மீள் வாசிப்பு அனுபவம் - 3 ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை - செ .பாஸ்கரன்

.


என் மீள் வாசிப்புக்கு  ஒரு ஊக்கம் கொடுத்த என் புத்தக அறைக்கு நன்றி கூறலாம் . இவ்வாரம் புத்தக அலுமாரிக்கு முன்  நின்றபோது கண்ணில் பட்டது ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை ( From Volga to The Ganga), அது என் பெறாமகனின் மனைவி வாங்கிச் சென்று படித்துவிட்டு இவ்வாரம்தான் திருப்பித் தந்திருந்தார். அது பற்றி பலவிடயங்களையும் அவரோடு பேசிக்கொண்டிருந்ததால் மீள் வாசிப்புக்கு இலகுவாக அமைந்தும் விட்டது.


தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த பெயர் ராகுல்ஜி, உலகம் சுற்றிய பயணியான அவர் இந்தியாவினுடைய தத்துவ வரலாற்றில் பெற்றுக் கொண்ட பெருமையும் அவருக்கு இருக்கின்றது. சோவியத் நாட்டில் தொடங்கி இந்தியாவின் கங்கை வரை இந்த நூல் அழைத்துச் செல்கின்றது. ஐரோப்பாவில் இருந்து கிமு 600 தொடக்கம்  20ஆம் நூற்றாண்டு காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறுகின்றது. தமிழில் முதல் பதிப்பு ஆகஸ்ட் மாதம் 1949 ஆம் ஆண்டு வெளிவருகின்றது 24ம் பதிப்பு ஜூலை மாதம் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது, இதை கண முத்தையா அவர்கள் மொழி பெயர்க்க தமிழ் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இவ்வளவு அதிகமாக பதிக்கப்பட்ட ஒரு பதிப்பு எத்தனை பேருடைய கைகளிலே இது தவழ்ந்திருக்கும் என்று நினைத்து பார்க்கின்றேன். ராகுல் சாங்கிருத்தியாயன் அதுதான் அவருடைய பெயர்
ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் (Hazaribag jail) ஜெயிலில் இருந்ததபடி இப் புத்தகத்தை எழுதி முடித்தார்.  தமிழில் மொழி பெயர்த்த காண முத்தையா அவர்களும் ஜெயிலில் இருந்ததபடி இப் புத்தகத்தை மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது.



நிஷா, திவா ,அமிர்தாஸ்வான்

முதல் மூன்று கதைகளிலும் வால்கா நதிக்கரையிலிருந்து மத்திய ஆசியா வரை படிப்படியாக வந்த இனக்குழுவின் கதைகளை காணலாம்


புருகூதன், புருதானன், அங்கிரா

இந்த மூன்று கதைகளில் புருகூதன் கதையில் செம்பும், வெண்கலமும் புழக்கத்திற்கு வருவதையும், புருதானன் மற்றும் அங்கிரா கதைகளில் சிந்து சமவெளி நகர மக்களுடன் ஆரியர்களுக்கு ஏற்பட்ட போரும்  பேசப்படுகிறது


சுதாஸ், பிரவாஹன், பந்துலமல்லன்

மக்கள் சமூகமாய் இருந்த இனக்குழு அரசபதவியை உருவாக்கிஅப் பதவியை சுரண்டலுக்கான கருவியாகப் பயன்படுத்திநார்கள் இவ் வேலையை விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பரத்வாஜர் போன்றவர்களை வைத்தே செய்ததை சுதாஸ் கதையிலும், பிரவாஹன் கதை பிரம்ம சூத்திரம் உருவாக்கி மக்களை அடிமைப் படுத்தும் வேலையை செய்ததையும் , பந்துலமல்லன் கதையில் கெளதம புத்தரின் நிழலில் பௌத்தம் தழைத்ததையும் பேசடுகிறது.

பஞ்சாயத்து முறை ஒழிக்கப்பட்டு சர்வ அதிகாரமும் கொண்ட சக்ரவர்த்தி காலட்டம் பற்றி பின்பு இந்திய அரசர்களின் வீரம் மொகலாயர்கள் ஆட்சிமுறை , இஸ்லாமியர்களின் வருகை என்று தொடர்ந்து கொண்டு போகிறது. போகின்ற போக்கில் பலவற்றையும் சாடித் தள்ளுகின்றார் .

இவ்வளவு விடயங்களா என்று ஆச்சரியப் படுகின்ற அளவுக்கு ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இணையத் தளங்களில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. விரும்புபவர்கள் பெற்று வாசிக்கலாம். 

C.Paskaran 

No comments: