உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) இறுதிச் சுற்றில் கென்யா நாட்டு ஆசிரியர் Peter Tabichi முதல் பரிசு வென்றார்
.
உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) இறுதிச் சுற்றில் கென்யா நாட்டு ஆசிரியர் Peter Tabichi முதல் பரிசு வென்றார்
Peter Tabichi என்ற 36 வயதுடைய கணித மற்றும் பெளதீகவியல் ஆசிரியர் 2019 ஆம் ஆண்டுகான Global Teacher Prize விருதையும், 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசையும் நேற்று துபாயில் நிகழ்ந்த இறுதிச் சுற்று நிகழ்வின் வழியாகப் பெற்றிருக்கிறார்.
இவர் Keriko secondary school என்ற பாடசாலையில் கற்பித்து வருபவர்.இது கென்யாவின் Rift Valley என்ற பகுதியிலுள்ள Pwani எனும் மிகவும் பிற்பட்ட கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையாகும். தனது வருமானத்தில் 80 வீதத்தை வாழ்க்கைத் தரம் குன்றிய மாணவர்களின் கல்விச் செலவுக்காகக் கொடுப்பதோடு, இந்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பிரத்தியோக வகுப்புகளையும் நடத்தி வருபவர்.
“நான் இங்கே இருக்கிறேன் என்றால் அது என்னுடைய மாணவர்கள்
சாதித்திருக்கிறார்கள் என்றே அர்த்தப்படுகிறது, இந்தப் பரிசு வழியாக
அவர்களுக்குத் தான் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது, அவர்கள் எதையும்
சாதித்துக் காட்டலாம் என்றே கூறி நிற்கின்றது”
என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் Peter Tabichi.
ஆசிரியர் திரு Peter Tabichi இன் 95 வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் மிகவும் வறிய குடும்பத்தினர் என்பதோடு மூன்றில் ஒரு பங்கினர் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்தவர்களாகவும், போதைப் பாவனை, பதின்ம வயது கர்ப்பம் தரித்தல், தற்கொலை போன்ற சவால்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே பள்ளிக்கு வருபவர்களாகவும், இந்தப் பகுதிகள் வரட்சியாலும், உணவுத் தட்டுப்பாட்டாலும் மிகவும் பாதிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Varkey Foundation https://www.globalteacherprize.org
கனவது விரியட்டும் (வித்யாசாகர்) கவிதை!
கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..
தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும்
முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும்,
எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும்
திமிராட்டம் ஒடுங்கட்டும் 'எம் தமிழருக்கு இனி விடியட்டும்!
திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும்
எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும்,
கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும்
சிந்திய துளி இரத்திற்கெல்லாம் நீதி கிட்டும் வரைப் இனி போராட்டம்!!
வெண்சங்கு முழங்கட்டும்
தமிழா விழி விழியென யெம் பறை ஒலிக்கட்டும்,
நீதி கேட்டு சொற்கள் அறையட்டும்
நெற்றிப் பொட்டிலும் நேர்மையே தெறிக்கட்டும்!
எத்தனை மார்புகள் வேண்டும் விரியட்டும் விரியட்டும்
அவர்கள் சுடட்டும், நெஞ்சு நிமிர்த்தி நில் தாங்கட்டும்,
ஒரு தமிழச்சி, தமிழ்மண் காக்க
எம்முயிர் வேண்டுமோ; கொண்டு மூடட்டும்!
உங்கள் பத்திரிகை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் …?
தமிழ் சினிமா உள்ளடக்கத்தில் உயர வேண்டும் : இலங்கைப் பத்திரிகையாளர் ச.சுந்தரதாஸ் விருப்பம் தெரிவித்தார்!
தமிழ் சினிமா உள்ளடக்கத்தில் உயர வேண்டும் என்று இலங்கைப் பத்திரிகையாளர் ச.சுந்தரதாஸ் ஆதங்கமாகக் கூறுகிறார்.
இலங்கை தினகரன் நாளிதழ் சினிமா பகுதிஆசிரியராகப் பணியாற்றி புகழ் பெற்றவர் ச.சுந்தரதாஸ் .அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் .
சமீபத்தில் ஒரு இலக்கியவிழாவுக்காகச் சென்னை வந்திருந்தார் .அவரை சந்தித்தபோது !
உங்கள் பத்திரிகை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் …?
நான் முதலில் ‘கதம்பம் ‘என்ற மாத இதழில் எழுதத் தொடங்கினேன் .இந்த இதழ் 1959 முதல் முதல் 1983 வரை வெளிவந்தது. 1975ல் என் முதல் சிறுகதை கதம்பத்தில் வெளியானது .அதன்பிறகு நிறைய இதழ்களில் எழுதினேன்.
