அவுஸ்திரேலியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி 99.4% மக்கள் ஆதரவு

22.04.2010



அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலின்போது 99.4 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளில், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விபரம் வருமாறு:

வாக்களித்தோர் எண்ணிக்கை 8274,

தீர்மானத்திற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் 8156,

தீர்மானத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் 51,

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 67.

இம்முடிவுகள் இன்று நியுசவுத்வேல்ஸ் பாராளுமன்ற பத்திரிகையாளர் கூடத்தில் பிற்பகல் 2 மணியளவில் உள்ளுர் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இத்தேர்தலினை நடாத்திய அவுஸ்திரேலிய சிபிஐ நிறுவன அதிகாரிகளினாலும் அவுஸ்திரேலியா தமிழர் பேரவை, அவுஸ்திரேலியா தமிழர் வாக்குக்கணிப்பு குழு பிரதிநிகளுடன் இணைந்து வெளியிடப்பட்டது

இது பற்றி மேலும் கேட்கப்பட்டபோது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் சரியான எண்ணிக்கை தெரியாவிட்டாலும் அண்ணளவாக பதினையாயிரம் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் இருக்கலாம் என்றும் அதில் வாக்களித்தவர்கள் தொகை எட்டாயிரத்து முன்னுறு பேர் வரையில்தான் என்றும் ஏனையோர் வாக்களிக்காதது ஏன் என கண்டறிய படுத்தல் நன்மை பயக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

முழுமையான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்

மெல்பேர்ன் நாட்டுபபற்றாளர் தினம்

.


மெல்பேர்னில் நாட்டுப் பற்றாளர் தினம் ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெற உள்ளது.





வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஒஸ்ரேலியாவில் இடம் பெற்றது. பல வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. தமிழ்மக்கள் இரண்டு நாட்களும் வாக்களித்தார்கள். இதன் முடிவுகள் எதிர்வரும் வியாழன் வெள்ளிக் கிழமைகளில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




வாக்களிப்பு நடை பெற்ற பாடசாலை




வாக்களிப்பு நிலையங்களில் ஒன்றான ஹோம்புஸ் பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஞாயிறு காலையில் படம்பிடிக்கப்பட்டது

சிட்னி துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் ஞாயிறு மாலை இடம் பெற்ற சமய அறிவுப் போட்டி

.



போட்டிகள் 18.04.2010 ஞாயிறு மாலை துர்கா தேவி தேவஸ்தானத்தில் இடம் பெற்றது.
பாலர் பிரிவு முதல் அதிமேற்பிரிவுவரை பல பிரிவினராக மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தார்கள்.


ஜந்து வயதிற்கு குறைவான குழந்தைகள் வர்ணம் தீட்டும் போட்டியில் பங்கு கொண்டு கொடுக்கப்பட்ட கடவுள் படங்களுக்கு மிக அழகாக வர்ணம் தீட்டியிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது. போட்டிகள் 1 மணிக்கு ஆரம்பமாகி 5.30 மணிக்கு நிறைவடைந்தது. கோட்டியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கான முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது மாணவர்களை உற்சாகமூட்டியது.


துர்க்கை அம்மன் ஆலய சமய அறிவுப் போட்டிக்  குழுவினர் இதுபற்றி குறிப்பிடும்போது இது மூன்றாவது வருடமாக இடம் பெறுவதாக குறிப்பிட்டார்கள். வருடாவருடம் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அடுத்த வருடம் இன்னும் அதிக மாணவர்கள் பங்குபற்றுவார்கள் என்று எதிர் பார்ப்பதாகவும் கூறினார்கள்.

சிட்னியில் ஞாயிறு மாலையில் பல கலைநிகழ்ச்சிகள் இருந்த போதும் நடுவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் நன்றாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டது..








 போட்டியில் நடுவர்களாக பங்குபற்றியவர்களில் மூவர்.

     போட்டியில் பங்கு கொண்டவர்களில் ஒருபகுதியினர்.


போட்டியில் நடுவர்களாக பங்குபற்றியவர்களில் சிலர் .


