எமது தமிழ் சமூகத்தில் தமது தொழில்சார் அனுபவங்களை
படைப்பிலக்கியத்தில்
வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு.
எனினும், தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில்
வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா
ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா
பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வாண்டு தனது பவளவிழாவை
கொண்டாடும் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறே இந்தப்
பதிவை எழுதுகின்றேன்.
எனக்கு அவரை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு தெரியும்.
அவரது
எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அறிந்திருந்திருந்தமையால், 1997ஆம் ஆண்டு எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழாக்காலத்தில் மெல்பனில் நடந்த விழாவுக்கு
அவரை தலைமை தாங்குவதற்கு அழைத்திருந்தேன்.
அந்த விழா மெல்பன் வை.
டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் அவரது தலைமையில் நடந்தபோது, மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி,
ஓவியர் கே.ரி. செல்வத்துரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அன்று முதல் கந்தராஜா அவர்கள்
மெல்பன் கலை, இலக்கிய வட்டாரத்திலும் நன்கு அறிமுகமானவர். சிட்னி இலக்கியப் பவர் அமைப்பிலும் இணைந்திருந்தார். அண்ணாவியார் இளைபத்மநாதனின் ஒரு பயணத்தின் கதை கூத்திலும் பங்கேற்றிருந்தார்.
அந்தக் கூத்து மெல்பனில் அரங்காற்றுகை செய்யப்பட்டபோதும் வருகை தந்திருந்தார்.
சிட்னியில் தமிழ் மாணவர்களுக்கான
பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்ட வேளையில் அங்கிருந்த தமிழ் அறிஞர்கள், கல்விமான்களுடன்
இணைந்து செயல்பட்டவர்.
கந்தராஜா, இலங்கை
வடபுலத்தில் கைதடி கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு, புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த தமிழ் ஆசான் ( அமரர் ) ஆறுமுகம் சின்னத்தம்பி –
முத்துப்பிள்ளை தம்பதியரின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார்.