தெருவாழ் மக்கள் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.



  தாம் வாழ்வதற்கு இடம் இல்லாது தெருவிலே வாழ்பவர்கள். அழுக்கடைந்த உடை, சவரம் செய்யாத முகம், கைகளிலே அவர்கள் உடைமையாக வைத்திருக்கும் பொதிகள், அவர்களைக் கண்டால் ஒதுங்கி மறுபுறம் போய்விடுகிறோம். ஆனால் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களும் மனிதர்கள்தான் என மதித்து, அவர்கள் பசியைப் போக்குவதற்கு உணவளித்து வருகிறார்கள். ஏதோ ஒரு மனித சேவை செய்த திருப்தி இவர்கட்கு. ஆனால் அவர்களும் மனிதர்தான் என சிந்திக்காதவர்களே பலர்.

  இவ்வாறானோர் தமது வாழ்வை எவ்வாறு மேம்படுத்த முடியும் என அவர்கட்காக ஒரு நூலை எழுதியுள்ளார் சேரா காணற். அவர்கட்கு தான் இருக்க வீடு கிடையா, உடமைகளோ சில அழுக்கடைந்த பொருட்கள். இப்படிப்பட்டோர் வாழ்வை மேம்படுத்த நூலா? அதை அவர்கள் வாசிப்பார்களா? இவ்வாறாக பலரும் வியக்கலாம். இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காகப் போலும் ABC வானொலி நிருபர் Mickal Pahart சேராவை பேட்டி கண்டார். அதை செவிமடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அவற்றை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னை எழுதத் தூண்டியது.




  அவர்களை நன்கு அறிந்த சேரா கூறுகிறார், அவர்களும் பண்பான மனிதர்கள். சாப்பாடு கொடுக்கும் இடத்திலே, நிரையாக நிற்கும் இடத்திலே சில முரட்டுத்தனம் இடம் பெறும். ஆண்கள் அவர்களை அடக்கும்போது அவர்கள் மேலும் கோபம் அடைவதுண்டு. ஆனால் அத்தனைப் பேரும் தாயின் பரிவை உணர்ந்தவர்கள். ஒரு பெண் அவர்களிடம் பரிவாக கூறினால் அவர்கள் மிகமிக நிதானத்துடன் நடந்துகொள்வார்கள்.

இவர்களில் மிகப்பெரிய பதவி வகித்தோர் முதல் ஒலிம்பிக் விளையாட்டு வீரர், விமானி எனப் பலதரப்பட்டோரும் உண்டு. சனல் 9 தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் உண்டு. சேரா கூறுகிறார், தான் SBS வானொலியில் வேலை பார்த்த சமயம் Jo சனல் 9 நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தாராம். உறவுகளின் முறிவே இவர்கள் இவ்வாறு தெருவுக்கு வரக் காரணமாகிறது. சேரா கூறுகிறார். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, மனித உறவு அதிமுக்கியமானது என்பதே. கணவன் மனைவி பிள்ளைகள் பெற்றோர் சகோதரர் நண்பர் இவர்களின் உறவு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது. சேரா மேலும் கூறியது, இன்று நான் இத்தனை வசதியுடன் வாழ்கிறேன், நாளை நானும் அவர்களில் ஒருவர் ஆகலாம்.

  சேரா தான் எவ்வாறு தெருவாழ் மக்களை அறிந்து, அவர்கள் நலனில் ஈடுபடத் தொடங்கினார் என்பதைக் கூறுகிறார். தோழியின் இழப்பால் மனம் வருந்தியவர் கவலையில் இருந்து மீளமுடியாது தவித்தார். சேராவின் நண்பர் ஒருவர், தெருவாழ் மக்களுக்கு வாரம் ஒரு முறை உணவு வழங்கிப் பேணுபவர். சில சமயம் சேராவையும் வருமாறு அழைப்பது வழக்கம். ஆனால் சேரா அவர் கூறுவதை சட்டை செய்வது கிடையாது. ஆனால் சோகத்தில் இருந்து விடுபடமுடியாது தவித்த சேரா, அந்த வாரம் போவதாக முடிவெடுத்தார். முதலில் கண்ட காட்சி அவரது மனத்தை உலுக்கியது. 150-க்கு மேற்பட்ட மக்கள் உணவைக் கொண்டுவரும் வானுக்காக வரிசையில் காத்திருந்தனர். அதன் பின் வாரா வாரம் போகத் தொடங்கினார். ஒருவர் கையில் ஒரு புத்தகத்தைக் கண்டது ஆர்வமாக உங்களுக்கு நூல்கள் படிக்கும் பழக்கம் உண்டா என விசாரித்தார். அவரோ, ஆமாம், நான் வாரம் 5,6 நூல்களை வாசிப்பேன் என்றார். அதை அறிந்த சேரா அவரது கணவர் வாசித்து முடித்த நூல்களை வாரா வாரம் எடுத்துப் போனார். நூல்களைக் கண்ட பலரும் நூல்களை அவரிடம் வாங்கிப் படித்துவிட்டு திருப்பிக் கொடுத்தனர்.
 
