மரண அறிவித்தல்

 


திரு பொன்னையா  சிவலோகநாதன்
1949 - 2020
It is with sadness that you are being informed  of the demise 
Mr. Ponniah Sivaloganathan on Thursday, 29th October 2020
A  Funeral  Service will be held at Rookwood Memorial Gardens and Crematorium, 

South Chapel , on  Sunday the 1st of November 2020 at 11:30am.

 The public viewing will be from 11:30am to 12:30pm. This will be followed by cremation 

 Due to COVID-19 there are restrictions on numbers.

 திரு பொன்னையா  சிவலோகநாதன் அவர்கள்  

2020.10.29ம் திகதி வியாழக்கிழமை  காலமாகிவிட்டார் என்பதை 

மிகுந்த  மனவருத்தத்துடன்  அறியத்தருகிறோம்.

அன்னாரின் இறுதி சடங்குகள்  2020.11.01ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  

 முற்பகல் 11.30 மணிக்கு   Rookwood Memorial Gardens and Crematorium, 

South Chapel இல்  இடம்பெறும் .

அஞ்சலி : முற்பகல்  11.30 இலிருந்து பி.ப. 12.30 மணி வரை

Covid19 கட்டுப்பாடுகளுக்கு  அமைவாக  நடைபெற்று 

தொடர்ந்து  தகனம் இடம்பெறும்  

மரண அறிவித்தல்

 .

                                                          திருமதி சுபத்திராதேவி அசோக்குமார்



யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், தற்போது மெல்பேர்ண், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சுபத்திராதேவி அசோக்குமார் இன்று 26/10/2020 காலை காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற அசோக்குமாரின் மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற நடராசலிங்கம், சிவயோகலிங்கம், சித்திவிநாயகலிங்கம், கெங்காதேவி, திருக்குமரலிங்கம், கிருஷ்ணானந்தலிங்கம், அருட்சோதிலிங்கம், நவமணிதேவி ஆகியோரின் சகோதரியும், சிகதரன், கவிதா, வித்தியா, கிரிஜா ஆகியோரின் தாயாரும், ஆகாஷ், விதுஷா, கீரன், சந்தோஷ், இனிகேஷ் ஆகியோரின் பேர்த்தியும், லோகநாயகி, பரமேஸ்வரி, ராகினி, தங்கராசா, ராஜகுமாரி, றஞ்சினிதேவி, சுமதி, சிவானந்தம், அசோகராணி, அசோகமலர் ஆகியோரின் மைத்துனியும், துஷ்யந்தன், சுகந்தன், ஸ்ரீதக்சன், சுபாஷினி ஆகியோரின் மாமியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் நாளை 27/10/2020 செவ்வாய்க்கிழமை, மாலை 2.30 மணிக்கு,  மெல்பனில் Bunurong Memorial Park இல்  (790 Frankston - Dandenong Rd, Dandenong South, VIC 3175  ) நடைபெறும். நடைமுறையிலுள்ள கட்டுப்பாட்டு சூழ்நிலையால், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்குகொள்ளக்கூடியதாக இறுதிக்கிரியைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி

 (தொடர்புகளுக்கு: சிகன் 0425845728,

 துஷ்யந்தன் 0403298861)


புத்துணர்வை உவந்தளிக்கும் பக்தி நிறை ராத்திரி

  


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா

      

     அவல் கடலை சுண்டல் உவந்தளிக்கும் ராத்திரி

          ஆடல் பாடல் எல்லாம் நிறைந்திருக்கும் ராத்திரி

          ஆணவமும் ஒடுங்கி அடங்கி விடும் ராத்திரி

          அதுவே நம்வாழ்வில் அமைந்த நவ ராத்திரி

 

          மாடி மனை குடிசையெலாம் கொண்டாடும் ராத்திரி

          மாகோவில் பணி மனைகள் மகிழ்ந்தேத்தும் ராத்திரி

          விரதமொடு விழாவிணைந்து விரவி நிற்கும் ராத்திரி

          விதம் விதமாய் கொலுவைக்கும் மேலான ராத்திரி

 

          புத்துணர்வை உவந்தளிக்கும் பக்தி நிறை ராத்திரி

          புலவரெலாம் வியந்தேத்தும் புலமை நிறை ராத்திரி

          கற்றிடுவார் கல்விதனை தொடங்கி நிற்கும் ராத்திரி

          கற்கண்டு பழம்படைத்து களிப் பளிக்கும் ராத்திரி

“கொறோனா வாய்திறந்தால்….. கொட்டிடுமே கவிதை” -- கேட்டிடுவீர்!


…………………….. பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி 


 என்பெயரைக் கேட்டதுவும்  மரணபயம் கண்டீரோ?  


பழந்தமிழன் வாழ்க்கைமுறை  பழக்கவழக் கங்களையும் 

பலன்தருநற் பண்பட்ட விழுமியங்கள் பலதினையும் 

இழந்திடாது ஓம்பிடுவீர்! ஈடிணையி லாதவற்றை 

எந்நாட்டு மக்களெலாம் இதமாகப் பின்பற்றிப் 


பழக்கமதாய் நடைமுறையில் பகலிரவாய்ச்  

செயவைக்க பார்த்திருந்து மறுபடியும் பலநாட்டிற் புகுந்துள்ளேன்! 

மழமழவென் றேபெருகி மன்பதையை அழிக்கமுன்னர் 

மக்களேநீர் பழந்தமிழன் வாழ்வியலைக் கடைப்பிடிப்பீர்!    


