பைரவா
இந்தியாவிற்கு எப்போதும் ஒரு தீபாவளி தான். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார், தல, தளபதி படங்கள் வரும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். அப்படித்தான் இந்த பொங்கலுக்கு சரவெடியாய் பைரவா களம் இறங்கியுள்ளது.
இளைய தளபதி ஏற்கனவே தெறி வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்க, அவர்கள் ரசிகர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க உடனே பைரவாவில் களம் இறங்கினார். அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பானதா? பார்ப்போம்.
கதைக்களம்
இளைய தளபதி விஜய் சென்னையில் ஒரு வங்கியில் பணம் வசூல் செய்பவராக இருக்க, ஒரு பிரச்சனையில் அவருடைய உயர் அதிகாரி ஒய்.ஜி.மகேந்திரனுக்கு உதவுகிறார். கிட்டத்தட்ட அவரின் மகள் திருமணம் நடக்கவே விஜய் தான் காரணம்.
ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமணத்திற்கு விஜய் செல்ல அங்கு கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் காதல். அவரிடம் காதலை சொல்லபோகும் நேரத்தில் தான் கீர்த்தியை சுற்றி பல பிரச்சனைகள் இருப்பது தெரிய வருகிறது.
தன் காதலியின் பிரச்சனை தனக்கு வந்த பிரச்சனையாக எண்ணி, திருநெல்வேலிக்கு வண்டியை கட்டி பட்டையை கிளப்ப விஜய் ரெடியாவதே இந்த பைரவா.
படத்தை பற்றிய அலசல்
முதலில் விஜய் தான், படம் முழுவதும் சரவெடியாய் வெடிக்கின்றார். அதிலும் ‘யாரு கிட்டயும் இல்லாத கெட்டப்பழக்கம் ஒன்னு எண்ட இருக்கு’ என இவர் கூறி முடிப்பதற்குள் திரையரங்கமே விசில் சத்தத்தால் விண்ணை முட்டுகின்றது. இன்னும் அதே துறுதுறு மேனரிசம் என அசத்துகிறார். ஆனால் மேக்கப், கொஞ்சம் இல்லை ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கலாம்.
கீர்த்தி சுரேஷை சுற்றி தான் கதையே நடக்கின்றது. அதனால் அவருக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் தான், அதிலும் முதல் பாதியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ப்ளாஷ்பேக் காட்சிகள் இவருக்கு தான் வருகின்றது. ஆனால் படத்தின் மைனஸே இது தான். எல்லோரும் விஜய்யை பார்க்க திரையரங்கு வந்தால் பாதி நேரம் அவர் இல்லாதது கொஞ்சம் வருத்தம்.
ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி எல்லாம் டிபிக்கள் தமிழ் சினிமா வில்லன்கள் தான். காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
படத்தின் கதைக்களம் தற்போது நாட்டில் கல்வியில் நடக்கும் பிரச்சனைகளை பேசுகின்றது. அதிலும் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இதை பேசுவது மேலும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். குறிப்பாக அந்த நீதிமன்ற காட்சியில் விஜய் பேசுவது ரசிக்க வைக்கின்றது.
சுகுமாரின் ஒளிப்பதிவு விஜய் கையில் காயினை(Coin) சுத்துவதை கூட அத்தனை அழகாக காட்டியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வரலாம் வரலாம் வா மட்டுமே கவர்கின்றது. மற்றப்பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் ஏன் சார் இப்படி? என கேட்க வைக்கின்றது.
க்ளாப்ஸ்
விஜய் இவர் ஒருவரை நம்பியே ஆடியிருக்கும் ருத்ரதாண்டவம்.
விஜய் நீதிமன்றத்தில் பேசும் காட்சிகள், அதை விட பரதனின் வசனங்கள்.
சண்டை காட்சிகள், குறிப்பாக கிரிக்கெட் சண்டை காட்சி.
பல்ப்ஸ்
முதல் பாதியில் கதைக்கு தேவை என்றாலும் அந்த ப்ளாஷ்பேக் பொறுமையை சோதிக்கின்றது.
சாதாரண காட்சியில் கூட கவனிக்க தவறிய சிஜி காட்சிகள்.
இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.
மொத்தத்தில் பரதன் அழகிய தமிழ் மகனை மிஞ்சினாலும் விஜய் தெறியை மிஞ்சவில்லை.