தமிழகத்தில் கடந்த 11 நாள்களாக நீடித்து வந்த நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் பட சர்ச்சை சனிக்கிழமை (பிப்ரவரி 2) மாலை முடிவுக்கு வந்தது. இந்தப் படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் முன்னிலையில்
நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, விஸ்வரூபம் படம் தமிழகத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் பட சர்ச்சை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கமல் தரப்பினர் வாபஸ் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உடன்பாடு கையெழுத்து: நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பும் சுமுக முடிவுக்கான எழுத்துப்பூர்வ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், தனிப்பட்ட பிரச்னை காரணமாக முதல்வர் ஜெயலலிதா இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தால் அதற்கு ஏற்பாடு செய்யத் தயார் என தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் உள்துறை செயலாளர் ராஜகோபால், விஸ்வரூபம் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன், அவருடைய சகோதரர் சந்திரஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர்.
திரைப்படத்தை பார்த்த பிறகு...: தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிற்பகலில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
பேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபம் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக் காட்டியதாகவும், அதற்கான விளக்கங்களை கமல்ஹாசன் அளித்ததாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது.
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
""முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற இந்தச் சந்திப்பு ஏற்பட ஆவன செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு விடுமுறை நாளிலும்
கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களைச் சொன்ன உள்துறைச் செயலாளருக்கு நன்றி. பேச்சுவார்த்தையில் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் பேசி அவர்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன முடியும் என்பதைத் தெரிவித்தேன்.
குறிப்புகள் நீக்கப்படும்: அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்குவதாகச் சொல்லி இருக்கிறேன். அதன் பட்டியல் இருக்கிறது. நீக்கப்படும் குறிப்புகள் குறித்து மத்திய சான்றிதழ் தணிக்கை வாரியத்திடம் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும். இதன் பின், படத்தை வெளியிட முயற்சிப்பேன். இந்த படப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எனது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவேன். தமிழக அரசும் படத்துக்கு விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.
பேச்சுவார்த்தை குறித்து ஜவாஹிருல்லா கூறியது:
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபாவும் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
எப்போது வெளியாகும்?
விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியது:
எனது ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில் படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். தொழில்நுட்பரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பேசிய பிறகு படம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றார் கமல்ஹாசன்.
நன்றி: dinamani.com