மரண அறிவித்தல்

  


திருமதி கமலேஸ்வரி பத்மநாதன்

வீமன்காமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை, சிட்னி பென்டில்ஹில்லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 1.5.2024 புதன் கிழமை அன்று குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அமைதியான முறையில் இறை பதம் எய்தினார். இவர் காலம்சென்ற ஆறுமுகம் பத்மநாதனின் அன்பு மனைவியும் சாந்தி,( சிட்னி) யசோதா(சிட்னி), யாமினி(சுவிஸ்) ஆகியோரின் பாசத்திற்குரிய  தாயாரும் கதிர்காமநாதன் (சிட்னி) ஜீவராசா( சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் நாராயண், திவ்யா, மாதங்கி, அய்ஸ்வகி, திவ்யசந்திரா  ஆகியோரின் பிரியமுள்ள பேத்தியுமாவார்.

 அவரின் இறுதிக்கிரியைகள் யாவும் 1,Memorial Avenue,  Rookwood, என்ற இடத்தில் அமைந்துள்ள Rookwood Memorial Garden, South Chapel இல் இந்து முறைப்படி 6.5.24 திங்கள் கிழமை காலை 9.30 மணியில் இருந்து 12.00 மணிவரை நடைபெறும். இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

 மேலதிக விபரங்களுக்கு; 

ஜெ.கதிர்காமநாதன் ( மருமகன்) 0421591681 

யசோதா.பத்மநாதன் ( மகள்) 0403051657


மரண அறிவித்தல்

 


அமரர் கவிஞர் அம்பி அவர்களுக்குக் கவிதையஞ்சலி!


 


கற்றாருக் கினியதொரு நண்ப னானாய்!

        காலமெலாம் நிலைத்துநிற்கப் புலம்பெயர் நாட்டில்

வற்றாது  வண்ணத்தமி;ழ் மொழியும் வாழ 

        வடிவமைத்துத் திட்டங்கள் வரைந்து நின்றாய்!

தற்பெருமை சிறிதுமின்றிச் சுற்றம் போற்றத்

        தவநெறியில் வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்தாய்!

பற்றறுத்தாய்! சிற்சபையோன் பாததா மரைகள்

        பரந்துகாலுஞ் சோதிதனிற் கலந்தாய் சாந்தி!


கள்ளமிலா வெள்ளைமனங் கொண்ட அன்ப!                

        கவியரங்கம் பலகண்டோம் மறக்கப் போமோ?     

அள்ளவள்ளக் குறையாது ஆயிரம் பிறைகள்               

        அன்பநீயும் கண்டுநின்றுந் தமிழ்ப் பணியாய்              

உள்ளமுவந் தாற்றியவுன் பங்க ளிப்பை                 

        உன்நினைவாய் என்றென்றும் நினைவு கூர்வோம்!  

மெள்ளத்தான் மூடியதோ விழிகள் பரமன்;          

        விரைமலர்த்தாள் நாடியதோ சாந்தி சாந்தி!

கவிஞர் அம்பி எனும் இனிய எழுத்தாளன் எம்மிடம் இருந்து விடை பெறுகின்றார். செ.பாஸ்கரன்

 .

கவிஞர் அம்பி அவர்கள் மறைந்து விட்டார். செய்தியை கேள்விப்பட்டதும் பல

நினைவுகள் பின்னோக்கி பாய்கின்றது. கவிஞர் அம்பி என்றால் குழந்தைகள்

உட்பட பெரியவர்கள் எல்லோருக்குமே பரீட்சியமான பெயர். 95 வருடங்கள்

இறுதி மூச்சு நிற்கும் வரை பேசிக்கொண்டே இருந்தவர். கவிதைகள் பற்றி,

இலக்கியம் பற்றி எழுத்தாளர்கள் பற்றி எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தவர்

கவிஞர் அம்பி அய்யா அவர்கள்.


இந்த மனிதனின் வாழ்வியல் வரலாற்றில் அன்பான குடும்பம், அழகான உறவுகள்

அதற்கு மேலான இலக்கிய நண்பர்கள், வயது வித்தியாசம் இல்லாமல் இவருக்கு

இருந்த நட்பு அளப்பெரியது. பல சாதனைகள் மற்றவர்களுக்கு தெரியாத பல

விடயங்கள் வலது கை கொடுப்பதை இடது கை அறியாத கர்மவீரன் கர்ணன்

என்பார்கள் அதுபோல் அம்பியவர்கள் செய்த பல உதவிகள் பலருக்கு தெரியாமலும்

இருக்கின்றது. கிரீன் அவர்களை பற்றி பேசும் போது அவர் உள்ளம் எவ்வளவு

மகிழ்ச்சி கொள்ளும் என்பது அவரோடு உறவாடிய கணங்களில் பல முறை

கண்டிருக்கின்றேன். 

