பாவலரே வாழ்த்துகின்றேன் ! எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .

 .  
        


           பாரதியைப் பின்பற்றி பாட்டெழுதிக் குவித்தவரே
              பாரதிரத் தமிழ்மொழியை பார்த்துவிட நினைத்தவரே
              தூரநோக்குப் பார்வையுடன் துணிவுகொண்டு உரைத்தவரே
              பாரதியால் வாழ்த்துப்பெற்ற பாவலரே வாழ்த்துகின்றேன்.!

               சீர்திருத்தம் பலசொல்ல சிறப்பான உவமைகண்டாய்
               ஆருக்கும் அஞ்சாமல் அற்புதமாய் கவிபடைத்தாய்
               போரொக்கும் சொற்கொண்டு புத்துணர்வுக் கவிதந்தாய்
                புதுவைநகர் கொடையாக புறப்பட்டு வந்தனையே !

                  சுப்பு      ரத்தினமாய்
                  சுந்தரத்   தமிழ்பாடி
                  பாரதி       தாசனாய்
                  பரிணாமம் பெற்றாயே
                  எப்பவுமே நாம்படிக்க
                  இங்கிதமாய் கவிதந்த
                  எங்களது கவிமன்னா
                  என்றுமே வாழுகிறாய் !

தவில் மேதை தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு சிட்னியில் விழா - செ.பாஸ்கரன்

.

ஒரு இசைக் கலைஞருக்கு விழா எடுப்பதும் உலகத் தமிழர்களால் அன்பு பாராட்டப் படுவது மென்றால் அது விசுவலிங்கம் தெட்சணாமூர்த்தி என்று அழைக்கப்படும் தவில் மேதை யாழ்ப்பாணம்  தெட்சணாமூர்த்தி அவர்களுக்குத்தான். 1933ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று இணுவில் என்கிற ஊரில் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவில் கூட மிகச்சிறந்த தவில் கலைஞராக போற்றப்பட்டவர். மிகப்பெரிய இசைக் கலைஞர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட ஈழத்து கலைஞர்.நல்ல கலைஞர்கள்  நல்ல கவிஞர்கள் நீண்டகாலம் வாழ்வதில்லை அதுபோல்  இவரும்  1975 மே 13  இல் தனது 41வது வயதில் மறைந்து விட்டார். 

ஈழத் தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்த தெட்சணாமூர்த்தி அவர்களை இன்று உலகெங்கும் உள்ளவர்கள் கொண்டாடுகின்றார்கள் அந்த வகையில் சிட்னி அவுஸ்ரேலியாவில் சென்ற  பெரிய வெள்ளிக்கிழமை தினமான 25.03.2016 அன்று தூங்காபி சமூக நிலையத்தில் காலை 9.00 மணிமுதல் 12.30 மணிவரை நினைவு விழா திரு.நவரட்ணம் ரகுராம் தலைமையில் இடம்பெற்றது.


தவில் மேதை தெட்சணாமூர்த்தி ஆவணப் படம் இந்தியத் தேசிய விருது பெற்றுள்ளது‏

.


"தவில்மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி" ஆவணப் படம், இன்று  அறிவிக்கப்பட்ட இந்தியத் தேசிய விருது பெற்றுள்ள படங்களின் வரிசையில் BEST ARTS /CULTURAL FILM இற்கான விருதை பெற்றுள்ளது   என்பதை பெரும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். 

இப்படத்தை இயக்கிய அம்ஷன்குமார், தயாரித்த தவில் மேதை தெட்சணாமூர்த்தி பவுண்டேஷன் குழு ஆகியோருக்கு வாழ்த்துகள்.BEST ARTS /CULTURAL FILM

1. A Far Afternoon- A Painted Saga And

2. Yazhpanam Thedchanamo orthy -Music Beyond Boundaries

Producer: Piramal Art Foundation Director: Sruti Harihara Subramanian

And Producer: Siddhartha Productions Director:
Amshan Kumar RAJAT KAMAL & 50,000/- each to the Producer & Director* (Cash Component to be shared) 1. Breathing life into the canvas to articulate and assimilate. And 2. Crossing over the boundaries to resurrect the art of Tavil.

