மரண அறிவித்தல்

.
     திரு .சதாசிவம்  லோகேஸ்வரன்  

பிறப்பு 11.10.1938,            இறப்பு 05.07.2020    

                 சட்டத்தரணி நொத்தாரிஸ் ஜே பி யூ எம்
முன்னாள் யாழ் வலிகாமம்கிழக்கு பிரதேச சபை  தலைவரும் ஆவார் 

யாழ் புத்தூரைப் பிறப்பிடமாகவும் , புத்தூர், கோப்பாய் , கொழும்பு
 ஆகிய இடங்களில்  பணிபுரிந்தவரும், வென்வேர்த்வில் சிட்னி ஆஸ்திரேலியாவில் வசித்தவருமான சதாசிவம்  லோகேஸ்வரன்
அவர்கள்  ஞாயிற்று கிழமை  5ம் திகதி இறைபதம் அடைந்தார்.

இவர்புத்தூரைச்  சேர்ந்த சுப்ரமணியம் சதாசிவம் (ஜே பி)
வள்ளிப்பிள்ளை  தம்பதிகளின் அருமைப் புதல்வனும்  கோப்பாய் தெற்கைச் சேர்ந்த  மறைந்த மயில்வாகனம் காந்திமதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் , மறைந்த மங்கயற்கரசியின் அன்புக்கு கணவரும் , பிரவாகினி (சிட்னி) , எண்குணன் (சிட்னி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும். காலம் சென்ற நல்லநாயகி , காலம் சென்ற  ரங்கநாயகியின் பாசமிகு சகோதரனும் , கிருஷ்ணகுமாரன், நிலானி, ஆகியோரின் அன்பு மாமனும் , மறைந்த தா.வேல்நம்பி , மறைந்த  க.கனகரத்தினம் (மந்துவில்) , டாகடர் மனோன்மணி (லண்டன்), சுதந்திரநாதன் நிரன்சலாதேவி (கொழும்பு) , மறைந்த காந்திமதிநாதன் , கமலாதேவி (கொழும்பு), ஜீவாஅமிர்தம் புனிதவதி (நல்லூர்)  ஆகியோரின் மைத்துனரும் , சரஷா, பபிதன் , யஷ்னி , சேஷான் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்

தற்போது நிலவும்  கோவிட் 19  விதிமுறைகளினால் அன்னாரின் இறுதிச் சடங்கில் குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .

தயவு செய்து இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: எண்குணன் +61 422 578 682 or  +61 425 280 826

இறுதிச் சடங்கு விபரம்

08.07.2020 புதன்கிழமை , Viewing 12.15 pm. 1.15pm  Ceremony and Cremation 1.15pm  to 3.00 pm. East chapel , Rockwood , Lidcombe  இல் நடைபெறும்


விலத்தி யெங்கும் போகவில்லை ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


          நல்ல நாடு நாமிருந்தும்
                  உள்ள தெல்லாம் இங்கிருந்தும்
          எண்ண மெலாம் பிறந்தநிலம்
                  எழுந் தெழுந்து வருகிறதே
          துள்ளி யோடி விளையாடி
                    துணிவுடனே ஊரைச் சுற்றி
          நண்ப ரெலாம் சூழ்ந்திடவே
                  நாமங்கு மகிழ்ந் திருந்தோம் !


          கார் எமக்கு இருக்கவில்லை
                  கையில் போன் இருக்கவில்லை
          விதம் விதமாய் கணனியையும்
                  வீட்டில் நாம் காணவில்லை
          சண்டை  பல  இருந்தாலும்
                  உறவு  அங்கு  உதவியதே
          வீடெல்லாம் கல கலப்பு
                  மன  நிறைவைத்  தந்ததுவே  !


          மாடி  மனை  ஏதுமில்லை
                  வசதியுடன்  வீடும்  இல்லை
          சோறு கறி பஞ்சமில்லை
                  சொகுசான  வாழ்வும் இல்லை
          ஊர் முழுக்கக் கோயிலுண்டு
                  உவப்பான விழாவு முண்டு
          தேரோட்டம்  என்று விட்டால்
                    ஊர்முழுக்க நிற்கு மங்கே  !


புதிதாய் ஒரு நோபல் பரிசு __________________________________________ருத்ரா


இந்த உலகையே
குலுக்கிக்கொண்டிருக்கிறது.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டை 
நிறுத்துகிறது.
கிரிக்கெட் மைதானங்களை
காலியாகவே வைத்திருக்கிறது.
கோவில்களுக்கு
வழிபாட்டுக்கூடங்களுக்கு
பூட்டு போடுகிறது.
விழாக்கள் இல்லை.
பண்டிகைக்கூட்டங்கள் இல்லை.
பிரம்மாண்ட தேர்களும் நகர இயலவில்லை.
இது பற்றி
கடவுளுக்கும் பிராது போயிற்று.
கடவுளுக்கும் கூட சனிதோஷம் பிடிக்கும்
என்று 
சனி பகவான்களை கும்பிடுகிறீர்கள்.
அப்புறம் என்ன?
என்று குறும்பாய் சிரிக்கிறார் கடவுள்.
ஆகாசத்திலிருந்து அசரீரி ஒலிக்கிறது.
"கடவுள்கள் நாங்கள் எல்லோரும்
ஊரடங்கில் இருக்கிறோம்.
இனி உங்கள் கடவுள் கொரோனா மட்டுமே"
பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூடங்களையே
கிலியில் ஆழ்த்தி
குழப்பம் செய்து கொண்டிருக்கிறது.

அஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம் முருகபூபதி


மெல்பனில்  கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக  என்னுடனும்  மற்றும் அனைவருடனும்  சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின்   நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance -  NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது சந்தித்து உரையாடியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.
எங்கே காண நேர்ந்தாலும், எனது எழுத்துக்கள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை அவர் சொல்வதற்கு தவறுவதில்லை.  அவர் சிறந்த தமிழ் கலை, இலக்கிய பற்றாளர் என்பதை அவரது உரையாடலிலிருந்து தெரிந்துகொள்ளமுடியும்.
அவர் முகநூலிலும் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிடுபவர் என்று,  எனது நண்பர்கள் சொல்லி அறிந்துள்ளேன். என்வசம் முகநூல் இல்லாதமையால் அதுபற்றி வேறு எதுவும் மேலதிகமாக என்னால் சொல்ல முடியவில்லை.
மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலப்பகுதியில் 1989 ஆம் ஆண்டு,  நண்பர் இராஜரட்ணம்  சிவநாதனின் ஏற்பாட்டில் தமிழ்க்கலை மன்றத்தினால், பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் ஒரு நவராத்திரி காலத்தில் கலைமகள் விழாவை நடத்தினோம்.

புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 02 முருகபூபதி கையெழுத்துப் பிரதி முதல் கணினி இதழ் வரையில்


அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்களின் வருகையை கையெழுத்து ஏடுகளிலிருந்துதான் அவதானித்தல் வேண்டும். 1988 – 1989 காலப்பகுதியில் சிட்னியிலிருந்து எழுத்தாளர் மாத்தளைசோமு தமிழ்க்குரல் என்ற கையெழுத்துப்பிரதியை ஆரம்பித்தார். பின்னர் அதே பெயரில் ஒரு பதிப்பகமும் நடத்தி நூல்களை தமிழகத்தில் அச்சிட்டு பெற்றார்.
அதே காலப்பகுதியில்  மெல்பனில் சில நண்பர்கள் இணைந்து அரசியல் – சமூக விமர்சன ஏடாக மக்கள் குரல், செய்திச்சுடர் முதலான கையெழுத்து  ஏடுகளை வெளிக்கொணர்ந்தனர்.
கணினியில் தமிழ்  உருபுகள் அறிமுகமானதும், கையெழுத்து இதழ்களின் அவசியம் அற்றுப்போனது.
விமல்.அரவிந்தனின் மரபு, யாழ். பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு, பொன். சத்திய நாதனின் தமிழ் உலகம் - TAMIL WORLD, தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு,  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாணவர் அமைப்பின் உணர்வு, மற்றும் கதிர், பிரவாகம் , முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியத்தின்  தமிழ் அவுஸ்திரேலியன், மருத்துவர்  கேதீஸ்வரனின் கலப்பை,  நடேசனின் உதயம் ,  தமிழர் ஒருங்கிணப்புக்குழுவின் ஈழமுரசு,  அறவேந்தனின் மெல்லினம்    முதலான இதழ்களும் பாரதி சிறுவர் இதழ், இன்பத்தமிழ், தினமுரசு முதலான இதழ்களும்  வந்தன. காலப்போக்கில் நின்றன.
தற்போது தொடர்ந்தும் சிட்னியிலிருந்து மாத்தளை சோமு ஆசிரியராகவிருக்கும்  தமிழோசையும்   மெல்பன் கேசி  தமிழ் மன்றத்தின் இளவேனில் சிறுவர் இலக்கிய இதழும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கடந்த இரண்டு வருடகாலமாக தெய்வீகன் – ஜெயபிரசாந்த் இணைந்து வெளியிடும் எதிரொலி மாத இதழ் இதுவரையில் தங்கு தடையேதுமின்றி வெளிவருகின்றது.
கடல்சூழ் கண்டத்தில் தமிழ் வளர்ப்போம், நாம் கலை வளர்ப்போம், எங்கள் மொழி வளர்ப்போம், பற்பல திசையிலும் சென்றவர்கோடி, எம்மிடை வாழ்வோர் சிந்தனை நாடி, விக்ரோரியாவில் உதித்தது ஒன்றியம், விடியலை நோக்கி தமிழ் ஒளிபரப்பும்  என்ற எழுச்சிக்கீதத்துடன் தோன்றிய தமிழர் ஒன்றியத்தின் மாத இதழ் அவுஸ்திரேலிய முரசு.  இதன் ஆசிரியராக இருந்தவர் ( அமரர் ) அருண். விஜயராணி.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி நினைவில் ஒன்பது ஆண்டுகள் - கானா பிரபா


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஜூன் 6, 2011 நம்மை விட்டு மறைந்தார். நம் தமிழ்ச் சமூகத்தின் புலமைச் சொத்தான அவரின் பவள விழா ஆண்டில் துறைசார் அறிஞர்களையும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி ஒன்றை 2007 ஆம்  ஆண்டில் செய்திருந்தேன். இந்தப் பணியை அன்று செய்து முடிக்கப் பெரும் உறுதுணையாக இருந்தவர் மறைந்த தமிழ்த்தேசியர், கவிஞர்  கி.பி.அரவிந்தன் அவர்கள். அதிலிருந்து ஒரு பகிர்வு இது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