இயற்கையை அழித்திட்டு எழிற்சுற்றம் பாழாக்கி   

இதமான காற்றினையே மாசுபடச் செய்திட்டு 

செயற்கையிலே வாழ்ந்திட்டு தேடியே’போர்’ ‘கொலைகொள்ளை’ 

செய்துவரும் மானிடரே செப்புவதைக் கேட்டிடுவீர்!..........  

தீயவற்றை அழித்தொழித்து வெற்றியை தரும் நன்னாள்

விஜயதசமி நாளை

நவராத்திரி வழிபாட்டின் இறுதியான விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது. துர்க்கை, ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு 10-ம் நாளில் அவனை வெற்றி கொண்டாள். அந்த வெற்றியை குறிக்கும் தினமே விஜயதசமி ஆகும்.

மகிஷன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மன், அவன் முன்பாக தோன்றினார். பிரம்மனிடம், “இறப்பில்லாத வாழ்வு அருளுங்கள்” என்று வேண்டினான் மகிஷன்.

பிறந்தவர்களுக்கு இறப்பு நிச்சயம் என்பதால் வேறு வரம் கேட்கும்படி கூறினார் பிரம்மன். உடனே மகிஷன், “எனக்கு பெண்ணால் மட்டுமே அழிவு வர வேண்டும்” என்று கேட்டான். அந்த வரத்தையே அருளி மறைந்தார் பிரம்மன்.

பராக்கிரமமும், அசுர பலமும் பெற்ற தனக்கு மென்மை குணம் படைத்த பெண்களால் எந்த ஆபத்தும் வராது என்பதால் மகிழ்ச்சியில் திளைத்தான் மகிஷன். அந்த மகிழ்ச்சி மற்றவர்களை துன்புறுத்தும் அளவுக்கு வளர்ந்தது. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரையும் ஆட்டிப் படைத்தான். அவனது தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.

விஷ்ணுவோ, “மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம். எனவே நீங்கள் பராசக்தியிடம் சென்று உங்கள் வேண்டுதலை முன்வையுங்கள்” என்று கூறினார்.

அதன்படியே அவர்கள் அனைவரும் சக்தியை நோக்கி வழிபாடு செய்தனர். இவர்கள் முன்பு தோன்றிய அன்னை, தேவர்களையும் முனிவர்களையும் காக்கும் பொருட்டு அசுரனுடன் போருக்கு தயாரானாள். சிவபெருமான் அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு தன்னுடைய சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும் வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்கு புறப்பட்டாள்.

முனைவர் ஞா.கற்பகம் (பாடகி, இசையாசிரியை மற்றும் எழுத்தாளர்) சிறப்புப் பேட்டி


முனைவர் ஞா.கற்பகம் அவர்கள் முறையாகச் சாஸ்திரிய சங்கீதம் பயின்று இசை மேடைகளிலும், வானொலி இசைப் பாடல்களிலும், தனிப் பாடகராகவும், சேர்ந்திசைப் பாடகராகவும் மிளிர்ந்து வருபவர்.
இசையாசிரியராகத் தன் பணியைத் தொடரும் அவர் எழுத்தாளராக, தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000 என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்த்திரையிசைத் துறையின் செழுமைக்கு முதன்மைக் காரணம் அதன் தன்னிகரில்லா இசைக் கலைஞர்கள். பாடகர்-பாடகியாக, இசைக் கருவிக் கலைஞர்களாக, இசையமைப்பாளர்களாகத் திறம்படச் செயலாற்றி தமிழ்த் திரையிசைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா ஆளுமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டிய, ஆனால் பரவலாக அறியப்படாத பல அரியத் தகவல்களையும், அவர்களது சாதனைகளையும் திரட்டித் தொகுத்து "தமிழ்த் திரையிசை ஆளுமைகள்" என்கிற இந்நூலானது உருவாக்கப் பட்டிருக்கிறது.
நேற்று முனைவர் ஞா.கற்பகம் அவர்களைப் பேட்டி கண்ட போது தன்னுடைய இசையாசிரியர், பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா தொடங்கி அந்தக் காலத்து இசையாளுமைகள் குறித்த நினைவுகளோடு பாடல்களையும் பாடிச் சிறப்பித்தார்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய பாடல் உட்பட அரிய பல தகவல்களோடு அமைந்த பேட்டியைக் கேட்க. 






வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர் ( அங்கம் -02 ) சேகுவேராவின் மரண வாக்குமூலம் மரணத்தின்போதும் மனைவிக்கு மறுவாழ்வு கொடுக்கவிரும்பிய விடுதலைப் போராளி ! முருகபூபதி


மரணம் நெருங்கிவிட்டதருணம் ஒவ்வொருவரும் என்ன நினைத்துக்கொள்வார்கள்? இது அவரவர்க்கே வெளிச்சம்.  ஏர்ணஸ்ட் சேகுவேரா என்ற வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற சர்வதேசப்போராளி, தன்னைக்கொல்ல வந்தவர்களிடம்   “  என்னைக்கொல்வதிலும் பார்க்க உயிரோடு என்னை வைத்திருப்பதே உங்களுக்கு பயனளிக்கும்”  என்றாராம்.  பன்முக ஆற்றலும் ஆளுமையும் மிக்க ஒரு போராளியிடமிருந்து இயல்பாகவே வரக்கூடிய வார்த்தைகள்தான் அவை.   

சேகுவேரா உட்பட அனைத்துப்போராளிகளையும் வேட்டையாடுவதற்காக நியமிக்கப்பட்ட உளவுத்துறையில் இயங்கிய ஒரு அதிகாரியான கேர்னல் ஓர்னால்டோ சாஸேடா பிராடா என்பவர் குவேராவின் இறுதிவாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.  