சிறந்த தமிழ் திரைப்படம் விசாரணை  - வெற்றிமாறன்

BEST TAMIL FILM VISAARANAI Producer: WUNDERBAR FILMS Director: VETRI MAARAN

சிறந்த திரைப்படம் பாகுபலி   -  ராஜ்மௌலி
சிறந்த நெறியாளர்   சஞ்சய் லீலா பன்சாலி  BAJIRAO MASTANI
சிறந்த நடிகர்  அமிதாப் பச்சன்   - படம் - PIKU
சிறந்த துணை நடிகர்  சமுத்திரகனி  படம்- விசாரணை

- செ.பாஸ்கரன் 

ஈழத்தமிழ் அன்னையின் தவில் இசைக்கலைச் சக்கரவர்த்தி திரு தட்சணாமூர்த்தி

.
இசைக்கலைச்   சக்கரவர்த்தி திரு தட்சணாமூர்த்தி அவர்களின் நினைவு விழா வெள்ளிக்கிழமை 25 03 2016 சிட்னியில்  இடம்பெற்றபோது இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன் ஆற்றிய உரை 

          இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.

இவர் ஒரு அபூர்வப்பிறவி, கற்பனைச் சுரங்கம், தவில் வாத்திய ஏகச்சக்ராதிபதி, கடவுளின் அவதாரம், எட்டாவது உலக அதிசயம் இயற்கையிலேயே லயப்பிண்டமாகப் பிறந்துவிட்ட  இவரைப்போன்றதோர் தவில் மேதை இவ்வுலகில் இதுவரை தோன்றியதும் இல்லை இனித்தோன்றப்போவதும் இல்லை லயஞான குபேர பூபதி  என்றெல்லாம்  இசை உலகம் வர்ணிக்கும் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் சிறந்து விளங்கும் இணுவையயம்பதியில் மிகச்சிறந்த தவில் வித்துவானாகிய திரு விஸ்வலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வனாக 26.8.1933 இல்  வந்துதித்தார். இவரைப் பற்றிய குறிப்புகளை “ஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்கரவர்த்தி” என்;ற தலைப்பில் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணுவை அப்பர்  என்கின்ற தன்னுடைய நூலில் முதன் முதலிற் பதிவு செய்தவர் எனது தந்தையாகிய இணுவையூர் பண்டிதர் திரு கா. செ. நடராசா ஆவார்.

கவிவிதை - 12 - --விழி மைந்தன்--

.
அடிமை 

என் பாட்டன் அடிமைத் தனத்திற்குப் பிறந்தான்.

நிலம் வெளுக்க முன் எழ வேண்டும்.

மழவராயரின் மாடுகளுக்குத் தீனி வைக்க வேண்டும்.

மழவராயரின் வயலில் உழ வேண்டும்.

உழுவது என்பது மாடுகளை ஓட்டி  மட்டும் அல்ல -  சில நேரம் மாடாகத் தன்னைப் பூட்டியும்!  அடிமைகளை நுகத்தில் பூட்டி உழுவது என்பது புத்தூர் மழவராயரின் பெருமைக்கு அடையாளம் அந்த நாளில்!

மழவராயரின் தோட்டத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்.

மழவராயரின் வேலியை  அடைக்க வேண்டும்.

மழவராயரின் பல்லக்கைச் சுமக்க வேண்டும்.

மழவராயரின் நாயைக் குளிப்பாட்ட வேண்டும்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
மொழியின்  தேவைகள்  மாறுபடும்  கோலம்
அரசியல்வாதிகளிடம்,   புலனாய்வாளர்களிடம், இராஜதந்திரிகளிடம்,   பேராசிரியர்களிடம், இலக்கியவாதிகளிடம்,     மொழிபெயர்ப்பாளர்களிடம் மொழியறிவின்        பயன்பாடு


                                       
வரிவடிங்கள்  இல்லாத  பல  மொழிகள்  உலக  நாடுகளில் வழக்கிலிருக்கின்றன.   குறிப்பாக  பழங்குடி  மக்களிடமும்  இந்திய மலைவாழ்  மக்களிடமும்  சில  ஆபிரிக்க  நாடுகளிலும் அவுஸ்திரேலியா  ஆதிவாசிகள்  சமூகத்தில்  சில  பிரிவுகளிலும் வழக்கிலிருக்கும்   மொழிகளில்  அவர்கள்  தாராளமாகப் பேசுவார்கள்.  ஆனால்,  அவற்றை  எழுதிக் காண்பிக்கச்சொன்னால் அதற்கு  வரிவடிவம்  இல்லை  என்பார்கள்.
இலங்கையில்   எனது  இலக்கிய  நண்பர்  மேமன்கவி  தாம்  பேசும் மேமன்மொழிக்கு  வரிவடிவம்  இல்லை  என்று  முன்பொருதடவை சொல்லியிருக்கிறார்.   நாம்  அவரை  மேமன்  என்று  செல்லமாக அழைப்போம்.

ஒருநாள்  மட்டக்குளியில்  இருக்கும்  அவருடைய  வீட்டைத் தேடிக்கண்டுபிடித்துச்சென்றபொழுது   அவர்  வீட்டுக்கதவு   தட்டி அங்கிருந்த  அவருடைய   சகோதரியிடம் "  மேமன்  இருக்கிறாரா ?"  என்று   கேட்டேன்.  அவர்களுக்குத்  தமிழும்  பேசத்தெரியும்.

கோணை நாயகன் கோயில் வந்தாலே - திருமலை மூர்த்தி

.


கோணை  நாயகன் கோயில் வந்தாலே
         
குறைகள் தீருமடி
    
கும்பிட்டு நிற்கும் கைகள் வேண்டிக்
         
கேட்பது சேருமடி

மோனை  எதுகைகள்  முத்துத்  தமிழினில்
         
கவியாய்  ஓடுமடி
    
மூன்று  பக்கமும்  மோதிடும் அலைகள்
         
அவன்புகழ்  பாடுமடி

ஏணையில் போட்டெனைத் தாலாட்டி வளர்த்த
         
அன்னையின்  உள்ளமடி
    
ஏழு  சுரங்களும்  அவனடி  தொழுதால்
         
நாவினில்  வெள்ளமடி

வானை யிடிக்கும் மலை மீதிருந்து
         
வரமருள்  தேசனடி
    
வணங்கிச் செல்பவர் வாழ்விருள் அகற்றி
         
வைத்திடும்   ஈசனடி .

தமிழிலக்கியத்தில் மதுரை--- அன்பு ஜெயா

.
(மதுரை மீனாட்சி கல்லூரி நடத்திய 'இலக்கியப் பதிவுகளில் மதுரை" பன்னாட்டுக் கருத்தரங்கு மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை)

முன்னுரை

நான்மாடக் கூடலாம் மதுரை மாநகருக்கும் தமிழிலக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகர் மதுரை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, தமிழிலக்கியத்திற்குப் பல பாடல்களை இயற்றி தமிழ்ச்சேவை புரிந்த புலவர்கள் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் காமக்கண்ணி நப்பாலத்தானர், மதுரைக் கூத்தனார், மதுரை வேளாசன் போன்று ஏறத்தாழ 35 புலவர்கள் தங்கள் பெயரில் மதுரையைக் கொண்டுள்ளனர். அதனால், இவர்களில் பெரும்பாலோரைத் தமிழுலகுக்குத் தந்த பெருமை மதுரையைச் சாரும் என்று எண்ணத் தோன்றுகிறது. மதுரை என்றால் முதலில் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாட்சி அம்மனும் வைகை நதியும்தான். அந்தச் சிறப்பினையும், அதுபோன்று மதுரையின் பன்முகச் சிறப்புகளைத் தன்னுள்ளே தாங்கி நிற்கும் பாடல்கள் பல பண்டை இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றை அனைத்தையும் எடுத்துரைப்பதென்பது, கம்பன் கூறுவதுபோல், பாற்கடலினை தன் நாவினால் நக்கியே குடித்திட எண்ணிய பூனையின் நிலையை ஒக்கும். அதனால், மதுரையின் சிறப்பைத் தன்னுள்ளே அடக்கிவைத்திருக்கும் சில இலக்கியப் பதிவுகளை மட்டும் உற்றுநோக்குவோம். 

தமிழ் எழுத்தாளர் விழா 2016 27 08 2016

லயனல் வென்ட் அரங்கில் விருது பெற்ற பேராசிரியர் மௌனகுரு

.

லயனல் வென்ட் அரங்கில் இலங்கை நாடகப் பங்களிப்புக்காக
உலக நாடக தின விருது பெற்ற பேராசிரியர் மௌனகுரு

உலக நாடக தினத்தை முன்னிட்டு உலகநாடக தினம் இம்மதம் 25, 26, 27  ஆம் திகதிகளில் கொண்டாடப்பட்டது.

 27 ஆம் திகதி உலக நாடக தினத்தை முன்னிட்டு கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் இலங்கை நாடகத் துறையில் தம் அர்ப்பணிப்பான  தொடர் செயற் படுகளால் பெரும் பணி புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற  நான்கு பெரும்  நாடகக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டனர். இவர்களுள்  ஜெயலத் மனோரத்ன, லூசியன் புலத் சிங்கள, , ஜெயந்த டி மென்டிஸ் ஆகிய மூவர் சிங்கள நாடகக் கலைஞர்கள். சிங்கள நாடகத் துறையில் பெரும் பங்களிப்புச்செய்தவர்கள்  அரும்பணியாற்றியவர்கள். ஆற்றிக்கொண்டிருப்பவர்கள்.

தமிழ் நாடகக் கலைஞரான பேராசிரியர் சி மௌனகுருவுக்கும் இது நாள் வரை  அவர் இலங்கைத் தமிழ் நாடகக் கலைக்கு ஆய்வுத் துறையிலும் ஆற்றுகைத்துறையிலும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பெரும் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினர்களாக பிரபல ஊடகவியலாளர் சுனந்த மஹேந்திராவும், பழம் பெரும் சினிமா,நாடக நடிகையும் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கில விரிவுரையாளருமான அய்ராங்கனி சேரசின்காவும் கலந்துகொண்டனர்.

உலகச் செய்திகள்

.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.14 இலட்சம் அறிவிப்பு

பிரஸ்சல்ஸ் தாக்குல் : தாக்குதல்தாரிகளின் புகைப்படங்கள் வெளியாகின, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து விளக்கம், தீவிரவாதி ஒருவர் தப்பியோட்டம்

பிரஸ்சல்ஸ் தாக்குல் :முக்கிய சூத்திரதாரி கைது : ஏனைய இருவரும் சகோதரர்கள் எனவும் தெரிவிப்பு 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.14 இலட்சம் அறிவிப்பு

HSC தமிழ் பாடத்தில் அதி உயர் புள்ளி பெற்ற சாதனையாளர்கள்

.
கீழேயுள்ள படத்தை அழுத்தி பெரிதாக்கி வாசிக்கலாம்இலங்கைச் செய்திகள்


பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு.!

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ 

கோத்­தா­வுக்கு விசேட நீதி­மன்றம் அறி­வித்தல்

இலங்கையில் அறிமுகமானது Street View

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் 

உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு

.

வீசும்தென்றல் காற்றுகூட
பிறர்சுவாசம் பெற்றிடத்தான்!
உதிக்கும் சூரியனதுகூட
பிறர்வெளிச்சம் பெற்றிடவே!

மணம்தரும் மலர்கள்கூட
தேன்தந்துதான் உதிர்கிறது!
விழும்மழைத் துளிகள்கூட
விளைச்சலைப் பெருக்கவே!

வளரும் செடிகள்கூட
பிறர்புசிக்க காய்கள்தரும்!
வளர்ந்த மரங்கள்கூட
பறவைகளின் புகலிடமாம்!

பிறருக்கு உதவிடவேநம்
பிறப்பு இருந்திடவேண்டும்!
இறக்கும்போது எல்லோர்மனதிலும்
இடம்பெற்றிருக்க வேண்டும்!

காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா.காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் - பேராசிரியர் கே. ராஜு

.

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். சிலருக்குக் காலையில் பசி எடுப்பதில்லை. பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசரத்தில் காலை உணவைத் தவிர்ப்போர் பலர். பெண்களில் பலருக்கு காலையில் குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்லத் தயார்ப்படுத்துவது, சமையலை முடித்து கணவருக்குக் கொடுத்து அனுப்புவது போன்ற வேலைகளில் மூழ்கிவிடுவதால் காலை உணவுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. காரணங்களை அடுக்குவதை விடுத்து எப்படியாவது காலை உணவை  எடுத்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒருவர் வந்துவிட்டால் அவருக்கு அது சாத்தியமே. காலை உணவைத் தவற விடுபவர்கள் மதிய நேரத்தில் ஒரு பிடி பிடித்துவிடுவது வழக்கம். அல்லது இடையில் பசியைச் சமாளிக்க கேக், பிஸ்கெட் என ஏதாவதொரு நொறுக்குத் தீனி அல்லது காபி, டீ, குளிர்பானங்களை உட்கொண்டு பசியைச் சமாளிப்பதும் உண்டு. உடல்நலத்திற்கு உதவாத நொறுக்குத் தீனிகளோ பானங்களோ நீடித்த ஆற்றலைத் தர பயன்பட மாட்டா.


நேர்காணல்: திலீப்குமார் - மொழி கடக்கும் தமிழ் ‘ஸ்டோரி’ - ஷங்கர்ராமசுப்ரமணியன்

.

கிட்டத்தட்ட 100 ஆண்டு காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்துகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்வண்ணம் ‘தி தமிழ் ஸ்டோரி’ தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. ட்ராங்குபார் பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. செம்மொழித் தமிழின் வரலாற்றில் இந்தத் தொகைநூல் ஒரு மைல்கல். சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை, திராவிட இயக்கம், முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண் எழுத்து என அனைத்து முனைகளிலிருந்தும் கடந்த நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதுவே இதன் முக்கியத்துவம். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி. ஆங்கிலப் பதிப்புத் துறையில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருபவர் இவர். ‘இந்தியன் ரெவ்யூ ஆப் புக்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். நவீனத் தமிழ் வாழ்க்கை, சிறுகதை என்னும் வடிவம் வழியாகக் காலம் காலமாகத் துலக்கம் பெற்றதன் பின்னணியில் இத்தொகுப்பை ஆறு ஆண்டு காலம் உழைத்து உருவாக்கியுள்ளார் தொகுப்பாசிரியர் திலீப்குமார். இவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.

திருக்கோவையார் பக்திநூலா? - சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம்

.
(அவுஸ்திரேலியாத் தலைநகர் கன்பராவில் 27-02-2016-ல் நடைபெற்ற திருமுறை விழாவில் ஆற்றிய தலைமையுரையின் சுருக்கம்)திருவாசகமும் திருக்கோவையாரும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த இரு நூல்கள். இரண்டும் தோத்திர நூல்களாகக் கொள்ளப்பட்டு, எட்டாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன.

திருவாசகம் 650 பாடல்கள் கொண்டு, படிப்பவர் மனத்தை உருகச்செய்யும், தலைசிறந்த ஒரு பக்தி நூலாகத் திகழ்கிறது. எளிதில் விளங்கக் கூடிய இனிய தமிழ் நடையில் ஆக்கப்பட்டது அது.
திருக்கோவையார் 400 பாடல்கள் கொண்ட, உலகியல் வாழ்வு தொடர்பான, காதல் பற்றிக் கூறும், ஒரு அகத்திணை இலக்கிய நூல். (திணை – ஒழுக்கம்). இளம் வயதில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காணுதல், உணர்ச்சி வசப்படுதல், உள்ளம் கலத்தல், காதலித்தல், திருமணம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கோர்க்கப்பட்டதால் கோவை எனப்படுகிறது.

காதல் வாழ்வு பற்றிப் பேசும் திருக்கோவையார் பக்தி நூலா?, என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடையளிப்பது என் நோக்கமல்ல. இக்கேள்வியின் மூலம் திருக்கோவையார் பற்றிய சில குறிப்புக்களையும் விளக்கங்களையும் தந்து, அதனை அறிவதில் உங்கள் ஆர்வத்தைத் தூண்ட விழைகிறேன்.

திருவாசகம் போல் எளிதில் விளங்க முடியாத, சங்க இலக்கியம் போன்ற நடை கொண்டது திருக்கோவையார். ஆயினும் மணிவாசகரின் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கு இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது. திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையைக் குறிப்பிட்டு, ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக, என இறைவன் கேட்க, அவர் பாடியதாக வாய்வழி வந்த ஒரு கதை உண்டு.

மௌன அநீதி - தி. சுவாமிநாதன் - நாமக்கல்

.                                                                      
இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்பு, நகரமயமாக்கல், உலகமயமாக்கல், கணினி, பேஸ்புக், செல்போன் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறது. தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாத அளவுக்கு காதல் திருமணங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வயது வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ நிச்சயமாக உரிமை உள்ளது. ஆனால், காதல் மணம் புரிபவர்கள் அதற்கு கொடுக்கும் விலை மிகவும் அவலமானது என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.
தழிழகத்தில் சமீபத்திய நிகழ்ந்த காதல்கள் மீதான படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25.05.2014 அன்று 25 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, லாகூர் உயர்நீதி மன்றத்துக்கு வெளியே சொந்த குடும்பத்தாரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக கவனத்தை பெரிதும்; ஈர்த்தது. குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்து விட்டால் தம்பதிகளை பிரித்து வைக்கவும், ஊர் நீக்கம் செய்யவும், தற்கொலைக்கு தூண்டவும் கூட சிலர் தயாராகி விடுகின்றனர்.

பாலுமகேந்திரா விருது 2016 - (குறும்படங்களுக்கு மட்டும்)

.

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்க தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது. 

விருதுத் தொகை:

ரூபாய் 25000/-

தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும்,  பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். 

.

சுப்ரமணியபுரம்' படம் கொண்டாடப்பட்டதன் பின்னணியில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் உழைப்பு இருப்பதாக இயக்குநர் சசிகுமார் குறிப்பிட்டு இருக்கிறார்.
‘தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம்’ என்று புகழப்படும் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. அவருடைய மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
'ஃபிலிம் நியூஸ்' ஆனந்தன் மறைவு குறித்து இயக்குநர் சசிகுமார் தனது ஃபேஸ்புக் பதிவில், "ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் சாரை நான் சந்திக்கும் போதெல்லாம் ஆசி சொல்லித்தான் அனுப்புவார். இன்று ஆசி சொல்லவில்லை. அவர் சற்று கண்ணயர்ந்து உறங்குவது போல் இருக்கிறது. ஆனந்தன் சாரின் மறைவை பிரபு சார்தான் எனக்கு எஸ்.எம்.எஸ். பண்ணி இருந்தார். அந்த நிமிடத்தில் இருந்து நினைவு பிசகியது போன்ற உணர்வு.
மாபெரும் நடிகரான சிவாஜி கணேசனை முதன் முறையாகப் பேட்டி கண்டவர், தமிழ்த் திரையுலகின் முதல் பி.ஆர்.ஓ. ஆனந்தன் சார். இந்த அடையாளங்களைக் கடந்து எனக்குள் அவர் எழுந்தது வேறுவிதமாக!

தமிழ் சினிமா - புகழ்


தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அரசியல் குறித்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மட்டுமின்றி ஒரு அரசியல் பிரமுகர் தவறு செய்தால் தட்டியும் கேட்க வேண்டும் என்ற கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் புகழ்.
ஜெய், சுரபி, RJ பாலாஜி, கருணாஸ் நடிக்க மணிமாறன் படத்தை இயக்கியுள்ளார்.

