மரண அறிவித்தல்

.
                                                 திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர்
மறைவு 03 04.2015

கொழும்பு திறைசேரியில் வழங்கல் ஆளணி பிரிவின் ஓய்வு பெற்ற உதவிப்
பணிப்பாளரான திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் சிறிது கால சுகவீனத்தின்
பின்னர் ஏப்பிரல் மாதம் 3 ம் திகதி வெள்ளிக் கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற முதலியார் சு திருச்சிற்றம்பலம், காலம் சென்ற திருமதி ராஜலஷ்மி (வண்ணார் பண்ணை யாழ்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,காலம் சென்ற சீதாலட்சுமியின் அன்புக் கணவரும், காலம் சென்ற திரு மாணிக்கம் ,காலம்  சென்ற திருமதி செல்லம்மா மாணிக்கம் (ஐயனார் கோவிலடி யாழ்பாணம் ) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவர் காலம் சென்ற பாலசுப்பிரமணியம் (யாழ்பாணம்), காலம் சென்ற சண்முகம் (யாழ்பாணம்) கேதீஸ்வரநாதன் (சிட்னி) கங்காதரன் (ரோறென்ரோ) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜலட்சுமி பாலசுப்பிரமணியம் (கன்பரா) திருமதி ரமணி கேதீஸ்வரநாதன் (சிட்னி) காலம் சென்ற திருமதி பரமேஸ்வரி கங்காதரன் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
தயாபரன் (சிட்னி) சாரதா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், யசோதரா  (சிட்னி), புரந்தரநாதன் (கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்; கணேசா, அர்ச்சனா,வனிதாஸ்ரீலஷ்மி, லதாங்கி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்  ஆவார்.

மின்னொளி மண்கவ்விய வேளையதில்... எம்.கே.முருகானந்தன்.

.


மின்னொளி மண்கவ்விய வேளையதில்
என்னறையைக்  கவ்வியது
கண் மறையப் பேதலிக்கும் பேரிருள்
என்னவிது ஏதாயிற்றோவெனக்
உள்ளமதைக் குளறுபடியாக்கியது
இருட்டோ இன்னும் எதுவோவென
மருட்டி மனம் ஏங்கையில்
வெள்ளமென நுதல் வடிந்த வேர்வை
படிந்தது சட்டையெல்லாம்.


இன்னும் இருள் பொறுக்காதென
பத்த வைத்த மெழுகுவத்தியுடன்
அவசர விளக்கும் அணிசேர்க்க
இத்தனைநாள் புலனாகா அழுக்கெல்லாம்
என்னறையில் உறைந்திருத்தல் வெளிச்சமாயிற்று.
மூளியவள் மெழுகுச் சிரசாக என் மேசை
மாசு மறுவின்றி துலங்கும் காலம்
வருமொவென ஏக்கம் கொளலானேன்.
இருந்தாலும்….
உள்ளமதில் உறையும் கரு மாசெல்லாம்
தெள்ளனவே துலங்கிப் புலப்படவே
உள்ளொடுங்கி நாணலானேன்.

நான் ரசித்த சேயோனின் மிருதங்க அரங்கேற்றம் - செ.பாஸ்கரன்

.
Photo  by SJ Images

நீண்ட ஈஸ்டர் விடுமுறை மனது மத்தாளம் கொட்டி மகிழ்திருக்க வானமும் மழைத்தூறல்களை வழங்கிக்கொண்டிருந்தது. ஞாயிறு மாலை கருமேகங்கள் நர்த்தனமாட மழைத்துளிகளை நகர்த்திக்கொண்டு எமது கார் பரமட்டா றிவர்சைட் தியேட்டரை அடைந்தது. ஆம் இன்றுதான் செல்வன் சேயோன் ராகவனின் மிருதங்க அரங்கேற்றம் இங்கு இடம்பெறுகின்றது.  மாலை 6 மணிக்கென்று குறிப்பிட்டிருந்ததனால் 5.50 மணிக்கே மண்டபத்தை அடைந்து விட்டோம். எவரையும் முன்புறத்தில் காணவில்லை , என்ன நேரத்துக்கு வந்துவிட்டோமோ என்று எண்ணியவாறே  சென்றபோது வாசலில் வரவேற்பிற்காக  நின்றிருந்த   ராகவனும் குமுதினியும் கூப்பிய கரங்களுடன்  வரவேற்றார்கள் , மதுரா மகாதேவ் புன்னகை அரசியாக ஓடோடிவந்து அழைத்துச் சென்று எமக்கான ஆசனத்தை காண்பித்தார். அப்போது தான் பார்த்தேன் அதிகமான இருக்கைகளில் ஏற்கெனவே பலர் அமர்ந்திருந்தார்கள்.

