இந்திய சினிமாவில் இன்னும் விடை காண முடியாமல் இருக்கிறது பல நடிகர், நடிகைகளின் தற்கொலைகள். சினிமாவில், ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும், இதுதான், அதுதான் என காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்பது இறந்துபோனவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சிலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்.
இந்திய சினிமாவில் பல விடை தெரியாத தற்கொலைகள் நடந்திருக்கின்றன.
இந்தி சினிமாவில் இளம் இயக்குனராக இருந்த குருதத், ெபாலிவுட்டுக்கு அருமையான சில படங்களைத் தந்தவர். காகாஸ் கே பூ, பாஸி, பியாசா ஆகிய படங்களின் வழியே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறவர். 1964 ஆம் ஆண்டு அப்போதை பாம்பேயில் தனது வாடகை வீட்டில் உயிரிழந்து கிடந்தார், சடலமாக. அப்போது அந்த இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருக்கு வயது 39. ஆல்ஹகாலும், தூக்க மாத்திரையும் அளவுக்கதிகமாக உட்கொண்டதால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது தற்கொலையா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்பது இப்போது வரை தெரியவில்லை. ஆனால், இது ஒரு விபத்துதான் என்றார் குருதத்தின் மகன் அருண் தத்.
மகாலட்சுமி மேனன் என்று சொன்னால், நிச்சயம் உங்களுக்கு யாரென்று தெரியாது. ஆனால், அவரது ஸ்கீரீன் பெயரான ஷோபா என்றால், ஆஹா என்பீர்கள். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், பசி, அழியாத கோலங்கள், மூடுபனி என அவர் நடித்த படங்கள், அழகாலும் நடிப்பாலும் நிரம்பி இருக்கிறது. 'பசி' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷோபா, கடந்த 1980 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி சடலமாக கிடந்தார் தனது சென்னை வீட்டில். காரணம் தெரியவில்லை அப்போது அந்த நடிகைக்கு வயது 17. அதற்குள் அவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்து முடிந்திருந்தார். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இப்போதுவரை புதிராகவே இருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொண்ட சில வருடங்களிலேயே அவர் அம்மாவும் தற்கொலை செய்துகொண்டார். இதற்கும் காரணம் தெரியவில்லை. மூன்று முடிச்சு படத்தில் வந்த என்னடி உலகம் அதில் எத்தனை கலகம் என்ற பாட்டில் நடிகை படாபட் ஜெயலட்சுமியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
அந்தப் படத்தில் அவர் உபயோகித்த படாபட் என்ற வார்த்தையே அவருக்கு அடையாளமாகிப் போனது.
அழகான, அருமையான நடிகையாக வலம் வந்த படாபட்டின் முடிவு தற்கொலையாகிப் போனதுதான் துயரமானது.
நடிகைகள் தற்கொலை லிஸ்டில் இருக்கும் இன்னொரு பிரபல நடிகை விஜயலட்சுமி. அதாவது சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம், மூன்று முகம் என்று படங்களில் மிரட்டிய சில்க், 1996 ஆம் ஆண்டு தனது 33 வயதில் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு என்ன காரணமாக இருந்திருக்கும் என்கிற அவரது ரசிகர்களின் கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது. நடிகை ஜியா கான் காதலர் தினம் படத்தில் நடித்த குணால், கோழி கூவுது விஜி, சிம்ரன் தங்கை நடிகை மோனல் என தொடரும் தற்கொலைகளில், நிசப்த், கஜினி ரீமேக் உட்பட சில படங்களில் நடித்த ஜியா கானின் தற்கொலை 2013 ஆம் ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே போல இன்னும் பல பிரபலங்களின் தற்கொலைக்கு விடை கிடைக்கவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இந்த லிஸ்டில் இணைந்திருந்தார். தற்போது இந்தப் பட்டியலில் இணைகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா.
இந்திய சினிமா மட்டுமல்ல, ெஹாலிவுட்டிலும் நடிகைகளின் தற்கொலைகள் இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா.
அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2018-ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் தங்கியிருந்த சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சித்ரா நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை பற்றிய விளம்பரம் ஆகியவற்றின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா.
கண்ணாடி போல அழகான வாழ்க்கை சினிமாக்காரங்களுக்கும் சொந்தமானது என்று ரசிகர்கள் நினைத்தாலும் அவங்களுடைய வாழ்க்கையிலும் சோகங்களும் கண்ணீரும் நிறைந்ததே என்பதற்கு இந்த தற்கொலைகளே சாட்சியங்கள். இந்த பாதை இன்னும் எதுவரை நீளும்?