“ பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் !
“
இது இற்றைக்கு நூறு வருடங்களுக்கு
முன்னர் மறைந்தாலும் இறவாப்புகழுடன் வாழும்
மகாகவி பாரதி, தான் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தில், அவளது துகிலுறியும் படலம் வரும்போது
எழுதப்பட்ட அர்த்தமுள்ள வரிகள்.
இன்றும் இந்த வரிகள்
பொருந்தத்தக்கதாக பேய் அரசுகள் இயங்குகின்றன.
அதிகாரத்திலிருப்பவர்கள்
சொற்படிதான் சட்ட அறிஞர்களும் நீதித்துறையும் நடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
இலங்கை தள்ளப்பட்டுவிட்டது.
மரண தண்டனைக் கைதிகளுக்கு
பொது மன்னிப்பு.
நீதிமன்றத்தால் குற்றவாளியாகக்
காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தவரை மீட்டு, பொது மன்னிப்பு
வழங்கி , சிறை மீண்ட செம்மலாக குறிப்பிட்ட
நபர் வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமனமாகியுள்ளார்.
தென்மராட்சியில் சில மனித
உயிர்களை கொன்றழித்து மலசலகூடக்குழியில் போட்டு மூடி வெளியுலகத்தின் கண்களை மறைத்த இராணுவ அதிகாரியை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தியபோதும்,
மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட
நபரும் சமகால குடும்ப ஆட்சியில் பொது மன்னிப்பில் வெளியே வந்துவிட்டார்.
அவருக்கும் நிறுத்திவைக்கப்பட்ட
அரசகொடுப்பனவுகள் அனைத்தும் கிடைத்திருக்கும் !.
அதே சமயம் பல அப்பாவித்தமிழ்
– சிங்கள – முஸ்லிம் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சிறைச்சாலைகள்
மறு சீரமைப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் மதுபோதையில் தனது சகாக்களையும்
அழைத்துக்கொண்டு இரண்டு சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து தனது கைத்துப்பாக்கியை
காண்பித்து தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து வெருட்டியிருக்கிறார்.
சிறைக்காவலர்கள் தடுத்தமையால்,
அங்கு துப்பாக்கிப்பிரயோகம் நடக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தாலும், இலங்கை அதிபர்
அந்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பார்.
ஏற்கனவே இரண்டு முக்கிய
நபர்கள் கொலைக்குற்றத்தின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்து, சமகால அதிபரினால்
பொது மன்னிப்பின் கீழ் வெளியே வந்து அனைத்து செளகரியங்களையும் அனுபவித்துவருகின்றனர்.