A GUN AND A RING (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் ) 10.04 2015

.
சிட்னி Reading Cinema வில்  APRIL 10 ம்  திகதி 9.00 மணிக்கு திரையிடப்படுகிறது பல சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படமான A GUN AND  A RING (ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் ).

சிட்னியில் சித்திரைத் திருவிழா 2015 தமிழர் தம் நாட்டுப்புறக் கலைகளின் மணி மகுடம் - கானா பிரபா

.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தாய்த்தமிழகத்தின் மதுரை மண்ணின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று "சித்திரைத் திருவிழா". 
கள்ளழகர் தன்னுடை தங்கை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாணத்துக்காகப் புறப்படுமாற் போல அமைந்த அந்த மதுரை சித்திரைத் திருவிழா போன்று, தமிழக மண்ணில் இருந்து நம் தமிழரது ஆடல், பாடல் கலைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களாகப் போற்றக் கூடிய கலைஞர்கள் சிட்னி மண்ணில் ஆண்டு தோறும் அரங்கேற்றும் நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டம் இந்தச் சிட்னியில் சித்திரைத் திருவிழா.


சிட்னி திரை அரங்குகளில் 10ம் திகதி முதல் கார்த்தியின் கொம்பன்

.


கனவுகளை விதைத்த மல்லிகை ஜீவாவும் கனவுலகில் வாழும் டொமினிக்ஜீவாவும்

.

                                                                                                                                  முருகபூபதி
இந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான்  இலங்கைக்கு  வந்ததும்  முதலில்  தொலைபேசியில்  பேசியவர்களில்   டொமினிக்ஜீவாவும்  ஒருவர்.   அவர்  நீண்ட காலம் நடத்திய   மல்லிகை  இதழ்  நிறுத்தப்பட்டதன்  பின்னர்  அவரை சந்திப்பதற்கு   சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.   எனினும்  2011 இற்குப்பின்னர்   அவருடன்  தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.   
 மல்லிகை   நின்றுவிட்டதை  அறிந்து அவர்பற்றிய   நீண்ட  விரிவான  கட்டுரையும்  எழுதினேன்.   பல  இதழ்களில் வெளியானது
அவரது   பால்ய கால   நண்பர்  எஸ்.பொ.   சிட்னியில்  மறைந்ததும் தகவலும்  சொன்னேன்.  இம்முறை   பயணத்தில்  அவரைச்சந்தித்து நீர்கொழும்பில்   பெப்ரவரி  28  ஆம்   திகதி   நடத்தவிருந்த  நெய்தல் விழாவுக்கு   அழைப்பதற்காக  முற்கூட்டியே  தகவல்  தெரிவித்து -அவர்   அந்த  நாளை   எமக்காக  ஒதுக்கிவைக்கவேண்டும்  என்பதற்காக  அதுபற்றியும்   உரையாடியிருந்தேன்.
எனது   குரலைக்கேட்டதும்  குதூகலத்துடன்  பேசினார்.
" வடக்கு, கிழக்கு   பயணங்களை   முடித்துக்கொண்டு  வருவேன் " என்று   அவருக்கு  உறுதியளித்தேன்.

அன்பாலயத்தின் இளம் தென்றல் 2015 11.04.15

.



இலங்கைச் செய்திகள்


முதன் முறையாக ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை

 'புவி" என்ற புலி உறுப்பினர் கைது: கார், கத்தி, வெளிநாட்டு நாணயங்கள், பொல்லுகள் மீட்பு

25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை

கொழும்பிலிருந்து யாழ். மட்டு.க்கு செல்லும் ரயில்: நேரங்கள் மாற்றம்


முதன் முறையாக ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்


02/04/2015 முதன் முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஸ்கா பண்டிகையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்புக்கு விஜயம் செய்கின்றார்.
போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெறும் இப்பண்டிகை விழாவில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2015




இப் போட்டிகள் April மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

சங்க இலக்கியக் காட்சிகள் 45- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

அவரைக்கண்டதும் உள்ளம் தழுவத் துடிக்கிறதே!