எதிரியிடம் பிடிபட்டுவிட்டோமே என்ற வருத்தம் சேகுவேராவுக்கிருந்திருக்கிறது.  அதனால்தான்


இவ்வாறு சொல்லியிருக்கிறார்:- “ நீங்கள் என்னைச் சுட்டுக்கொல்லப்போகிறீர்கள் என்பது எனக்குத்தெரியும். நான் உயிரோடு பிடிபட்டிருக்கக்கூடாது. இந்தத்தோல்வி புரட்சியின் தோல்வி அல்ல. புரட்சி எப்படியும் வெற்றிபெறும் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் சொல்லுங்கள். 

எனது மனைவி அலெய்டாவிடம், இதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வை தொடரச்சொல்லுங்கள். குழந்தைகளை நன்றாக படிக்கவைக்கச்சொல்லுங்கள்.”   மரணம் அருகில் வந்தவேளையில் தனது காதல் மனைவியையும் குழந்தைகளையும் தனது சகதோழன் பிடல் காஸ்ட்ரோவையும் அவர் நினைத்துப்பேசியிருக்கிறார்.  

லா ஹிகுவேரா என்ற கிராமத்தில் ஒரு பாடசாலைக்குள் மறைந்திருந்த வேளையில் பிடிபட்ட சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரி, லெப்டினன்ட் மரியோ டெரான், துப்பாக்கியின் விசையை அழுத்துமுன்னர் ஸ்கொட்ச் விஸ்கி அருந்தி தன்னைச்சூடேற்றிக்கொண்டே ஆறு தோட்டாக்களை அந்த கர்மவீரனின் வசீகரமான தோற்றம்கொண்ட உடலில் பாய்ச்சினான்.  

இராணுவ அதிகாரிகளிடம் சேகுவேராவின் உடலை என்ன செய்வது..?  என்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்களும் தோன்றியிருக்கின்றன.  தாங்கள் சுட்டுக்கொன்றது சேகுவேராவைத்தான் என்பதை பொலிவிய அரசுக்கும் சி.ஐ.ஏ. உளவுத்துறைக்கும் காண்பிப்பதற்காக அவரது தலையையும் கைகளையும் துண்டித்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் உடலின் எஞ்சிய பகுதியை எரித்துவிடவேண்டுமென்றும்தான் ஒரு மேஜர் பிடிவாதமாக நின்றிருக்கிறான்.  

ஆனால், தலை துண்டிக்கப்படுவதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கைகள் மாத்திரம் துண்டிக்கப்பட்டன.  துண்டிக்கப்பட்ட கைகள் ஃபோர்மலின் திரவத்தில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகவும் அவை பின்னர் மர்மமாக கியூபாவுக்கு கடத்தப்பட்டு எங்கோ இரகசியமாக மறைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.  

வாசகர் முற்றம் - அங்கம் 11 குண்டுவெடிப்பை கடந்துவந்த கோவை வாசகர் சரித்திரக் கதைகளிலிருந்து சமூகக்கதைகளுக்கு பிரவேசித்திருக்கும் சுதன்பாலன் முருகபூபதி


கடந்த 2019 ஆண்டு பெப்ரவரி மாதம்   தமிழ்நாட்டில் வேலூர் காட்பாடியில் நின்றேன்.  அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது வீதியோரத்தில் காணப்பட்ட சுவரொட்டியைப்பார்த்து அதிசயித்தேன்.வழக்கமாக தமிழகமெங்கும் அரசியல் தலைவர்களினது படங்களும் நாளைய முதல்வர் கனவில் வாழும் நட்சத்திர நடிகர்களின் படங்களும்தான் சுவர்களை அலங்கரிக்கும். ஆனால்,  நான் அன்று பார்த்த சுவரொட்டி காதலர் தினத்தை கடுமையாக கண்டித்துவிமர்சனம்செய்திருந்தது.   

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் (T.N.T.J) என்ற இயக்கத்தின் பெயரில் அதன் தொலைபேசி தொடர்பிலக்கத்துடன் அந்தச்சுவரொட்டியின் வாசகங்கள் தமிழகத்தின் சில அரசியல் தலைவர்களின் பேச்சையே உயர்த்தி  மதிப்பிடும் அளவுக்கு  தாழ்ந்திருந்தது! " நாக்கை வெட்டுவோம் -  நாக்கை அறுப்போம் " என்றெல்லாம் வீராவேச வசனம் பேசும் தலைவர்களை கண்ட தமிழகம் அல்லவா..? வாய்பேசாத சுவரொட்டிகள்  காதலர் தினம் பற்றி என்ன சொல்கின்றன…?  என்பதை இந்தப்பதிவில் இணைந்துள்ள சுவரொட்டியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். சரி,  வாசகர் முற்றத்திற்கும் இந்த காதலர் தினத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 


பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 21- பெண் தெய்வம் - சுந்தரதாஸ்

 


திரைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலம் முழுவதும் அதாவது சுமார் 25 ஆண்டுகளும் தங்குதடையின்றி படங்களை தயாரித்து சாதனை புரிந்தவர் சாண்டோ சின்னப்பதேவர் .அவ்வாறு அவர் எழுபதாம் ஆண்டு உருவாக்கிய படம் பெண்தெய்வம். அதுவரை காலமும் கதாநாயகியாகவே நடித்து வந்த பத்தினியை இந்தப் படத்தில் குடும்பத்தலைவியாக தாயாக குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் தேவர்.


குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்கும் உன்னத நிலையை அடைவதற்கும் பெற்றோரின் கவனமும் கண்டிப்பும் வழிகாட்டலும் அவசியம் இல்லை என்றால் அவர்களின் வாழ்வு குட்டிச்சுவராக்கி விடும் என்பதை உணர்த்தும் விதத்தில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. அப்துல் முத்தலிப் என்பவர் உருவாக்கிய கதைக்கு வசனங்களை எழுதியிருந்தார் ஆரூர்தாஸ்.

படித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம் முருகபூபதி


என் கொல்லைப்புறத்துக் காதலிகள் எழுதிய ஜே.கே.யின் இரண்டாவது கதைத்தொகுதி சமாதானத்தின் கதை. எவரும்,  நூலின் தலைப்பினைப் பார்த்ததும், “ இது ஏதோ இலங்கையில் நீடித்த போர்க்காலத்தில் இடையில் வந்த சமாதான காலத்தின் கதையோ..?   “ என்றுதான் எண்ணக்கூடும். இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் வீதியிலும் நகரம், கிராமத்திலும்  நாம் அன்றாடம் காணக்கூடிய பரிதாபத்துக்குரிய பாத்திரம்தான் அந்த சமாதானம்.  

அத்தகைய பாத்திரங்களின்  நதிமூலம், ரிஷி மூலம்  எவருக்கும் தெரியாது. ஒரு  ஆக்க இலக்கியப் படைப்பாளி, தான் எழுதும் கதைகள் யாருக்காக எழுதப்படுகின்றன..? என்ற முன்தீர்மானங்கள் எதுவும் இல்லாமல்தான் எழுதுகிறான்.  வாசகரிடத்தில் அவற்றின் ஆயுள் எவ்வளவு காலம் என்பதையும்  படைப்பாளி அறிய மாட்டார்.  

இன்று ஈழத் தமிழர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகலிட இலக்கியம், ஆறாம் திணைவகை சார்ந்த இலக்கியம் எனப்படும் புதிய  வாசிப்புக்களம் தோன்றி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. நாம் ஒரு காலகட்டத்தில் ஜெயகாந்தனின் படைப்புகளில் சென்னைத் தமிழையும், தி. ஜானகிராமனின் படைப்புகளில் தஞ்சை – கும்பகோணத் தமிழையும், கி. ரா. வின் எழுத்துக்களில் கரிசல் தமிழையும் பிரபஞ்சனின் எழுத்தில் புதுவைத்தமிழையும் வண்ணதாசனின்  எழுத்தில் திருநெல்வேலித் தமிழையும், சுந்தரராமசாமியின் எழுத்தில் நாகர்கோயில் தமிழையும் படித்து புரிந்துகொண்டோம். 

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 37 – சேவைப்பலகை/தாசரி தப்பட்டை மற்றும் ஃபக்கீர் தப்பு – சரவண பிரபு ராமமூர்த்தி .


சேவைப்பலகை/தாசரி தப்பட்டை: சேவைப்பலகை ராஜகம்பள நாயக்கர்களின் சேவையாட்டத்தில் இசைக்கப்படும் இசைக்கருவி. அரை மரக்கால் அளவுள்ள மர வளையத்தில் ஆட்டுக்குட்டித் தோல் போர்த்தி கட்டப்படுவது சேவைப்பலகை. சேவைப்பலகை இசைக்கருவியைச் செய்ய தேவைப்படும் தோலை தாங்கள் வளர்க்கும் ஆட்டை வெட்டி எடுக்கும் வழக்கம் ராஜகம்பள நாயக்கர்களிடம் உள்ளது. தாசரி தப்பட்டை சேவைப்பலகையை விட சற்றுத் தட்டையானது. சேவைப்பலகையை விட அதிக சுற்றளவு உள்ளது. செய்முறை ஒன்று தான். தாசரி இனத்தவர் பயன்படுத்துவதால் இது தாசரி தப்பட்டை என்று அழைக்கப்படுகிறது.

 சேவையாட்டம் கோயில் சார்ந்த சூழலில் விழா நாட்களில் ராஜகம்பள நாயக்கர் இன மக்களால்


ஆடப்படுகிறது. ஜக்கம்மாள், முத்தாலம்மன், மாலாக்கோவில் ஆகிய கோவில்களில் மட்டுமே ஆடுவர். ராஜகம்பள நாயக்கர்களின் சில உட்பிரிவுகள் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகிறார்கள்.  ஆட்டத்தை ஆடுவோர் வண்ணமயமான நீண்ட அங்கி, தலைப்பாகை ஆகியவற்றை அணிந்து கையில் சேமக்கலம், சேவைப்பலகை எனப்படும் தப்பட்டை ஆகியவற்றை இசைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். அரிதாக சீங்குழல் எனப்படும் புல்லாங்குழலும் இசைக்கப்படும். குழுவில் கோமாளி ஒருவரும் இருப்பார். கோமாளி தான் குழுவை முன்னின்று கட்டுப்படுத்துபவர் மற்றும் குழுவின் தலைவராக இருப்பார். இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் தேவதுந்துமி இசைக்கப்படும் பிறகு கோமாளி பாட ஆரம்பித்தவுடன் நிறுத்தப்படும். பாடல்கள் தெலுங்கிலும் தமிழிலும் திருமாலை போற்றுவதாகவும் ராமாயண கதையாகவும் உள்ளது. விடிய விடிய பல மணி நேரம் நிகழ்த்தப்படும். 

