மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
உலகின் எந்த மொழிகளிலும் பக்தி இலக்கியம் என்று சுட்டிக் காட்டப்படும் அளவுக்கு இல்லை என்பதே அறிஞர்களின் கருத்தாக அமைகிறது எனலாம். இந்தப் பக்தி இயக்கத்தின் முதற் குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல் ஒரு பெண்மணியின் குரல் என்பதை மனமிருத்தல் அவசிமாகும். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டி , தவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.
இவர் சைவ பக்தி இயக்தின் எழுகின்ற ஞாயிறாய் - பின்னர் வந்த அடியார்கள் அனைவருக்குமே ஆதார மான குரலாய் விளங்குகிறார் எனலாம்.சைவத் திருமுறைகளின் தோற்றத்தின் குரலாயும் நிற்கின்றார். இவர் சைவத்தைக் காத்திடக் கையில் எடுத்தது அமிர்தமாம் தமிழ் மொழியையேயாகும்.தமிழ் மொழியில் -அற்புதத் திருவந்தாதி, திரவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் , ஆகியவற்றை அளித்து ஆன்மீகக் குரலாய் ஒலித்து நிற்கிறார்.இவரின் பின்னர் வந்த அடியார்கள் பலரும் , அம்மையா ரைப் பின்பற்றி இறை புகழ் பரப்புவதில் தங்களின் குரலை ஒலித்து நிற்கிறார்கள்.
ஆழ்வார்கள் வந்தார்கள்.ஆளுடைய பிள்ளையார் வந்தார்.அப்பர் வந்தார். ஆலால சுந்தரர் வந்தார். வாத வூர் வண்டும் வந்தது. இவர்கள் அனைவரின் குரல்களும் தமிழில் சைவத்தை நிலை நாட்டிட ஓங்கி ஒலி த்து நின்றன எனலாம். இந்தக் குரல்கள் ஒலித்த காலம் வேறு. அந்தக்காலச் சூழலும் வேறு. அவர்களின் குரலில் காணப்பட்ட தத்துவங்களும் வேறு என்றுதான் கருதிட வேண்டும். அவர்கள் அனைவருமே அந் தக் கால தமிழ் இலக்கியத்தின் போக்கினை மனமிருத்தி பாடல்களை ஊடகமாக கொண்டே தமது குரலை வெளிப்படுத்தும் கட்டாயம் காணப்பட்டது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தை ஆட் கொண்டு இருந்த வடிவம் பாட்டு அல்லது செய்யுள் வடிவமே யாகும்.