அம்பியெனும் தமிழ்த்தும்பி அவ்வுலகம் சென்றது !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா



குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு

மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். 
சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளர்.அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர்.சமூக அக்கறை கொண்டவர்.அடுத்த  தலை முறை யினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை சிறப் பினைப் பெற்றது எனலாம்.

 ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர் த்து நின்றார். கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருத முடி கிறது.

புதுவைப் புயலின் வித்தியாசமான சிந்தனைகள் !




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்  

மெல்பேண் ....  அவுஸ்திரேலியா


 

    " பாட்டுக்கொரு புலவன் பாரதியடா " என்று போற்றப்பட்டவர்தான் எட்டயபுரம் தந்த எங்கள் தமிழின் சொத்து பாரதியார். அவரின் கருத்துக்களை மனமிருத்தி அவரின் பாதையில் பல கவிஞர்கள் பயணப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிஞரும் பாரதியைப் பார்த்த பார்வைகள் அவரவர் சிந்தனைகளாக மலர்ந்திருக்கின்றன. பாரதியாரின் காலத்தில் கவிமணி தேசிக விநாகம் பிள்ளை இருந்திருக்கிறார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இருந்திருக்கிறார்.பாரதிதாசனும் இருந்திருக்கிறார். கவிமணி யின் சிந்தனை வேறாயும்நாமக்கல்லார் சிந்தனை  வேறாயும் பாரதிதாசன் சிந்தனை வேறாகாவுமே அமைந்திருக்கிறது. இவர்கள் மூவருமே பாரதியைப் போற்றியாவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எட்டய புரத்துத்துப் பாரதிக்கு எட்டவே போகாமல் கிட்டவே நிற்கும் வாய்ப்பு புதுவையில் கால்பதித்த கனகசுப்புரத்தினத்துக்கே வாய்த்திருக்கிறது. கனகசுப்புரத்தினத்துக்குத்தான் எட்டயபுரத்து மகாகவி பாரதியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அந்த ஆசீர்வாதம்தான் " பாரதிதாசன் " என்று இன்றுவரை அவரை    சமூகத்தில் பார்த்திடக் , கொண்டாட , வைத்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசிய மாகும்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 98 சாதி அடிப்படையில் நடக்கும் தேர்தல் ! ? எங்கிருந்து, எங்கே செல்கின்றோம் ! ? முருகபூபதி


இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில்  நடைபெற்ற  உள்ளுராட்சி மன்ற தேர்தல், மாவட்ட சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ,  ஜனாதிபதித் தேர்தல் ஆகியனபற்றிய செய்திகளை ஒப்பு நோக்கியிருக்கின்றேன்.

ஆசிரிய பீடத்திலிருந்தவேளையிலும் சில தேர்தல்கள் தொடர்பான செய்திகளை எழுதியிருக்கின்றேன்.  அக்காலப்பகுதியில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலும், தமிழ்நாட்டில் சட்ட மன்றத்தேர்தலும் நடந்தால், எங்கள் அலுவலக நிருபர் பயஸ் என நாம் அழைக்கும் பால. விவேகானந்தா, மிகவும் உற்சாகமாக அச்செய்திகளை எழுதித்தருவார்.

அவருக்கு வேட்பாளர்களின் பெயர்கள் விரல் நுனியிலிருக்கும்.


செய்தியை எழுதித்தந்துவிட்டு,  தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் தீர்க்கதரிசிபோன்று கணித்துச்சொல்வார்.

முதலில் மித்திரனுக்கும் பின்னர் வீரகேசரிக்கும் பால. விவேகானந்தா எழுதிக்கொடுப்பார்.

தற்போது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் காலப்பகுதியில், அங்கே என்ன நடக்கிறது, என்பதை சமூக ஊடகங்களில் தினம் தினம் பார்த்து வருகின்றேன்.

இதில் எனக்கு நன்கு தெரிந்த ஒருவரும் தமிழ்நாட்டில் தென்சென்னை தொகுதியில் தி. மு. க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அவர் கடந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்தான்.  எழுத்தாளர் – கவிஞர் – இலக்கியவாதி – ஆங்கில இலக்கிய பேராசிரியர். 

அவர்தான் தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்.  அவரது தேர்தல் பிரசார உரைகளையும் இங்கிருந்து காணொளிகளின் ஊடாகப் பார்த்தேன்.

தென்சென்னை தொகுதியில் அவருடன் போட்டியிடும் இதர இரண்டு வேட்பாளர்களின் பெயரிலும் தமிழ் இருக்கிறது.  அவர்கள்தான் பாரதீய ஜனதா கட்சி தமிழிசை சவுந்தரராஜன் , நாம் தமிழர் கட்சி தமிழ்ச் செல்வி ஆகியோர்.  

இவர்களில் எந்தத்   “ தமிழ் “ வெற்றிபெரும் என்பதை விரைவில் தெரிந்துகொள்ள முடியும்.

 கடந்த 2019 ஆம் ஆண்டு  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதி கடும் போட்டியை சந்தித்தது.  எனினும்,   தி. மு. க. வேட்பாளர் தமிழச்சி சுமதி  தங்கபாண்டியன் அந்தத் தேர்தலில் 5,64,872 வாக்குகளைப் பெற்று, 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விபுலாநந்த அடிகளார் துறவறம் பூண்டு 100 ஆண்டுகள் நிறைவு

 

நூற்றாண்டு நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் ஆரம்பம்

April 25, 2024 6:00 am 

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு(1924_-2024) நேற்றுமுன்தினம் (23.04.2024) ஆரம்பமாகியுள்ளது.

1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று சுவாமிகள் தனது 32 ஆவது வயதில் பண்டிதர் மயில்வாகனன் என்ற நாமத்திலிருந்து விடுபட்டு காவியுடை தரித்து ‘சுவாமி விபுலாநந்தர்’ ஆகினார்.

கிழக்கின் காரைதீவு மண்ணில் 1982.03.27 ஆம் திகதி அவதரித்த சுவாமியின் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் துறவறத்தின் பின்னராகும். மயில்வாகனன் என்ற நாமத்துடன் லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியாய், மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதராய் மேல்நாட்டு உடையுடன் கம்பீரமாக இருந்த கோலம் மாறி காவிஉடை தரித்து, தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து துறவியாய் பிறப்பெடுத்த நாள் சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஆகும்.

கறுப்புப் பணம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு அதன் பொருளாதார


வளர்ச்சிக்கு சவாலாக விளங்கிய ஒரு விவகாரம் தான் கறுப்புப் பணம். தங்களுடைய உண்மையான வருமானத்தை மறைத்து குறைந்தளவு வருமானத்தை அரசாங்கத்துக்கு காட்டி மீதி பணத்தை ஒளித்து , அதற்கு வருமான வரி காட்டாமல் பதுக்கும் பணத்துக்குத்தான் கறுப்புப் பணம் என்று பெயர். இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள்,என்று எவரும் விதிவிலக்கல்ல. இந்த கறுப்புப் பணத்துக்கு எதிராக அறுபது வருடங்களுக்கு முன் ஒரு படம் தயாரானது. திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய கறுப்புப் பணம் என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தை தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன். தயாரிப்போடு நின்று விடாது கதைவசனம், பாடல்கள் என்பவற்றையும் அவரே எழுதியிருந்தார்.



நகரத்தில் கோடிஸ்வரராகவும், தர்மப் பிரபுவாகவும் திகழும் தணிகாசலம் ஏழைகளுக்கு உதவுகிறர் , நல்ல காரியங்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறார் . அவரின் மகன் காந்தி தொழில் அதிபர் சட்டநாதனின் மகள் தேவியை காதலிக்கிறான். ஆனால் சட்டநாதனோ தொழில் ரீதியாக மற்றுமொரு தொழில் அதிபரான தாமோதரத்திடம் வாங்கிய கறுப்புப் பணத்தை கொள்ளைக்காரரிடம் பறி கொடுத்து விட்டு , பணத்துக்கு பதில் தன் இளம் மகள் தேவியை வயதான தாமோதரத்துக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானிக்கிறார். மண மேடையில் வைத்து தாமோதரம் கடத்தப் படுகிறார். அவரிடமுள்ள கறுப்புப் பணம் பற்றிய தகவல் கொள்ளையர்களுக்கு தெரிய வருகிறது. அதே சமயம் சினிமா நடிகை வீட்டில் இருந்த கறுப்புப் பணமும் திருட்டு போகிறது. கறுப்புப் பணத்தை பறி கொடுத்தவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி தாங்கள் பறி கொடுத்த பணத்தைப் பற்றி பொலிஸாருக்கு புகார் கொடுக்க மறுக்கிறார்கள். போலீசோ திணறுகிறது.

கிழக்கில் நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் இராம கிருஷ்ண மிஷன்

 

அம்பாறை மாவட்டத்தில் மக்கள்நல சேவைகள் விஸ்தரிப்பு

April 28, 2024 7:37 am 

கிழக்கிலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் ஆரம்பிக்கப்பட்டு 98 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது செய்து 100 ஆண்டுகள் நிறைவை நோக்கி ஜீவ சேவையுடன் இராமகிருஷ்ண மிஷன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பொறுப்பேற்ற பின்னர் கிழக்கு எங்கும் பலவகையான மக்கள் மைய நலன்புரி வேலைத் திட்டங்கள் முன்னொருபோதுமில்லாத வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்திலும் காரைதீவை மையமாக வைத்து பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கு முன்னோடியாக காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்தில் புதிதாக காரைதீவை மையமாகக் கொண்டு இலவச மருத்துவ சேவைகளும், நடமாடும் கிராமிய மருத்துவ சேவைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் கட்சிகளின் கவனத்துக்கு!

 April 25, 2024


ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தென்னி லங்கை அரசியல் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. மும்முனை போட்டிக்கான நிலைமை தெரிகின்றது.
தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களாக வெளித்தெரிபவர்கள் ஒவ்வொருவரும் – குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகி யோர் தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்னும் அடிப்படையில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் எனவும் தெரி கின்றது. ஆனால், தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் எவருமே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வை முன்வைக்கும் முதுகெலும்பு இல்லாதவர்களாகவே இருக் கின்றனர். இதேபோன்று, மற்றவர்களை விடவும் மாறுபாடானவர் என்னும் அடிப்படையில் தன்னை காண்பிக்க முற்படும் அநுர குமார திஸநாயக்க இலங்கையர் என்னும் நிலைமையை ஏற் படுத்தப் போவதாகக் கூறுகின்றார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையை அங்கீகரிக்காமல் – தமிழ் மக்கள், தமிழ் மக்களாக வாழக்கூடிய நிலையை ஏற்றுக்கொள்ளாமல் எவ்வாறு தமிழ் மக்களை இலங்கையர் என்னும் நிலையில் வாழவைக்க முடியும்? அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்னும் போட்டியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தென்னிலங்கை கட்சிகளும் ஒரு விடயத்தில் ஒன்றாகவே இருக்கின்றன.
அதாவது, தமிழ் மக் களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசினால் சிங்கள மக்களின் வாக்குகளை இழந்துவிடுவோம். எனவே, இதுபற்றி பொது வெளிகளில் பேசக்கூடாது. இவ்வாறானதொரு நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறான முடிவை எடுப்பது? இதற்கு பதிலளிக்க வேண் டிய தமிழ்த் தேசிய கட்சிகளோ தங்களுக்குள் முட்டிமோதிக் கொள் வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ் மக்களை தயார்படுத்தும் பணிகளை எவருமே முன்னெடுக்கவில்லை.
‘மக்கள் மனு’ சிவில் சமூகம் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை பொது வெளிக்குக் கொண்டுவந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் தமிழ் பொது வேட்பாளர் விடயம் பேசப்பட்டாலும் கூட இந்தளவு பரவலாக பேசப்படவில்லை.

“நூல்களைப் பேசுவோம்”

 பா.இரவிக்குமாரின் ‘திறனாய்வுக் கலைஞனும் கலைத் திறனாய்வாளனும் (பஞ்சுவும் பாலுவும்)’ -  உரை :  ஜெ.சுடர்விழி



பா.அ.ஜயகரனின் ‘அவனைக் கண்டீர்களா?’ - உரை : இ.இராஜேஸ்கண்ணன்


இலங்கைச் செய்திகள்

சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்க விரைவில் புதிய சட்டம்

கொக்குவில் புகையிரத நிலையம் கால வரையறையின்றி பூட்டு; சீல் வைப்பு

அமெரிக்க உதவியுடனான பால் உற்பத்தியை நவீனமயப்படுத்த நடவடிக்கை

2024 முதல் காலாண்டில் வருமான இலக்குக்கு அப்பால் 6% வளர்ச்சி


சம்பந்தனுக்கு மேலும் 3 மாத கால விடுமுறை

- சபை அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க பாராளுமன்றம் அனுமதி

April 25, 2024 4:01 pm 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமலிருக்க மேலும் 3 மாத கால விடுமுறையை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

உலகச் செய்திகள்

படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

காசா போருக்கு எதிராக: அமெரிக்க பல்கலைகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பு 

காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் 200 நாட்களைத் தொட்டது; 34,183 பேர் பலி

மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்: 14 பலஸ்தீனர் பலி

ஹமாஸ் தலைவருடன் எர்துவான் பல மணி நேரம் பேச்சுவார்த்தை


படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல் 

எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு

April 27, 2024 6:30 am 

தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குரு பெயர்ச்சி 2024 - புதன் 1 மே 2024


 





தயானமூலம் குருர் மூர்த்திஹி... பூஜாமூலம் குரோ பாதம்...

மந்திரமூலம் குரோர் வாக்யம்... மோக்ஷமூலம் குரு கிருபா!

நவகிரகங்களின் மையக் கடவுளான “பிரகஸ்பதி” என்றும் அழைக்கப்படும் குரு பகவான், நம்மை வளமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு அருள்பாலிக்கிறார், மேலும் மே 1, 2024 புதன்கிழமை அன்று “மீன ராசி” யிலிருந்து “மேஷ ராசிக்கு” மாறுகிறார். .

SVT இல், பூசாரிகள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (குரு) மற்றும் ஸ்ரீ நவகிரகங்கள் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு ஸ்ரீ குரு பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

பூஜை அட்டவணை:

காலை 10.00 மணிக்கு நவகிரஹ ஹோமம், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், மகாதீபாராதனை மற்றும் அர்ச்சனைகளுடன் தொடங்குகிறது.







அப்பர் குரு பூஜை விழா - 05-05-2024

 


                                                                                                    ஓம் நம சிவாய



பூழியர்கோன்
 வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி

அப்பர்குரு பூஜை விழா

   பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘தேவாரம்’ பாடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். பாடுவதற்கு அப்பர் தேவாரம் புத்தகம் வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப முழு நிகழ்ச்சியிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் பங்கேற்கலாம்.

நாள்: ஞாயிற்றுக்கிழமை, 05-05-2024

இடம்: சிவன் கோவில் வளாகம்

இலங்கை மாணவர் கல்வி நிதியம் தகவல் அமர்வு ( 04-05-2024 ) சனிக்கிழமை மாலை 4-00 மணி

 

 

                    அவுஸ்திரேலியா  ( 1988 – 2024 )

Ceylon Students Educational Fund – Australia (1988 – 2024)

தகவல் அமர்வு (  04-05-2024 ) சனிக்கிழமை  மாலை 4-00 மணி

இலங்கையில் முன்னர் நீடித்த போர்க்காலத்தில் பாதிப்புற்ற தமிழ் மாணவர்கள்  மற்றும்  வறுமைக்கோட்டில் வதியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு   ,  சந்திப்பு ஒன்றுகூடல், எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி  (  04-05-2024 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில்

       Vermont South Learning Centre மண்டபத்தில்                   

(  1, Karo bran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு  கல்வி நிதியத்தின் ஊடாக உதவி வரும் அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு : 

செயலாளர் - திரு. கே. கிருஷ்ணகுமார் :  0425 741 843

துணைத்தலைவர் - திரு. லெ. முருகபூதி : 0416 625 766

 

 

“தொ. மு. சி. ரகுநாதனின் பன்முக ஆளுமை”

 


இலக்கியவெளி 

 நடத்தும்

இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 38

“தொ. மு. சி. ரகுநாதனின் பன்முக ஆளுமை

 நாள்:         சனிக்கிழமை 04-05-2024       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 6.30      

இலங்கை நேரம் -   மாலை 6.30      

கனடா நேரம் -         காலை 9.00      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09


சிறப்புப் பேச்சாளர்கள்:

பா.ஆனந்தகுமார்

க.பஞ்சாங்கம்

இரா. பிரேமா

இரா. செல்வி

பா.இரவிக்குமார்


ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்


மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316


www.ilakkiyaveli.com

திருக்குறள் மனனப் போட்டிகள் -5 May 2024


இப்
போட்டிகள் மே மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2019 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2017 க்கும் 31.07.2019 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2015 க்கும் 31.07.2017 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2012 க்கும் 31.07.2015 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2009 க்கும் 31.07.2012 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2005 க்கும் 31.07.2009 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 

பெற்றோர்களின் முழுப்பெயர்,  அவர்களின் தொலைபேசி இலக்கம், மின்அஞ்சல் முகவரி, பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம்  4ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு:

திரு கு கருணாசலதேவா           0418 442 674

திருமதி ஜெகநாதன்             0434 098 842