இலக்கியமும் நவீன இலக்கியமும் -  ஜெயமோகன் 

தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், ‘நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத தமிழ்ப்பண்பாட்டுத் தகவல்கள் உறைந்துள்ளன’
நான் அதைப்பற்றி மேலும் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பொருளை மதச்சடங்குக்கு கோயில்வழிபாட்டுக்கு பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது எவ்வளவு முக்கியமான தகவல்! உதாரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16 வகையான வாழைப்பழங்கள் பயிராகின்றன. ஆனால் ஒரே ஒரு பழத்தை மட்டுமே நாம் இறைவனுக்கு நிவேத்யமாக படைக்க முடியும். அது கதலிவாழைப்பழம். அதில் வெள்ளைக்கதலி ,ரசகதலி, செங்கதலி என மூன்று வகை உண்டு