சுதந்திர இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. ஒரு கோடி 70 இலட்சத்துக்கும் மேற்பட்டட மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக 690 வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 8,388 பேர் இத்தேர்லில் அபேட்சகர்களாகக் களம் இறங்கியுள்ளனர்.
இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க தேர்தலாக அமையுமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெறாத பல நிகழ்வுகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
இந்நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது. அத்தேர்தலில் 39 பேர் அபேட்சகர்களாகப் போட்டியிட்டனர். அவர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டு பாராளுமன்ற அரசியலில் 45 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். அவர் ஐந்து தடவைகள் பிரதமராகப் பதவி வகித்துள்ளதோடு அமைச்சு பதவிகள் பலவற்றையும் வகித்திருக்கிறார். அதேநேரம் எதிர்க்கட்சி தலைவராகவும் பல வருடங்கள் இருந்துள்ள அவர், நாட்டின் ஜனாதிபதி பதவியையும் இறுதியாக வகித்துள்ளார்.
