கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன். என்னை நூலாசிரியரின் பதிலுரைக்கு முதல், விழாத்தலைவர் பேசுவதற்கு அழைக்கிறார்.
எப்படி?
“நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி அடுத்துப் பேசப் போகிறவர் முருகப+பதி. அவருக்கு ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க ஓடவும்.”
சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது.
பம்பலப்பிட்டி சாந்திவிஹார் ஹோட்டலில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு பிரிவுபசார விழா. புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கி, படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். விடைபெறவுள்ள பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர் தலைவரால் அழைக்கப்படுகிறார்.
பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம் பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்கிறார்.