ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு அவுஸ்திரேலியாவை நோக்கி ஆரம்பித்தபோது, முதலில் வந்தவர்கள் கல்வி, தொழில்வாய்ப்பு முதலான காரணங்களைத்தான் முன்னிறுத்தியிருந்தனர்.
ஏற்கனவே லண்டனுக்கும் சிங்கப்பூர், மலேசியாவுக்கும் சென்றவர்களும் அவுஸ்திரேலியாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான், இந்த கங்காரு தேசத்தில் தொழில் வாய்ப்பு பெறுவதற்காக வந்து குடியேறினர்.
1980 இற்குப்பின்னர் அய்ரோப்பிய நாடுகளுக்கு விசா அவசியமின்றி செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது, ஈழத்தவர்கள் லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியை நாடிச்சென்றார்கள்.
ஆனால், அதே குறிப்பிட்ட காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரவிரும்பியவர்கள் முறைப்படி விசா பெற்றுத்தான் வரநேர்ந்தது.
அவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானவர்களும் ஒரு சில மாதங்கள்தான் இங்கு தங்குவதற்கு அனுமதிபெற்றிருந்தவர்கள். தொடர்ந்து இங்கே வாழவேண்டுமானால் குடிவரவுத்திணைக்களத்திற்கு சட்டத்தரணிகள் ஊடாக விண்ணப்பித்து அகதி அந்தஸ்து கோரவேண்டும்.
அவ்வாறு 1987 ஆம் ஆண்டில் நானும் இங்கு பிரவேசித்தபோது, எனக்கு பத்திரிகை ஊடகத்தொழிலைத்தவிர வேறு எந்தவொரு தொழிலும் தெரியாது. வாழ்க்கையை நடத்துவதற்காக ஒரு தொழிலைத்தேடிக்கொண்டே, இயந்திரமயமான அன்றாடப்பொழுதுகளில் கிடைக்கும் சொற்ப நேரங்களில் இலங்கை பத்திரிகைகள் வீரகேசரி, தினகரன், மற்றும் மல்லிகை இதழிலும் எழுதிக்கொண்டிருந்தேன்.