நாளை சர்வதேச அன்னையர் தினம்
சர்வதேச அன்னையர் தினம் மே மாதம் 10ம் திகதியான நாளை அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் எமது நாட்டிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையாகும். ஆனால். இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அன்னையர் தின நிகழ்வுகளை நடத்த முடியாமல் உள்ளது.
அன்னையரின் தியாகங்களை போற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழமை.
‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பார்கள்
ஒரு குடும்பம் நிறைவுடன் வாழ்வதற்கு தாய் சுமக்கும் பாரங்கள் அதிகம்.
பிள்ளைகளை வளர்ப்பது, அவர்களின் கல்வி வளர்ச்சி, திருமணம் முடித்துக் கொடுத்தல் போன்ற அனைத்து விஷயங்களையும் சுமக்கின்ற இரும்புப் பெண்ணாகவே தாயானவள் செயற்படுகின்றாள்.
மலையகத்தினைப் பொறுத்தவரையில் குடும்பப் பெண்களின் சுமை மிகவும் அதிகமாகும். இடி மின்னல் தாக்குதல், மழை, காற்று, குளவி மற்றும் சிறுத்தை தாக்குதல் உள்ளிட்ட உயிர் அச்சத்திற்கு மத்தியில் தாய் ஒருத்தி படுகின்ற வேதனைகள் அதிகம். குடும்ப வருமானத்திற்காக மலையகத் தாய்மார் தங்களையே உருக்கியபடி பாடுபடுகின்றனர்.
இவ்வாறான அன்னையர்களுக்கு எந்தளவிற்கு குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு அளிக்கப்படுகின்றது என்பதனை பார்க்கின்ற போது வேதனையே தோன்றுகின்றது.
மலையகத்தில் அன்னையர்களின் துயர் துடைக்கப்படுவது அவசியம். அன்று அன்னை மடியினை தலையணையாக பயன்படுத்திய பிள்ளைகள் இன்று ஸ்மார்ட் போனை தெய்வமாகப் போற்றுகின்றனர்.