எமது இலங்கைத்
தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களாக நன்கு அறியப்பட்டவர்களின் பிள்ளைகள் அனைவருமே
எழுத்தாளர்களாகிவிடுவதில்லை.
எழுத்தாளரின் பிள்ளை எழுத்தாளராகத்தான்
இருக்கவேண்டும் என்ற விதியும் இல்லை !
எழுத்தாளர்களாக வாழ்ந்தவர்களின் சந்ததிகளில் எழுத்தாளர்களாக வளர்ந்த சிலரை விரல்விட்டு
எண்ணிவிடலாம்.
நானறிந்த மட்டில், மஹாகவி உருத்திரமூர்த்தியின் மகன் சேரன்,
மகள் ஓளவை , நீலாவணனின் மகன் எழில்வேந்தன், இலங்கையர்கோனின் மகள் சந்திரலேகா,
காரை சுந்தரம்பிள்ளையின் மகள் மாதவி சிவலீலன்,
கோகிலா மகேந்திரனின் மகன் பிரவீணன், மருதூர்க்கொத்தனின் மகன் ஆரீஃப், எஸ். எம். கார்மேகத்தின் மகள் கனகா, தி. ஞானசேகரனின்
மகன்
பாலச்சந்திரன், த. கலாமணியின் மகன் பரணீதரன், தகவம் இராசையா மாஸ்டரின் மகள் வசந்தி
தயாபரன் ஆகியோர் எனது நினைவுக்கு வருகிறார்கள்.
இவர்களின் வரிசையில் மற்றும் ஒருவராக நவஜோதி
ஜேகரட்னம் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றி இங்கே சொல்ல வருகின்றேன்.
ஈழத்து முற்போக்கு இலக்கிய
முகாமில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ( அமரர் ) எஸ். அகஸ்தியரின் மகள்தான் நவஜோதி.
நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில்
அகஸ்தியரை நன்கு அறிவேன். இறுதியாக அவரை 1983 ஆம் ஆண்டில்தான் சந்தித்தேன்.
அதன்பிறகு, அவர் பிரான்ஸுக்கும் நான் அவுஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்.
என்னுடன் தொடர்ச்சியாக கடிதத்
தொடர்பிலிருந்த அகஸ்தியர் பற்றி நான் பல பதிவுகளும் எழுதியிருக்கின்றேன். அவருடனான எனது நேர்காணல் பதிவும் எனது சந்திப்பு
நூலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நூல் வெளியானபோது அகஸ்தியர்
இல்லை. அவரை நினைவுகூர்ந்து குறிப்பிட்ட நூலை
மெல்பனில் வெளியிட்டேன்.
1990 களில் அகஸ்தியரும் அவருடைய புதல்விகள் நவஜோதி, நவஜெகனி
ஆகியோரும் என்னுடன் கடிதத் தொடர்பிலிருந்தனர்.
எனினும், நவஜோதியை 2008 ஆம் ஆண்டுதான் லண்டனில் முதல்
முதலில் சந்தித்தேன்.
நூலகர் நடராஜா செல்வராசா ஒழுங்கு
செய்திருந்த இலக்கிய நிகழ்வில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
அதன்பிறகு லண்டனுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நவஜோதியை சந்திக்கவும்
நான் தவறுவதில்லை.
இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நான் லண்டனில்
இருந்தபோது, அங்கு நடந்த விம்பம் அமைப்பின் நிகழ்ச்சிக்கு என்னை அவரே அழைத்துச்சென்றார்.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் மூத்த
மகளான நவஜோதி , யாழ்ப்பாணம் இளவாலை மகளிர்
கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டவர். ஆனைக்கோட்டையைப்
பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1980
களின்
முற்பகுதியில் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தார்.
அங்கு பிரெஞ்சு மொழியை கற்றுத் தேறினார்.