கதைக்களம்

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்று தன் அப்பா, மாமா வளர்ப்பில் வளர்ந்தது மட்டுமின்றி ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக ஜெய் வலம் வருகிறார். சிறு வயதிலிருந்தே தன் ஊரில் இருக்கும் ஒரு மைதானத்தில் ஓடி ஆடி சந்தோஷமாக தன் நண்பர்களுடன் ஜெய் பொழுதை கழிக்கின்றார்.
கல்வி அமைச்சர் அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியுடன் அந்த மைதானத்தை கைப்பற்றி ஒரு பில்டிங் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஜெய் அது நாங்கள் வாழ்ந்து, விளையாடி வரும் மைதானம் என கங்கனம் கட்டி போராடுகிறார்.
தன் விரலை வைத்து தன் கண்களையே குத்துவது போல், ஜெய்யின் நண்பருக்கு அரசியல் ஆசைகாட்டி மேலும், அவரின் பணத்தேவையை பூர்த்தி செய்து அந்த மைதானத்தை பிடிக்க பார்க்கின்றார்.
ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அந்த மைதானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஜெய், இத்தனை பெரிய அரசியலை தாண்டி வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஏற்கனவே இதே சாயலில் சமீபத்தில் மெட்ராஸ், அஞ்சல ஆகிய படங்கள் வந்தாலும், 100 காதல் கதைகள் வந்தாலும் நாம் பார்க்க தான் செய்கின்றோம். அந்த வகையில் இதுபோல் நல்ல கருத்துக்களை கொண்ட படங்கள் ஒரே சாயலில் வந்தாலும் பார்ப்பதற்கு என்ன? என்று தான் தோன்றுகின்றது.
ஜெய் தன் திரைப்பயணத்திலேயே பெஸ்ட் கதாபாத்திரம் என்று கூறலாம், புகழாக ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் போராடும் குணமுடையவராகவும், தன்னை கொலை செய்ய முயற்சித்தவன் உன் நண்பன் தான் என பலர் சொல்லியும் கேட்காமல் நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.
சுரபி படத்திற்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறார் என்று தெரியவில்லை, பல காட்சிகளில் ஒட்டாமல் ஏதோ காதல் காட்சிகள் தேவை என்பதற்காக வந்து செல்கின்றார். இதே வரிசையில் தான் RJ பாலாஜி, காமெடி எல்லாம் ஓரங்கட்டி கொஞ்சம் எமோஷ்னல் முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் செட் ஆகவில்லை பாஸ்.
ஒரு தவறு நடந்தால் கண்டிப்பாக இளைஞர்கள் தட்டிக்கேட்க வேண்டும், அது எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தைரியமாக போராட வேண்டும் என்று ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் மணிமாறனுக்கு ஒரு சல்யூட். ஆனால், இதை கமர்ஷியலாக எடுப்பதா? அல்லது ரியலிஸ்டிக்காக எடுப்பதா? என்பதில் கொஞ்சம் தடுமாறியுள்ளார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படப்பிடித்து அசத்துகின்றது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

நல்ல கதைக்களம், இதற்கு நன்றாக பொறுந்திய ஜெய் மற்றும் அவர் நண்பர்களின் கதாபாத்திரம். இவர்கள் அனைவரையும் விட லோக்கல் சேர்மனாக நடித்திருக்கும் வில்லன். பெரியதாக அதட்டலும் இல்லாமல், மேனரிசத்தில் கலக்கியுள்ளார். பல படங்களில் இனி வாய்ப்பு காத்திருக்கின்றது. ஜெய்யின் அண்ணனாக கருணாஸ், இத்தனை யதார்த்தமாக ஒரு அண்ணனை பார்த்திருக்க முடியாது. இனி கருணாஸிற்கு குணசித்திர கதாபாத்திரம் குவிய போகின்றது.
படத்தின் வசனம் பல இடங்களில் கைத்தட்ட வைக்கின்றது. அரசியலை விட வேறு எந்த தொழில் பணம் அதிகம் கிடைக்க போகின்றது. அரசியலுக்கு வாங்க, என்பது போல் பல வசனங்கள். போலிஸை வைத்துக்கொண்டே, போலிஸிற்கு தெரியாமல் மக்களுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறுவது போன்ற காட்சியமைப்புக்கள் நகைச்சுவை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயத்தை அப்பட்டமாக காட்டுகின்றது.

பல்ப்ஸ்

முன்பே கூறியது போல் படத்தை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகின்றது.
படம் முழுவதும் யதார்த்தமாக சென்று கிளைமேக்ஸில் ஒரு மாஸ் ஹீரோ போல் ஜெய் நடந்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஜெய்யின் நண்பர் தன் பதவியை ராஜினாமா செய்தால், தன் சேர்மன் பதவி போய் விடும் என்று தெரிந்தும் கிளைமேக்ஸில் அவரை வில்லன் வெட்ட நினைப்பது என்ன லாஜிக்?
மொத்தத்தில் தவறுகளை தட்டிக்கேட்கும் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ஜெய்யிற்கும் இந்த படம் புகழ் சேர்க்கும்.

ரேட்டிங்-2.75/5     நன்றி cineulagam