்சிகளில் தோன்றினார். சிவாஜி காஞ்சனா இருவரையும் தவிர ஏனைய நடிகர்கள் அனைவரும் இந்தியாவிலேயே ஸ்டுடியோவில் நடித்தார்கள்.

வசந்தபுரி அரசை வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் சதி செய்து கைப்பற்றிக் கொள்ள சர்வாதிகாரியான திவான் திட்டமிடுகிறான். அதற்காக சமஸ்தானத்தின் அரசரை காவலில் வைக்கிறார். இளவரசியையும் திருமணம் செய்ய முனைகிறான். தன்னை எதிர்க்கும் புரட்சியாளர்களை கேள்வி முறையின்றி கொன்று குவிக்கிறான். இதனை எதிர்த்து போராடும் பாரத்திற்கு இளவரசியும் உறுதுணையாகநிற்கிறாள்.  புரட்சியாளர்களுக்கும் சர்வாதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டமே படம்!

சர்வாதியாக வில்லன் நம்பியார் நடித்திருந்தார் என்பதை விட பாத்திரமாகவே மாறியிருந்தார்.

புரட்சியாளராக சில காட்சிகளில் தோன்றும் முத்துராமன் ரசிகர்கள் மனதில் நிறைந்தார்.  காஞ்சனா நடிப்பையும் கவர்ச்சியையும் இணைந்து வழங்கியிருந்தார். நாகேஷீம் சச்சுவும் நகைச்சுவைக்கு பஞ்சம் வைக்கவில்லை.  பொலிஸ் தலைமை அதிகாரியாக வரும் ரங்கராவின் மிடுக்கான தோற்றம் மனதில் நிற்கிறது. ஜாவர் சீதாராமன் நிறைவாக செய்திருந்தார்.  பட டைரக்டரான தாதாமிராஸி வெளிநாட்டு பிரதிநிதியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.


ஓளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் கைவண்ணம் படம் முழுதும் வியாப்பித்திருந்தது.  பம்பாயில் இருந்து வந்த சாந்திதாஸ் படத்திற்கான பிரம்மாண்டமாக அரங்குகளை அமைத்திருந்தார். அன்றும் இன்றும் மறக்கமுடியாத இசையை படத்திற்கு அள்ளி வழங்கியிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒரு ராஜா ராணியிடம், பார்வை யுவராணி பொன்ரோவியம், பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ஒரு நாளிலே உருவானதே போன்ற பாடல்கள் கண்ணதாசனின் கவிவரிகளில் மிளிர்கின்றன.

சிவாஜியின் சாட்டையடிக்கு ஏற்ப காஞ்சனா ஆடும் பட்டத்துராணி பாடல் அதற்கான காட்சி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலினிமை எல்லாம் ரசிகர்களை பரவசமாக்கின. இந்தப் பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி. 120 வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தார். கர்நாடக மேற்கத்திய, அரபிய இசை என பலவித இசையை விஸ்வநாதன் இப்படத்திற்கு வழங்கியிருந்தார்.

படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் எம்.ஜி.ஆரின் ஸ்டன்ட் மாஸ்டர் சியாம்சுந்தர். புரட்சித் தலைவராக படத்தில் நடித்த சிவாஜி வசனங்களில் மட்டுமன்றி முகபாவங்களினாலும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார்.  ஸ்ரீதரைப் பொறுத்த வரை சிவந்தமண் அவருடைய திரையுலக பயணத்தில ஒரு தடமாகும்!

50 ஆண்டுகளுக்கு முன் இப்படம் திரையிடப்பட்ட போது இலங்கை தமிழ் ரசிகர்கள் ஐரோப்பிய நாடுகளை படத்தில் பிரமிப்புடன் பார்த்து பார்த்து ரசித்தார்கள்.  சில ஆண்டுகளில் யுத்தம் தீவிரவாதம் காரணமாக இலங்கை சிவந்தமண் ஆனது. அதனைத் தொடர்ந்து இலட்சக் கணக்கான தமிழர்கள் லண்டன் சூரிச் பாரிஸ் என்று புலம் பெயர்ந்தார்கள். சிவந்தமண் படத்தில் பார்த்த இடங்களை நேரில் பார்த்து அங்கு வாழ்கிறார்கள்.  ஆனாலும் ஒரு காலத்தில் ஊரில் பார்த்த படமும் அனுபவமும் மறக்குமா!














தமிழ் சினிமா - பிகில் திரை விமர்சனம்


Bigil (2019)
தளபதி விஜய் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என  மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

மைக்கல் விஜய் தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.
அப்படியிருக்க அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார்.
அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக சொல்கிறார்.
ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய்..விஜய்..விஜய் மட்டும் தான், அவர் ஒருவரை நம்பி தான் படம் என்றாலும், இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் மட்டுமே தான் முழுப்படத்தையும் தோளில் சுமக்கின்றார். ஆட்டம், பாட்டம் என்று ஜாலியாகவும் சரி, தன் புல்லிங்கோ முன்னேற வேண்டும் என்று கத்தியை எடுத்த ராயப்பனாகவும் சரி தொட்டதெல்லாம் கோல் தான்.
ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும். ஏனெனில் விஜய்க்கு வயதான கதாபாத்திரம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை, அதிலும் நயன்தாரா அவரை அப்பா என்று கூப்பிடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது, சிங்கப்பெண்ணே பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் படமாக பார்க்கும் போது அங்கும் இங்கும் எமோஷ்னல் ஒர்க் ஆகியுள்ளதே தவிர படம் முழுவதும் ஒரு நிறைவு இல்லை.
அதிலும் படத்தின் முதல் பாதி ஒரு கட்டத்தில் பொறுமையை சோதித்து அட புட்பால் மேட்சுக்கு போங்கப்பா என்று சொல்ல வைக்கின்றது. அதே நேரத்தில் மேட்ச் வரும்போது எட்ஜ் ஆப் தி சீட் வருவோம் என்று பார்த்தால் மாற்றி மாற்றி கோல் அடிக்கிறார்களே தவிர நமக்கு எந்த ஒரு ஆர்வமும் வரவில்லை, இதற்கு சக்தே இந்தியாவும் ஒரு காரணம்.
படத்தில் தன்னை கோச்சாக ஏற்றுக்கொள்ள விஜய் போடும் போட்டி, ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள், கிளைமேக்ஸில் தன் அணியை திட்டி வெறுப்பேற்றுவது, அதிலும் அந்த குண்டம்மா விஷயம் என இரண்டாம் பாதி முழுவதும் கைத்தட்டலுக்கு குறைவில்லாத காட்சிகள். இவை முதல் பாதியிலும் இருந்திருக்கலாம்.
மேலும் விஜய் காமெடி செய்யும் போது சென்னை ஸ்லாங்கில் பேசுவது, சீரியஸாக பேசும் போது நார்மல் தமிழில் பேசுகிறார். புல்லிங்கோவை கௌரவப்படுத்துகிறோம் என்று தொடர்ந்து தமிழ் சினிமா கிண்டல் மட்டுமே செய்து வருகின்றது.
படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை மாஸுக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் எமோஷ்னல் காட்சிக்கு சூப்பர். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, அவை தான் விஜய் ரசிகர்களுக்கான படம்.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.
டீசரில் மோசமாக தெரிந்த சிஜி காட்சி திரையில் நன்றாகவே உள்ளது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி, ராயப்பன் கதாப்பாத்திரம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
கதிர், நயன்தாரா, ஆனந்த் ராஜ் என பல நட்சத்திரங்கள் எதற்கு என்றே தெரியவில்லை.
போட்டிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் தெறி, மெர்சலை ஒப்பிடுகையில் பிகில் சத்தம் கொஞ்சம் குறைவு தான். நன்றி CineUlagam