இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும்,
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக நீண்ட காலம் இயங்கியவருமான தெளிவத்தை ஜோசப் இம்மாதம்
21 ஆம் திகதி அதிகாலை வத்தளையில் தமது இல்லத்தில் மறைந்துவிட்டார்.
அமைதியான இயல்புகளைக் கொண்டிருந்த அவர், ஆழ்ந்த உறக்கத்திலேயே உலகைவிட்டு விடைபெற்றுவிட்டார்.
அவர் உடல் நலக்குறைவோடு
இருப்பது அறிந்து சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினேன். தனக்கு சற்று சோர்வாக இருப்பதாகச் சொன்னார்.
அவருடனான முதல் சந்திப்பு
பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்
தீம்புனல் வார இதழில் அண்மையில் எழுதியிருந்தேன். எனினும்,
அவர் அதனைப் பார்த்தாரோ தெரியாது. தற்போது ஆழ்ந்த துயரத்துடன் இந்த அஞ்சலிக்
குறிப்புகளை எழுதுகின்றேன்.
அவரது மறைவுச் செய்தியறிந்ததும்,
அவரது புதல்வி சியாமளாவுடன் தொடர்புகொண்டு
ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்துவிட்டே இந்தப்பதிவை
எழுதுகின்றேன்.
அவர் தனது புதல்விகள் திரேசா
– சியாமளா ஆகியோரின் பெயர்களிலும் முன்னர் தினகரனில் இலக்கிய பத்தி எழுத்துக்களை
எழுதினார்.
சமகாலத்தில் அடுத்தடுத்து
எமது கலை, இலக்கிய, ஊடக ஆளுமைகளை இழந்துகொண்டிருக்கின்றோம். இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிற்பகுதியில்
தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில்தான், யாழ். காலைக்கதிரில் 40 வாரங்கள் தொடராக வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலுருப்பெற்று
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் காலைக்கதிர்
ஆசிரியர் நண்பர் வித்தியாதரனும், கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட
இலக்கிய ஆர்வலர் சட்டத்தரணி இராஜகுலேந்திரா, மற்றும் இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ்.
சிவகுமாரன் இலக்கிய ஆர்வலர் பொலிஸ் அத்தியட்சர் அரசரத்தினம் ஆகியோரைத் தொடர்ந்து தெளிவத்தை
ஜோசப் அவர்களும் விடைபெற்றிருப்பது மனதில் மிகுந்த சோகத்தை உருவாக்கியிருக்கிறது.
கடந்த 21 ஆம் திகதி காலையில் அவரது குடும்பத்தினர், அவரை துயில் எழுப்பச்சென்றபோதுதான்,
அவரது உயிர் அவரை விட்டு பிரிந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
எவருக்கும் சிரமம் தராமல்
அமைதியாக விடைபெற்றுவிட்டார் இந்த இலக்கியவாதி.
சந்தனசாமி
ஜோசப் என்ற இயற் பெயரைக் கொண்டிருந்த
அவர், 1934 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் ஊவாக்கட்டவளை என்ற கிராமத்தில் பிறந்தார்.
பின்னாளில் பெற்றோரின் பூர்வீகமான தமிழ்நாடு கும்பகோணத்தில்
படித்துவிட்டு, மீண்டும் தாயகம் திரும்பி பதுளை
புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, தெளிவத்தை என்ற மலையகத் தோட்டத்தில்
ஆசிரியராக பணியாற்றினார்.
இலக்கியப்பிரதிகளை இந்த
ஊரின் பெயரை முன்னிறுத்தி தனது பெயரையும் இணைத்துக்கொண்டு எழுதியவர். தெளிவத்தை என்றால், எழுத்தாளர் ஜோசப்தான். அந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தை வழங்கினார்.
மலையகத்தில் ஒரு தோட்டப்
பாடசாலையில் ஆசிரிய பணியாற்றியவர், கணக்கியல் படித்து தேர்ந்தார். கொழும்புக்கு வந்து அக்காலத்தில் பிரபல்யமான இனிப்புவகையான
ஸ்டார் பிராண்ட் டொபி உற்பத்திசெய்யும் Modern Confectionary Works Ltd என்ற நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றினார்.