.
கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை
நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில்,
சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி
ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை
பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது.
அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து,
மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது சினிமா: பார்த்ததும் கேட்டதும் புதிய
நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.
மறுநாளும் அவருடன் உரையாடிக்கொண்டிருப்பதற்கு
சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கவில்லை.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது
ஆய்வேடுகளை பரிசீலித்துக்கொண்டுதானிருந்தார்.
சில உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் அவர்
உற்சாகமுடன் பேசிச்சிரித்து உரையாடி மகிழ்ந்தார்.
எனது குடும்பத்தின் நட்பு வட்டத்தில்
நீண்டகாலம் இணைந்திருந்த ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்ட துயரத்துடன் இந்த அஞ்சலியை பகிர்ந்துகொள்கின்றேன்.
கடந்த 10 ஆம் திகதியே இலங்கை நேரம் மாலையில் அன்னாரது
இறுதி நிகழ்வும் நிறைவெய்திவிட்டது.
அவரது மூத்த புதல்வன் , ஜீவநதி ஆசிரியர்
பரணீதரனை தொடர்புகொண்டு, எமது ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்தபோது, தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் ஒரு மனநிறைவான
செய்தியையும் அறிந்தபின்னரே அவர் விடைபெற்றிருக்கிறார்
என்ற தகவலும் கிடைத்தது.
கலாமணியின் கடைசிப்புதல்வர், பெற்றவர்களினதும்
மூத்த அண்ணன்மாரினதும் செல்லம், மதனாகரன்,
பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர் பணியில்
இணைந்துவிட்டார் என்பதே அந்த நற்செய்தி.
மதனாகரனுடனும் இதர இரண்டு புதல்வர்கள்
மற்றும் அன்புத்துணவியாருடனும் கலாமணி அவுஸ்திரேலியா சிட்னியில் சிறிது காலம் தனது
ஆய்வுப்பட்டத்திற்காக வாழ்ந்த காலப்பகுதியில் செல்வன் மதனாகரன் மழலைக்குரலில்
பேசிக்கொண்டிருந்த குழந்தை.
ஒரு நல்ல தந்தைக்கு, சிறந்த குடும்பத்தலைவனுக்கு
தனது பிள்ளைகள் பற்றிய நற்செய்திகள்தான், இறுதிக்காலத்திலும்
ஊக்கமாத்திரை. மருத்துவமனை தரும் மருந்து மாத்திரைகள்
உடல் நலத்தை பேணிவந்தாலும், பிள்ளைகள் பேரக்குழந்தைகள்
பற்றிய நற்செய்திகள்தான் உள நலத்திற்கு சிறந்த
ஊக்க மாத்திரை.
நண்பர் கலாமணி பற்றிய நினைவுகள் எனக்கு
பசுமையானவை.