'தேர்தல் கால அதிர்வெடிகள்’ -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-




தவிக்காலத்தில் மக்களுக்கு நல்லதைச் செய்யாமல், அதனால் அவர்களது ஞாபகத்திலிருந்து கரைந்து போனவர்கள், மீளவும் ஒரு தேர்தல் வந்தால்... பாவம்! என்ன செய்வார்கள் 

தம்மை குறுகிய காலத்தில் பிரபலமாக்கி, எல்லாரையும் திரும்பிப் பார்க்கச் செய்வதற்கு அதிர்ச்சியூட்டும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர, அவர்களுக்கு என்ன வழியிருக்கிறது? 
அவை செய்திகளாகவே இருக்க வேண்டுமென்பதில்லை… அவற்றில் உண்மை இருக்க வேண்டுமெனும் அவசியம் கூட இல்லை.
பொய்யாய்… புளுகாய்… சோடிப்பாய்... எதுவாயினும் என்ன, அவர்களது இப்போதைய தேவை, மக்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தல்தான்.
மக்களின் ஞாபகத் திரையில் மீளவும் தம்மை ஸ்தாபிதம் செய்தால் அதுவொன்றே அவர்களுக்குப் போதுமானது. 
அப்படி நினைவுக்குக் கொண்டு வருவதால், தன்னைப் பற்றிய எதிர்ப்புணர்ச்சிதான் பெருகும் என எவரும் எண்ணுவதேயில்லை. பழசெல்லாம் மறந்து, எதையாவது எதிர்பார்க்கும் வாக்காளப் பலவீனத்தை, அந்த அவர்கள் நன்கறிவார்கள். 
கவனிப்புகளுக்குப் பின்நிற்காத கரங்கள் அவர்களுக்கு...
பிறகென்ன... அவர்களின் தேவை, வாய் வெடிகள் மட்டுமே. 
அந்த வெடிச் சத்தங்களைக் கேட்டு, வாக்காள முகங்கள் தங்களைத் திரும்பிப் பார்த்தால்... அவர்களுக்கு அதுபோதும்.

மல்லிகை ஏடுதந்த மன்னவனே நீவாழ்க ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா





    ஈழத்தில் ஐம்பது வருடங்கள் இடைவிடாது   "மல்லிகை "  என்னும் சஞ்சிகையினை தனது அயராத உழைப்பினால் வெளியிட்டு பல எழுத்தாளர்களைஉருவாக்கி , பல நூல்களைப் பதிப்பித்து சாதனை              நாயகனாய்  அகவை  தொண்ணூறினைத் தாண்டி நிற்கும் மிகச்சிறந்த எழுத்தாளர் " டொமினிக் ஜீவாவுக்கு " இக்கவிதை 
      
     தமிழினை முதலாய்க் கொண்டு
             தரணியைப் பார்க்க வைத்த
     உரமுடை டொமினிக் ஜீவா
             உவப்புடன் என்றும் வாழ்க
    அளவிலா ஆசை கொண்டு
             அனைவரும் விரும்பும் வண்ணம்
     தெளிவுடன் எழுத்தை ஆண்ட
               தீரனே வாழ்க வாழ்க !





மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த காணோளி நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் எம். தேவகௌரி முருகபூபதி


நேற்று  ஜூலை 05 ஆம் திகதி ஞாயிறு மாலை மெல்பன் கேசி தமிழ்
மன்றத்தின் மூத்த பிரஜைகளின்   ஒருங்கிணைப்பில் நடந்த காணோளி சந்திப்பு கலந்துரையாடலில் இலங்கை ஊடகவியலாளரும் இலக்கியவாதியும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி தேவகௌரி கலந்துகொண்டு உரையாற்றினார்.
தேவகௌரி கிளிநொச்சியில் பிறந்து,  தனது ஆரம்பக்கல்வியை தொடர்ந்து,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை மாணியாகி, சில வருடங்கள் கிளிநொச்சி கல்வி இலாகாவில் பணியாற்றிய பின்னர் முழுநேர பத்திரிகையாளரானவர்.
இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, ஈழத்தின் மூத்த தமிழ் இலக்கிய இதழ் என அறியப்படும் மல்லிகை தொடர்பாக ஆய்வுமேற்கொண்டு, எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் என்ற ஆய்வேட்டை  சமர்ப்பித்தவர்.
பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் மாணவியுமாவார்.
தனது பத்திரிகை உலக வாழ்க்கை,  மற்றும் ஊடகத்துறையில் சந்தித்த அனுபவங்கள் தொடர்பாகவும் இன்றைய காணோளி நிகழ்ச்சியில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
 தேவகௌரி எழுதிய மல்லிகை விமர்சனங்கள் பற்றிய ஆய்வேட்டை எழுதுமாறு  ஆலோசனை தந்தவர்  தனது ஆசான் பேராசிரியர் சிவத்தம்பி எனவும், பின்னர் குறிப்பிட்ட ஆய்வேட்டை நூலுருவாக்குமாறு தூண்டியவர் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எனவும் நன்றியோடு குறிப்பிட்டார்.
முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரல் வார இதழிலும் பணியாற்றியிருக்கும் தேவகௌரி, அங்கு செய்திகள், மற்றும் கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் முதலான ஆக்கங்கள் மீது  செவ்விதாக்கம் மேற்கொண்ட முறைமைகள் பற்றியும்,  விளக்கினார்.
பத்திரிகையிலிருந்து வெளியேறிய பின்னர்  சுவீடன் -  நோர்வே முதலான நாடுகள் இலங்கையில் இதழியல் கல்லூரிகளை நடத்த முன்வந்தபோது,  அவற்றில் இணைக்கப்பட்ட இளம்  பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியையும் மேற்கொண்டவர்.

