ஈழவள நாட்டைப் பிறப்பிடமாகக்கொண்டு கல்விகற்றபின் ஆசிரியராய், அதிபருமாய்ப் பெரும்பணி இயற்றியபின்னர், கனடாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கும் தொடர்ந்து மரபு சார்ந்த தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மீகப்பணிகளில் அரும்பெருஞ் சாதனைகள் படைத்துவந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் தமது 91 வயதில் சிவபதம் எய்தினார். இத்திருமகனார் எங்களின் குடும்பத்துடன் மிகவும் கேண்மை பூண்டிருந்தவர் .புலவர் பரம்பரையை இலங்கச் செய்து பதினையாயிரம் செந்தமிழ்ப் பாடல்களாலே தமிழன்னையை அலங்கரித்த எனது தாத்தாவாகிய நவாலி ஊர் “தங்கத்தாத்தா” அவர்களுக்கு அருமையான ஒரு நான்மணி மாலை இயற்றிச் சூட்டி அழகு பார்த்தவர் கந்தவனம் ஆவார். நான் ஒருமுறை தங்கத் தாத்தாவின் நூல்களைக் கனடா நாட்டிலே அறிமுகஞ் செய்யும்வண்ணம் ஏற்படுத்திய விழாவிற்குத் தலைமை தாங்கிச் சிறப்புச் செய்தவர். அவரது 80ஆவது அவையை ஒட்டி ஏற்படுத்தப் பெற்ற விழாவிற்கு நான் ஒரு வாழ்த்துப்பாவை அனுப்பியிருந்தேன். அவரின் நினைவாக தமிழ் முரசு வாசகர்களுடன் அதனைப் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்.
சைவமென்னும் செஞ்சாலி தழைத்தே ஓங்கத்
தகைமைசால் கவிஞரேறே! தமிழ்நீ ரூற்றி
மெய்வருந்திக் கனடாவில் மிளிரச் செய்தாய்!
வித்தகனே உன்னைத்தமிழ் உலகம் போற்ற
ஐயனேயுன் எண்பதாம் அகவையை ஒட்டி
அன்பர்குழாம் உவந்துவிழா வெடுக்கும் ஞான்று
பெய்வளையாள் சிவசத்தி பெற்ற சேந்தன்
பேரருள் சுரந்தருள வாழ்த்து கின்றேன்!
சிந்தனைசொல் செயற்பாட்டில் தூய்மை காத்துச்
சீர்பெருக்கிப் புகழ்வளர்த்துப் புகுந்த நாட்டில்
சுந்தரசண் முகன்மாந்தச் செந்த மிழாற்
சூட்டிநின்ற கவியாரம் மறக்கப் போமோ?
அந்தமிலெம் தமிழ்வளர்க்க மூவே ழாண்டு
அரியபணி கனடாவில் இயற்றிப் உயர்ந்தாய்
சந்ததமும் நிலைத்திருக்கக் கந்தவனப் பெரியோய்
தமிழ்தந்து தவவாழ்விற் றிழைத்து வாழி!