விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று தமிழர்களுக்கு விடுதலை

.


விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் மார்ச் மாதம் 31ம் திகதி விடுவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த குற்றத்திற்காக 2007ம் ஆண்டு இந்த மூவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்கள் பயங்கரவாதக் குழுவிற்கு பணம் அனுப்பியதற்கான குறைந்த குற்றத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து 31ம் திகதி மார்ச் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கின் முடிவைப் பார்ப்பதற்காக வந்திருந்த பல ஆதரவாளர்கள் 1000 டொலர்கள் நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முடிவைக் கேட்டதும் அவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

சிட்னியில் வசித்து வருபவரான ஆறுமுகம் ராஜீவன், 44, மெல்மேனில் வசித்து வருபவர்களான ஆருரன் விநாயகமூர்த்தி 35, மற்றும் சிவாயன் யாதவன் 39 ஆகியோர் ஈழப் புலிகளுக்கு பணம் அனுப்பிய ஒரே குற்றத்திற்காக ஒப்புக்கொண்டார்கள்

இந்த மூவரும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடம் பணம் சேகரித்து இலங்கையில் தனிநாடு கேட்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பியிருந்தார்கள் என நீதவான் Paul Coghlan  கூறினார். இந்த மூவரும் நல்ல நோக்கத்திற்காக தமிழர்களுக்கு உதவி புரிந்து இருந்தாலும் இவர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த நிதி துர்ப்பிரயோசனம் செய்யப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்த மூவரும் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதக் குழு என சில நாடுகளால் தீர்மானிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டதைத் தெரிந்தவர்கள் எனவும் அவுஸ்திரேலியாவிலும் இப்படி தடை செய்யப்படுவதற்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுத்தவர்கள் எனவும் நீதவான் Paul Coghlan கூறினார்.

Paul Coghlan  விநாயமூர்த்தியின் இரண்டாவது குற்றமாகிய $97,000 பெறுமதியான மின்சார உபகரணங்களை தமிழ்ப் புலிகளுக்கு அனுப்பியது தனக்கு வேதனையை தந்தது எனவும் கூறினார்.

நீதவான் Paul Coghlan  விநாயமூர்த்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து நாலுவருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார். அவர் யாதவனுக்கும் ராஜிவனுக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து மூன்று வருட நன்னடத்தை பிணையில் விடுவித்தார்.
'சிறிலங்காவில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற பேரவாவினால் நீங்கள் ஒவ்வொருவரும் உந்தப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்' என அவர் தொடர்ந்தார்.
'உங்களது இலக்கு மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே அமைந்ததென நான் கூறுவதற்கு இன்னமும் நான் விரும்பவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் செயற்பாட்டார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.'

சிறிலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியிலேயே இவர்கள் இந்தக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர் ஹோல்சன் இந்தக் காலப்பகுதியில் நாட்டினது வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடைமுறை நிழல் அரசொன்றை நிருவகித்து வந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிக்கென அனுப்பப்பட்ட நிதி தவறாக பயன் படுத்தப்பட்டதாக எந்தத் தகவலுமில்லை என்பதை அவர் அவதானத்துடன் குறிப்பிட்டார்.

நீதியரசர் ஹோல்சன் ஒரு மணி நேரமாக இந்த வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்பான சர்தேக கருத்து இவர்களுக்குத் தெரிந்திருக்காமல் இருந்திருக்காது என முடிவெடுத்த நீதியரசர் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இவர்கள் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கடைசியில் கூறினார்.

காத்திருப்போம்

                                                                                     செ.பாஸ்கரன்




முற்றத்து மணற்பரப்பில் விரித்தபாயும்

வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலுமாய்

வீற்றிருந்த என் வீடும் வளவும்

தூசி படிந்து தூர்ந்து கிடக்கிறது

வளையோசையும் வாய்ப்பாட்டு ராகமுமாய்

வலம் வந்த என் அம்மை

கழுவித்துடைத்து அழகுக்கோலமிட்ட அரண்மனை

தூண்களும் கல்லுமாய் அடையாளம் தருகிறது

பிரசவத்துக்காய் காத்துக் கிடந்த

முப்பது வருடங்களின் முற்றுப்பெறாத கருக்கலைப்பு

மக்கள் மௌனித்திருந்த நகரத் தெருக்களும்;