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 14 வாசிப்பு பயிற்சி தந்த ஊடகக் கற்கைநெறி ! விஷமும் விசமத்தனமும் கக்கிய ஊடகங்கள் தந்த பாடம் !! விதியால் திரும்பிய எழுத்துலக வாழ்க்கை !!! முருகபூபதி


கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  1974  ஆம் ஆண்டு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டிற்காக இரவு பகலாக வேலை செய்துகொண்டிருந்தோம். 

முதல் தடவையாக  இம்மாநாட்டு மண்டபத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லிம் எழுத்தாளர்கள் ஒன்றுகூடினோம். சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், தலைமைக்குழு உறுப்பினர்கள் சோமகாந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, இளங்கீரன்,  எச்.எம். பி. மொகிதீன் நீர்வைபொன்னையன்,  மல்லிகை ஜீவா, முருகையன், தேசிய சபை உறுப்பினர்கள் நுஃமான், மௌனகுரு, சாந்தன், மு.கனகராஜன், திக்குவல்லை கமால், செ. யோகநாதன்,  அந்தனிஜீவா,  ஆகியோருடனெல்லாம்


இக்காலப்பகுதியில் பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 

நண்பர் மல்லிகை ஜீவாதான் என்னையும்  இச்சங்கத்துடன் இணைத்துவிட்டவர்.  இந்த மாநாட்டையும் குழப்புவதற்கு சிலர் சதி செய்தனர். எனினும் மாநாடு திட்டமிட்டவாறு நடந்தது.   ஒருவர்  மண்டபத்திலிருந்த பேராளர்கள், பிரதிநிதிகளிடம்  ஒரு துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்தார். 

அந்தப்பிரசுரத்தில் அக்னி என்ற புதுக்கவிதை இதழ் வெளிவரவிருக்கும் செய்தி இடம்பெற்றிருந்தது. அதனை விநியோகித்தவர்தான் கவிஞர் ஈழவாணன். அவருடைய இயற்பெயர் தர்மராஜா. எம்.டீ. குணசேனா ஸ்தாபனத்தின் வெளியீடுகளான தினபதி, சிந்தாமணி, ராதா, தந்தி, சுந்தரி முதலான இதழ்களில் ஒப்புநோக்காளராக பணியாற்றியவர். ஶ்ரீமா அம்மையாரின் கூட்டரசாங்கம் அச்சமயம் பதவியிலிருந்தது.  

ஒரு செய்தி ஏற்படுத்திய விவகாரத்தினால்,  குணசேனா நிறுவனத்தின் பத்திரிகைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன.  அதனால், பலர் வேலை இழந்தனர். அவர்களில் ஈழவாணனும் ஒருவர்.  தினபதி – சிந்தாமணி ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம்  பத்திரிகை உலக ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவர்.  அவர் தினகரன், சுதந்திரன், வீரகேசரி பத்திரிகைகளிலும் முன்னர் பணியாற்றியவர். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் தனது இலங்கைப்பயணம் பற்றிய தொடரில் இவர் பற்றி எழுதியிருக்கிறார். 

பங்கயச் செல்விக்குப் பாமாலை சூட்டிய 'தங்கத் தாத்தா' - கட்டுரை 2

 


----  பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.





















இரு வாரங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ் முரசு வார மின் இதழிலே, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் நாமகள் மீது யாத்தருளிய நாமகள் புகழ்மாலை என்னும் புத்தகத்தில் இருந்து புலவர் முதற் பரிசும் பொற்கிழியும் பெறுவதற்குக் காரணமாக இருந்த  ;செந்தமிழ்ச் செல்வி வழிபாடு' என்னும் தலைப்பில் இருந்து தொகுத்தளித்த கட்டுரையைப் படித்திருப்பீர்கள். நாமகள் புகழ்மாலையிலே இருந்து மேலும் புலவரின் புலமை நலத்தை நேயர்களுடன் பகிர்வதற்கு இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது. ஆங்கிலம் முதலாய வேற்று மொழிகளிலே மேலதிக ஆர்வங்கொண்டமையால் ஏற்பட்ட விழைவாகிய இருளானதுஇ பலரிடம் தமிழ்மொழியையும் தமிழ்ப் புலமையையும் மறைத்து மறக்கச் செய்ததென்றும்இ செந்தமிழ்ச் செல்வியின்   பல்லாயிரம் ஒளி;கதிர்களையுடைய புகழ் என்னும் சூரியன் செந்நாவிலே உதித்ததனால் புறமொழிகளாம் நட்சத்திரங்கள் ஒளியிழந்தன என்றும்இ தமிழ்ப்புலவர்களும்இ  கலைமாச் செல்வர்களும் விழித்தெழுந்து தமிழ்ப் பாக்கடலிலே திரண்ட அமுதுண்ணத் திரள்கின்றனர் என்றும் தன்மனக்கண்ணிலே கண்டதாகக் கவிநயத்துடன் புலவர் பாடி நாமகளைத் துயில் எழுப்புகிறார்...

தேவதாசியர் - தேவதாசியர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 .


இன்று தமிழரிடையே பிரபலமாக இருக்கும் பரத நாட்டிய கலை. முன்னோடியாக இருந்து அதை ஆடியவர்கள் தேவதாசி என்ற பெண்களே. இவர்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தை பெற்றிருந்தனர். இவர்களுக்கு கோயில்களின் வீதியிலேயே வீடுகள் அமைக்கப்பட்டு மானியமும் வழங்கப்பட்டது. வரி விலக்கப்பட்ட விளை நிலங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய பெண்கள் இசை நடனம் போன்ற கலைகளில் சிறந்த பயிற்சி பெற்றது மட்டும் அல்லாது கல்வி அறிவிலும் சிறந்து விளங்கினர். இவர்களே அன்று கல்வி அறிவை பெற்ற பெண்கள்.