    பாலர் பிரிவில் சில மாணவர்கள்.



         அறிவுப்  போட்டி உறுப்பினர்களில் சிலர்

உமாவின் PATCH WORK அமைப்புக்காக சேரனின் ஆஞ்சநேயம்

.

                                                                                                பராசக்தி சுந்தரலிங்கம்    




சென்ற ஞாயிற்று கிழமை 11.4.2010௦ அன்று சிட்னி Bankstown நகர மண்டபத்திலே பிரபல நாட்டியக் கலைஞர் சேரன் சிறீபாலனின் தயாரிப்பிலே ஆஞ்சநேயம் பரதநாட்டிய நிகழ்வு PATCH WORK அமைப்புக்காக அரங்கேறியது. சேரனுடன் இணைந்து ஹரீஷன் இளங்கோவன், லாவண்யா தேவராஜா ஆகியோரும் ஆடினார்கள். இந்த நடன நிகழ்வு நல்லதொரு நோக்கத்துக்காக நடைபெற்றது என்பது மனநிறைவைத் தந்தது.
தமிழர் தாயகத்திலே போரினால் அங்கவீனம் உற்றவர்களின் மறுவாழ்வுக்காக சிட்னியை சேர்ந்த உமா ராஜ் PATCH WORK எனும் அமைப்பை  அவுஸ்திரேலியாவிலே தொடங்கியுள்ளார். இது உலகளாவிய ரீதியில் இயங்கும் ஓர் அமைப்பு.
உமா சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர். துரதிஷ்டவசமாக அவரது கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், இந்நாட்டிலே அவருக்கு கிடைத்த சூழலின் பயனாக Braille முறையில் கல்வி பயின்று, தன்னம்பிககையுடன் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோதும் பிறர் துன்பம் கண்டு கண்கலங்குகிறார்.

நியூ சவுத் வேல்ஸ் மூத்த பிரஜைகளுக்கான வாரத்தில் பரிசு

.

NSW Seniors Week Achievement Award

                               










திரு செல்லையா வேலுப்பிள்ளை



 




















   














                                                                                   திரு கணபதிபிள்ளை சந்திரன்                                                 



மூத்த பிரஜைகளுக்கான சமூகப்பணி சிறந்த சமூகத் தொண்டு; ஆகியவைகளுக்கான விருதை Department of Ageing, Disability and Home Care (DADHC),  தமிழ் மூத்த பிரஜைகளான
திரு கணபதிப்பிள்ளை சந்திரன் (தலைவர் மூத்த பிரஜைகள் சங்கம்) அவர்களுக்கும் திரு.செல்லையா வேலுப்பிள்ளை அவர்களுக்கும் 21.03.2010 அன்று வழங்கி கௌரவித்துள்ளது. இவர்களுக்கு விருது கிடைத்ததையொட்டி 15.04.2010 வியாழக் கிழமை பாராட்டு விழாவும் ஒன்று கூடலும் மூத்த பிரஜைகள் சங்கத்தால் முன் எடுக்ப்பட்டது. இவ்விழாவில் கேணல் இராமநாதன், வைத்திய கலாநிதி பாரதி, திரு.மகேசன் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினார்கள்.

எதற்காக வந்தீர்கள்?

.
                                                                                         அ. முத்துலிங்கம்










என்னுடைய கணக்குப்படி அமெரிக்காவுக்கு நான் கடந்த பல வருடங்களில் குறைந்த 40 - 50 தடவைகள் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் குடிவரவில் கேள்விகள் காத்திருக்கும். அமெரிக்காவை பாதுகாப்பாக வைப்பதுதான் அவர்கள் நோக்கம். அதுவும்    9-11க்கு பிறகு கெடுபிடி அதிகமானது. பாம்பு வசிக்கும் புற்றுப்போல பத்திரமான ஊர் என்று புறநானூறு சொல்லும். அப்படி நாட்டை பத்திரமாக பாதுகாப்பதுதான் அவர்கள் வேலை. எதற்காக அமெரிக்கா வருகிறீர்கள்? பதில் சொல்வேன். எவ்வளவு காலம் தங்குவீர்கள்? அதற்கும் சரியாகக் கணக்கு வைத்து சொல்வேன். இதற்கு முன்னர் வந்திருக்கிறீர்களா? கடைசியாக எப்போது வந்தீர்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் குடிவரவு அதிகாரிக்கு பதில் தெரியும், என்றாலும் கேட்பார், நானும் கீழ்ப்படிவுடன் பதில் கூறுவேன். நல்ல ஒரு பதிலைச் சொல்வதிலும் பார்க்க வேறு என்ன பெரிய வேலை எனக்கு இருக்கிறது.

இயற்கை எனும் பெண்

                                                                       
xxxx ஜதுஷியா மகேந்திரராஜா xxxxx

சிட்னியில் கல்விபயிலும் மாணவி இந்த
நாட்டில் வளரும் சூழலிலும் கவிதை எழுத
ஆர்வம் கொண்டு இக்கவிதையை வடித்துள்ளார்.




பெண்ணே உன்  அழகிற்கு நிகர்
இந்த அகிலத்தில் எதுவும் இல்லை
எப்போதும் இருந்ததும் இல்லை
வசந்த காலத்தின் இனிமையான தென்றலில்
உன் பச்சைக் கூந்தல் அசையக் கண்டேன்
தினம் தினம் காலையில் எழும்போது
உன் புன்னகையால் இருளை நீக்கி
இந்த உலகிற்கு வெளிச்சத்தை கொண்டுவந்தாய்
உன் குழந்தைப் பேச்சும் அழகான சொற்களும்
நீர் வீழ்ச்சியாகக் கொட்டுகின்றன
நீ பாடும் சங்கீதமும் பேசும் தமிழும்
சுவை சேர்ந்து நதியாக ஓடுகின்றது
உனது குளிர்காற்றாலும் கொட்டும் மழையாலும்
உன்மேல் இருக்கும் காதலும் ரசனையும் கூடுகின்றது
பெண்ணே உன் ஆனந்தக் கண்ணீர்
மழையாப் பொழிகிறது
உன் கன்னத்தில் பூக்கும் வண்ணங்கள்
வானவில்லின் வர்ண யாலங்கள்
பச்சைப் பட்டில் நீ புல் வெளி
நீலப் புடவையில் நீங்காத நீல வானம்
சிவப்புச் சேலையில் அழகான அஸ்தமனம்
வெளுத்த ஆடையில் மெல்லிய பனி மூட்டம்
நீ அணியும் நவரத்தினங்கள் பூமியின் புஸ்பங்கள்
கொட்டும் மழைத்துளி உன் சலங்கையின் சிரிப்பொலி
கொழுத்தும் சூரியனோ உன் நெற்றிப் பொட்டு
தேவதையே உன் சுவாசம் தென்றலாய் வீசுகிறது
காரிகையே உன்வாசம் என்னை காந்தமாய் இழுக்கிறது
அன்று நான் தவழ்ந்த உன் மடியழகு
இன்று உன் மண்ணில் வாழும் நாட்கள் அழகு
நாளை உன்னில் புதையும்போது உன் அணைப்பும் அழகே
இயற்கையெனும் பெண்ணே
உன் அழகிற்கு நிகர்
இந்த அகிலத்தில் எதுவும் இல்லை
எப்போதும் இருந்ததுமில்லை.

ஆன்மிகம் குறித்த இந்த பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

.




அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

வள்ளுவப் பெருந்தகையின் இந்த குறளுக்கு ஏற்ப, நம்முடைய இந்த முதல் இணையவழி தொடர்பினை அந்த பகவானுக்கு சமர்பிப்போமாக! எந்த ஒரு நீண்ட பயணமும் நம் கால்கள் எடுத்து வைக்கும் ஒரு அடியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அது போலவே நம்முடைய ஆன்மிகம் குறித்த இந்த கருத்து பரிமாற்றமும் "பகவான்" என்ற இந்த ஒரு சொல்லைக் கொண்டு தொடரட்டும்.

