உலகச் செய்திகள்


உலக நன்மைக்காக தடுப்பூசி தயாரிப்பதில் சீனா தீவிரம்

கொரோனா வைரஸ் பரவல்; எங்கள் மீது எந்த தவறும் இல்லை

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை அம்பலப்படுத்திய செய்மதிப் படங்கள்

ஐரோப்பா, அமெரிக்காவெங்கும் அடிமைத்துவ சிலைகள் நீக்கம்

அமெரிக்காவில் கொரோனா தொற்று சம்பவங்கள் 2 மில்லியனை எட்டியது

ஜோர்ஜ் பிளொயிட் மரணம்: கைதான பொலிஸார் பிணையில் விடுதலை

இந்தியா எதிர்க்கும் நேபாள வரைபடம் மீது வாக்கெடுப்பு



உலக நன்மைக்காக தடுப்பூசி தயாரிப்பதில் சீனா தீவிரம்

Tuesday, June 9, 2020 - 6:00am

உலக மக்களின் நன்மைக்காக தடுப்பூசியை உருவாக்க தீவிரமான முயற்சிகளை எடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் வெற்றி ஏற்பட்டால் உலக நாடுகளுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவோம் என்று பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஷிகாங் தெரிவித்தார். “சீனா தடுப்பூசியை உருவாக்கிய பின்னர் உலக மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே கூட்டத்தில் பேசிய துணை வெளியுறவு அமைச்சர், சீனா மற்ற நாடுகளுடனான எல்லை தாண்டிய போக்குவரத்து ஏற்பாடுகள் துரிதமாக்கப்படும் என்றார்.
கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நாடுகளுக்கு கப்பலில் பொருட்களை அனுப்பி வைத்து ஒரு பெரிய நாடாக சீனா பொறுப்புடன் நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.  நன்றி தினகரன்   









கொரோனா வைரஸ் பரவல்; எங்கள் மீது எந்த தவறும் இல்லை

Tuesday, June 9, 2020 - 7:13am

சீனா வெள்ளை அறிக்கை
கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதுடன் அதில் தங்கள் மீது எந்த தவறும் இல்லையென தன்னிலை விளக்கத்தையும் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 03ஆம் திகதியே எச்சரித்ததாகவும் சீனா விளக்கமளித்துள்ளது.  
சீனா,இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் என்பது போன்ற முக்கிய தகவல்களை சீனா ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்யாமல் மறைத்ததாகவும், உலக சுகாதார அமைப்பை தவறாக வழி நடத்தியதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சீனா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன.  
 கொரோனாவால் உலகின் ஒட்டுமொத்த பொருளாதார பேரழிவுக்கு காரணமே சீனாதான் என நெருக்கடிகள் வலுக்கின்றன. இந்த விவகாரத்தில் சீனா,-அமெரிக்கா இடையேயான மோதல் வலுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பிற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.  
அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 
கோவிட்-19 கொரோனா வைரஸ் வூஹானில் கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்ப கட்ட ஆய்வில் இது வைரஸ் நிமோனியா என்ற முடிவுக்கு நிபுணர்கள் வந்தனர். பின்னர் தேசிய சுகாதார ஆணையத்தின் உயர்மட்ட நிபுணர்கள் குழு வூஹான் சென்று ஆய்வு செய்தது. ஜனவரி 19ஆம் திகதிதான் இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் என்பது உறுதி செய்யப்பட்டது.  
உடனடியாக மக்களை எச்சரிக்கை செய்தோம். இந்த வைரஸ் வவ்வால்கள் அல்லது எறும்பு உண்ணிகள் மூலம் தொற்றி இருக்கலாம் என்றாலும் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லை.ஜனவரி 03ஆம் திகதியே இது அடையாளம் தெரியாத நிமோனியா என வகைப்படுத்தப்பட்டு இதைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்திற்கும், அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை செய்தோம். கொரோனா குறித்து சரியான நேரத்தில் சர்வதேச நாடுகளுக்கு நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம். அதோடு, சமூக பரவல் தொடங்கியதுமே வூஹானில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வைரஸ் பரவலை தடுக்க நாடு தழுவிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் இந்த நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனமும் பாராட்டியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 











சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை அம்பலப்படுத்திய செய்மதிப் படங்கள்

Thursday, June 11, 2020 - 6:00am

சீனாவில் கொரோனா 2019 ஓகஸ்டிலேயே பரவத் தொடங்கி விட்டது என்ற தகவலை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத் தொடங்கியது எப்போது?
- இந்தக் கேள்வி மில்லியன் ​ெடாலர் கேள்வியாக இப்போது எதிரொலிக்கிறது.கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் 1-ந் திகதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது.
இதில் உண்மைத் தகவல்களை வெளியிடாமல் சீனா மறைத்து விட்டது என்பதுதான் இன்னும் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது. சீனா சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூட இது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, வுகானில் தோன்றியது டிசம்பர் மாதம் அல்ல. அதற்கு முன்பாகவே, ஓகஸ்ட் மாத தொடக்கத்திலேயே பரவத் தொடங்கி விட்டது என்று உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.
செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாகக்கொண்டும், இணையத் தள தேடல்களை அடிப்படையாகக் கொண்டும்தான் ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரி தனது ஆய்வின் மூலம் இதை வெளியுலகுக்கு கொண்டு வந்துள்ளது.
செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில் வுனானில் உள்ள முக்கிய வைத்தியசாலைகளில் கார்களின் இயக்கத்தை ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து இருக்கிறார்கள்.
வுகான் வைத்தியசாலைகளில் செப்டம்பர் மத்தியில் தொடங்கி ஒக்டோபர் மத்தி வரையில் வியக்கத்தக்க அளவுக்கு கார்கள் அங்கு குவிந்திருந்ததை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ​ேஜான் புரவுன்ஸ்டீன் இது பற்கே் கூறுகையில், "கோடை காலத்தின் பிற்பகுதியிலும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் தொடங்கி வுகானில் உள்ள 5 பெரிய வைத்தியசாலைகளில் வந்த கார்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்து இருந்ததை நாங்கள் கண்டோம்” என்கிறார்.
இப்படி வைத்தியசாலைகளில் கார்கள் குவிவது, ஒரு வித தொற்றுநோய் அதிகளவில் பரவுகிற போதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட சொல்கிறார்கள்.
2019-ம் ஆண்டு கோடை காலத்தின் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வுகானில் உள்ள 5 பெரிய வைத்தியசாலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வந்துள்ளளனர். அப்போது எல்லா வைத்தியசாலைகளிலுமே ஓகஸ்ட் தொடங்கி ஒக்டோபர் மாதம் வரையில் கார்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 350 செயற்கைக் கோள் படங்களில் பயன்படுத்தத்தக்க 108 படங்களை ஆராய்ச்சியாளர்கள் வுகான் வைத்தியசாலைகளையும், அதன் சுற்றுப்புற வீதிகளையும் ஆராய பயன்படுத்தி உள்ளனர். அதில் 2019 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில்தான் கார்கள் நோயாளிகளுடன் மிக அதிக எண்ணிக்கையில் வந்து சென்றுள்ளன.
வுகானின் தியான்யு ஆஸ்பத்திரியில் 2018-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 171 கார்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் மறு ஆண்டில் இந்த எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 67 சதவீத அளவுக்கு கார்கள் அதிகமாக வந்துள்ளன.
வுகானில் உள்ள மற்ற ஆஸ்பத்திரிகளில் இது 90 சதவீத அளவுக்கு அதிகமாக இருந்து உள்ளது.
இன்னொரு முக்கிய அம்சம், 2019 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்கள் இடையே வுகான் ஆஸ்பத்திரிகளில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்த சமயத்தில், சீனாவின் தேடல் இணையதளமான ‘பைட்’ இணைய தளத்தில் அதிகமாக இருமல், வயிற்றுப்போக்கு போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு தேடி உள்ளனர். இதெல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், தேடல் இணையதளத்தில் மேலே குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகளின் தேடலும் ஒரே சமயத்தில் இருந்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
எனவே கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கியது கடந்த டிசம்பரில் அல்ல, அதற்கு முன்பாகவே தொடங்கி விட்டது என்பதுதான் ஹார்வாரட் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.  நன்றி தினகரன் 










ஐரோப்பா, அமெரிக்காவெங்கும் அடிமைத்துவ சிலைகள் நீக்கம்

Thursday, June 11, 2020 - 6:00am

பிரிஸ்டல் நகரில் அடிமை வர்த்தகர் ஒருவரின் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இனவாத சர்ச்சை காரணமாக மேலும் மூன்று சிலைகள் நீக்கப்பட்டுள்ளன.
லண்டனில் இருக்கும் அடிமை வர்த்தகர் ரொபர்ட் மில்லிகனின் சிலை கூடியிருந்தவர்களின் கரகோசத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை நகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டது. உள்ளூர் மக்களின் விருப்பத்துடனேயே இந்த சிலை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
டார்பிஷெரில் 18 ஆம் நூற்றாண்டு மதுபான விடுதி ஒன்றில் வைக்கப்பட்ட கறுப்பினத்தவர் ஒருவரின் உருவச் சிலை ஒன்றும் அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை பெல்ஜியத்தின் அன்ட்வேர்ப் நகரில் இருக்கும் பெல்ஜியம் மன்னரும் கொங்கோ ஆட்சியாளருமாக இருந்த இரண்டாவது லியோபோல்டின் சிலையும் கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்களால் வீழ்த்தப்பட்டு தீமூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் பொலிஸ் பிடியில் உயிரிழந்ததை அடுத்து ஐரோப்பாவிலும் இனவாத எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் ரிச்மன்ட் நகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கீழே வீழ்த்தி தீமூட்டிய நிலையில் அதனை அங்குள்ள ஏரி ஒன்றில் வீசியுள்ளனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இனப்படுகொலையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேபோன்று இனவாத ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட ஜெனரல் ரொபர்ட் ஈ லீயின் வெர்ஜினியாவில் உள்ள சிலையும் அகற்றப்பட்டுள்ளது. 1861 தொடக்கம் 1865 கலப்பகுதியில் இடம்பெற்ற அமெரிக்க சிவில் யுத்தத்தில் அடிமைத்துவத்திற்கு ஆதரவான படைக்கு ரொபர்ட் ஈ லீ தளபதியாக செயற்பட்டார்.  நன்றி தினகரன் 









அமெரிக்காவில் கொரோனா தொற்று சம்பவங்கள் 2 மில்லியனை எட்டியது

Friday, June 12, 2020 - 6:00am

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியுள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி அமெரிக்கா மற்றொரு உச்சத்தை எட்டியிருப்பதோடு வைரஸ் தொற்றினால் அந்நாட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 112,900 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி வரும் செப்டெம்பர் மாதமாகும்போது அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200,000ஐ எட்ட வாய்ப்பு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி ஒரு மில்லியனை எட்டியது. அது தொடக்கம் நாள்தோறும் 20,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் 21 மாநிலங்களில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன. எனினும் அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்க நிலை தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும் இனவாதத்திற்கு எதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலை தீவிரப்படுத்தும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நோய்த் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே போஸ்டன், டலஸ் ஆகிய நகர நிர்வாகங்களும் நியூயோர்க் மாநில நிர்வாகமும் அத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் 7.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு இதுவரை 419,320 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயிலிருந்து குணமடைந்தவர் எண்ணிக்கை 3.7 மில்லியனுக்கு அதிகமாகும்.        நன்றி தினகரன் 











ஜோர்ஜ் பிளொயிட் மரணம்: கைதான பொலிஸார் பிணையில் விடுதலை




கறுப்பு இனத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் பொலிஸ் காவலில் மரணமடைந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிகாரியான 37 வயது தோமஸ் லேன் 750,000 அமெரிக்க டொலர் பிணையில் கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 25ஆம் திகதியன்று பொலிஸ் காவலில் நடந்த பிளொயிட் மரணம் தொடர்பில் கொலைக்குத் துணையாக இருந்ததாக லேன் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
நான்கு அதிகாரிகளும் மின்னியாபொலிஸ் காவல் பிரிவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் கையாளும் அடக்குமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.   நன்றி தினகரன் 









இந்தியா எதிர்க்கும் நேபாள வரைபடம் மீது வாக்கெடுப்பு




நேபாள பாராளுமன்றத்தில் அதன் புதிய வரைபடம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நேபாளம் கடந்த மே மாதம் அதன் புதிய வரைபடம் தொடர்பாக இந்தியாவை அணுகியது.
ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட சில இடங்கள் தமக்கு சொந்தமானவை என்று கூறி இந்தியா அந்த வரைபடத்தை நிராகரித்தது. பழைய வரைபடத்திற்குப் பதிலாக புதிய வரைபடத்தை அங்கீகரிக்குமாறு, அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கு ஏற்றவாறு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டுமெனவும் அது வலியுறுத்தியது. வார இறுதியில் அந்நாட்டு அமைச்சர்கள் கலந்தாலோசனை நடத்தி வரைபடம் குறித்து வாக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ளனர்.
நேபாளப் பிரதமர் கே.பீ. ஷர்மா ஒலி இந்தியாவுடனான இந்த எல்லைப் பிரச்சினைக்கு ராஜதந்திர முறையில் தீர்வுகாண முயன்றதாக, பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
சர்மாவின் அந்தக் கருத்துக் குறித்து இந்தியா இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை. புதிய வரைபடத்தை நேபாளம், கடந்த மாதம் வெளியிட்டபோது அது தன்னிச்சையான செயல் என இந்தியா குறிப்பிட்டிருந்தது.
அந்த வரைபடத்துக்கு வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை என்று புது டில்லி தெரிவித்தது.   நன்றி தினகரன் 







No comments: