மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 40 முருகபூபதி

ண்முகநாதன்  யாழ்ப்பாணம் புறப்பட்டார். அபிதா அதிகாலையே எழுந்து,  அவருக்கு காலைச்சாப்பாடாக சப்பாத்தியும் மதிய வேளை உணவுக்காக எலுமிச்சை சாதமும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பிரட்டலும் செய்து, பொதிசெய்து கொடுத்தாள்.
தேர்மஸ் ஃபிளாஸ்கில்  பால்கோப்பியுடன்,  தண்ணீர்ப்போத்தலும் எடுத்துவைத்திருந்தாள். நிகும்பலையூரில் சிலாபம் வீதியில் பெரியமுல்லை சந்தியில்  யாழ்ப்பாணம் செல்லும் பஸ் வந்து தரித்து நின்று அவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
அபிதா, அன்று காலை செய்துகொடுத்த உணவுப்பொதியிலிருந்து வாசம் வந்துகொண்டிருந்தது. அபிதா சொல்லிவைத்தவாறே அந்த ஓட்டோகாரனும் வந்து அவரை  ஏற்றிவந்து சந்தியில் விட்டிருந்தான்.
வீட்டின் வாசலுக்கு வந்து அவர் விடைகொடுக்கும்போது, ஜீவிகா கூடத்தில் ஷோபாவிலிருந்து சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து,   “  ஓகே பெரியப்பா… பத்திரமாக போய் வாங்க…. இடையில் போன் பண்ணுங்க “ என்று விடைகொடுத்துவிட்டு, மீண்டும்  புரண்டு படுத்துக்கொண்டாள்.
அபிதா வாசலில் வைத்து,  “ அய்யா.. கொஞ்சம் நில்லுங்கள்,  என்னை ஆசிர்வதித்துவிட்டுப்போங்கள்  “ என்று சொன்னவாறு  குனிந்து சண்முகநாதனின் பாதங்களை தொட்டு வணங்கினாள்.
அவர் திடுக்கிட்டார். அவளது அந்தச் செய்கையை அவர் எதிர்பார்க்கவில்லை.
 “ ஏய்…. என்ன…. என்ன செய்யிற… எழுந்திரு  “ என்றார்.  எழுந்ததும், அவளது உச்சந்தலையை  தனது வலதுகரத்தால் தொட்டு நல்லா இரம்மா… கவனம்…. பயணத்தின் இடையில் உனக்கு கோல் எடுப்பேன்  “ என்று சொல்லிவிட்டு பயணப்பொதியை தூக்கினார்.
அபிதாவும் உடன் வந்து, கேட்டைத்திறந்து அவரை வெளியே காத்து நின்ற ஓட்டோவில் ஏற்றிவிட்டாள்.

“  றிஸ்வான்…. அய்யா கவனம். மெதுவா போங்க…ரைம் இருக்கிறது. வேகம் வேண்டாம். அய்யாவை பெரியமுல்லை சந்தியில் இறக்கிவிடுங்க.  தயவு செய்து பஸ்வரும்வரையில் நின்று அய்யாவை பத்திரமா ஏற்றிவிடுங்க.  சரி அய்யா… கையில் காசு சேஞ்ச் இருக்கிறதுதானே… பிரஷர் குளிசை,  டயபட்டீஸ் மருந்து எல்லாம் எடுத்தீங்கதானே….?   போன் கவனம்.  நித்திரையில் தவறவிட்டுவிடவேண்டாம் ”  அபிதா மிகுந்த அக்கறையுடன் வழியனுப்பினாள்.
“  வாரன் அபிதா…. “
அவள் கையசைத்தபோது அவரது கண்கள் கலங்கின. கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார்.
லண்டனிலிருக்கும்  தனது மக்கள் ,  நிகும்பலையூரில் இருக்கும் பெறாமகள் ஜீவிகா ஆகியோரையும்விட  தன்மீது பரிவுகாண்பிக்கும் அவளது முகம்தான் அந்த பஸ்பயணத்தில் அவரது மனக்கண்ணில் அடிக்கடி வந்து சஞ்சரிக்கிறது.
முன்னர் வீட்டுவேலைக்கு வந்த எத்தனை இளம்பெண்களை விரகதாபப் பார்வையுடன் பார்த்திருப்பேன்.   அந்தப்பார்வைக்கெல்லாம் இந்த அபிதா, தனது இயல்புகளினால் சாட்டை அடி கொடுத்துவிட்டாள்.
சகபெண்களை சகமனுஷியாக – சகோதரியாக – தாயாக பார்க்கத்தவறிய என்னை,  ஒரு மகளின் கரிசனையுடன் முற்றாகவே இவள் மாற்றிவிட்டாளே…!
பணம் எவ்வளவும் சம்பாதிக்கலாம்.  பணம் வரும் – போகும்.  நல்ல மனிதர்களை சந்திப்பதும், அவ்வாறு கிடைக்கும் உறவுகளை  துஷ்பிரயோகம் செய்யாமல் தக்கவைப்பதும்தான் வெகு சிரமம்.
தன்னை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப்பார்த்து, விழுந்து விழுந்து உபசரித்திருக்கும் எங்கிருந்தோ வந்திருக்கும்  அபிதாவை ஒரு சாதாரண வேலைக்காரியாக அவரால் இனம் காணமுடியவில்லை.
பெறுமதியான எதனையோ எவரிடத்திலும் தேடும் குணவியல்போடு நடமாடுகிறாளோ…?! இழந்தவற்றை ஏதோ ரூபத்தில் தேடிக்கொண்டிருப்பதாகவே சண்முகநாதனின் மனதிற்குப்பட்டது.
ஏதோ பூர்வஜன்மத்தின் உறவாகத்தான் இவள் இங்கே வந்து சேர்ந்திருக்கிறாள். இவளைப்பெற்றவர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கவேண்டும்.  இயல்புகள், குணாதிசயங்கள் யாவும் மரபணுவிலிருந்துதான் தோன்றும்போலும்.  அபிதாவிடத்தில் அத்தகைய ஜீன்ஸ்தான் இருக்கிறது. சண்முகநாதன், பஸ்ஸின் யன்னலூடாக வெளியே பார்த்தார். மழைவருவதற்கு அறிகுறியாக குளிர்ந்த காற்று வந்து முகத்தில் மோதியது.
பின் ஆசனத்திலிருந்த ஒருவர்,  “ அய்யா… யன்னலை மூடுங்க.. மழைத்தூரல் வரப்போகிறது  “ என்றார். அவர் அணிந்திருந்த முகக்கவசத்தை பார்த்ததும், சண்முகநாதனும் சேர்ட் பொக்கட்டில் மடித்துவைத்திருந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்துகொண்டார்.
அந்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனரையும் தவிர தனித்தனி ஆசனங்களில் அமர்ந்திருந்த அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்திருப்பதை அப்போதுதான் அவர் கவனித்தார்.
 “ மழை வரும்போது மூடுகின்றேன்  “ என்றார் சண்முகநாதன். அந்த பஸ் சிலாபம் வீதியில் விரைந்துகொண்டிருந்தது,
அபிதாவுக்கு கோல் எடுத்து,   “ அபிதா…,பஸ் ஏறிவிட்டேன். இப்போது கொச்சிக்கடையை கடந்துகொண்டிருக்கிறது . “  என்றார்.
பிதா நேரத்தைப்பார்த்தாள்.  காலை ஏழுமணியும் கடந்துவிட்டிருந்தது.  மழைக்கான அறிகுறி தெரிந்ததும்,  முதல் நாள்  இரவில் துவைத்து வெளியே  காயப்போட்டிருந்த  உடைகளை எடுத்துவந்து கதிரைகளில் விரித்துப்போட்டாள்.
முதல் நாள் இரவு கடும் புழுக்கமாக இருக்கும்போதே,  அது மழைக்கான அறிகுறிதான் என நம்பியிருந்தவள்.  லண்டன்காரர் மழையுடன் காலையில் யாழ்ப்பாணம் புறப்படவேண்டிவரும், கடும்மழை வந்தால், ஓட்டோ சாரதி ரிஸ்வான் வருவானா..? என்ற சந்தேகமும் அபிதாவிடம் வந்தது.
நல்லவேளை, லண்டன்காரர் யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஏறியதும் மழை வந்திருக்கிறது என்று ஆறுதலடைந்த அபிதா, கூடத்தில் படுத்திருக்கும் ஜீவிகா புறண்டு திரும்பும் அரவம் கேட்டு,                      “  அய்யா… பஸ் ஏறிட்டார் அம்மா…. “ என்று குரல்கொடுத்தாள்.
ஜீவிகாவிடமிருந்து  “ ஓகே.  “ என்ற குரல் மெதுவாக வந்தது. அபிதா தான் படுத்துறங்கும் களஞ்சிய அறைக்குச்சென்று, மடிக்கணினியை திறந்து,  இணையத்தளங்களை பதிவிறக்கம் செய்து,   நாட்டு நடப்புகளையும் உலக செய்திகளையும் பார்த்தாள்.
இலங்கை தமிழ் நாளேடுகளையும் வாசித்தாள். நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைக்கு தயாராகியிருக்கும் செய்திகளும், 196 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் 29 தேசியப்பட்டியல் உறுப்பினர்களுக்காகவும் நடக்கப்போகும் தேர்தலில் ஆயிரக்கணக்கானோர் போட்டியிடப்போவதை பார்த்தபோது அபிதாவுக்கு சிரிப்பு வந்தது.
கொரோனா வைரஸினால் நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்திருக்கும்வேளையில் வந்துள்ள தேர்தலுக்கு  தேர்ல்கள் ஆணையத்தினால் செலவிடப்படவிருக்கும் நிதியையும்,  வெற்றிபெறுவதற்காக கட்சிகளதும் சுயேச்சைகளதும் உத்தேச செலவீனங்களையும் ஒப்புநோக்கி, வித்தியாசமான கண்ணோட்டத்தில் ஜீவிகா எழுதியிருந்த செய்திக்கட்டுரையையும் , ஜீவிகா வேலை செய்யும் பத்திரிகையை பதிவிறக்கம்செய்து  அபிதா படித்தாள்.
இந்தக்கட்டுரையையும் ஜீவிகா, இங்கே வீட்டிலிருந்துதானே எழுதியிருக்கக்கூடும். அவ்வாறு எழுதும்போது, அவளுக்கு தான் தேநீர், கோப்பி, எலுமிச்சை ஜூஸ் கொடுத்ததையும் வாயில் கொரித்துக்கொண்டிருப்பதற்கு ஏதும் செய்து கொடுத்ததையும் நினைத்துப்பார்த்தாள்.
ஜீவிகாவைப்போன்று தானும் ஏதாவது எழுதவேண்டும்.  என்ன எழுதலாம் கதையா, கவிதையா, கட்டுரையா…?! வன்னியில் நடந்த கதையா..? இந்த நிகும்பலையூருக்கு வந்த கதையா…? லண்டன்காரர், ஜீவிகா, கற்பகம் ரீச்சர், சுபாஷினி, மஞ்சுளா, மஞ்சுளாவின் தாய்…. இவர்களின் கதையா…? எதனை எழுதலாம்….?
சிறுகதைகளாக எழுதுவதா..? நாவலாக விரித்து எழுதுவதா…?
இவை எதுவுமே எழுதிப்பழக்கம் இல்லையே!  நாட்குறிப்பாக ஏதும் எழுதிப்பார்ப்போம்.  எங்கிருந்து தொடங்குவது….?  வெளியே பெய்துகொண்டிருக்கும் மழையிலிருந்து தொடங்கிப் பார்க்கலாம்.
கற்பனையை எழுதுவதைவிட நிஜத்தை எழுதுவதுதான் எளிதானது. அபிதா எழுதத்தொடங்கினாள்.  வெளியே மழை பொழிந்துகொண்டிருக்கிறது.
ஞ்சுளா எழுந்துவிட்டதற்கான அரவம் கேட்டது. கணினியில் எழுதத்தொடங்கியதை நிறுத்திவிட்டு அபிதா எழுந்திருக்க முனைந்தபோது,   “ அபிதா… பிளீஸ் உட்காருங்க.  மீண்டும் ஒரு தடவை சுபாஷினியின் தம்பியின் படத்தை காண்பிக்கிறீங்களா…, ?   “  கூந்தலை முடிந்து அழகிய  வடிவத்திலமைந்த கிளிப்பை பிணைத்துக்கொண்டு வந்த மஞ்சுளா கேட்டாள்.
“  ம்… என்ன லவ்வா…? அதற்குள்ளாகவா…?   “ அபிதா சிரித்துக்கொண்டு மீண்டும் அமர்ந்து கணினியை இயக்கி, மின்னஞ்சலை பதிவிறக்கம் செய்து, சுபாஷினி அனுப்பியிருந்த அவளது தம்பி ஜெயக்குமாரின் இரண்டு கோணங்களில் எடுக்கப்பட்ட  படங்களையும், அவனது கல்வித்தகைமை பற்றிய குறிப்புகளையும் காண்பித்தாள்.
களனி பல்கலைக்கழகத்தின்  பட்டமா…? அதுவும்  வர்த்தகம் கணக்கியலில் டிகிரி. வங்கியில் துணை முகாமையாளர் வேலை. வயது முப்பது.  துலாராசி, சுவாதி நட்சத்திரம்.
 “  இந்தக்காலத்துப்பெடியன்கள் தங்களின் சுயவிபரக்கோவையில் ராசி – நட்சத்திரமும் பதிவுசெய்கிறாங்களா அபிதா…. வேடிக்கையாத்தான் இருக்கிறது.  “ என்றாள் மஞ்சுளா.
 “ மஞ்சு… உங்களிட்ட உங்கட சாதகக்குறிப்பு இருக்கிறதா..? இருந்தால் தாங்களேன். மங்களேஸ்வரி ரீச்சருக்கு தெரிந்த ஒரு சாத்திரக்காரர் இந்த ஊரில் இருக்கிறாராம். ஒருநாள் எங்கட கற்பகம் ரீச்சரை அவ , அந்த சாத்திரியாரிடம் அழைத்துப்போனாவாம்.  உங்கட குறிப்பும் இருந்தால், பொருத்தமும் பார்த்துவிடலாம்.  “  என்று அபிதா சொன்னதும், மஞ்சுளா கலகலவென சிரித்தாள். அவளது கன்னத்தில் தோன்றிய குழியைப்பார்த்து அபிதா ரசித்தாள். 
 “ அபிதா… எனக்கு இந்த சாத்திரம் சம்பிரதாயங்களில் நம்பிக்கையே இல்லை. என்ர அம்மா – அப்பாவின் திருமணமும் சாத்திரம் சம்பிரதாயங்களுடன் பொருத்தம் பார்த்து பலரதும் முன்னிலையில்  அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத்தான் நடந்திருக்கிறது. ஆனால், பாருங்கள்…. நான் குமராகும் மட்டும் வீட்டுக்குள் பிச்சல் – பிடுங்கள் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறாங்க.   ஆனால், இறுதியில் என்ன நடந்தது. நாற்பது வயதுக்கு மேலே என்ர அம்மாவுக்கு வேறு துணைதேவைப்பட்டு ஓடிப்போய்விட்டாள்.  இந்த கண்டறியாத சாத்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஆளையும் படிப்பையும் செய்யும் தொழிலையும் பார்த்தால்,   எதற்கும் இதுபற்றி யோசிக்கலாம்தான். சுபாஷினிக்கும் தம்பி என்று வேறு சொல்கிறீங்க….. அந்தப் படத்தை எனது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பமுடியுமா…. “ 
“  எனக்கு அந்த தொழில்நுட்பம் எதுவும் தெரியாது மஞ்சு. வேண்டுமென்றால்,  சுபாவுக்குச்சொல்லி, உங்கட வாட்ஸ் அப்பிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யிறன் சரியா… அது சரி இன்று வேலைக்குப்போறீங்களா மஞ்சு….?  “ அபிதா ஆசனத்தை விட்டு எழுந்தாள்.
“  ஓம்…. நான் வெளிக்கிடப்போறன்.  மற்றது,  நீங்க அவசரப்பட்டு சுபாஷினிக்கு எந்தப்பதிலும் சொல்லிவிட வேண்டாம்.  அது சரி, ஜீவிகாவின் பெரியப்பா போய்விட்டாரா…?  “  மஞ்சுளா கேட்டுக்கொண்டே குளியலறைக்குச்சென்றாள்.
“  அவர் போய்விட்டார். இப்போது சிலாபம் கடந்திருப்பார். அவருக்குச்செய்த சப்பாத்தியும் லெமன் ரைசும் இருக்கிறது.  இன்றைக்கு என்ன எடுத்துவைப்பது…? “ 
“  சப்பாத்தி  “ மஞ்சு பல்துலக்கிக்கொண்டு உரத்துச்சொன்னாள்.
அபிதா, மஞ்சுவுக்கு தேநீர் தயாரிக்கும்போது,  சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்திருந்து கைத்தொலைபேசியில் முகநூல்பார்த்துக்கொண்டிருந்த ஜீவிகாவுக்கும்  “என்னவேண்டும்…?  “  எனக் எனக்கேட்டாள்.
 “ கோப்பி பிளீஸ்….. “
இவளுகள் எல்லாம் நாளை ஒருநாள் மணம் முடித்து பிள்ளை குட்டி பெற்றாலும், காலையில் துயில் எழுந்ததும் முதலில் விழிக்கப்போவது இந்தக்  கண்டறியாத ஃபேஸ்புக்காகத்தான் இருக்கும். தெருப்பிச்சைக்காரனும் ஃபேஸ்புக் பார்க்கிறான். கோடீஸ்வரனும் பார்க்கிறான். இந்தக்குமரிகளும் கிழவிகளும் பார்க்கிறார்கள்.  ஒரு காலத்தில் இந்த மூஞ்சிப்புத்தகம் இல்லாமலும் இருந்த சனம், இப்போது இது இல்லாமல் இருக்கமுடியாது  தவிக்கிறது.  அடுத்த நூற்றாண்டில் என்ன வரப்போகிறது….?
அபிதா மனதிற்கு முணுமுணுத்தவாறு, மஞ்சுளாவுக்கு தேநீரும் ஜீவிகாவுக்கு கோப்பியும் தயாரித்தாள். தனக்கு வெறும் தேநீரை தனக்குரிய கப்பில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ஜீவிகாவுக்கு அருகில் இருந்த ஸ்டுலில், அவளது கோப்பியையும் மஞ்சுளாவிற்கான பால்தேநீரை சாப்பாட்டு மேசையிலும் மூடி வைத்துவிட்டு, மஞ்சுளாவின் எவர்சில்வர் டிஃபன் பொக்ஸில் சப்பாத்திக்குள் கத்தரிக்காய் – கிழங்கு பிரட்டல் கறியை வைத்து மூடி, தண்ணீர் போத்தலும் எடுத்து வைத்தாள்.
ஓட்டோ ரிஸ்வானுக்கு கோல் எடுத்து, மஞ்சுளாவுக்காக மீண்டும் வரமுடியுமா…? என்று கேட்டாள் அபிதா.
ஐந்து நிமிடத்தில் அவன் வரவிருப்பதாக அபிதா சொன்னபோது, மஞ்சுளா குடை,  ஹான்ட்பேக் சகிதம் புறப்படத்தயாராகியிருந்தாள்.
வெளிர் நீல நிறத்தில் சாரியும் அதற்குப்பொருத்தமான நிறத்தில் பிளவுஸ் அணிந்திருந்த மஞ்சுளாவின் பின்புறம் சென்று குனிந்த அபிதா, அந்தச்சாரியின் கீழ் விளிம்பின் மடிப்புகளை சரிசெய்து நிமிர்த்திவிட்டாள்.
“  தேங்ஸ் அபிதா… உங்கட பிரட்டல்  கறிவாசம் எங்கட பேங்கில் தூக்கலாகப்போகுது. மனேஜர் சாப்பாட்டு மேசைக்கு வாயூற வந்து நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  “
வெளியே ஓட்டோ வந்து நின்று தரித்த சத்தம் கேட்டதும், மஞ்சுளா, கையசைத்துக்கொண்டு விடைபெற்றாள்.
அபிதா, கேட்வரையும் வந்து வழியனுப்பி, கேட்டை சாத்தி மூடிவிட்டு உள்ளே திரும்பியபோது,  ஜீவிகா, அருந்திமுடித்த கோப்பி கப்பை நீட்டியவாறு நின்றாள். அதனை வாங்கிக்கொண்ட அபிதா, மஞ்சுளா  அருந்திவிட்டு மேசையில் வைத்திருந்த கப்பையும் எடுத்து சிங்கில் வைத்தாள்.
 “ அம்மா… நீங்கள் இன்றைக்கு வேலைக்குப்போகவில்லையா..? உங்கட ஒஃபீஸ் வாகனம் இன்றைக்கு வருமா..?  “ எனக்கேட்டாள் அபிதா.
“  இல்லை. எழுதி அனுப்பவேண்டியதையெல்லாம் நேற்று இரவே அனுப்பிவிட்டேன்.  இன்றைக்கு வீட்டில்தான் இருப்பேன். ஒருவர் இன்று இங்கே வாரார். உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தவேண்டும். ஒரு முக்கியமான ஆள்.  பகல் விருந்து இன்று இங்கே அவருடன்தான். ஃபிரிட்ஜில் என்ன இருக்கிறது. இறைச்சி – மீன்…? ஏதும் ஸ்பெஷலாகச்செய்யவேண்டும். என்ன செய்யலாம்…? சொல்லுங்க அபிதா…? நானும் உங்களுக்கு உதவிசெய்வன்…. “
“  அப்படி யாரம்மா…. வாரார்…. வேண்டுமென்றால் சிக்கன் புரியாணி செய்யட்டுமா…?  “ 
 “ ஓகே… அபிதா….”
“  யாரம்மா வாராங்க…?  “
“  மதியம் பன்னிரண்டு மணிக்குள் வருவார். வந்தபிறகு அறிமுகப்படுத்தி சொல்கிறேன். அதுவரையில் சஸ்பென்ஸ்… “ ஜீவிகா, குளியலறைக்குச்சென்றாள்.
அபிதாவுக்கு பலவாறு கற்பனை ஓடியது.  கணினியில் எழுதத் தொடங்கியிருக்கும் நாட்குறிப்பில் மற்றும் ஒரு பாத்திரமா..?
( தொடரும் )







No comments: