Friday, April 17, 2020 - 6:00am
கொரோனா பேரழிவில் இருந்து உலகம் முற்றாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பதே சர்வதேச நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்புவதை விட கொரோனாவில் இருந்து தப்பிக் கொள்வதே பெரும் சவாலாக உள்ளது.
கொரோனா அனைத்து வயதினரையும் தாக்குகிறது என்றாலும் வயதானவர்கள்தான் இதனால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் இறந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கும் மேலானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா தாக்கினால் அவர்களை குணப்படுத்துவதற்கு வைத்தியர்கள் போராட வேண்டியுள்ளது.
வயதானவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுவதற்கு முதல் காரணம் அவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்தான். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத இந்தக் காலங்களில் அவர்களின் அன்றாட உடல் இயக்கங்கள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளும், வலிகளும் ஏற்படலாம். அதேசமயம் சமூகத்தில் இருந்து விலகியிருப்பது அவர்கள் மனநிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த கடினமான காலத்தில் அனைவரும் குறிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் முதியவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகிறது. வயதானவர்களுக்கு ஆரோக்கியமான இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் வயது தொடர்பான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு இது அவசியமாகும்.
பெரும்பாலான வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது வீழ்ந்து விடுவதால் உண்டாகும் காயங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், இதனால் உடல் செயல்பாடுகளிலிருந்து விலகி இருக்கிறார்கள்.