'வடிவினை முடியக் கண்டார்?' பகுதி 02: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-



லகை உய்விக்கக் காவியம் செய்தவன் கம்பன்.
அவன் தன் காவியத்தில் உண்மை இறைநிலையை உணர்த்தவென,
அமைத்த காட்சிகள் பல.
அவற்றுள் சிலவற்றைக் காண்பாம்.
🌸 🌸 🌸 🌸
பாலகாண்டம் - ஆற்றுப்படலம்.
கோசலத்தில் பாயும் சரயுநதியின் வெள்ளம் பற்றி,
வர்ணிக்கத் தலைப்படுகிறான் கம்பன்.
இமயமலையின் உச்சியின் ஓரிடத்திலிருந்து பிறக்கும்,
சரயுநதியின் வெள்ளம்,
ஏரி, அருவி, தடாகம் முதலிய பல இடங்களில் பொருந்தி,
பல பெயர்களைப் பெற்று பரவிச் செல்கிறது.
இக்காட்சியை உவமையால் விளக்க நினைக்கும் கம்பன்,
ஒன்றேயான பரம்பொருள்,
பல சமயத்தவரின் சூழ்ச்சிக்கு உட்பட்டு,
பலவிதமாகச் சொல்லப்படுவது போல,
அக்காட்சி இருக்கிறது என்று பாடி முடிக்கிறான்.
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈதென்னத்
தொல்லையில் ஒன்றேயாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே.

ஓங்கிஇனம் வாழ்ந்திடவே அன்று அவர் உயிர்துறந்தார் - பரமபுத்திரன்


பதித்து அவர்  நடந்திட்ட மண்ணும் – என்றும்
வீழந்தாலும் வித்துடல்கள்  யாருக்கும் கிடைப்பதில்லை   
எப்போதும் ஈழமே  நினைப்பாக வாழந்தமையால்
காற்றிலும்   நீரிலும்   மண்ணிலும்  கலந்து
வாழ்கிறார் என்றும் ஈழத்தைச் சூழந்து
அன்பினால் இணைந்து  அயலானை நேசித்து
பண்பாடு பேணி மற்றோரை  மதித்து
கொண்டாடி மகிழ்ந்து  நன்றாக வாழந்த

சுரண்டல், அடக்குமுறைக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்




101 வது பிறந்த தின நினைவு
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவராக கார்த்திகேசன் விளங்குகிறார். பல்கலைக்கழகப் படிப்பு முடித்து, ஆங்கிலச் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்றவர். அக்காலம் முதல் கட்சிப் பணியாற்றியவர்.
கட்சியின் உத்தியோகபூர்வ வாரப் பத்திரிகையான ‘போர்வார்ட்’ (Forward) ஸ்தாபக ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளர் - எழுத்தாளர்.
கல்லூரி ஆசிரியராகவும் , அதிபராகவும் பல வருடங்கள் பணியாற்றியவர். இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்சியால் பணிக்கப்பட்டு 1946 இல் யாழ்ப்பாணம் வந்து கட்சியை அறிமுகப்படுத்தியவர்.
அன்று யாழ் விக்ரோறியா வீதியில் அமைந்த தனது வாடகை வீட்டையே கட்சி அலுவலகமாகப் பாவித்தவர்.
தோழர்கள் சு. வே. சீனிவாசகம், வீ. ஏ. கந்தசாமி, ஆர். பூபாலசிங்கம், எம். சி. சுப்பிரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோர் இவருடன் இணைந்து கட்சியை வடபகுதியில் ஸ்தாபித்துப் பணியாற்றினர்.
பிற்காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான கே. டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, நீர்வை பொன்னையன் ஆகியோர் இவரது ஆளுமைக்குட்பட்டார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும், இலக்கியவாதியுமான ப. ஜீவானந்தம் 1947 -ம் ஆண்டில் இந்தியாவில் தலைமறைவாகி யாழ்ப்பாணத்தில் இவரது இல்லத்திலேயே சிலகாலம் தங்கி வாழ்ந்தார்.
யாழ் மாநகரசபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர். அக்காலத்தில் சட்டத்தரணி எம். எம். சுல்தான் என்பவரை மாநகரசபை முதல்வராக்கப் பெரும் முயற்சி செய்து வெற்றி கண்டவர் அமரர் கார்த்திகேசன்
அன்று ஏழை மக்கள், மாணவர்கள், இளைஞர்களின் ஆதர்ச மனிதனாக விளங்கியவர்.
1963 ம் ஆண்டு இறுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்த போது இவர் தோழர் நா. சண்முகதாசன் தலைமையில் சீனச்சார்பு நிலையெடுத்த கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டார்.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 7 - எதிரொலி - சுந்தரதாஸ்

.



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் டைரக்ட் செய்து உருவான படம் எதிரொலி . பாலச்சந்தரின் டைரக்ஷனில் சிவாஜி நடித்த ஒரே படமும் இதுதான். சிவாஜியின் நடிப்பில் பாகப்பிரிவினை பாலும்-பழமும் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த என் வேலுமணி எம்ஜிஆரை வைத்து சில படங்களை தயாரித்து விட்டு மீண்டும் சிவாஜியிடம் திரும்பினார். புது இயக்குனராக அறிமுகமாகி பிரபலமடைந்து கொண்டிருந்த பாலச்சந்தரின் இயக்கத்தில் சிவாஜி நடிக்க ஒரு படத்தை தயாரித்தால் வெற்றி காணலாம் என்ற எண்ணத்தில் எதிரொலி படத்தை தயாரித்தார்.

சிவாஜியும் பாலசந்தரும் இணைகிறார்கள் என்றவுடன் திரையுலகில் எதிர்பார்ப்பு எகிறியது. வித்தியாசமான படத்தை இருவரும் தரப் போகிறார்கள் என்று உற்சாகம் ரசிகர்களையும் பற்றிக்கொண்டது. அதற்கு ஏற்றாற்போல் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக கேஆர்விஜயா, இவர்களுடன் இலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் சுந்தரராஜன், நாகேஷ், வி கே ஆர், விஜயலலிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள் . இவர்களுடன் காதல் ஜோடிகளாக சிவகுமாரும் லட்சுமியும் தோன்றினார்கள்

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள்


உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை

மஹிந்தானந்த முறைப்பாடு; வாக்குமூலம் பதிவு

மஹிந்தானந்த அளுத்கமவின் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு

தமது கருத்தை எவரும் அரசியல்மயப்படுத்த வேண்டாமென மஹிந்தானந்த வேண்டுகோள்

அரவிந்த டி சில்வாவிடம் 5 1/2 மணி நேரம் வாக்குமூலம் பதிவு (UPDATE)

ஆட்ட நிர்ணயம்; உபுல் தரங்க 2 மணி நேரம் வாக்குமூலம்  

குமார் சங்கக்கார விளையாட்டு குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்            

வெளியேறினார் சங்கக்கார; நாளை மஹேலவுக்கு அழைப்பு  

ஊடகங்களில் வரமாட்டேன் என செய்தி; அதனால் சமூகமளித்தேன்  

கிரிக்கெட்டை உயிராக மதிப்பவன் நான் -மஹேல          



உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில், ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட கருத்து தொடர்பிலான விசாரணையை இலங்கை கிரிக்கெட் செயலாளர் ஆரம்பித்துள்ளார்.
2011ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே, 2011ம் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கான முறைப்பாடொன்றை எடுத்துக்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு, விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து, இதுதொடர்பில் மேலதிகமாக ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த ஆட்டநிர்ணயம் தொடர்பில், மஹிந்தானந்த அலுத்கமகே சிரச ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில், “2011ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் நடைபெறும் போது, நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தேன். எனினும், நாட்டில் பதற்ற நிலை ஏற்படும் என்பதற்காக குறித்த விடயத்தினை வெளிப்படுத்தவில்லை. 2011ம் ஆண்டு நாம் இந்திய அணிக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், ஆட்டநிர்ணயம் செய்யப்பட்டது” என்றார். எவ்வாறாயினும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைச் செய்திகள்


தமிழ் - சிங்கள சமூகங்கள் விரைவில் இணைந்து வாழும் சூழல் வலுப்பெறும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வடபகுதி மக்களின் முதல் தெரிவாக அமைச்சர் டக்ளஸ் இருக்க வேண்டும்

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சகல விடயங்களிலும் அரசாங்கம் முன்னுரிமை

உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியரினால் பிரதமருக்கு யாழ். மாம்பழங்கள்

அரந்தலாவை படுகொலை; உயிர்தப்பிய பௌத்த பிக்கு அடிப்படை உரிமை மனு தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக அறுவடை விழா

இலங்கை கிரிக்கெட் தலைவர் யாழ் விஜயம்

நயினை நாகபூசணி அம்பாள் தேர்

கொழும்பு துறைமுகத்தின் இரு முனைய திட்டங்களை ஆராய ஐவர் குழு

வெள்ளவத்தையில் கடையொன்றில் தீ; தீயணைப்பு பிரிவு பணியில்



தமிழ் - சிங்கள சமூகங்கள் விரைவில் இணைந்து வாழும் சூழல் வலுப்பெறும்




யுத்தம் காரணமாக பிரிந்திருந்த
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கடந்த காலத்தில் யுத்தம் என்ற ஒரே ஒரு காரணத்தினால் பிரிந்திருந்த நிலமை இப்போது மாறியிருக்கின்றது. இரு சமூகங்களும் இணைவதற்கு இப்போது ஆயிரம் நன்மையான காரணங்களுள்ளன. அதனால் எதிர்காலத்தில் இரு சமூகங்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழும் சூழல் மேலும் வலுப்பெற வேண்டும. அதற்காக நாங்கள் உழைக்க வேண்டுமென்று கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நிதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்றுக் காலை கொழும்பு வெள்ளவத்தை அஷ்டலட்சுமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைகளைத் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்கள்.

உலகச் செய்திகள்


கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி

ரஷ்ய உளவு விமானங்களை இடைமறித்த அமெ. விமானம்

தற்காப்புக் கலைஞர்களை எல்லைக்கு அனுப்பிய சீனா

இந்திய-சீன எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்!

ஜெர்மனியில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகள் வாபஸ்

சீன எல்லைக்கு ஆயுதம் தாங்கிய, அதிவேக படகுகளை அனுப்பும் இந்திய இராணுவம்

141 கொரோனா தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு

மியன்மார் சுரங்க விபத்தில் 113 பேர் பலி

அமெரிக்காவில் நாளாந்த வைரஸ் தொற்று சாதனை அளவுக்கு உச்சம்


கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி




கராச்சி பங்குச் சந்தை சூடு; 4 தீவிரவாதிகள் உள்ளிட்ட 7 பேர் பலி-Pakistan Karachi Stock Exchange Attack-7 Killed Including 4 Terrorists
பல்கிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்பு
பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள பங்குச் சந்தை கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களில் ஒரு பொலிஸார், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தாக்குதலை நடத்திய நான்கு பேர் அடங்குவதாக, அந்நாட்டு மீட்பு சேவை தலைவர் பைசல் ஆதி அல் ஜசீரா செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 21 – இடக்கை - சரவண பிரபு ராமமூர்த்தி


இடக்கை - தோற்கருவி
இடக்கை ஒரு தோற் கருவி ஆகும். இது பேரிகை, படகம் , உடுக்கை,
மத்தளம் முதலிய தாள இசைப் பறைகளுள்  ஒன்று. இதன் நடுப்பாகம் சுருங்கி இருக்கும். இதனை தோளில் தொங்க விட்டுக் கொண்டு இடது கையினால் நடுவில் உள்ள வார்க் கட்டுக்களை அழுத்திப் பல்வகை ஓசை அளவு வெளிப்பட முழக்கப்படுவது. ஒரு குச்சி கொண்டு வலப்பக்கத்தில் அடித்து வாசிப்பர். குச்சியின் நுனியில் சற்று வளைந்து இருப்பதால் இக்குச்சி குனில் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு முகப் பறையாகும் - அதாவது ஒரு பக்கத்தில் மட்டும் வாசிக்கப்படுவது.

இடது கையினால் கருவியின் நடுவில் உள்ள வார்க்கட்டுக்களை
அழுத்திக்கொண்டு ஒசை வகைகள் எழுப்பப்படுவதினால் இடக்கை எனப் பெயர் பெற்றது. இடக்கை வேறு பல பெயர்களை உடையது என்று அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் குறித்துள்ளார். ஆவஞ்சி எனினும், குடுக்கை எனினும் இடக்கை எனினும், ஒக்கும் என்றும் குறித்துள்ளார். இதற்கு ஆவினுடைய வஞ்சித் தோலை பொருத்தி செய்வதால் ஆவஞ்சி எனப் பெயர் ஆயிற்று என்கிறார் அடியார்க்கு நல்லார். குடுக்கையாக குடையப்பெற்றதால் குடுக்கை என்று பெயராயிற்று என்கிறார். ஒரு சிலர் இடக்கையும் உடுக்கையும் ஒன்று என்பர். இது தவறான கருத்து என்கிறார் தமிழிசை அறிஞர் வீ.ப.க.சுந்தரம் அவர்கள். திருப்புகழ் ஆசிரியர் அருணகிரிநாதர் இடக்கையும் உடுக்கையும் யாவும் மொகுமொகென அதிர (திருப்புகழ் 1124 அகர முதலென -பொதுப்பாடல்கள்) என்று பாடுவதினால் இவை இரண்டும் இரு வேறு இசைக்கருவிகள் என்பது திண்ணம். கல்லாட உரையில் இடக்கைக்கு அவுகள் நீளம் 16 விரலும் முகம் 10 குண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது துடி, திமிலை, மத்தளம் முதலிய கருவிகளுடன் சேர்த்து இசைக்கப்பட்டது என்றும் கல்லாட உரை கூறுகிறது. தமிழர் இசைக்கருவிகள் பல இந்தியாவில் பரவி வெவ்வேறு வடிவங்களில் புழக்கத்தில் இருந்தாலும், தமிழர் இனத்திற்கே உரிய ஒரு பிரத்யேக இசைக்கருவி இடக்கை எனலாம். இதிலிருந்து வெளிப்படும் ஓசை மற்ற இசைக்கருவியில் இருந்து வரும் இசையில் இருந்து மிகவும் மாறுபட்டது, பிரத்தியேகமானது. இத்தனை பெருமை வாய்ந்த இந்த இசைக்கருவியை தமிழர்களாகிய நாம் மறந்தது நமது துர்பாக்கியம்.

பேர்த் பாலா முருகன் கோவில் ஆடி மாத உற்சவம்






அப்பா ( குட்டிக் கதை ) - நிலாமதி

.


முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம்   வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும்  இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண்  பிள்ளைகள்  பதினாறு வயதை அடைந்ததும்  ஒரு இரவு காட்டில்  தங்க  வேண்டும்.  அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் .  அவர்களது பதினைந்தாவது வயதில்  வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல்   முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன்  மகனுக்கு பதினாறாவது  பிறந்த நாள்  வந்தது மறு  நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன்  சகல புத்திமதி கள் யுக்திகளை   மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் 

 மறு  நாள் மாலையானதும் தந்தை காட்டுக்குள் அழைத்து  சென்றார் .  மகன் கண் கலங்கிய வாறே  தந்தையுடன் சென்றான்.  அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே  இருக்க விட்டு தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி வந்து விட் டார்.  மாலை இரவா னது. வா னத்தில் நட்ஷத்திரங்கள் மின்ன தொடங்கி விட்ட்ன எங்கும் ஒரே இருட்டு . மகனோ  தூக்கமின்றி  விழித்துக் கொண்டிருந்தான் பயத்தாலும் தனிமையாலும் ..நேரம் ஓடிக் கொண்டு இருந்தது 
.ஒரு வாறு பொழுது புலரத்தொடங்கிவிட்ட்து 

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் – 20 தேநீர் ஆற்றவேண்டியவன் வரலாற்றாய்வாளனாகிய கதை ! அமெரிக்கப் பயணத்தில் எதிர்பாராத சந்திப்பு ! !


இலங்கைப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நாடாளாவிய ரீதியில் ஆசிரியர்களின்  இடமாற்றங்கள், பாட நூல்களை அரசே பதிப்பித்து வெளியிடல் முதலான மாற்றங்களும் முக்கியமானவை.
இந்த மாற்றங்கள் என்னையும் ஓரளவு பாதித்தது என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்மொழிப்பாட நூல் தயாரிப்பில் நானும் ஈடுபட நேர்ந்தது. அது ஓர் இடைக்கால மாற்றம். பாடநூல் தயாரிப்பு எடுத்த எடுப்பில் தொடங்கப்பட்டதனால், அதுவரையில் கணித – விஞ்ஞான பாட ஆசிரியராக பணியாற்றிய நான், தமிழ்மொழி பாட நூற்குழுவில் இணைக்கப்பட்டேன்.
ஆனால், அந்தத்  திடீர் மாற்றம் சில மாதங்களுக்குத்தான் நிலைத்தது. வடமாகாணத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஏறக்குறைய 18 ஆண்டுகள் பணியாற்றியிருந்த என்னை, கிழக்கு மாகாணத்தில் ஓட்டமாவடி முஸ்லிம்  பாடசாலைக்கு இடம்மாற்றினார்கள். ஆனால், அந்த மாற்றமும் நிலைக்கவில்லை.

ஆகாயத்தில் பட்டம் அங்கும் இங்கும் பறப்பதுபோன்று அலைக்கலைந்துகொண்டிருந்தேன்.
ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தபோது, எதிர்பாராதவகையில், மற்றும் ஒரு கல்லூரி அதிபர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, தனது கல்லூரிக்கு என்னை அழைத்துவிட்டார்.
அது நான் தமிழகம் சென்று,  தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா  முன்னின்று நடத்திய உலகத்தமிழராய்ச்சி மாநாட்டில், புகாரில் ஒரு நாள் கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கம் பரிசுபெற்ற காலப்பகுதியாகும்.
மட்டக்களப்பு அரசினர் கல்லூரிக்கு நான் செல்வதை விரும்பாத ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலை சமூகம், தங்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கை பிரயோகித்து, என்னை மட்டக்களப்பு அரசினர் கல்லூரிக்குச் செல்லவிடாது தடுத்தது.
இந்த தர்மசங்கடமான நிலையை நான் சமாளிக்க நேர்ந்தது.
இரண்டு மூன்று வாரங்களின் பின்னர், ஓட்டமாவடி முஸ்லிம் பாடசாலைக்கே வரநேர்ந்தது. இந்தவேளையில், நான் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தமிழ்ப்பாட நூலாக்க பணிக்கான அழைப்பு வந்து சேர்ந்தது.
அதுதான், இலங்கை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் கணித பாட நூல் எழுதும் வேலை. அதுவரையில் அங்கும் இங்கும் ஓடிக்களைத்திருந்த நான், மனநிம்மதியுடன் கொழும்பு வந்து சேர்ந்தேன்.
ஆசிரியப்பணியிலிருந்து விலகி, கணித பாடநூல் ஆசிரியரானேன்.
இந்த மாற்றம் 1968 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா - கானா பிரபா

.


இலங்கை வானொலி கடல் கடந்து கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அதன் முன்னணிக் குரல் கேஏஏஏஏ.எஸ்ஸ்ஸ்.ராஜ்ஜ்ஜ்ஜா வின் உருவத்தைத் தங்களுக்குத் தோதான கம்பீரமான நடிகராகக் கற்பனை செய்து கொண்டு அவரைப் பார்க்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையத்துக்குப் படையெடுத்தார்களாம் தமிழகத்தில் இருந்து சில வானொலிப் பிரியர்கள். அவர்கள் வந்திருக்கும் சேதி அறிந்து கூச்ச சுபாவம் கொண்டவர் வெட்கத்தோடு மறைந்தோடி விட்டாராம் அந்த கே.எஸ்.ராஜா.