  இவ்வாறு தொடங்கிய எனது செயல் இன்று Benjamin Andrew Footpath Library என சிட்னி, மெல்போன், அடிலேட் போன்ற இடங்களில் பல கிளைகளுடன் இயங்கிவருகிறது என்கிறார். இதில் சேவை செய்வதற்கு பல அங்கத்தவர் இருக்கிறார்கள். பல நூல் வெளியீட்டாளர்கள் நூல்களை இலவசமாக வழங்கிவருகிறார்கள். அது தவிர, தனிப்பட்டோர் நூல்களை வைப்பதற்கு இடம் இல்லாது கார் கராஜில் போட்டு வைத்துள்ளனர். அதைத் தந்து உதவுகிறார்கள். இந்த நூலக சேவையில் சட்டதரணிகள், தொழில் அதிபர்கள், கணக்கியலாளர், எழுத்தாளர், நூல் நிலைய நிர்வாகிகள் என பலதரப்பட்டோரும் சேவை செய்து வருகிறார்கள் என்கிறார் சேரா. இதன் ஆரம்பம் சேரா தனிப்பட்ட முறையில் நூல்களை வாங்கியமையே. அப்பொழுது சிலர் தாம் தங்கும் இடங்களில் தமக்கு நூல்கள் கிடைப்பதில்லை என்றனர். அவர்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு சேரா நண்பர்களிடம் சில நூறு டொலர்களைப் பெற்று புத்தகம் வைப்பதற்கு றக்கைகள் வாங்கினார். ஆனால் இன்றோ இந்த நூல் நிலையம் 150-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நூல் நிலையம் பற்றி அறிய விரும்பினால் https://www.footpathlibrary.org/ இல் பார்க்கலாம். தெருவாழ் மக்கள் விரும்பி படிப்பது இலகுவாக வாசித்து இரசிக்கும் சிறுகதை நாவல் மட்டுமல்ல, கட்டடக் கலை, வரலாறு, பொருளாதாரம், விஞ்ஞானம், புவியியல், கலை கலாச்சாரம், இலக்கியம், கவிதை அத்தனையையும் இரசித்துப் படிக்கிறார்கள். இவை தவிர, பல வகையான சஞ்சிகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் சேரா கூறியது, இவர்களுக்கு நிறைய நேரம் உண்டு. அதனால் தாம் அறிய விரும்பும் விஷயத்தை ஆழமாகப் படித்துத் தமது ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் என்கிறார்.

  சேரா தெருவாழ் மக்களுடனான அனுபவங்கள் சிலவற்றைக் கூறினார். ஒரு 12 வயது பெண் தந்தையாருடன் காரில் வாழ்ந்தாள். இவள் மிக ஆர்வமாக நூல்களைப் பெற்றுப் படித்து வந்தாள். வயது குறைந்த சிறு பெண் தெருவில் வாழ விடக்கூடாது என சிறுவர் நல நிறுவனம் அவளைப் பொறுப்பேற்றது. இவள் ஒரு வருடத்துக்கு மேலாக பாடசாலை போகாததால் பாடசாலையில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் சேரா தனது மருமகள் மூலம் தனிப்பட்ட முறையில் 3 மாதங்கள் கல்வி கற்பித்தார். அப்பெண் ஆறு  பாடங்களை மூன்று மாதங்களில் கற்று பாடசாலையில் சேர்ந்து படிக்கும் தகுதி பெற்றாள். சேராவின் உதவியால் பாடசாலையிலேயே தங்கிப் படிக்கக்கூடிய பாடசாலையில் புலமை பரிசு பெற்றுப் படித்து வருகிறாள்.

  மேலும் ஒரு இளைஞன் ஏழு வருடங்கள் சிறையில் இருந்து வெளிவந்தவன், தான் தங்கும் இடத்தில் நூல்கள் கிடைப்பது இல்லை என்றான். சிறையில் இருந்த ஏழு வருடங்களும் நூல்களைக் கண்டதே இல்லை என்றான். அதன் முன் இவன் நூல்களை வாசிக்கும் அனுபவம் அற்றவன். இவன் முதலிலே வாசித்த நாவலை அப்படியே ஒன்றுவிடாது ஒப்புவித்தான். இப்பொழுது அவன் நுல்களை வாசிப்பதுடன் நின்றுவிடாது, நூல்களைக் கொண்டுசென்று விநியோகித்தும் வருகிறான். சேரா வழமையாக தனது இரு மகன்களையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். முதல் நாள் அவரது 15 வயது மகன் உண்பதற்கான கரண்டிகளை விநியோகித்தபோது, ஒரு இளைஞன் சேராவைக் காட்டி அவர் உன் தாயாரா என வினவ, மகனும் ஆமாம் என்றான். அவன் உடனே நீ உனது தாயாரை கவனமாகப் பார்த்துக்கொள் எனக் கூறிவிட்டு ஓ என அழ ஆரம்பித்துவிட்டான். இது யாவர் மனத்தையும் உலுக்கிவிட்டது. கிறிஸ்மஸ் சமயம் உறவுகள் கூடும் நேரம். அந்த சமயத்தில் தெருவாழ் மக்களிடம் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் காணமுடியும் என்றார் சேரா.

  தெருவில் வாழ்வது மட்டுமல்ல இவர்கள் பிரச்சனை. வாழும் இடங்களில் ஒருவரை ஒருவர் நம்புவது கிடையாது. அவர்கள் வைத்திருக்கும் பொருட்களும் திருட்டுப் போவது உண்டு. அது தவிர, சண்டை சச்சரவால் சிலர் அடி உதைக்கும் ஆளாகிறார்கள். இவ்வாறு வாழ்பவரும் மனிதர்கள்தான், இவர்களை மகிழ்விக்க ஏன் அவர்களை மனிதர்களாக மதிக்க ஒரு விழா நடத்தினோம். அந்த விழாவிலே தெருவாழ் மக்களுக்கு சிகை அலங்காரம் சவரம் செய்வது, யாவும் பணம் பெறாது வழங்கப்பட்டது. உடல் மசாஜ் மற்றும் நகம் வெட்டி சுத்தம் செய்வது இவற்றிற்கெல்லாம் விசேஷ பயிற்சி பெற்றோர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் அன்பாக அளவளாவவும் நண்பர்கள் முன்வந்தனர் என்றார் சேரா. இவர்கள் அவர்களைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தனர். அங்கு ஒருவர் கூறியது கடந்த 15 வருடங்களாக அவரை யாரும் தொட்டது கிடையாது என்பதே. அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. அவர்களைக் கண்டால் விலகிப் போகாது நாலு வார்த்தை பேசுங்கள் என்கிறார் சேரா.

  சிட்னி ஜூலை மாதத்தில் கடும் குளிராக இருக்கும். தெருவாழ் மக்களின் இன்னல்களை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஜூலை மாதத்தில் ஒரு நாள் பொதுமக்கள் இரவில் திறந்த வெளியில் தூங்கும் நாளாக அனுசரிக்கப்படும், அன்று பலர் இந்த துன்பத்தை உணர்வுபூர்வமாக அறிவார்கள், சில பாடசாலைகளும் இளம் உள்ளங்களும் தெருவாழ் மக்களிடம் கருணை காட்டவேண்டும் என்பதற்காக ஜூலை கடுங்குளிரில் மாணவரை அழைத்துச்சென்று திறந்த மைதானத்தில் மாணவ மாணவியரை தூங்க வைப்பார்கள். எனது மாணவியர் சிலர் வருடா வருடம் இச்செயலில் ஈடுபடுவதுண்டு. எந்த ஒன்றும் தானாகவே அனுபவிக்காது அதைப் புரிந்துகொள்ள முடியாது என்பதற்காகவே இதைச் செய்கிறார்கள்.

   நான் வான் அலைகளில் கேட்ட செய்தி கிறிஸ்மஸ் சமயத்திலே ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பாதிரியார் மக்களிடம் விடுத்த வேண்டுகோள் இது. தெருவாழ் மக்களுக்கு உணவளிப்பதற்காக உணவுப் பொருட்களைத் தந்து உதவுமாறு அவர் கேட்டார். அத்துடன் அவர் கூறியது, அவர்கள் ஏழைகள். அவர்களிடம் Tin opener கிடையாது. அதனால் Tin opener கொண்டு திறக்கும் உணவைத் தராதீர்கள். அவர்களுக்கு அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவேண்டும். மேலும் காலாவதியான உணவு வகைகளைக் கொடாதீர்கள் எனவும் கூறினார்.

  பண வசதி கொண்ட மேலை நாடுகளில் அரசு சிலரை தெருவில் வாழ அனுமதிப்பதில்லை. சிறுவர் இக்கட்டான நிலையில் தெருவிற்கு வந்தால் அரசு அவர்களைப் பராமரிக்கும். இல்லங்களுக்கு அழைத்துப் போய் பராமரிக்கும். ஆனால் மூன்றாவது மண்டல நாடு எனப்படும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தெருவில் சிறார் வாழ்வது சர்வ சாதாரணமாக காணக்கூடியதே. எனது மாணவி குந்தவி ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்து வேலை பார்த்தவள் தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டாள். தொண்டு நிறுவனம் தெரு சிறாருக்கு உணவளிக்கும். ஆனால் அந்த உணவுக்காக சிறு தொகை பணத்தை அவர்களிடம் இருந்து அறவிடும். காரணம் சிறார் உழைப்பின் மகிமையை உணரவேண்டும். நாளை அவர்கள் உழைத்து வாழ வேண்டியவர்கள். இவர்களிடம் பணம் பெறாது உணவைக் கொடுத்தால் அது பிச்சையாகிவிடும். நாளை இந்த சிறார் பிச்சைக்காரர் ஆகக்கூடாதே என்பதற்காகவே பணம் அறவிடப்படுகிறது. குந்தவி மேலும் கூறியது, இந்த பையன்கள் மத்தியில் ஒரு சிறு பெண்ணும் வாழ்கிறாள். அவளுக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக அவளை மத்தியில் படுக்கவிட்டு பையன்கள் அவளுக்குப் பாதுகாப்பாக சுற்றிப் படுத்துக் கொள்வார்களாம். இதுதான் எமது நாட்டு நிலை.

  நல்ல மனம் படைத்த சிலரின் முயற்சியால் டெல்லியில் வாழும் தெரு சிறார்க்கு ஒரு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் வேலை பார்ப்பவர்களும் சிறாரே. இவர்களுக்கான பயிற்சியையும் வங்கியே அளித்துவருகிறது. இவ்வாறு டெல்லியில் ஆரம்பிக்கப்பட்ட தெரு சிறார் வங்கி, பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. இன்று சிறார் வங்கி, இலங்கை, பாக்கிஸ்தான், மலேஷியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. அவர்களும் சிறுவர், அவர்கள் வாழ்வும் மலர வேண்டும். இன்று கவனியாது விடப்பட்டால் நாளை வாழ்வில் மோசமான தீய செயல்களை செய்பவர் ஆகக்கூடும். அதிலிருந்து காப்பதற்காகவே இந்த வங்கியை ஆரம்பித்தோம் என்கிறார் அதை ஆரம்பித்த ஆஷி சௌத்திரி.

  தெருவாழ் மக்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என உழைக்கும் நல்ல மனம் கொண்டவர்களும் நம்மிடையே வாழ்கிறார்கள். நாளை நமது வாழ்வை பின்னோக்கிப் பார்ப்போமானால் நாம் நன்றாக சொகுசாக வாழ்ந்தோம் என்பது மட்டும் போதாது, நாம் இன்னல் உறும் மக்களுக்கு எம்மால் ஆன ஏதோ ஒரு தொண்டை செய்தோம் என்பது எமக்கு திருப்தி தரும் என்கிறார் சேரா காணற்.

No comments: