கேஷிகா அமிர்தலிங்கத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் என்பார்வையில் - சௌந்தரி கணேசன்

.
Photos by C.Paskaran
ஒரு இனத்தினுடைய முகவரி அந்த இனத்தினுடைய மொழியும், கலையும், கலாச்சாரமும் பண்பாடும் ஆகும். 

நமது இளம் தலைமுறையினர் பல்கலாச்சார சூழலில் வாழ்ந்தாலும் எமது மொழி, எமது கலை போன்றவற்றில் பாண்டித்துவம் பெறுவது மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். 

12 May 2019 ஞாயிறு அன்று செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்களின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் Parramatta Riverside theatre ல் சரியாக 5.30 மணிக்கு கேஷிகாவின் தம்பி திவ்யேஷின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. 

கேஷிகா, திரு திருமதி  அமிர்தலிங்கம் சாரதா தம்பதிகளின் புதல்வி ஆவார்.

சங்கீத ஆசிரியை திருமதி புஸ்பா ரமணா அவர்களிடம் முறைப்படி சங்கீதம் பயின்ற கேஷிகா பின்பு கானக்குயில் ஶ்ரீமதி Binni Krishnakumar ஐ தனது குருவாக ஏற்று ஒரு இளம் பாடகியாகத் தன்னை வளர்த்துக் கொண்டவராவார்.

'மாதே மலயத்வாஜா' என்ற விருத்தத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி கணபதியே, 
ஆனந்த நடமாடுவார் போன்ற 
பாடல்களுடன் தொடர்ந்தபோது வரப்போகும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சற்று அதிகரித்தது. 

தொடர்ந்து பாபநாசம் சிவனின் தோடி ராகத்தில் அமைந்த பிரபல 'கார்த்திகேயா' என்ற பாடல் மற்றும் துரிதகதியில் அமைந்த வாத்தியங்களின் பிரயோகங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. 

அதைத் தொடர்ந்து சுவையான உணவை ரசிகர்கள் ருசித்தபின் மீண்டும் மண்டபம் நிறைந்தது. 

Photos by C.Paskaran

குடியிருந்த கோவில் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


  [ அம்மாவை அனுதினமும் நினைக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம் ] 
                   
                                       

                        கருவறையில் குடியிருத்தி 
                              குருதிதனைப் பாலாக்கி
                        பெற்றெடுக்கும் காலம்வரை 
                               தன்விருப்பம் பாராது 
                         கருவளரக் கருத்துடனே
                               காத்திருக்கும் திருவடிவம்
                         உண்டென்றால் உலகினிலே
                                  உண்மையிலே தாயன்றோ  ! 


                         குடியிருந்த  கோவிலதை 
                              கூடவே  வைத்திருந்தும்
                         கோடிகொண்டு கோவில்கட்டி
                                குடமுழுக்கும் செய்கின்றோம் 
                          கருவறையை தாங்கிநிற்கும்
                                  கற்கோயில் நாடுகிறோம்
                          அருகிருக்கும் கோவிலாம் 
                                   அம்மாவை மறக்கலாமா  ! 

கற்பகவல்லி 12/05/2019





புகலிட இலக்கியத்தில் மூத்த பெண்ணிய எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புகள்: ஒரு பார்வை - ஞா.டிலோசினி -- கிழக்குப் பல்கலைக்கழகம்


புலம்பெயர் எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் , அக்கரைப்பற்று - கோளாவில்  கிராமத்தில் 01.01.1943 இல் பிறந்தார். இராஜேஸ்வரி, கந்தப்பர் குழந்தைவேல் - கந்தையா மாரிமுத்து ஆகியோரின் மூன்றாவது குழந்தையாவார்.
இராஜேஸ்வரி  1969 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் அவர்களை திருமணம் செய்து,  இராஜேஸ்வரி மூன்று பிள்ளைகளுக்குத் தாயானவர். 1970களில் இருந்து இன்றுவரை இலண்டனில்   வசித்து வருகிறார். இலண்டனிலே இவர் தம்மை முழுமையாக இலக்கிய உலகில் அர்ப்பணித்துள்ளார். இவர் சிறுகதை,  நாவல், கட்டுரைகள் முதலான ஆக்க இலக்கியங்களைப் படைத்துள்ளார். இராஜேஸ்வரி,  யாழ்ப்பாணத்தில் தாதியாகப் பணி புரிந்தார். பின்னர்,  இலண்டன் சென்று பல ஆண்டுகளுக்குப் பின், தமது குழந்தைகள் வளர்ந்த பின் பல துறைகளில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பட்டம் (BA) (London College of Printing 1988)  பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். மானிட மருத்துவ வரலாற்றுத் துறையில் முதுமாணிப் பட்டம் (MA) (1996 London University) பெற்ற முதல் ஆசியப் பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

சிட்னி முதியோர் காப்பகத்திலிருக்கும் 'கலைவளன்' சிசு நாகேந்திரனுடன் சில மணித்துளிகள் - முருகபூபதி


" காலம்  தரித்து  நிற்பதில்லை.   அதனால்  வயதும்  முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.   இறுதியில்  முதுமை  வரும்பொழுது  உடன் வரும்  நண்பர்கள்  தனிமை,   இயலாமை,   நனவிடை  தோயும் இயல்பு,    எல்லாம்  போதும்  என்ற  மனப்பான்மை.
ஆயினும் -  முதுமையிலும்  ஒருவர்  அயராமல்  இயங்குவதென்பது கொடுப்பினை.   அவ்வாறு  மருத்துவனையில்  தங்கியிருக்கும் வேளையிலும்  தமிழ்  அகராதியொன்றை   தயாரிப்பதற்காக குறிப்புகளை    பதிவு செய்து வெளியிட்டவர்தான்  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  பல்துறை ஆற்றல்  மிக்க  கலைவளன்  சிசு. நாகேந்திரன்."  . இவ்வாறு சிலவருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கின்றேன்.
நீண்டகாலம் மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்த கலைவளன்  சிசு. நாகேந்திரன் அவர்களை , அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும் சிட்னிக்கு அழைத்துச்சென்றுவிட்டதாக அறிந்தேன். அவர் சிட்னிக்கு இடம்பெயரவைக்கப்படுவதற்கு முன்னர்? மெல்பன்  Dandenong அரச பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதையறிந்து சென்று பார்த்துவிட்டு வந்துதான் மேற்குறித்த வரிகளுடன் தொடங்கும் பதிவொன்றை எழுதியிருந்தேன்.
யாழ். நல்லூர்    இவரது  பூர்வீகம்  எனச்சொல்லப்பட்டாலும்,  கேகாலையில்தான்  1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி பிறந்தவர்.
கவிஞர் அம்பி அவர்களின் 90 வயது பிறந்த தினவிழா கொண்டாட்டத்திற்காக சிட்னிக்கு வந்தவேளையில் அங்கு Beecroft (NSW 2119)   இல் அமைந்திருக்கும் முதியோர் காப்பகத்திலிருக்கும் கலைவளன்  சிசு. நாகேந்திரன் அவர்களையும் பார்த்தேன்.
உள்ளுர், வெளியூர், வெளிநாட்டுப்பயணங்களில் நான் முதலில் பார்க்க விரும்புவது முதிய நண்பர்கள் மற்றும் நான் நேசிக்கும் குழந்தைகள். குழந்தைகளும் முதியவர்களும் பல இயல்புகளில் ஒற்றுமைப்பட்டவர்கள். முதியவர்களிடம் பல சுவாரசியமான கதைகளை கேட்கமுடியும். குழந்தைகளின் மழலை மொழியையும் குறும்புத்தனங்களையும் ரசிக்கமுடியும்.
நண்பர் சிசு. நாகேந்திரன், மெல்பனிலிருந்த காலப்பகுதியில் ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், அவுஸ்திரேலிய  தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  கே.சி. தமிழ் மன்றம் ஆகியனவற்றில் அங்கம் வகித்து சிறப்பான சேவையாற்றியவர்.
சிறந்த ஒளிப்படப்பிடிப்பாளர். எழுத்தாளர், ஆய்வாளர், நாடக - திரைப்படக்கலைஞர், முதியவயதிலும் தமிழ் - ஆங்கில அகராதி எழுதியவர். அந்தக்கால    யாழ்ப்பாணம்,   பிறந்த  மண்ணும்  புகலிடமும்  ஆகிய நூல்களை எழுதியிருப்பவர். யோகாசனப்பயிற்சி தொடர்பாக காணொளிக்காட்சி  இறுவட்டையும் வெளியிட்டவர். இத்தனை பணிகளையும் தனது முதிய வயதில் மேற்கொண்டவர்.

பயணியின் பார்வையில் – அங்கம் -06 லண்டனில் நடக்கும் மாதாந்த இலக்கிய சந்திப்பில் கற்றதும் பெற்றதும் முரண்கள் விலத்தி மனிதரும் மாக்களும் நாடும் இளகிய மனம் ஒன்றைப்பொருத்தி வீதி வழிவந்தால் இன்பமொன்றை இவ்வுலகு பெற்றிடக்கூடும் - மாதவி சிவலீலன் - முருகபூபதி


எனது  லண்டன் வருகை பற்றி அங்கிருக்கும் கலை இலக்கிய ஊடக  நண்பர்களுக்கு தெரிவித்திருந்தேன். அவர்களில் சிலர் தொடர்புகொண்டு சந்திப்புகளுக்கும், வானொலி, தொலைக்காட்சி நேர்காணல்களுக்கும் ஒழுங்கு செய்யவிருப்பதாக சொன்னார்கள்.
சந்திப்புகள் உவப்பானவை! நேர்காணல்கள் எச்சரிக்கையானவை! சமகாலத்தில் இணைய வழிகளில் மின்னல்வேகத்தில் பரவக்கூடியவை. லண்டனிலிருந்து தொடர்புகொண்டவர்கள் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள்.
அவர்களுடனான உறவும் தொடர்பும் நீண்டகாலமாக நீடித்திருப்பவை. நண்பர் இளையதம்பி தயானந்தாவை இலங்கை வானொலி கலையகத்தில் 1997 ஆம் ஆண்டில் நண்பர் வி.என். மதியழகன் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தார்.
அக்காலப்பகுதியில் எனது இலக்கிய – ஊடகத்துறை பிரவேச வெள்ளிவிழா மெல்பனிலும் இலங்கையில் எமது ஊரிலும் நடந்தது. எமது ஊர் விழாவில் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தோம்.
அச்சமயம் பிரேம்ஜி ஞானசுந்தரன், ராஜஶ்ரீகாந்தன், ஆ. சிவநேசச்செல்வன், தெளிவத்தை ஜோசப், துரைவிஸ்வநாதன், மேமன் கவி, வன்னியகுலம், சூரியகுமாரி, நீர்கொழும்பூர் முத்துலிங்கம், நவமணி ஆசிரியர் சிவலிங்கம், வீ.தனபாலசிங்கம், தங்கவடிவேல் மாஸ்டர்  ஆகியோருடன் வருகைதந்து இலங்கை வானொலி தமிழ்ச்சேவையின் சார்பில் உரையாற்றியவர் இளையதம்பி தயானந்தா.
அதன்பின்னர் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்காகவும் அவர் என்னை கொழும்பில் ஒரு நேர்காணலுக்காக அழைத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியவர்.
நண்பர் அனஸ் இளைய அப்துல்லா, ஏற்கனவே 2008 ஆம் தொடக்கத்தில் நான் லண்டன் சென்றிருந்த வேளையில் தீபம் தொலைக்காட்சிக்காக ஒரு நேர்காணலை நடத்தி ஒளிபரப்பியவர்.
அவர் தற்போது லண்டனில் ஐ.பி.சி. தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். அவரும் இந்தப்பயணத்தில் அழைத்திருந்தார்.

இலங்கைச் செய்திகள்


வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய ஜனாதிபதி

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது  ; நீதிமன்ற தீர்மானம் புதன்கிழமை

சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து

விஜயகலாவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்டநடவடிக்கை தொடர்பில் அறிவிக்கவும் ; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் ஆலோசனை

முன்னாள் போராளிகள் விடுதலை

வவுனியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.!

சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்




வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!

06/05/2019 யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகச் செய்திகள்


உலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி - மேகன் தம்பதி

பிணை முடிந்து சிறைக்குத் திரும்பிய நவாஸ் செரிப்

ஈரானுக்கு புதிய தடைகளை விதித்த ட்ரம்ப்!

வடகொரிய கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 11 குழுக்களுக்கு தடை!



உலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி - மேகன் தம்பதி


09/05/2019 இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசர் ஹரிக்கும் அவர் மனைவி மேகன் மார்க்லேவுக்கும் திங்கட்கிழமை ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் மவுன்ட் பேட்டன் வின்ட்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று, இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோவில், மேகன், "உலகின் சிறந்த இரண்டு ஆண்கள் என்னிடம் இருக்கிறார்கள். நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன். என் மகன் மிக அமைதியாக இருக்கிறான்'' என்று சிரித்தபடியே சொல்ல, ஹரியோ "அந்த அமைதி யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லையே'' என்று மனைவியைச் செல்லமாக கேலி செய்கிறார்.

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் 18/05/2019








பேர்த் பாலா முருகன் கோவில் வைகாசி விசாகம் 18/05/2019








தமிழ் சினிமா - K 13 திரை விமர்சனம்


அருள்நிதி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் உருவாகிவிட்டது. அந்த வகையில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு K-13 சஸ்பென்ஸ் த்ரில்லரை தேர்ந்தெடுத்துள்ளார் அருள்நிதி, இந்த படமும் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார். அந்த நேரத்தில் நண்பர்கள் வற்புறுத்தலால் க்ளப்பிற்கு செல்ல, அங்கு ஷரதா ஸ்ரீநாத் அறிமுகம் கிடைக்கின்றது.
ஷரதா ஒரு எழுத்தாளர், அவருக்கு அருள்நிதி மேல் ஒரு ஈர்ப்பு வர, அவரை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார்.
அடுத்தநாள் காலை அருள்நிதி ஒரு சேரில் கட்டிப்போட்டு இருக்க, ஷரதா தன் கையை அறுத்துக்கொண்டு இறந்துள்ளார். அருள்நிதிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். இதை தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த திருப்பமே இந்த K-13.

படத்தை பற்றிய அலசல்

அருள்நிதி தொடர்ந்து ஒரு சஸ்பென்ஸ் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அந்த வகையில் இதுவும் அவருக்கு ஒரு சிறந்த படைப்பே, படத்தில் அவரின் கதாபாத்திரமே பெரும்பாலும் வருகின்றது. அதனால் எந்த ஒரு இடத்திலும் கவனம் சிதறவிடாமல் அவரின் பதட்டத்தை நம்மிடம் கடத்துகின்றார்.
ஷரதா படத்தின் ஆரம்பத்தில் இறந்து போகின்றார், அதை தொடர்ந்து இடைவேளை வரை அவருக்கு பெரிய நடிக்கின்ற வாய்ப்பு இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவருக்கான காட்சி தொடங்கும் போது ரசிக்க வைக்கின்றார்.
படத்தில் எந்த ஒரு காட்சியையும் முழுமையாக விவரிக்க முடியாது, ஏனெனில் டுவிஸ்ட் உடைந்துவிடும். அதிலும் அட படம் முடிந்துவிட்டது இவ்வளவு தானா? என்று இருக்க, அதை தொடர்ந்து அருள்நிதி பார்வையில் கதை தொடங்க, அட என்னடா இது என்று சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது.
ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த பதட்டம், விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகின்றது. அருள்நிதியிடம் சேர்ந்து நாமும் கவுன்ஸிலிங் சென்றது போல் இருக்க, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.
படத்தின் மிகப்பெரும் பலம் சாம் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் படம் முழுவதும் பெரும்பாலும் ஒரு ரூம் என்றாலும், எங்குமே நமக்கு சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி செம்ம விறுவிறுப்பு.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னமும் விறுவிறுப்பு இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ் இன்னமும் எல்லோருக்கும் புரிவது போல் காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் K-13 அருள்நிதி சேரில் கட்டியிருப்பது போல், நம்மையும் படத்தின் சீட்டின் நுனியில் கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பரத் நீலகண்டன்.
நன்றி   CineUlagam