.
தமிழ் கலாச்சாரத்தில் கொண்ட ஆர்வத்தினால் புலம் பெயர்ந்த தமிழர் தமது பெண்களுக்கு பரதநாட்டியம் கற்பித்து வருகிறார்கள். அரங்கேற்றத்தில் ஆடலை கற்ற மாணவி மேடையில் தோன்றி 2 மணிநேரம் பார்வையாளர்களின் மனதை கவரும் படியாக ஆடல் வேண்டும். இதில் வெற்றி பெறும் பொழுதுதான் அவர்கள் அரங்கேற்றம் முறையாக அமைந்தது என்று கூறலாம். இதற்கு ஆசிரியையின் முறையான ஆடல் அமைப்பு, இசைக் கலைஞரின் திறமையான ஒத்திசை, மாணவியரின் திறமையென யாவும் ஒன்று சேரல் வேண்டும்.
22.4.2018 கொன்சலா ஜெரோம் தனது மூன்று மகள்களின் அரங்கேற்றத்திற்கு அழைத்திருந்தார்.
பல அரங்கேற்றங்களை பார்த்த பின் இந்த அரங்கேற்றத்தையும் பார்க்கலாம் என சென்றேன். தனித்தொருவர் ஆடுவதை விட மூவர் இணைந்து ஆடினால் பல வகையாக ஆடலை அமைக்கலாம் அதனால் சிறிது புதுமையை எதிர்பார்த்தனர் ஆடல் அறிந்தவர்கள். ஆதலின் ஆரம்பத்தில் இறை வணக்கத்தை அடுத்து அவர்கள் தமிழ் என்ற தாய் மொழியை எவ்வாறு நேசிக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது தமிழ் வணக்கம் "தாய் பிள்ளை உறவு போன்றது தமிழும் உயிரும்" என்ற பாடல். இதை சகோதரிகள் சகானா, இன்பனா , ஆரணா ஆடலாக உருவகப்படுத்தியது போற்றற்குரியது.