தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான ஹீரோ ஆகவேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் போலிஸ் வேஷம் கட்டினால் தான் முடியும் என்பது எழுதப்படாத விதி போல. அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனையும் விட்டு விடுமா? இந்த ஆசை. எதீர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஜாலி பையனாக நடித்த இவர், காக்கிசட்டை அணிந்து இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் வெற்றி கூட்டணியுடன் களம் கண்டுள்ளது காக்கிசட்டை. இதில் புதிதாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் அதிர்ஷ்ட ஜோடி ஸ்ரீதிவ்யாவும் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு.
கதைக்களம்
கான்ஸ்டபிளாக தன் வாழ்க்கையை தொடங்கும் சிவகார்த்திகேயன் எப்படியாவது இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என முயற்சி செய்து வருகிறார். ஆனால், இதற்காக இவர் பெரிதாக முயற்சி ஏதும் எடுக்காமல் இமான் அண்ணாச்சியுடன் சேர்ந்து ஜாலி அரட்டை அடித்து வருகிறார். ஒரு திருடனை பிடிக்கும் முயற்சியில் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீதிவ்யாவை பார்க்கும் இவருக்கு பார்த்தவுடன் காதல் தான்.
இதை தொடர்ந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீதிவ்யா வீட்டிற்கு சிவகார்த்திகேயன் செல்ல, அவர்கள் குடும்பத்திற்கு போலிஸ் என்றாலே பிடிக்காது என்று அறிந்து கொண்டு, தான் வேலை தேடும் இளைஞன் என்று பொய் சொல்லி ஸ்ரீதிவ்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவருடன் ஜாலியாக டூயட், காமெடி என தன் வழக்கமான நகைச்சுவை பலத்துடன் அடித்து தூள் கிளப்புகிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால், இவர் கண்ணில் அவ்வப்போது படும் சில குற்றங்களை, மேல் அதிகரியான பிரபுவிடம் சொல்ல, அவர் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, பிரபுவிடம் முறையிட ‘உன்னால முடிஞ்சா தொட்டு பார்த்தாலே ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு கேஸ் கொண்டு வா’ என சிவா மீசையை பிரபு முறுக்கிவிடுகிறார். இதை தொடர்ந்து யதார்த்தமாக சிவகார்த்திகேயன் ஒரு சிறுவனின் விபத்தை கண்டு, அதை தொடர்ந்து அவனை காப்பாற்ற முயற்சி செய்யும்போது பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்கு வரும் சிறுவர்களில் தாய், தந்தை இல்லாதவர்களை டார்க்கெட் செய்து, அவர்களை மூளைச்சாவு அடைய செய்து, உடல் உறுப்புகளை திருடுகிறது ஒரு பெரிய கும்பல். இந்த நெட்வொர்க்கை சிவா கண்டுபிடிக்க, இதில் பிரபு, தன்னுடன் வேலை பார்க்கும் போலிஸ் இன்ஸ்பெக்டர் என பலரை இழக்கிறார். இந்நிலையில் இந்த நெட்வொர்க்கின் அடுத்த குழந்தை கடத்தல் திட்டத்தை சிவா கண்டுபிடிக்கிறார். இதை அவர் தடுத்து நிறுத்தினாரா? அந்த வில்லனை எப்படி பழி வாங்குகிறார் என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு
சிவகார்த்திகேயன் ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோவிற்கான தோரணையில் அறிமுகமாகி, காமெடி, சண்டை, ஆட்டம், பாட்டம் என அனைத்து ஏரியாக்களிலும் கில்லி தான். என்ன, விஜய், ரஜினியின் மேனரிசங்களை அடுத்த படத்தில் கொஞ்சம் குறைத்து கொள்ளலாம். ஸ்ரீதிவ்யா, பாட்டுக்கு மட்டும் வந்து சென்றாலும், ஒரு சில காட்சிகளில் ஹீரோவிற்கு உதவி செய்து போகிறார்.
காமெடிக்கு என்று தனி ட்ராக் அமைக்காமல் இமான் அண்ணாச்சியை கதையின் ஓட்டத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரபு கொஞ்ச நேரம் வந்தாலும் தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்கிறார். வில்லனின் உருவம் தான் ஒல்லி என்றாலும், நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மயில்சாமி, மனோபாலா கூட்டணி காமெடி நன்றாகவே உள்ளது.
அனிருத்தின் இசையில் ஐயம் சோ கூல், காதல் கண் கட்டுதே பாடல்கள் மட்டும் நன்றாக உள்ளது. பின்னணி இசையில் செம ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால், அதிக சத்தம் காது வலிக்கிறது. மேலும், கொஞ்சம் வேகத்துடன் இசை வேண்டும் என்றால் வேலையில்லா பட்டதாரி, செண்டிமெண்ட் இசைக்கு எதிர்நீச்சல், இந்த படங்களில் இருந்து கொஞ்சம் வெளில வாங்க அனிருத்.
க்ளாப்ஸ்
சிவகார்த்திகேயன் தனி ஆளாக நம்மை கவர்ந்து செல்கிறார், குறிப்பாக காதல் மற்றும் பாடல் காட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கிறார். இமான் அண்ணாச்சியின் காமெடி நன்றாகவே உள்ளது. பட்டுக்கோட்டை பிரபாகர் படத்தின் வசனத்தை சிறப்பாக எழுதியுள்ளார்.
அதிலும் போலிஸ் எப்படியிருக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் பேசும் வசனம் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. ஒரு சில இடங்களில் அனிருத்தின் பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக, குறிப்பாக சேஸிங் காட்சியில் அனல் பறக்கிறது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் நெளிய வைக்கிறது, என்ன தான் விறுவிறு என்று சென்றாலும், ஏதோ காரணத்தால் திரைக்கதை கொஞ்சம் தள்ளாடுகிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திலும் இதே கான்செப்ட் என்பதால் தியேட்டரிலேயே கொஞ்சம் கமெண்ட் எழுகிறது.
மொத்தத்தில் சிவகார்த்திகேயன் காக்கிசட்டையில் காலரை தூக்கி விட்டுள்ளார், இதற்காகவே நாமும் ஒரு முறை இந்த சட்டையை அணியலாம்.
ரேட்டிங்-2.75/5