இந்த காலத்தில் பகவான் என்ற சொல்லை மிகவும் தாராளமாக உபயோகிக்கின்றோம். பகவான் என்ற ஒரு சொல்லை சற்று கூர்ந்து கவனித்து ஆராய்ந்தால் அதிலிருந்து பல உன்னத உண்மைகளை நாம் அறிந்து கொள்ளலாம் . சத்தியவான் என்றால் சத்தியத்தைக் கொண்டவன் என்று பொருள். "சத்தியவான்" என்ற இந்த சொல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது - "சத்தியம்" மற்றும் "வான்". "சத்தியம்" என்றால் உண்மை என்று பொருள். "வான்" என்றல் உருவமுள்ள ஒரு ஆள் என்று பொருள். அதைப்போலவே "தனவான்" என்றால் தனங்களைக் கொண்டவன் என்று பொருள். "வித்யவான்" என்றால் வித்யா அதாவது அறிவினைக் கொண்டவன் என்று பொருள்.

சத்தியவான், தனவான், வித்யவான் ஆக இந்த மூன்று சொற்களுமே இரண்டு வார்த்தைகளைக் கொண்டே அமைந்தது. அது போலவே பகவான் என்ற இந்த சொல்லும் இரண்டு வார்த்தைகளைக் கொண்டது. "பகம்" மற்றும் "வான்" - இதில் பகம் என்றால் செல்வங்கள் என்று பொருள். வான் என்றால் அந்த செல்வங்களைக் கொண்ட ஒரு ஆள் என்று பொருள். இதிலிருந்தே கடவுளுக்கும் உருவம் உள்ளது என்று அறியலாம். மகத்தான செல்வங்களைக் கொண்ட உருவமுடைய அந்த ஒரு ஆள் தான் "பகவான்". அந்த செல்வங்கள் எப்பேற்பட்டவை என்று பார்ப்போம்.

வேத வியாசரின் தந்தையும் மாபெரும் முனிவருமான பராசரர், "பகவான்" என்ற இந்த சொல்லிற்கு வேதங்களில் இருந்து விளக்கம் அளித்திருக்கிறார். "அழகு", "பலம்", "செல்வம்", "புகழ்", "அறிவு", "பற்றில்லாமை" ஆகிய இந்த ஆறு செல்வங்களையும் முழுமையாகவும் எண்ணிலடங்காமலும் ஒருங்கே பெற்ற அந்த ஒருவம் கொண்ட ஒரு ஆள் தான் பகவான். மனிதர்களில் சிலர் அழகுடையவராக இருக்கலாம். சிலர் பலசாலியாக இருக்கலாம். சிலர் செல்வந்தராக இருக்கலாம். சில மேதைகளும் சில பற்றில்லாதவர்களும் கூட இருக்கலாம். மேதையாக இருக்கும் ஒருவனுக்கு அழகு இருக்காது. பலம் கொண்ட ஒருவனுக்கு புகழ் இருக்காது. செல்வம் கொண்ட ஒருவனுக்கோ அறிவு இருக்காது. ஒரு வேளை இந்த ஐந்து செல்வங்களும் ஒருவனுக்கு இருப்பினும் ஆறாவது செல்வமான பற்றில்லாமை இருக்காது. ஆக இந்த ஆறு செல்வங்களும் ஒருங்கே கொண்டு நான் தான் தன்னிகரற்றவன் என்று மனிதரில் யாரும் பறை சாற்றிக்கொள்ள முடியாது. பகவான் ஒருவனுக்கே அந்த கூற்று பொருந்தும்.

இந்த காலத்தில் நான் தான் கடவுள் என்று பல முனிவர்களும், சாமிகளும் கூறிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்று சரியா தவறா என்று இந்த "பகவான்" என்ற ஒரு சொல்லை வைத்தே அறிந்துகொள்வோமாக!

புனித நூலான பகவத் கீதையில் இருந்து இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்லோகத்தை ஆராய்ந்து, நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் அதை எப்படி பின்பற்றுவது என்று புரிந்து கொள்வோம். உங்களுடைய கருத்துக்களையும் கேள்விகளையும் என்னுடையஇணைய அஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,

கனஷியாம் கோவிந்த தாஸ்