தினகரன் நாளிதழில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பகுதி பொறுப்பாசிரியராக இருந்தேன். அப்போது திரையுலகம் சார்ந்து நிறைய செய்திகள் எழுதினேன்.நான் எழுதிய ’சுந்தர் பதில்கள்’ வாசகர்களிடம் பரவலான கவனிப்பைப்பெற்றது. அவ்வப்போது தமிழகம் வந்து படப்பிடிப்புகள் பார்த்து நட்சத்திரங்களைப் பேட்டி கண்டு ஏராளமாக எழுதியிருக்கிறேன். அப்படி ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன். இலங்கையில் 1983-ல் நடந்த கலவரங்களுக்குப் பிறகு நான் ஆஸ்திரேலியா சென்றேன் .அங்கே ஒரு வங்கி சார்ந்த பணியில் இருக்கிறேன் .இணையாக ஒரு பக்கம் எழுத்துப் பணியும் தொடர்கிறது .
நூல் நயப்புரை: சொல்லவேண்டிய கதைகள்: வாசகரின் வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் கதைசொல்லியை இனம் காண்பிக்கும் நூல் பாமினி செல்லத்துரை
‘சொல்ல வேண்டிய கதைகள்’ முருகபூபதி ஐயா அவர்கள்
தனது வாழ்வின் அனுபவங்கள் வாயிலாக நமக்கு சொல்ல நினைக்கும் சில பல நிகழ்வுகளின் தொகுப்பு
எனலாம். அந்நிகழ்வுகளினை தனக்கே உரித்தான நகைச்சுவை மொழிநடையில் புனைவு சாரா இலக்கியமாக
பத்திக் கட்டுரைகளாக பதிவு செய்துள்ளார்.
ஒரு சிற்பி தான் காணும் கற்கள் எல்லாவற்றையும்
மனக்கண்ணில் சிற்பமாகவே காண்கிறான் அதேபோல ஒர் இலக்கியவாதியும் தன் வாழ்வில் சந்திக்கும்
நபர்களையும் நிகழ்வுகளையும் இலக்கியமாகவே காண்கிறார்கள் என்பதனை முருகபூபதி ஐயா அவர்களின்
‘சொல்ல வேண்டிய கதைகள்’ வழியாக நாம் அறிய முடிகின்றது.
இந்நூல் தாங்கி வரும் இருபது பத்திக்கட்டுரைகளும்
இருபது வேறுபட்ட விடயங்கள் பற்றி பேசுகின்றது. நாம் எமது கண்களால் கண்டதும் காணததுமான
பல இடங்கள், பாதைகள், நபர்களிடம் நம்மை அழைத்துச் செல்கிறது. முதலாவது கட்டுரை முத்தாய்ப்பான
கட்டுரை. நம் ஒவ்வொருவரதும் வாழ்வின் முதல் ஆசானும் கடைசி நம்பிக்கையுமான அம்மா பற்றி
பேசுகிறது. என்றுமே தன்னை வழி அனுப்ப விமானநிலையம் வரை வராத தாயார் தனது மறைவுக்கு
முன் தன்னோடு விமான நிலையம் வரக் காரணம் என்ன? இனி மகனை காணும் வாய்ப்பு இல்லை என்ற
உள்ளுணர்வா? என்ற கேள்வியோடு கட்டுரை முடிகிறது. இழப்பின் வலியையும் இலக்கியமாக்கித்
தர இலக்கியவாதிகளாலேயே முடியும்.
அடுத்து ‘குலதெய்வம்’
எனக்கும் முருகபூபதி ஐயா அவர்களுக்கும் ஒரே குலதெய்வம்தான். இதேதடா புதுக்கதை என நீங்கள்
நினைக்கலாம். உண்மைதான் நாங்கள் நடந்து வந்த பாதையில் எங்கள் கஷ்டங்கள் அகல அருள் பாலித்த
அன்னபூரணி அவள். அவள்தான் எங்கள் வீட்டு ஆட்டுக்கல். ஆட்டுக்கல் எப்படி குலதெய்வம்
ஆனது என்பதனை புத்தகத்தை வாசிக்கும் போது நீங்கள் காணலாம். அக்கட்டுரையை வாசிக்கும்
ஒவ்வொரு வாசகருக்கும் தனது வாழ்வின் மிக முக்கியமான நபர் அல்லது பொருள் பற்றிய உணர்வும் நினைவும் வருவது
திண்ணம்.
''செல்போனாலதான் எல்லாப் பிரச்சினையும்; தூக்கிப்போடுங்க!'' - மாணவிகளுக்கு இளையராஜா அட்வைஸ்
''செல்போனாலதான் எல்லாப் பிரச்சினையும் இங்கே நடக்குது. அதைத் தூக்கிப் போடுங்க. நிம்மதியா, நாட்டுக்கே முன்னுதாரணமா இருக்கலாம்'' என்று கல்லூரியில் நடந்த விழாவில் இளையராஜா தெரிவிக்க, மாணவிகள் கரவொலி எழுப்பினர்.
சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, பல பாடல்களைப் பாடினார் இளையராஜா. இடையிடையே மாணவிகள் பல கேள்விகளைக் கேட்டனர். அவற்றுக்குப் பதிலளித்தார்.இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவிகள் நாட்டுப்புற பாடல்களைப் பாடியும் பறையடித்தும் வரவேற்பு அளித்தார்கள்.
அப்போது மாணவி ஒருவர், ''மாணவ மாணவிகளுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன ஐயா?'' என்று கேட்டார்.
உடனே இளையராஜா, ''அட்வைஸ் சொல்றது முக்கியமில்லை. அந்த அட்வைஸை ஏத்துக்கிட்டு அதன்படி நடக்கணும். அதான் முக்கியம். நீங்க எல்லாரும் அந்த அட்வைஸை ஏத்துக்கிட்டு செயல்படுவீங்களான்னு எனக்குத் தெரியலை. அப்புறம் நான் ஏன் அட்வைஸ் சொல்லணும்?'' என்றார் இளையராஜா.
உடனே மாணவிகள் பலரும் ''சொல்லுங்க ஐயா, கேக்கறோம்'' என்றனர்.
அதைக் கேட்ட இளையராஜா, ''உங்க செல்போனை தூக்கிப்போட்ருங்க. இங்கே செல்போனாலதான் பல நிகழ்வுகள், பிரச்சினைகள் வந்துக்கிட்டிருக்கு. செல்போனை மட்டும் தூக்கிப்போட்டுட்டீங்கன்னா, உலகத்துக்கே நீங்கதான் ரோல் மாடல். 'பாருங்கப்பா... தமிழ்நாட்ல மாணவர்கள், இளைஞர்களெல்லாம் செல்போனைப் பயன்படுத்தறதே இல்லியாம்'னு பெருமையாச் சொல்லுவாங்க'' என்றார்.
அதைக் கேட்ட மாணவிகள், ''ஐயா, உங்க பாடல்களை அதுலதானே கேக்கறோம்'' என்றனர். அதைக் கேட்டுச் சிரித்த இளையராஜா, ''பாட்டைக் கேக்கணும். அவ்ளோதானே. அதுக்கு நிறைய வசதிகள் வந்திருச்சு. நிறைய உபகரணங்கள் இருக்கே'' என்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை
இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட
ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத்
தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும் நிதிக்கொடுப்பனவு
மற்றும் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இலங்கையில் இம் மாதம் வடக்கு - கிழக்கு மாகாணங்களில்
நடைபெற்றன.
நீடித்த போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து, காலத்துக்குக்காலம், கல்வி
நிதியத்தின் ஏற்பாட்டில் 2010 ஆம் ஆண்டு
முதல் மேற்குறித்த நிகழ்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் 2010 - 2011 - 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றவாறு இந்த ஆண்டும் ( 2019 ) இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும்
மாணவர்களின் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன.
காலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05. "பனைமரத்துப் பாளையெல்லாம் நில மட்டத்தில் வெளிவந்தால்....!?" சோவியத் விண்வெளிவீரர் யூரிககாரினின் தாய் மொழியை தமிழுக்கு பெயர்த்த தோழர் வி. பொன்னம்பலம் (1930-1994) - முருகபூபதி
" பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால், சாதி பேசும்
உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள்" இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும்
பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார்.
சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர்.
கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான். கொள்கைப்பற்றாளர்.
பதவிகளுக்காக சோரம்போகாதவர். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே
மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர். இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த
ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி
தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள்.
வடபுலத்தில் அளவெட்டி கிராமத்தில் 1930
ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி வல்லிபுரம்
- பொன்னம்மா தம்பதியரின் புதல்வராகப்பிறந்து, அனைவராலும் வி. பி. என அழைக்கப்பட்ட தோழர் வி. பொன்னம்பலம் அவர்கள், 1985 ஆம் ஆண்டின் பிற்கூறில் கனடாவுக்கு
புலம்பெயர்ந்தார்.
தனது அரசியல் ஆசானும் அதிபருமான
ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவரங்க நிகழ்வில் (1994
- மார்ச் 05 ஆம் திகதி) உரையாற்றும்வேளையில், "அனைவரிடமிருந்தும்
விடைபெறுகின்றேன்" எனச்சொல்லி நிரந்தரமாக விடைபெற்றார்.
---------------------------------------------------------------
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவு. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். தொலைபேசி
அழைப்பு வந்து திடுக்கிட்டு விழித்தேன். மறுமுனையில் கனடாவிலிருந்து மறைந்த தோழர்
வி.பொன்னம்பலத்தின் மகன் நமுனகுலன்.
தோழர் வி.பி. யின் மறைவுச்செய்தி அறிந்து யார் மூலம் அனுதாபம் சொல்வது
எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, நமுனகுலனின் அழைப்பு
சிலிர்ப்பைத்தந்தது.
“அப்பாவின் நினைவாக ஒரு மலரைத்தயாரிக்கின்றோம். நீங்களும் ஒரு கட்டுரை
தரவேண்டும்.” என்றார்.
தெணியானின் தம்பி நவம் எனது தொலைபேசி இலக்கம் தந்ததாகவும் சொன்னார். எனது
கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து கட்டுரை அனுப்புவதாகச் சொன்னேன். எங்கள்
வீட்டுக்கு கணினி உறவினராகாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. மறுநாளே கட்டுரையை
தபாலில் அனுப்பிவிட்டேன்.
மற்றுமொரு நாள் மாலைவேளையில் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
சென்று பார்த்தேன். தபால்சேவகர் ஒரு பெரிய பார்சலை தந்துவிட்டுப்போனார். திறந்து
பார்த்தேன். பொன் மலர் பிரதிகள்.
சுமார் ஐம்பது இருக்கும்.
புலம்பெயர் வாழ்வில் என்னை விந்தையில் ஆழ்த்திய சம்பவமாக அந்தப் பிரதிகள்
தாமதமின்றி எனக்குக்கிட்டியதைக்குறிப்பிடலாம்.
குழம்பி நாம் நிற்கலாமா ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
வறுமையில் வாழும் போதும்
வாய்மையை மனதில் கொண்டு
நெறியொடு வாழ்வோ மாயின்
நிம்மதி வந்தே சேரும்
அறிவொடு நடந்து கொள்வோம்
அனைவர்க்கும் உதவி நிற்போம்
பெருமைகள் வந்தே சேரும்
பிறந்ததில் மகிழ்ச்சி கொள்வோம்
வாய்மையை மனதில் கொண்டு
நெறியொடு வாழ்வோ மாயின்
நிம்மதி வந்தே சேரும்
அறிவொடு நடந்து கொள்வோம்
அனைவர்க்கும் உதவி நிற்போம்
பெருமைகள் வந்தே சேரும்
பிறந்ததில் மகிழ்ச்சி கொள்வோம்
மண்ணிலே நல்ல வண்ணம்
வாழவே வேண்டு மாயின்கண்ணிலே கருணை கொண்டு
கடவுளை நினைக்க வேண்டும் எண்ணிடும் எண்ண மெல்லாம்
இனியதாய் இருந்தே விட்டால்
மண்ணிலே எங்கள் வாழ்வு
மங்கலம் தந்தே நிற்கும்
மண்ணிலே எங்கள் வாழ்வு
மங்கலம் தந்தே நிற்கும்
இலங்கைச் செய்திகள்
வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை
யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்
வடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்!
இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை கோரும் பௌத்த பிக்கு
பெலியத்தை - யாழ்ப்பாண ரயில் சேவை!
வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை
21/03/2019 பேயாடி கூழாங்குளத்தில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரையின் காணியை பௌத்த மதகுரு தமக்கு கோரியுள்ள நிலையில் அது தொடர்பாக பேயாடிகூழாங்குளம் மக்கள் நேற்று மாலை அங்குள்ள முனியப்பர் ஆலயத்தில் கலந்துரையாடியிருந்தனர்.
உலகச் செய்திகள்
ஹிஜாப் அணிந்து, கிரிஸ்ட்சர்ச் நகர பள்ளிவாசலுக்கு சென்று ஆறுதல் கூறிய நியூசிலாந்து பிரதமர்..!: குவியும் பாராட்டுக்கள்
பிரான்ஸ் கலவரம் ; 60 க்கும் மேற்பட்டோர் காயம் ; பலர் கைது
ஹிஜாப் அணிந்து, கிரிஸ்ட்சர்ச் நகர பள்ளிவாசலுக்கு சென்று ஆறுதல் கூறிய நியூசிலாந்து பிரதமர்..!: குவியும் பாராட்டுக்கள்
18/03/2019 நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் இரண்டு பள்ளிவாசல்களின் மீது கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், இன்னும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் சினிமா - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்
ஹரிஷ் கல்யாண், காளி பட புகழ் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். படத்தின் தலைப்பை பார்த்தே இது காதல் கதை என அனைவருக்கும் விளங்கியிருக்கும். படம் எப்படி வாருங்கள் பார்ப்போம்.
கதை:
கவுதம் (ஹரிஷ் கல்யாண்) சின்ன வயதிலேயே தன் அம்மா வேறொருவருடன் ஓடிப்போவதால்
பெரிய ஏமாற்றமடைந்து கோபத்துடனேயே வாழ்கிறார். எந்த விஷயத்தையும் பொறுமையாக ஹண்டில் செய்ய தெரியாதவர். அடுத்த உடனேயே அடி தான்.
தாரா (ஷில்பா மஞ்சுநாத்) பெரிய இடத்து பெண். இவர்கள் இருவருக்கும் நடுவில் தமிழ்சினிமா வழக்கம்போல மோதலில் ஆரம்பித்து பின்னர் காதலில் முடிகிறது.
கவுதம்-தாரா இடையிலான காதல், மோதல், பிரிவு, குடும்பத்தின் எதிர்ப்பு தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம்.
உருகி உருகி காதலிக்கும் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனைகள் வர துவங்குகிறது. தன் அம்மாவை போல இவளும் நம்மை விட்டு விட்டு போய்விடுவாளோ என்கிற குழப்பம் ஹரிஷ் கல்யாணுக்கு, இவனை நம்பி போகலாமா என்ற குழப்பம் ஹீரோயினுக்கு. இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் ஆகும் தருவாயிலும் முடிவெடுக்க தயங்குகிறார். ஹரிஷ் கல்யாண் கோபத்தில் செய்யும் சில விஷயங்கள் தான் அதற்கு காரணம். இவர்கள் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்:
ஹரிஷ் கல்யாண் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் வித்யாசமான ரோல். எப்போதும் கோபத்துடனேயே இருக்கும் இளைஞர் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தாலும் படத்தில் அவரது குரல் சில சமயங்களில் படத்திற்கு செட் ஆகாத பீல் தான் கிடைக்கிறது. ஹீரோயின் ரோலும் ரொம்ப மெச்சூராகத்தான் வடிவமைத்துள்ளார் இயக்குனர். பார்த்தவுடன் காதலிக்காமல் பொறுமையாக நான்கைந்து முறை யோசித்து முடிவெடுப்பதில் இருந்து அவன் தன்னை துன்புறுத்தும்போது 'திஸ் ஐஸ் த எண்டு' என அரை மனதோடு சொல்வது வரைஅனைத்திலும் ஈர்க்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக நடித்துள்ள பாலசரவணன், மகபா ஆனந்த் காமெடியில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்:
ஒரு சாதாரண காதல் கதை, அதில் சில ஏற்ற இறக்கங்களை கொடுத்து வித்யாசமான கிளைமாக்ஸுடன் படத்தை முடித்த இயக்குனர், இன்னும் சில மாற்றங்களை செய்திருந்தால் படம் இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்காமல் இருந்திருக்கும்.
முதல் பாதியில் போர் அடிக்காமல் சொல்லவந்ததை கச்சிதமாக காட்டியிருந்த இயக்குனர், இரண்டாம் பாதியில் பெரிய தடுமாற்றம் அடைந்துள்ளார்.
பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் சாம் சி எஸ்சின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. கவின் ராஜின் ஒளிப்பதிவு பெர்பெக்ட்.
பல்ப்ஸ்:
- பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி படம்.
- படம் பார்ப்பவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. ஹரிஷ் கல்யாணுக்கு அந்த பெண் பின்னாடி சுத்துவதை தவிர வேறு வேலையே உலகத்தில் இல்லை என்பது போல காட்டியிருப்பது. மொத்த படத்தையும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக எடுத்திருந்தாலும் சில விஷயங்களில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார்.
மொத்தத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நாம் நிஜ வாழ்விலேயே பலமுறை பார்த்துள்ள ஒரு சாதாரண காதல் கதையாக இருந்தாலும், நிச்சயம் அனைத்து இளைஞர்களுக்கும் கனெக்ட் ஆகும்.
நன்றி Cine Ulagam
Subscribe to:
Posts (Atom)