வானொலிக்கு ஒரு கே.எஸ்.ராஜா போல பாட்டுக்கு ஒரு ஏ.எம்.ராஜா முன்னவர் கவர்ச்சிகரமான குரலாளன் என்றால் பின்னவர் தேன் கனிந்து சொட்டும் பாட்டுக்காரர்.
தன் முகத்தை அடையாளப்படுத்த விரும்பாத ஒலிபரப்பாளர் ஒருபுறம், ஆனால் ஏ.எம்.ராஜாவை நினைத்தால் அவரின் குரல் ஜெமினி கணேசனாக உரு மாறி விடும். நிஜத்தோற்றத்தோடு ஒட்டவே முடியாமல் அச்சொட்டாகப் பொருந்திப் போய் விடும்.
அதனால் தானோ என்னமோ எம்.ஜி.ஆர் தொட்டுப் பல நடிகர்களுக்கும் பாடியிருந்தாலும் இந்த ஏ.எம்.ராஜாவைத் தொடர்ந்து நினைக்க வைப்பவை ஜெமினி கணேசன் பாட்டுகள்.

தனது 22 வது வயதில் பாட வந்தவர் 40 வயதுக்குள் பாடகராக, இசையமைப்பாளராகக் கோலோச்சி விட்டு எழுபதுகளோடு தன் முக்கிய பாட்டுப் பயணத்தை முடித்து விட்டார். அதன் பிறகான பத்தாண்டுகள் மேடைப் பாடகராகவே அதிகம் அறியப்பட்டார். தமிழ்த் திரையிசையில் இசையமைப்பாளர்களின் ஆயுள் குறைவு, இங்கே ஆயுள் என்பது அவர்களுக்குச் சுக்கிர திசை காட்டும் காலம். ஏ.எம்.ராஜாவும் அதில் ஒருவரே.

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 43 முருகபூபதி


ஜீவிகாவின் காதலன் ஜெயசீலன், கொழும்பிலிருந்து திடீரென வந்து – திரும்பிச்சென்றது வரையில் ஒவ்வாரு கணமும்  நடந்த நிகழ்ச்சிகளை அபிதா மனதில் அசைபோட்டவாறு கூரையின் முகட்டின் வெண்ணிற சீலிங்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
பெயர் நன்றாகத்தான் இருக்கிறது.  அபிதா அறுசுவை! 
நிகும்பலையூருக்கு வந்த நாள் முதல் அடுத்தடுத்து இந்த வீட்டில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களுக்குள் தனது வாழ்வும் சிக்குண்டு, திசைமாறிக்கொண்டிருக்கும் கோலத்தை நினைத்துப்பார்க்கிறாள்.
அன்றைய காலப்பொழுது புலருவதற்கு அறிகுறியாக எங்கிருந்தோ 
வரும் சேவலின் கூவல் அவளது செவிகளை வருடிச்செல்கிறது.
தரையில் படுத்திருக்கும் சேவலுக்கு , சூரியக்கதிரின் தாக்கத்தை உணரமுடிவதனால்தான், அது எழுந்து,  அந்தச் சூட்டின்  வலியை தணிப்பதற்காய் கூவுகிறது என்று சிறிய வயதில்  அருகில் படுத்திருந்த ஆச்சி சொன்னது அபிதாவுக்கு நினைவுக்கு வருகிறது.
தினமும் காலையில் துயில் எழும்போது வெளியேயிருந்து கேட்கும் சேவலின் கூவலுடன் ஆச்சியும் நினைவுக்கு வருவது வழக்கம். எங்கிருந்தாலும் சேவலின் இயல்பு ஒன்றுதானே.
அதனையும் எம்மையும் சூழும் இருட்டின் ஆயுள் சூரியன் உதிக்கும் வரையில்தானே..!?
கந்தல் சேலையையும்,  கற்பகம் ரீச்சர் முன்னர் அணிந்து நிறம்மங்கிப்போன சோர்ட்டியையும் அணிந்துகொண்டு, சமையல்கட்டில் வெந்துகொண்டிருந்த என்னை,  பளபளக்கும்  சாரியும் ரவிக்கையும் அணியச்செய்து, முகப்பூச்செல்லாம் பூசைவைத்து அழகுபார்த்து, பல கோணங்களில்  படம் பிடித்துக்காண்பித்து, முன்பின் தெரியாத ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அறிமுகப்படுத்தி, அபிதா அறுசுவை நிகழ்ச்சியில் தோன்றவைக்கப் போகிறார்களா… இந்த காதல்சோடி..?
இதெல்லாம் நடக்கும் காரியங்களா..?
அபிதா, தனது கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்தாள். காலை ஐந்து மணிகடந்துகொண்டிருக்கிறது.
 படுக்கையருகில் சிறிய மேசையிலிருந்த மடிக்கணினியை எடுத்து, முதல் நாள் நடந்த சம்பவங்களை மெதுவாகத்தட்டி எழுதினால் என்ன… என்ற யோசனையுடன்   எழுந்தாள்.   சத்தம் வெளியே கேட்கலாம். வேண்டாம்…   ஜீவிகாவும் மஞ்சுளாவும் வேலைக்குச்சென்ற பின்னர் தட்டலாம்.  அதுவரையில் நாட்குறிப்பில் எழுதிவைக்கலாம் என்ற முடிவுடன், தலைமாட்டில் தலையணைக்கு கீழே இருந்த டயறியை எடுத்து எழுதத் தொடங்கினாள்.    அந்த  நாட்குறிப்பில் அவள் எழுதும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
முதல்நாள் மதியம் ஜீவிகா, தனக்கு அணிவித்த சாரியில் படிந்த பெஃபியூம் வாசம் இன்னமும் உடலுடன் படிந்திருப்பதுபோன்ற உணர்வையும் அவளால்  கடந்து செல்லமுடியவில்லை.