மரணித்திருந்த மானிட நேயமும்

ஊட்டச்சத்தின்றி உலாவிவரும் பிள்ளைபோல்

எழுந்து நிற்க எத்தணிப்புச் செய்கிறது

சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கிறது

சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்

காதல் வரி பாடி கழித்திருந்த காலம்

மீண்டும் துளிர்விட்டு பசுமைதருமென்று

காத்திருக்கும் பெரிசுகளும்

அம்மன் கோயில் தேராக அசைந்துவரும் காதலியின்

விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்

கேலிச் சிரிப்பும் கெக்களமும் கொட்டி

சேர்ந்து மகிழ்திருக்க

நாம் நடந்த நகரம் மீண்டும்

திரும்பும் என காத்திருப்போம்

சிட்னியில் இதமான ராகங்கள் 18.10.2010

.



பறக்கும் கார் 2011 இல் பறக்கும்.



வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.

தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி

.

தமிழ்க் கங்கை செவாலியர் அமரர் புலவர் அமுது நினைவஞ்சலி


தொண்நூற்றிரண்டு வயதிலும் இளமைத் துடிப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிய இளவாலை அமுது என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அவர்கள் அண்மையில் இலண்டனில் அமரத்துவம் எய்தியமை எல்லோருக்கும் தெரிந்ததே, புலவர்மணி இளமுருகனார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை. வித்துவான் வேந்தனார். பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிடம் தமிழை ஐயந்திரிபறக் கற்றவர் புலவர் அமுது, "கவிதைச் சிலைக்கு மரபுக் கவிதைகளால் ஆடையணியவேண்டும், மானுடத்தின் மனச்சாட்சியைக்கொண்டு அதன் கண்களைத் திறக்கவேண்டும்" என்ற அவரின் கனவை நனவாக்கி இறையடி சேர்ந்த அன்னாருக்கு ஓர் கவிதை அஞ்சலி -






காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே,

தேமதுரஞ் சொட்டச்சொட்டக் கவிதை யாலே
செல்வா! எனை வாழ்த்திநின்றாய்! செந்தமிழ்ப் பூந்
தாமரைகள் பூத்திடவே தடாகம் அமைத்துத்
தனித்தமிழை வளர்த்துநின்றாய்! தகைமை பெற்றாய்!
நாமகிழ்ந்து தினம்போற்றச் "செவாலியர்" விருதை
நற்குணத்தோய் பெற்றனையே! பற்ற றுத்துக்
காமருநல் வடிவம்நீத்துக் கர்த்தரின் சேவடியிற்
கலந்தவுனைக் கரங்குவித்து வணங்கு வோமே!

சீலம்மிகு பெருவாழ்விற் றிழைத்துப் பெற்ற
செல்வங்கள் ஐயிரண்டுஞ் சிறக்கச் செய்தாய்!
காலத்தாற் பட்டழியும் தமிழ் மலரக்
கடமையென மரபுதனை ஓம்பிக் காத்தாய்!
கோலச்செங் கதிரோன்போற் கவிக் கிரணம்
குவலயத்திற் பாய்ச்சித்"தமிழ்க் கங்கை" யானாய்!
பாலனவன் இராச்சியத்திற் பணி இயற்றப்
பக்குவம்பெற் றேகினையோட? சாந்தி! சாந்தி!!

நடைக்கெனவே உனக்கென்றோர் பாணி தேர்ந்து
நறுந்தேனும் சர்க்கரையும் கலந்தாற் போலப்
படைத்தளித்த செந்தமிழ்ப்பா மரபுக் கவிகள்
பகர்ந்திடுமே உன்புகழைப் பாரில் அன்றோ?
"கிடைத்திடுமோ அமுதேயுன் தீஞ்சொல் அமுது?
கீற்றுமதி போலெங்கு உற்றாய்"என் றேங்க
அடைக்கலமாய் இயேசுபிரான் பாதார விந்தம்
அணைத்துய்த்த அடைக்கல முத்தே சாந்தி!

ஓம் சாந்தி!

பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி
சிட்னி – அவுத்திரேலியா,

ANJANEYAM



RASANA School of Aesthetic Arts வழங்கும் ஆஞ்சநேயம் நடன நிகழ்வு சிட்னியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ம் திகதி மாலை 6.30 மணிக்கு Bankstown Townhall மண்டபத்தில் இடம் பெற இருக்கின்றது.