மறுபுறத்திலே குடும்பப் பெண்கள் என்போர் கல்வி அறிவோ, கலைகளிலோ பரிச்சயம் அற்றவராகவே இருந்தனர். அத்தகைய அறிவை பெறுவது இல்லாளுக்கு அழகல்ல என கருதப்பட்டது. தேவதாசி என்பவள், தேவன் – இறைவன், தாசி – அடிமை. இவளோ இறைவனுக்கே அடிமையானவள். தேவதாசி சமூகத்தில் வயதான ஒருவர் இறைவனுக்காக அவளது கழுத்தில் தாலியை கட்டுவார். இவை யாவும் கோயிலில் இறை சன்னிதியில் நடைபெறும். அன்றிலிருந்து அவள் இறைவனின் மனைவியாகிறாள். கடவுளை தனது கணவனாக வரித்துக்கொண்டதால், இவள் என்றுமே விதவை ஆவதில்லை. அவள் நித்திய சுமங்கலி. இவள் நித்திய சுமங்கலியாக திகழ்வதால், இவள் கையால் தாலிக்கு மணி கோர்ப்பதை அன்றைய சமூகம் அதிஷ்டம் எனக் கருதியது. திருமண ஊர்வலத்தில் இவளை முன்னே செல்லும்படி செய்தனர். மொத்தத்திலே இவள் சமூகத்தில் மிக உயர் அந்தஸ்தில் வைத்து மதிக்கப்பட்டாள். 


வல்ல சீவன் (சிறு கதை) (கன்பரா யோகன்)

"மூன்றரை லட்சம் கிலோமீட்டர் ஓடி விட்டது" என்றேன். "ஒயில் லீக் இப்படி வேறு எதாவது மேஜர் பிரச்சனைகள்  இருக்குதா" ? என்று கேட்டான். 

"ஒன்றுமில்லை. சின்ன சின்ன எலக்ட்ரிக்கல் பிரச்சினைகள்தான்" என்றேன்.  நான் புதிதாக கண்டுபிடித்த மெக்கானிக்கிடம் எனது  காரின் வியாதிகளை ஓரளவு குறைத்தே  சொல்ல வேண்டியிருந்தது. பழைய கார்களில் கை  வைப்பதற்கு இங்கே எவரும் அதிகம்  விரும்பார். 

காரின் டிரைவர் பக்கமுள்ள சுவிட்ச்சில் இயங்கும் பவர் விண்டோவின் கண்ணாடியைத் காற்று வருவதற்காக திறந்தால்  பிறகு  மூடும்போது அது விக்கி விக்கி கால்வாசியில் நின்று விடும். மூடுவதற்கு தானாக மூட் வந்து அது விரும்பிய நேரத்திலே முழுவதுமாய் மூடுவதற்கிடையில்  வீடு வந்து சேர்ந்து விடும்.  

மறந்தும்  யன்னலைத் திறந்துவிடாதபடி இப்போது என்னைப்  பழக்கப்படுத்திக் கொண்டேன். பழைய கார்களை வைத்திருக்காதவராயின் இது உங்களுக்குப்  புதிராகவிருக்கும்.  மேற் சொன்ன பிரச்சினையால் நான் பார்க்கிங் டிக்கட் மெஷினிலிருந்து  டிக்கற்றை   எடுப்பதற்கும் இப்போது கார் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறது.  பின்னால் நிற்பவர்களுக்கு இதை காட்டக்  கூடாதென்பதற்காக தவறுதலாக டிக்கட்  மெஷினை கடந்து நிறுத்துவது போலவும் பின்னர் மிஷினை யன்னல் வழியே எட்டி டிக்கட் முடியாமல்தான் கதவை  திறப்பது போலவும்  நடிக்கப் பழகி விட்டேன்.   

இலங்கைச் செய்திகள்

அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நவராத்திரி விழா

20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 8 பேர் 20இற்கு ஆதரவு

20ஐ எதிர்த்து சிவப்பு நிற பட்டியுடன் எதிரணியினர்

தமிழர் பகுதிகளில் அத்துமீறும் சிங்கள குடியேற்றங்கள்

விக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து


அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நவராத்திரி விழா

நன்றி தினகரன் 

உலகச் செய்திகள்

வடக்கு சைப்ரஸ் தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி 

கூட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானில் 15 பேர் பலி

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் சரமாரித் தாக்குதல்

வியட்நாமில் கடும் வெள்ளம்: உயிரிழப்பு 100ஐ தாண்டியது

சவூதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

கொரோனா தொற்று தொடர்பில் டிரம்ப் - பைடன் கடும் விவாதம்

ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்காவில் முழு ஒப்புதல்


வடக்கு சைப்ரஸ் தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி 

துருக்கி கட்டுப்பாட்டு வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி தேசியவாதியான எர்சின் டாடர் வெற்றிபெற்றுள்ளார்.

மழைக்காற்று - ( தொடர்கதை ) அங்கம் 58 முருகபூபதி

 உதயசங்கரின் நாடியை பரிவோடு தடவியவாறு,    “  அப்படி என்னடா கனவு கண்டாய்…? சொல்லு  “   எனக்கேட்டாள் அபிதா.   “  உள்ளே வாங்களேன்.  சொல்றேன்… “   இவன் என்ன புதிர்போடுகிறான். 


அபிதா, மனதிற்குள் யோசித்துக்கொண்டு அவனை கைபிடித்து அழைத்தவாறு வீட்டினுள்ளே வந்தாள்.  “ சரி…. நீ… கண்ட கனவைச்சொல்லு. 

அதுக்கு முதல் ஏதும் சாப்பிடுறியா…? என்னவேணும்..?  .”   அவன் குளிர்சாதனப்பெட்டியை காண்பித்து,  “  ஐஸ்கிறீம் “ “என்றான். “ இல்லை… இல்லை… வேணாம். இந்த கொரோனா காலத்தில் ஐஸ்கிறீம்


வேணாம்.  கேக் இருக்கு, தாரன். சூடா ரீ போட்டுத்தாரன். 

உட்காரு.  “  அவனை அமரவைத்துவிட்டு, ஒரு தட்டத்தில் கேக்கை வெட்டி எடுத்துவந்து அவனுக்கும் நீட்டிவிட்டு,  தானும் ஒரு பாதியை எடுத்துக்கொண்டு அவன் முன்னால் அமர்ந்தாள் அபிதா.    “ கேக் நல்ல ருசி அன்ரி.  நீங்கள் செய்ததா…?  “  அபிதா தலையாட்டினாள்.  “  உங்கட ரீவி ஷோ அன்றைக்கு பார்த்தேன் அன்ரி.  நல்லா இருந்தது.  

அடுத்த முறை அங்கே போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போறீங்களா…? ”     “  அதற்கென்னடா… அந்த சீலன் அங்கிளிடம் சொல்றேன்.  அந்த நிகழ்ச்சி சனிக்கிழமைதான் வரும்.  இங்கேயிருந்து காலையிலேயே போகவேணுமேடா… நீ நேரத்துடன் வெளிக்கிட்டு வருவாயா..?  “ “ ஏன் அன்ரி…? இப்போது இந்த வீட்டில் நீங்கள் மாத்திரம்தானே இருக்கிறீங்க…? நான் முதல்நாள் வெள்ளிக்கிழமை இரவுக்கே வந்து உங்களுடன் நிற்கிறன். இங்கேயிருந்தே போகலாம்தானே…? நேரம் மிச்சம்.  “   “ எதுக்கும் ஜீவிகா அன்ரி வரட்டும், அவவிடமும் உன்ர அம்மாவிடமும் சொல்லிவிட்டு,  அதுக்குப்பிறகு முடிவெடுப்போம். சரியா… இரு , உனக்கு ரீ எடுத்துக்கொண்டுவாரன்.

  “ அபிதா எழுந்தாள்.   உதயசங்கரும் அவளை பின்தொடர்ந்து வந்தான். அவள் பின்னால் நின்றுகொண்டு, “    அன்ரி நான் என்ன கனவு கண்டேன் தெரியுமா…..?  நீங்கள்  பேக்கெல்லாம் தூக்கிக்கொண்டு இந்த வீட்டிலிருந்து வெளியே போறீங்க… நான் கத்திக்கொண்டு பின்னால் ஓடி வாரன்.   ‘அன்ரி போகவேணாம்… போகவேணாம்…’  என்று கத்துறன்.  நீங்கள் திரும்பியும் பார்க்காமல் வேகமாக போறீங்க… நான் உரத்து கத்துறேன்.  

எது நன்மை?!


faj darling 2.JPGDr.Fajila Azad 

(International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad


dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

என்னுடைய கடந்த காலத்தில் பட்ட அவமானங்களை மறந்து சந்தோஷமாக நிகழ்காலத்தை வாழனும்னு நினைக்கிறேன். ஆனால் மீண்டும் மிண்டும் அதையே அசை போடும் மனம் என்று மகிழ்ச்சி பழகும்?! இது பலரின் தவிப்பு.

வெற்றி தோல்வி, அவமானம் பாராட்டு, நல்லது, தீயது எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஆனால் பெற்ற பாராட்டுகள், அடைந்த வெற்றிகள் எல்லாம் உங்கள் நினைவில் நிற்காமல் அதிவேகமாக நழுவி விட, பட்ட அவமானங்களும் தோல்விகளும் மட்டும் நச்சென்று நடுமனதில் அமர்ந்து விடுகிறது. 

பெரும்பாலும் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், இனி எப்போதும் மகிழ்ச்சியாக மட்டும் இருக்க வேண்டுமென ஒரு முடிவோடு இருந்தாலும் யாரோ அழைத்தது போல மெல்ல கடந்த கால வருத்தங்கள் உங்கள் மனதில் புகுந்து அப்படியே மனமெங்கும் ஆக்ரமித்து, ஏதோ, சுழலில் சிக்கியது போல் அப்படியே மனதில் சுற்றி சுற்றி சுழன்று வரும்.

கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்



எங்கள் சமயம் - தத்துவங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குகிறது. தத்துவங்களை நேரடியாகச் சொன்னால் பலருக்கும் விளங்கமாட்டாது என்ற காரணத்தால் அவற்றை யாவரும் உள்ளத்தில் இருக்கும் வகையில் கதை வடிவத்தில் தந்து நிற்கிறது. எங்கள் சமயத்தில் பல புராணங்கள் இருக்கின்றன. புராணங்கள் தத்துவங்களை விளக்கும் கதை வடிவங்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். புராணக் கதைகள் பலவும் தெய்வீகம் சம்பந்தட்டே ஆக்கப்பட்டன.

  ஆரம்பகாலத்தில் மக்கள் மனதில் நல்லொழுக்கத்தை நல்ல சிந்தனையை ஏற்படுத்த பெரிதும் கைகொடுத்து நின்றன கதைகளேயாகும். கதைகள் என்பது பழைய காலந்தொட்டு பாரம்பரியச் சொத்தாகவே அமைந்து வருகிறது எனலாம். அந்தக்கதைகளில் இடம் பெறும் சம்பவங்கள் உண்மையையா பொய்யா என்று ஆராய்வது உகந்து அல்ல. ஏனென்றால் கதைகள் கற்பனையின் பெறுபேறு எனலாம். ஆனால் அந்தக் கற்பனைக்குள் பொதிந்திருக்கும் கருதான் எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்வினை எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஆணிவேராக அமைகிறது என்பதையும் கவனத்தில் இருத்தல் அவசியமாகும்.

  புராணக்கதைகள் எங்களுக்குப் புகட்டும் பாடங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். புராணக்கதைகளில் தெய்வ அம்சங்களைப் புகுத்தியதற்கு முக்கிய காரணமே யாவரும் பயபக்தியுடன் நோக்குவார்கள் என்பதேயாகும். தெய்வம் என்றால்த்தான் யாவரும் சிரத்தையுடன் செயற்படுவார்கள் என்று எமது முன்னோர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை மனிதன் பூமியில் வாழும் வரை தொடர்ந்த படியேதான் இருக்கும்.

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 .

அறிவுரை கூறிய வீடணனை இராவணன் கொடும் சொல் கூறி விரட்டி விடுகிறான். வானில் நின்று வீடணன் மேலும் கூறுகிறான். 

"இராவணா, நீ வாழ்க. நான் சொல்வதைக் கேள். உன் வாழ்க்கை உயர நான் வழி சொல்கிறேன். நீண்ட நாள் வாழும் வரம் பெற்ற நீ புகழோடு வாழ வேண்டாமா?  தீயவர்கள் சொல் கேட்டு உனக்கு நீயே கெடுதல் தேடிக் கொள்ளாதே.  அறம் பிழைத்தவருக்கு வாழ்க்கை இருக்குமா? சிந்தித்துப் பார் "


பாடல் 

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


 அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழை விட்டவர்களுக்கு வாய்க்குமோ?

இராவணனுக்கு தெரியாத அறம் அல்ல. 

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவை உடையவன் அவன். 

இருந்தும்  செய்வது தவறு என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை? 

அல்லது, தெரிந்தும் ஏன் செய்தான்?

நடிகர் தனுஷ், பாடகர் திப்பு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பீட்டர் பால் , ஸ்ரீகாந்த் அக்கா போபோ சஷி, விவேக் மேர்வின் போன்ற பிரபலங்கள் பயின்ற புனித ஜான்ஸ் கொண்டாட்டம். - ஈழன் இளங்கோ


பாடசாலை நட்பு புனிதமானது, பலருக்கு அதை வாழ்நாளில் தொடர்வது அவ்வளவு இலகு அல்ல. ஆனால், 35 வருடங்களாக நண்பர்களுடனும், பயிற்சித்த  ஆசிரியர்களுடனும் நட்பை தொடர்வது அதிசயம் அல்லவா?
சென்னை ஆழ்வார்த்திருநகரில் அமைந்திருக்கும் புனித ஜான்ஸ் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்றுவரை அவர்களின் நட்பைத் தொடர்கிறார்கள், இது எப்படி?

நடிகர் தனுஷ், பாடகர் திப்பு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பீட்டர் பால் , ஸ்ரீகாந்த் அக்கா போபோ சஷி, விவேக் மேர்வின் போன்ற பிரபலங்கள் பயின்ற பாடசாலை, நினைத்தாலே இனிக்கிதல்லவா?

800: தனிப்பட்ட சாதனைகளை காண்பிக்கவல்ல

800: தனிப்பட்ட சாதனைகளை காண்பிக்கவல்ல-Murali 800-Explanation

- "பலராலும் உருவாக்கப்பட்டவன் நான் என்பதற்கான அங்கீகாரத்தின் எதிர்பார்ப்பு"
- "அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை; ஆதரிக்கவும் மாட்டேன்"

"இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன்.

பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

காதலுற்றுக் கை தொழுதால் கருணை மழை பொழிந்திடுவாள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண்  ... ஆஸ்திரேலியா 


     


    வீணையிலும் இருப்பாள் வீசும்
           காற் றினிலும் இருப்பாள் 
    விண் ணொலியிலும் இருப்பாள் 
           விரிந்து நிற்கும் கடல்
    அலை யினிலும் இருப்பாள் 
          கானக் குயிலிலும் இருப்பாள்
    காக்கை குருவிகளிலும் இருப்பாள்
          மோனத் தவஞ் செய்யும்
    முனிவர் இடத்தும் இருப்பாள்  !


  மாதர் குரலிலும் இருப்பாள்
      மழலை பேச்சிலும் இருப்பாள்
 காதல் மொழியிலும் இருப்பாள்
      கண்ணன் குழலிலும் இருப்பாள் 
 கோதை பாட்டிலும் இருப்பாள் 
       குழவி சிரிப்பிலும் இருப்பாள்
 நீதி குறளிலும் இருப்பாள்
      நீக்க மின்றி அவளிருப்பாள்  !

'800' திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி



 சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 படத்திலிருந்து விலகியதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 800 திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து அவரது அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என பதிவிட்டிருந்தார இந்த நிலையில், சென்னையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாகவே அர்த்தமென தெரிவித்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.    நன்றி தினகரன்