உலகில் எந்தப் பாகத்திற்குச்
சென்றாலும், அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது
வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின்
இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து
புறப்படும்போதே எனக்கு நன்கு தெரிந்த இரண்டு
அன்பர்கள் இறந்துவிட்டனர்.
கனடா வந்து சேர்ந்தபின்னர்
மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன்
மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.
புஸ்பா எமது அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர்
விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.
“ நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?
“ என நான்
யோசித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு,
“ எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர்
( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின்
அன்புத்துணைவியார் கமலி அக்கா கனடாவில் மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.
அடுத்தடுத்து துயரமான செய்திகளே வந்துகொண்டிருந்தன.
கனடாவில் நான் முற்கூட்டியே
தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது. மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும்
பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன்.
ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன்
மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது. என்னுடன்
வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர்
ராஜாவையும் அழைத்துக்கொண்டு கமலி அக்காவுக்கு
இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன்.
அங்கே அவரின் இரண்டு புதல்விகளும்
என்னைக் கண்டு பேராச்சிரியம் அடைந்தனர்.
“ பூபதி
அண்ணா, அம்மா உங்களை தனது இறுதிச்சடங்கிற்கு அழைத்து வந்துவிட்டார். “ என்று
அவர்கள் நா தழுதழுக்கச் சொன்னபோது விம்மிவந்த அழுகையை அடக்குவதற்கு சிரமப்பட்டேன்.
இலங்கையில் எமது மூத்த தலைமுறை வாசகர்கள் நன்கு வாசித்து அறிந்த
சோவியத் நாடு மாத இதழை மறந்திருக்க மாட்டார்கள். அத்துடன், சோஷலிஸம்: தத்துவமும்
நடைமுறையும் என்ற இதழையும் மறக்கமாட்டார்கள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( மாஸ்கோ
சார்பு ) தேசாபிமானி, புதுயுகம், சக்தி
முதலான இதழ்களையும் மறந்திருக்கமாட்டார்கள்.
தனது கணவர் பிரேம்ஜி மட்டுமன்றி, இதர எழுத்தாளர்களும் தங்கள் கையால் எழுதிக்கொடுத்த
பிரதிகளையெல்லாம் எழுத்துப் பிழையின்றி கச்சிதமாக தட்டச்சில் பதிவுசெய்து கொடுத்தவர்தான்
கமலி அக்கா.
இலங்கையில் சேர் ஏர்ணஸ்
டீ சில்வா மாவத்தையில் அமைந்திருந்த நவஸ்தி என அழைக்கப்பட்ட சோவியத் தூதுவராலய
தகவல் பிரிவில்தான் கமலி அக்கா, தனது கணவர் பிரேம்ஜி ஞானசுந்தரனுடன் பணியாற்றினார்.
குறிப்பிட்ட சோவியத் நாடு,
மற்றும் சோஷலிஸம் : தத்துவமும் நடைமுறையும் ஆகிய இரண்டு இதழ்களுடன் தினம் தினம்
வெளியாகும் சோவியத் செய்திக்குறிப்பேட்டையும் ( News Letter ) தட்டச்சு செய்தவர் கமலி அக்கா.
அக்காலப்பகுதியில் அங்கே
பணியாற்றிய இலக்கிய நண்பர் இராஜகுலேந்திரன் ( யாதவன் என்ற புனைபெயரில் இலக்கிய பிரதிகள்
எழுதியவர் ) கமலி அக்கா, ரோணியோ படிவத்தில் தட்டச்சுசெய்து கொடுக்கும் செய்தி ஏட்டினை
பிரதிகள் எடுத்து கொழும்பிலிருக்கும் பத்திரிகை ஊடகங்களுக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்.