கடந்த காட்சியிலிருந்து சற்று மாறுபட்ட காட்சியினை இந்த அத்தியாயத்தில் காணலாம். பரத்தையரோடு உறவாடிய கணவன் தன்னைத் தேடிவந்தபோது அவனைக் கடிந்துää இங்கே ஏன் வந்தாய் மீண்டும் அவர்களிடமே போ என்று மனைவி ஏசித் திருப்பியனுப்பிய நிகழ்வை முன்னைய காட்சியில் கண்டோம். இங்கே அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி நம்முன்னே வந்து நிற்கின்றது.

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா படங்கள்

.

சிட்னி முருகன் ஆலய வருடாந்த பூங்காவன  திருவிழா பதினோராம்    நாள் 04.04.2015.

மதுரை முரளி அவர்களின் நெறியாள்கையில் சிவகாமியின் சபதம்

.
திருமதி ரேணுகா ஆறுமுகசாமி இன் கலாஞ்சலி நடன கல்லூரியின் 25 வருடாந்த நடன நிகழ்வு சவுத் மொரங் கில் உள்ள பிளண்டி ரேன்சஸ் கலை அரங்கில் நடைபெற்றன.இதில் திரு மதுரை முரளி அவர்களின் நெறியாள்கையில் சிவகாமியின் சபதம் என்னும் நாட்டிய நாடகம் எல்லோரையும் கவர்ந்தது.
சென்ற வருடம் சிட்னி இசைவிழாவிலும் சிட்னி கலைஞர்களை வைத்து  சிவகாமியின் சபதம் என்னும் இந்த நாட்டிய நாடகம்  மதுரை முரளி அவர்களால்  மேடை ஏற்றப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

உலகச் செய்திகள்


தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உள­வியல் பிரச்­சி­னை, மன நோய்­க­ளுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்

  கென்ய பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 பேர் பலி; 79 பேர் காயம்


தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல், உள­வியல் பிரச்­சி­னை, மன நோய்­க­ளுக்கான மருந்துகளும் பாவித்துள்ளார்

30/03/2015 பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்­தி­யத்தில் ஜேர்­மன்விங்ஸ் விமா­னத்­தை திட்­ட­மிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்­த­தாக நம்­பப்­படுபவரான துணை விமா­னி­யான அன்ட்­றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் என எதிர்­வு­கூ­றி­யி­ருந்­த­தாக அவ­ரது குறு­கிய கால முன்னாள் காத­லி­களில் ஒரு­வ­ர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும்  லுபிட்ஸ் தீவிர உள­வியல் பிரச்­சி­னை­களால் பாதிக்­கப்­பட்டு பல்­வேறு நரம்­பியல் மற்றும் உள­வியல் மருத்­து­வர்­க­ளிடம் சிகிச்சை பெற்று வந்­த­மைக்­கான சான்­றுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாகவும் அவ­ரது வீட்டில் மன நோய்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பல மருந்­துகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது. - அ.முத்துலிங்கம்

.    
                       
ரூபவதியில் உனக்குப் பிடித்தது அவளுடைய சிரிப்புத்தான். சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருக்கும். பத்திரிகை படிக்கும்போதும், தேநீர் அருந்தும்போதும், வேலைகள் செய்யும்போதும், நடக்கும்போதும், அமரும் போதும், அலங்கரிக்கும்போதும் அது இருந்தது. அநேக சமயம் அவள் இருளில் கலந்துபோய் இருப்பாள். நீ அவளுக்கு முன் நிற்கிறாயா அல்லது இருட்டின் முன் நிற்கிறாயா என்ற சந்தேகம் உனக்கு ஏற்படும். அவளை மணமுடித்து ஆறு மாதம் சென்ற பிற்பாடுதான் அவளுடைய  முக அமைப்பு அப்படி என்பது உனக்கு புரிய ஆரம்பித்தது.
மணமான அன்று இரவு அவள் முகம் ஒருகணம் கூம்பி சோர்ந்தது. அப்பொழுதுகூட அவள் உதட்டிலிருந்து சிரிப்பு முற்றிலும் மறையவில்லை. நீ கேட்டாய் ’ஏதாவது வருத்தமா?’ என்று. அவள் சொன்னாள். ‘எங்கள் திருமணத்துக்கு 15 பேர் வந்திருந்தார்கள். எல்லோருமே உங்களுக்கு தெரிந்தவர்கள். எனக்கு ஒருவருமே இல்லை’ என்றாள். 

தம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்

.

13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.

சிலுவையில் இயேசு கிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகள் - சோனா பிறின்ஸ்

.
இயேசு கிறிஸ்து இப்பூவுலகில் அவதரித்த வரலாறு சரித்திரச் சான்றுபடி கி.மு. 4-5 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சுமார் 33 1/2 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு உதவாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே பல அதிசயங்களை செய்தார். இம்மாய உலக வாழ்வை விட தேவனுடைய ராஜ்யத்தை தேட மக்களிடையே போதித்தார். 

பரலோக இராட்சியத்தின் வழிகளை அன்றிருந்த அரசும், யூத மதவாதிகளும் ஏற்க மறுத்தனர். மாறாக இவர் மேல் பழி சுமத்தி சிலுவையில் அறைய திட்டமிட்டனர். அந்த நாட்களில் கொடூர செயல் புரிந்த குற்றவாளிகளை சமூகத்தில் மிகக் கேவலமாக நடத்த வேண்டுமானாலும் சிலுவையில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.இதன்படி தங்கள் மனம் நிறைவடைய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தனர். அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விடுமுன் 7 வார்த்தைகளைச் மொழிந்தார்.

கனடா வாழ் ஈழத் தமிழரான அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸுக்கு “கூத்துக்கலைச் செம்மல் விருது” வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்‏

.

பூமிப்பந்தின் மூத்த மனிதர்களான தமிழினத்தின் மிகப் பிரதானமானது கூத்துக்கலை. அதன் வளர்ச்சிக்காக தொன்று தொட்டு பல கலைஞர்களும், அறிஞர்களும் வாழ்ந்து மறைந்து போயுள்ளனர். உலகத் தமிழினத்திற்க்காக அவர்கள் விட்டுச்சென்ற உன்னதக் கூத்துக் கலைக்காக அவர் தம் பின்னால் நடந்து ஆயுள் பரியந்தம் உழைத்த அண்ணாவிமாரையும், கலைஞர்களையும் வரலாறு குறித்து வைத்திருக்கின்றது.
ஈழதேசத்தின் மிகத்தொன்மையான கூத்துக்கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாக திகழ்பவை தென்மோடி, வடமோடி கூத்துக்களாகும். தென்மோடிக் கூத்தின் மூலவராகவும், தனித்துவம் மிக்க கம்பீரக் கலைஞராக, உச்சநிலை கொண்ட பாடகராக பன்முகத்திறனுடன் திகழ்ந்தவர் அமரர் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியார் அவர்களாகும்.

யாழ் குடிநீர் மாசு அவலம் - சர்வதேச ஆய்வு அறிக்கை இம்மாத இறுதியில்....

.
யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசு தொடர்பான  ஆய்வறிக்கை ஒன்று இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. தூய நீர்பெற்றோலியப் பொருட்கள்சூழல் மாசடைதல்நிலத்தடி நீர் மற்றும்  உடல்நலம்  போன்ற துறைகளில் நீண்ட கால அனுபவம் உள்ள அவுஸ்திரேலிய மற்றும் வடஅமெரிக்க நிபுணர் குழு ஒன்று விரைவில் தமது விஞ்ஞான ரீதியான அறிக்கையை வெளியிடுகிறது.

விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில்சர்வதேச தரம் மிக்க இரசாயனவியல் பகுப்பாய்வு நிலையங்களில் ( இலங்கை மற்றும் சிங்கப்பூர் ) நடைபெற்ற சோதனை முடிவுகளை இந்த அறிக்கை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலதிகமாககுடிநீர் மாசு தொடர்பில் பல தரப்பினர் பல்வேறு முரண்பட்டதகவல்களை வழங்கி மக்களைக் குழப்பமாக்கி  வரும் இந்த நிலையில் இந்த சர்வதேச நிபுணர் குழு யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக நீர்த்தரம் குறித்த தரவுகளைத் திரட்டிய அனைவரையும் அணுகி அவர்கள் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு அறிக்கைகளைத் தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ளனர். இந்த அறிக்கைகளை ஒன்றுதிரட்டி வெளியிடும் தேவையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகச் சைவப் பேரவை -- அவுத்திரேலியாக் கிளை ஏற்படுத்தும் தமிழ் வளர்த்த சான்றோர் விழா - 2015

.
விழா நாயகர்கள் :
             மட்டுநகர்  விபுலாநந்த அடிகளார் அவர்கள் -
             தமிழ் நாடு தந்ததமிழ்த்தென்றல்திரு  வி கல்யாணசுந்தரனார்  
                                                                                                                                              அவர்கள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஞாயிற்றுக் கிழமை 26ஆம் திகதி மாலை 5.30மணிமுதல் சிட்னி கலை  இலக்கிய  சங்கத்துடன் இணைந்து அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் தமிழர் மண்டபத்தில் தமிழ் வளர்த்த சான்றோர் விழா ஒன்றினை உலகச் சைவப் பேரவை (அவுத்திரேலியாக் கிளை) கோலாகலமாகக் கொண்டாடவிருக்கிறது.

தமிழ் சினிமா - நண்பேண்டா




வெற்றி கூட்டணி என்று தமிழ் சினிமாவில் ஒன்று உருவாகிவிட்டால் போதும், அந்த கூட்டணியை சுற்றி எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் உதயநிதி - சந்தானம் கூட்டணியில் ஹாட்ரிக் லிஸ்டில் வந்திருக்கும் படம் நண்பேன் டா .
இப்படத்தை ஓகே ஓகே ராஜேஷிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஜெகதிஷ் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமஷனுக்காக, உதயநிதி கொடுத்த ஒரு பேட்டியில் நண்பேன்டா படத்தை ஓகே ஓகே ரீமேக் என்று கூட சொல்லலாம் என்றார். ஆனால் அவரின் முந்தைய படமான இது கதிர்வேலன் காதல் படத்தையும் சேர்த்து கொள்ளலாம் என்று படம் முடிந்த வெளியே வந்த போது அவருடைய ரசிகர்கள் சொன்னார்கள். அவர் நடித்ததே இந்த இரண்டு படம் தானே !
சரி கதைக்கு போவோம்
துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோ(உதயநிதி ) அந்த காதலுக்கு பல சமயம் தொந்தரவாகவும் சில சமயம் உதவியாகவும் இருக்கும் ஹீரோவின் நண்பன் (சந்தானம்). இவர்களின் ரகளையில் அந்த காதல் பாதியில் பிரிய கடைசியில் அந்த காதல் கை கூடியதா என்பது தான் கிளைமாக்ஸ். இதில் ஒரு புதுமையாக படத்தில் அனைத்து இடங்களிலும் காமெடி தான் மைய பகுதி.
தஞ்சாவூரில் வெட்டியாக சுற்றி தெரியும் உதய். அவரின் அப்பாவின் தொந்தரவால் தன் நண்பனை (சந்தானத்தை) தேடி திருச்சி செல்கிறார். திருச்சி இறங்கியவுடன் நயன்தாராவை பார்க்கிறார், உடனே காதல் பற்றி கொள்கிறது. பிறகு காதல் மயக்கத்தால் உதயநிதி கொடுக்கும் இம்சைகளைத் தாங்கிக் கொண்டு சந்தானமும் அவரது காதலுக்கு ஒரு கட்டத்தில் உதவுகிறார்.
இடைவேளையின் போது நயன்தாரவுக்கும், உதயநிதி மேல் காதல் வர, அவரிடம் காதலை சொல்லும்முன் தன் கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் (பிளாஸ்ஷ்பேக் ) ஒன்றை உதயநிதியிடம் சொல்கிறார் (அங்கே தான் இயக்குனர் வைக்கும் ட்விஸ்ட்). அதை கேட்டு உதயநிதி கேலியாக சிரித்து அதுக்கு ஒரு கவுன்ட்டர் கொடுக்க நயன்தாராவுக்கு கோபம் தலைக்கு மேல் வருகிறது, பிறகு என்ன அந்த காதல் அங்கயே முறிகிறது.
மறுபடியும் அந்த காதலை ஒன்று சேர்க்க உதயநிதி - சந்தானம் போடும் திட்டம், அந்த திட்டத்தினால் அவர்கள் ஜெயிலுக்கு போக கடைசியில் அந்த காதல் வெற்றிபெற்றதா?, இவர்கள் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனர்களா? என்பது தான் நண்பேண்டா வின் முழு கதை.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
உதயநிதி நடிப்பை விட வசன உச்சரிப்பில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று இருக்கிறார். இந்த படம் வழக்கமான அவருடைய முந்தைய படம் போலே இருப்பதால் நடிப்புக்கு ஒன்று பெரிய ஸ்கோப் இல்லை. டான்ஸ் இந்த படத்தில் நன்றாக ஆடியுள்ளார். மக்கள் என்னிடம் இது தான் எதிர்பார்க்கிறார்கள் என்று இதே மாதிரி படங்கள் இனிமேல் நடித்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.
சந்தானம் இந்த படத்தில் கவுண்டர்க்கு மட்டுமில்லாமல் பாடி லாங்வேஜிலும் கவனம் செலுத்தியுள்ளது ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதுவும் நயன்தாரா தங்கி இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் இழுத்து மூடப்படுகிறது என்ற தெரிந்துவுடன் உதய் - சந்தானம் சேர்ந்து ஹாஸ்டல் முன்பு நடத்தும் போராட்டம் செம ரகளை.
சந்தானத்தின் காமெடி இந்த படத்தில் ஒரு 50 சதவிகிதம் தான் எடுபட்டது தவிர பல இடங்களில் பேசியே கொன்றார். அதுவும் இது போல் நண்பனுக்கு உதவும் கதாபாத்திரத்தில் பார்த்து பார்த்து சலித்து போய் விட்டது.
நயன்தாரா
படத்தின் மிகப்பெரிய ஆறுதல் நயன்தாராவுடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ், என்ன அழகு, அவருடைய இயல்பான, எளிமையான தோற்றம், பாடல்களில் அவரின் உடையலங்காரமும், அழகான நடனமும் ரசிகர்களை கவரந்துள்ளது. இருந்தாலும் நடிப்பை பற்றி சொல்கையில் இது கதிர் வேலன் காதல் பார்த்த அதே நயன் தான் இதிலும்.
க்ளாப்ஸ்
  1. 1. நயன்தாரா தோன்றும் காட்சிகள்
  2. 2. படத்தின் முதல் பாதி
  3. 3. பாலசுப்ரமணியமின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு
  4. 4. சந்தானத்தின் ஒரு சில காமெடி வசனங்கள்
பல்ப்ஸ்

  1. 1. ஓகே ஓகே , இது கதிர்வேலன் காதல் படத்தின் அப்பட்டமான சாயல்
  2. 2. போர் அடிக்கும் பல காமெடிகள்
  3. 3. ஹாரிஸின் எடுபடாத இசை, (படத்தின் அனைத்து பாடலிலும் திரை அரங்கில் ஆள் இல்லை)
எந்தவொரு புதுமையான விஷயத்தையும் எதிர்பார்க்காமல் இந்த படத்தை பார்க்க போனால் இந்த படம் நிச்சயம் எண்டர்டெய்மெண்டாக இருக்கும்.
கடைசியாக இயக்குனர் ஜகதீஷ் தான் குருவான ராஜேஷ் போலவே படம் எடுப்பேன் என்பதற்க்காக உங்க படத்தை அதாவது ஓகே ஓகே படத்தையே எடுத்து விட்டாரே .
மொத்தத்தில் நண்பேன்டா - சொல்லும் படி பெரிதாக ஒன்றும் இல்லையடா

ரேட்டிங்-2.5/5


நன்றி cineulagam